Published:Updated:

திங்கள் என்றாலே திணறலா?

ஹெல்த்சுவாதிக் சங்கரலிங்கம், மனநல மருத்துவர்

பிரீமியம் ஸ்டோரி

‘மஜா’ திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும். வடிவேலு தன் முகத்தில் செயற்கை மருவை வைத்து `இப்ப பயமா இருக்கா?’ என்று விக்ரமிடம் கேட்பார். பிறகு மருவை எடுத்துவிட்டு, ‘பயம் போயிடுச்சா?’ என்று கேட்பார். அதுபோலத்தான் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களிடம் `வெள்ளிக்கிழமை’ என்று சொல்லிப் பாருங்கள்... அவர்களது முகம் பளிச்சென்று மிளிறும். `திங்கள்கிழமை’ என்று சொன்னால், ஃபியூஸ் போன பல்புபோல் ஆகிவிடும். சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களோ, ஞாயிற்றுக்கிழமை மட்டுமோ உற்சாகமாக இருந்துவிட்டு அடுத்த நாள் வேலைக்குப் போகிற கஷ்டம் இருக்கிறதே... ‘அய்யய்யோ...’ என்பார்கள் பலர் . இதைப் பிரதிபலிக்கும் விதமாக வலைதளங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீம்ஸ்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்குப் பலருக்கும்  திங்கள்கிழமை திகில்கிழமையாக இருக்கிறது. இதற்குப் பெயர்தான் ‘மண்டே மார்னிங் ப்ளூஸ்’ (Monday Morning Blues). இதை  எதிர்கொள்கிற  வழிமுறைகள் பற்றிப் பார்ப்போமா?

திங்கள் என்றாலே திணறலா?

நண்பகலுக்குமேல் ஓய்வைத்தவிர வேறில்லை

ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதானே என்று நாள் முழுவதும் வெளியே சுற்றக் கூடாது. நண்பகலுக்குமேல் உள்ள நேரத்தைப் பெரும்பாலும் ஓய்வுக்கான நேரமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். திரைப்படத்துக்கோ, பீச்சுக்கோ, கோயிலுக்கோ வேண்டுமானால் செல்லலாம். நீண்ட பயணங்கள் செல்வது, செகண்ட் ஷோ படத்துக்குப் போவது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

திங்களுக்குத் தயாராகுங்கள்

அடுத்த நாள் அலுவலகத்துக்குச் சென்று பரபரப்பாக வேலையை ஆரம்பிப்பதைவிட, நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை ஞாயிறு மாலையே திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது. அதற்காக அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியம் இல்லை. அதுவே நமக்குச் சலிப்பை ஏற்படுத்திவிடும். சிறிது நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், திங்கள்கிழமை காலையைப் பதற்றத்துடன் ஆரம்பிக்கவேண்டிய தேவை இருக்காது. அதேபோல, அடுத்த நாள் நமக்குத் தேவையான பொருள்களையும் ஞாயிறு மாலையே தயாராக எடுத்துவைத்துவிட வேண்டும்.

எட்டு மணிக்குள் இரவு உணவு

ஞாயிறு இரவு ஏழு அல்லது எட்டு மணிக்குள்ளாகவே சாப்பிட்டுவிட வேண்டும். எளிதில் செரிமானமாகும் உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். பரோட்டா மாதிரிச் செரிமானத்துக்குச் சிரமமான உணவுகளை உட்கொண்டால் காலையில் எழும்போதே சோர்வு தொற்றிக்கொள்ளும்.

திங்கள் என்றாலே திணறலா?இரவுத் தூக்கம் கவனம்

சனிக்கிழமை இரவு வேண்டுமானால் நேரம் கழித்து உறங்கச் செல்லலாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமே உறங்கிவிட வேண்டும். ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக அவசியம். அப்போதுதான் திங்கள்கிழமை காலையில் சீக்கிரமாக எழுந்து, பொறுமையாகக் கிளம்பமுடியும்.

ஃப்ரெஷ்ஷாகக் கண்விழித்தல்

திங்கள்கிழமை காலை சீக்கிரமாக எழுந்துவிட வேண்டும். அப்படி எழுந்தால்தான் அலுவலகத் துக்கு நிதானமாகக் கிளம்ப முடியும். பேருந்திலோ, வண்டியிலோ நிதானமாகச் செல்லலாம். லேட்டாக எழும்போது காலையிலேயே நம்மை ஒருவிதப் பரபரப்பு தொற்றிக்கொண்டு அலுவலகம் வரை அது தொடர்ந்து நம் மன நிலையையும் வேலையையும் கெடுத்துவிடும்.

