Published:Updated:

``இழப்புகளைக் கடக்கும் வைராக்கியம் வேண்டும்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``இழப்புகளைக் கடக்கும் வைராக்கியம் வேண்டும்!”
``இழப்புகளைக் கடக்கும் வைராக்கியம் வேண்டும்!”

மனிதம் பேசும் மகேஸ்வரியின் கதைஹெல்த்

பிரீமியம் ஸ்டோரி

``இழப்புகள் தந்த வலியில் சிலர் உடைஞ்சு போயிடுவாங்க. சிலர் வலிமை பெறுவாங்க. நான் ரெண்டாவது ரகம். ஆரோக்கியம் முதல் பொருளாதாரம் வரை என் வாழ்க்கையில் நான் சந்திச்ச இழப்புகள் நிறைய. அதையெல்லாம் வைராக்கியத்தோட கடந்து வந்ததாலதான் இன்னிக்கு ஜெயிச்சிருக்கேன்!’’

அழுத்தமான வார்த்தைகள் வந்து விழுகின்றன சென்னை, கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரியிடமிருந்து! போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவர், தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் உதவித் தயாரிப்பாளர். ஒரு மாலை வேளையில் அவரிடம் பேசினோம்.

‘‘என்னோட ரெண்டரை வயதில் எனக்குப் போலியோ அட்டாக் வந்து, வலதுகால் பாதிக்கப்பட்டது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அது பெரிய இடி. ஆனா, விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நான் என் குறையை ஏத்துக்கிட்டு வாழப் பழகிக்கிட்டேன். பெரம்பூர், புளியந்தோப்பு அரசுப் பள்ளியில நான் படிக்கும்போது, `பிஇடி பீரியட் ஏன் வருது’னு நினைச்சிருக்கேன். அப்போ எல்லோரும் கிரவுண்டில் ஓடியாடி விளையாடும்போது, நான் ஓர் ஓரமா உட்கார்ந்து அவங்களை ஏக்கமா பார்த்துட்டு இருப்பேன். குறையை நினைச்சு நான் கலங்கும்போதெல்லாம், அம்மாதான் எனக்கு ஆறுதலா இருப்பாங்க. ‘கால் இல்லைன்னா என்ன? உன்னால முடியாதது எதுவும் இல்லை’னு தன்னம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லிட்டே இருப்பாங்க.

``இழப்புகளைக் கடக்கும் வைராக்கியம் வேண்டும்!”

நான் பத்தாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தப்போ திருச்சி, மலைக்கோட்டை கோயிலுக்குப் போயிருந்தோம். அங்க 450 படிகளைப் பார்த்தப்போ, ‘அய்யோ, என்னால ஏற முடியாது’னு நான் அம்மாகிட்ட சொன்னேன். ‘உன்னால நிச்சயமா முடியும். எவ்வளவு தூரம் முடியுதோ அவ்வளவு தூரம் ஏறு, அதற்கு மேல நான் தூக்கிட்டுப் போறேன்’னு சொன்னாங்க அம்மா. பாவம் அம்மா... அவங்களால தூக்க முடியாது என்ற எண்ணம்தான் அன்னிக்கு என்னை அத்தனை படிகளையும் ஏறவெச்சது. வாழ்க்கையிலும் அப்படித்தான்... அம்மா, அப்பாவைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற எண்ணமே என்னை நானே பார்த்துக்க, வளர்த்துக்கப் பழக்கிடுச்சு’’ என்று அழகாகப் பேசுகிறார்.

“என் கால் பத்தின கவலையை எங்க குடும்பம் கடக்கப் பழகியிருந்தப்போ உறவுகள் செய்த துரோகம் எங்களை மறுபடியும் கலைச்சுப் போட்டது. எங்கப்பா சம்பாதிச்ச சொத்தை எல்லாம் எங்க சொந்தங்கள் எடுத்துக்கிட்டு, மேற்கொண்டு அவங்களோட கடனை எங்க தலையில் சுமத்திட்டாங்க. எங்கப்பா கட்டின வீட்டைவிட்டு நாங்க குடும்பத்தோட வெளியேற்றப்பட்டப்போ, ‘இந்த மாதிரி ஒரு வீட்டை நம்ம அப்பா அம்மாவுக்காக நாம கட்டிக் கொடுக்கணும்’னு உறுதி எடுத்துகிட்டேன். வாடகை வீட்டுக்குக் குடிவந்த பின், அப்பா வெல்டிங் வேலை, அம்மா காய்கறி  வியாபாரம்னு இரவு பகல் பார்க்காம உழைச்சாங்க. வீட்டு வேலையை அவசர அவசரமா முடிச்சுட்டு அம்மா வியாபாரத்தைப் பார்க்கப் போயிடுவாங்க. அவங்க வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிடும். காலையில என் தம்பி, தங்கைக்குச் சாப்பாடு ஊட்டி, ஸ்கூலுக்குக் கிளப்பிவிட்டுட்டு, நான் ஸ்கூலுக்குக் கிளம்பிடுவேன். சாயந்திரம் வீடு திரும்பினதும் இருக்கிற வேலைகளைப் பார்த்து வெச்சுட்டு, தம்பி தங்கச்சியோட படிக்க உட்கார்ந்திடுவேன். அம்மா இரவு வீடு திரும்பின பிறகு சமைச்சு, குடும்பத்தோட சாப்பிடுவோம். மத்தவங்க எல்லோரும் தூங்கப்போனப்புறம், நானும்  அம்மாவும் ஒன்பது மணிக்குமேல துணி துவைச்சுப் போட்டுட்டுத் தூங்குவோம். இப்படித்தான் ஒவ்வொரு நாளும் ஆரம்பிச்சு முடியும்.

நான் ஸ்கூல் முடிச்ச பிறகு, வீட்டுச் சூழலால கல்லூரிக்குப் போக முடியல. அதனால சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலமாக பி.எஸ்சி. கணிதம் முடிச்சேன். இப்போ அதே பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மனித உரிமை படிச்சுட்டு இருக்கேன். தம்பி, தங்கையைப் படிக்கவெச்சு, நல்ல இடத்துல கல்யாணமும் பண்ணிக் கொடுத்துட்டோம். எனக்கு நான் ஒரு வேலை தேடிக்கிட்டதோட, வீடு கட்டுற என்னோட லட்சியத்தை நோக்கி முன்னேறிட்டே இருந்தேன். சமீபத்தில்தான் அது நிறைவேறினது. 24 லட்ச ரூபாய்க்கு வீடு கட்டினேன். நான், அம்மா, அப்பா இப்போ அந்த வீட்டுலதான் இருக்கோம்’’ என்பவர், சேவை தளத்திலும் தீவிரமாக இயங்கிவருகிறார் என்பது அடுத்த ஆச்சர்யச் செய்தி.

``இழப்புகளைக் கடக்கும் வைராக்கியம் வேண்டும்!”

“2000-ம் ஆண்டு ‘தமிழ்நாடு மாற்றுத்திறனுடை யோர் சங்கங்களின் கூட்டமைப்பில்’ உறுப்பினரா இருந்தேன்.  இந்த அமைப்பின் தலைவரான சிதம்பரநாதன், ‘யாரையும் நம்பியிருக்கக்கூடாது. உனக்கென தனி வாழ்க்கை, தனி உலகம் இருக்கு’னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். ‘ஒரு குடும்பத்தை நிர்வாகம் பண்ணும் உன்னால ஓர் அமைப்பை நிச்சயம் வெற்றிகரமா நடத்த முடியும்’னு எனக்குத்  தைரியத்தைக் கொடுத்தவர், நண்பர் ரேரிஷ். லலிதாம்பிகை, அருணா தேவி, சங்கீதா, நான் என நான்கு பெண்கள் சேர்ந்து, ஆழ்வார்பேட்டையில் ‘அனைத்து வகை மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பை’ 2012-ம் ஆண்டு தொடங்கினோம். இப்போ தமிழ கத்தில் 18 மாவட்டங்களில் இது இயங்கிட்டிருக்கு.

எங்களைப்போல  மாற்றுத்திறனாளிங்க, குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவங்க, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளோட சிரமப்படுற அம்மாக்கள்னு பலதரப்பட்ட பெண்களுக்கும் அடைக்கலமா எங்க அமைப்பு இருக்கு. இந்தப் பெண்களுக்கு எல்லாம் நாங்க சொல்ற முதல் மந்திரம், சொந்தக்காலில் நிற்கணும் என்பதுதான். அதனால, தலைமைப் பண்புக்கான பயிற்சிக்கு அப்புறம்தான், பல வாழ்வாதாரப் பயிற்சிகளை அவங்களுக்கு வழங்குறோம். வெளியிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைக்கிறோம். சணல் பைகள், க்வில்லிங், களிமண் கைவினைப் பொருள்கள் என  யாருக்கு எதில் ஆர்வமோ, அதைத் தேர்ந்தெடுத்துக்கலாம். வர்தா புயல், தானே புயல் என வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட 75 பேருக்கு 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீடுகளைக் கட்டிக்கொடுத்தோம்’’ என்றார் பெருமையுடன்.

‘’சின்ன வயசுல போலியோ பாதிப்புக்கான பிரத்யேக கேலிபர் (Caliper) ஷூவை எனக்கு வீட்டில் வாங்கிக் கொடுத்துப் போடச் சொன்னப்போ, அதை நான் தவிர்த்துட்டேனாம். ஒருவேளை அதைப் போட்டுப் பழகியிருந்தா, நடை கொஞ்சமாச்சும் சீராகியிருக்குமோன்னு அடிக்கடி நினைப்பேன். இதை எதுக்குச் சொல்றேன்னா, நோய்க்கான வைத்தியத்தைத் தவிர்த்தா பின்னாளில் வருந்தவேண்டி வரும் என்ற பாடத்தை என் மூலமா வலியுறுத்தத்தான். மத்தபடி நம்மகிட்ட என்ன குறை இருந்தாலும் சரி மனசுக்குள் வைராக்கியத்தை விதைச்சுட்டா, அந்தக் குறை சின்னதாகி மறைந்துடும் என்பதுதான் என் நம்பிக்கை. அந்த மேஜிக்கை செக் பண்ணித்தான் பாருங்களேன்!” என எளிய புன்னகையில் தன் வலிமை காட்டுகிறார் மகேஸ்வரி.

- வே.கிருஷ்ணவேணி


படங்கள்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு