Published:Updated:

டெல்லியை மிரட்டும் ஹெச்.ஐ.வி... தமிழகத்தின் நிலை என்ன? #Interactive

அரசு வழங்கும் முறையான சிகிச்சையை எடுத்துக்கொண்டு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறையை பின்பற்றினால் 40 ஆண்டுகள் வரை ஆயுளை நீட்டிக்கலாம்.

டெல்லியை மிரட்டும் ஹெச்.ஐ.வி... தமிழகத்தின் நிலை என்ன? #Interactive
டெல்லியை மிரட்டும் ஹெச்.ஐ.வி... தமிழகத்தின் நிலை என்ன? #Interactive

ஹெச்.ஐ.வி...‘மிக மோசமான உயிர்க்கொல்லி’ நோய்களில் ஒன்றாக உலக சுகாதார மையத்தால் வரையறுக்கப்பட்ட நோய். சமூகப் புறக்கணிப்பு, இழிவான பார்வை, தனிமைப்படுத்தப்படுதல் என மற்ற நோயாளிகளுக்கு இல்லாத பல சங்கடங்கள் ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்கு உண்டு. 

ஹெச்.ஐ.வி-யைக்  கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல்வேறு அமைப்புகளும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இதன் விளைவாக, தேசிய அளவில் கடந்த 3 ஆண்டுகளாகத் இதன் தாக்கம் குறைந்து வருகிறது. அதேநேரத்தில் தலைநகர் டெல்லியில் மட்டும் 2017-18ம் ஆண்டில் ஹெச்.ஐ.வி. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. 

இந்தியாவில், கடந்த 2015-16-ம் ஆண்டில் 2 லட்சத்து 465 பேர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  2016-17-ம் ஆண்டில் இது 1 லட்சத்து 93 ஆயிரத்து 195 ஆகவும், 2017-18ல் 1 லட்சத்து 90 ஆயிரத்து 763 ஆகவும் குறைந்துள்ளது. ஆனால், டெல்லியில் நிலை வேறுமாதிரியிருக்கிறது.  2017-18ல் புதிதாக 6,563 பேர் ஹெச்.ஐ.வியால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 6,340 ஆக இருந்தது. அண்மையில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில் இந்த புள்ளி விபரத்தைத் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் ஒவ்வொர் ஆண்டும் எய்ட்ஸ் பாதிப்பால் 400 பேர் பலியாகின்றனர். தற்போது, இந்த பாதிப்புக்காக 28,445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

"தேசிய அளவில், ஹெச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையில், மகாராஷ்டிரா மாநிலம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2017-18-ம் ஆண்டில் மட்டும் 23 ஆயிரத்து 30 பேருக்கு ஹெச்.ஐ.வி. தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேகாலயா, மிசோரம், திரிபுரா போன்ற மாநிலங்களில் பாதுகாப்பற்ற பாலியல் உறவு கொள்வது, ஒரே ஊசியை பயன்படுத்தி போதை மருந்து செலுத்திக் கொள்வது போன்ற காரணங்களால் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது" என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி மாநில எய்ட்ஸ் தடுப்பு சமுதாய கூடுதல் திட்ட இயக்குநரும், மருத்துவருமான பர்வீன் குமார் "பல்வேறு மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்துவரும் மக்களால்தான் ஹெச்.ஐ.வி பாதிப்பு அதிகமாகிறது. இதை தடுக்க விரைவில் ஒரு  மாபெரும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம், அதில் ஹெச்.ஐ.வியால்  பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்று திரட்டி அறிவுரை வழங்க உள்ளோம். இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஹெச்.ஐ.வி சிகிச்சைக்கான 89 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களுக்கு தகவல் அளித்துள்ளோம்’’ என்று  கூறியுள்ளார். 

இந்தியாவிலேயே தமிழ்நாடு ஹெச்.ஐ.வி தடுப்புப் பணிகளில் முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் செய்யப்படும் ஹெச்.ஐ.வி தடுப்பு பணிகள் குறித்து, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ் விரிவாகப் பேசினார். 

"தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட அளவில் பல்வேறு தொண்டு நிறுவனங்களை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து விழிப்புஉணர்வில் ஈடுபட்டுவருகிறது. மேலும், ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளோரைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவச

பரிசோதனை மற்றும் சிறந்த சிகிச்சைகள் வழங்கிட தமிழக அரசு நம்பிக்கை மையங்கள், கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையம் மற்றும் கட்டணமில்லா சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக, தமிழகத்தில் ஹெச்.ஐ.வி தொற்றை கண்டறிய 2,038 நம்பிக்கை மையங்களும், 16 நகரும் ஆய்வகங்களும், ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் உள்ளன.  173 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், மாவட்டந்தோறும் சட்ட உதவி மையங்களும்கூட செயல்பட்டு வருகின்றன. 

அதோடு, மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் 13 முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பருவ மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் கல்வி மூலமாகவும், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு செஞ்சுருள் சங்கங்கள் மூலமாகவும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஹெச்.ஐ.வி தொற்றுப் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட ஆண்டுதோறும் நிதியுதவி, ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் ஓய்வூதியம், ஹெச்.ஐ.வி. தொற்றுள்ளோர் கூட்டு மருந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் ஹெச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துமனைகள் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டில், 6 ஆயிரம் பேர் புதிதாக ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அது  2017-ல் 5 ஆயிரமாகக் குறைந்திருக்கிறது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தற்போதைய எண்ணிக்கை குறைந்துதான் வருகிறது.  

தமிழகத்தில் ஹெச்.ஐ.வி பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த 2005-ம் ஆண்டில் மத்திய அரசின் `பெற்றோர் சேய் மேவா திட்டம்' (Prevention of Parent-To-Child Transmission -PPTCT)  செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் தனியார் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணையுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஹெச்.ஐ.வியுடன் வாழும் தாய், ஏ.ஆர்.டி எனும் கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதை உறுதி செய்கிறோம். பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருந்தால், அவரைக் கண்காணிப்பில் கொண்டுவருகிறோம். சிகிச்சை மேற்கொள்ளும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குகிறோம். அரசு வழங்கும் முறையான சிகிச்சையை எடுத்துக்கொண்டு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறையைப் பின்பற்றினால் 40 ஆண்டுகள் வரை ஆயுளை நீட்டிக்கலாம்.

ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளதா என்பதை அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம். ஹெச்.ஐ.வி தொற்று இருந்தால், அரசு மருத்துவமனைகளில் இயங்கும், ஏ.ஆர்.டி கூட்டு மருந்து சிகிச்சை மையத்தை அணுகி இலவச தொடர் சிகிச்சை பெறலாம். ஏ.ஆர்.டி  கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதுடன் வாழ்நாளும் அதிகரிக்கும். 1800 419 1800 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால்  உடனடியாக ஆலோசனைகளைப் பெறலாம்..." என்கிறார் அவர்.

Speak Visually. Create an infographic with Visme

'இந்தியாவில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களில் 49 சதவிகிதம் பேர்  மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர்' என்கிறது ஒரு புள்ளி விவரம். தனக்கு உயிரைக்குடிக்கும் நோய் வந்திருப்பது தெரிந்தும் சமூகத்தின் பார்வைக்குப் பயந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தயங்குவதாக கூறுகிறார்கள் உளவியல் ஆலோசகர்கள். அது உண்மையா, அதற்காக கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறதா? 

" ஹெச்.ஐ.வி பாதிப்புள்ளவர்கள் அந்த பகுதிக்குட்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துகொள்வதில் தயக்கம் காடுகிறார்கள் என்பது உண்மைதான். அதுதான் அவர்களை மருந்துகள் எடுத்துக்கொள்ள வைப்பதில் இருக்கும் சவால். குறிப்பாக, சிலர் ஆரம்பக் காலங்களில் மருந்து எடுத்துக்கொண்டு உடல்நிலை சீரானவுடன் மருந்துகளை உட்கொள்வதில்லை. அல்லது, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள விருப்பமில்லாமல் மாற்று மருத்துவத்துக்கு சென்றுவிடுகிறார்கள். இதைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இன்னும் சிலர், அவர்களுடைய பகுதியில் உள்ள மருத்துவமனையில் தெரிந்தவர்கள் அதிகம் வருவதால், அங்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள தயங்குகிறார்கள். அவர்களுக்காகவே, ஒவ்வொரு நோயாளியின் மருத்துவ விபரங்களைப் பிரத்தியேக சாப்ட்வேர் மூலம் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் பார்க்கும் வண்ணம் வடிமைத்துள்ளோம். சில மாவட்டங்களில் மட்டும் இது நடைமுறைக்கு வந்துள்ளது.  விரைவில், தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது. ஹெச்.ஐ.வி-க்காக அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் ரகசியமாகவும் வைக்கப்படும்..." என்கிறார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் செந்தில்ராஜ்.