பிடித்ததைச் சாப்பிடுங்கள்

காலை உணவைக் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். நீங்கள் சலிப்பாக நினைக்கும் உணவுகளை உட்கொள்ளக் கூடாது. ஒருவருக்குப் பொங்கல் பிடிக்கும். இன்னொருவருக்கு நூடுல்ஸ் பிடிக்கும். அப்படி உங்களுக்குப் பிடித்த காலை உணவை மட்டுமே உண்ண வேண்டும். இதனால், காலையிலேயே நம் மனதில் ஒருவித உற்சாகம் உண்டாகும்.

உங்களுக்கு என்ன கலர் டிரெஸ் பிடிக்கும்?

நம்மிடம் இருக்கும் உடைகளிலேயே நமக்கு மிகவும் பிடித்த உடையை திங்கள்கிழமை அணிய வேண்டும். அப்போது நமக்கு அந்த நாளின் மீது சலிப்புத் தோன்றாது. மேலும் வெயில் காலங்களில் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணியக் கூடாது. அதுபோல குளிர் காலங்களில் மெல்லிய ஆடைகளை அணியக் கூடாது.

உரையாடல் நல்லது

நம்மைப் புரிந்துகொண்டு நம்மோடு எதிர்வாதம் செய்யாத நபருடன் காலை அரை மணி நேரமோ, கால் மணி நேரமோ உரையாடலாம். அம்மா, நண்பர்கள், குழந்தை களுடன் பேசலாம். நல்ல உரையாடல் நமக்குப் பாதுகாப்பு உணர்வையும் தைரியத்தையும் கொடுக்கும்.

பிடித்த வேலைகளைச் செய்யுங்கள்

வேலைக்குச் சேரும்போதே நமக்கு விருப்பமான வேலையில் மட்டுமே சேர வேண்டும். வேலை பிடித்துவிட்டால், `மண்டே மார்னிங் ப்ளூஸ்’  நம்மை ஒன்றும் செய்யாது.

பணத்துக்காக ஏதோ ஒரு வேலையில் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். இவர்களுக்கு மண்டே  மார்னிங் மட்டும் அல்ல எல்லா மார்னிங்கும் திகிலாகத்தான் இருக்கும். ஒருவேளை தவிர்க்க முடியாத குடும்பச் சூழல் என்றால் நம் குடும்பத்துக்காக, எதிர்காலத்துக்காகத்தானே வேலை செய்கிறோம் என்ற தெளிவை நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். செய்யும் வேலையை விருப்பமான வேலையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாம் வேலை செய்யும் அலுவலகத்தை ஆபத்து நிறைந்த இடமாகப் பார்க்கக் கூடாது. அப்படி நினைக்கும்போது ஆபத்தான சூழ்நிலைகளில் நம் உடலில் சுரக்கும் ‘கார்டிசால்’ (Cortisol) மற்றும் ‘அட்ரீனலின்’ (Adrenaline) ஆகிய ஹார்மோன்கள் அடிக்கடி சுரக்கும். இது தொடர்ந்தால், வெகுசீக்கி ரமாக இதயப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் அலுவலகத்தில் நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவர்களுடன் நன்றாகச் சிரித்துப் பேச வேண்டும். வேலைக்கிடையே இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பத்து நிமிடங்கள்  ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.

- இரா. செந்தில்குமார்

திங்கள் என்றாலே திணறலா?

தியானம், யோகா, பிடித்த பாடல் எது உங்கள் சாய்ஸ்?

தியானம், யோகா போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்கள் காலையில் எழுந்த உடனே அவற்றைச் செய்யலாம். வாக்கிங், ஜாகிங் இப்படி எதைச் செய்தால் நம் மனம் அமைதியாக உணருமோ அதைச் செய்யலாம். இவையெல்லாம் பழக்கம் இல்லை என்பவர்கள், காலை எழுந்த உடனே நமக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இதனால், காலையிலேயே தொற்றிக்கொள்ளும் உற்சாகம்  அந்த நாள் முழுவதும் தொடரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு