Published:Updated:

கர்ப்பிணிகள் மன அழுத்தமடைந்தால் இடதுகைப் பழக்கமுள்ள குழந்தை பிறக்கலாம்! #WorldLeftHandersDay

கர்ப்பிணிகள் மன அழுத்தமடைந்தால் இடதுகைப் பழக்கமுள்ள குழந்தை பிறக்கலாம்!  #WorldLeftHandersDay
கர்ப்பிணிகள் மன அழுத்தமடைந்தால் இடதுகைப் பழக்கமுள்ள குழந்தை பிறக்கலாம்! #WorldLeftHandersDay

இடதுகைப் பழக்கம் என்பது இயற்கையாக, இயல்பாக வரக்கூடியது. அது ஒரு நோயோ குறைபாடோ கிடையாது.

`சொன்னாங்கை', `நொட்டாங்கை' , `ஒரட்டாங்கை', `சொன்ட்டி'... இடதுகைப் பழக்கம் உள்ளவர்களை இப்படியான வார்த்தைகளால் கேலியாக அழைப்பது வழக்கம். ஆங்கிலத்தில் `லெப்டி' (Leftie), `சினிஸ்ட்ரல்'  (Sinistral) போன்ற வார்த்தைகளாலும் கேலி செய்வார்கள்.  

உண்மையில், இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் விவேகம் நிறைந்தவர்கள் என்கிறது நவீன ஆய்வு ஒன்று. இடதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு கற்பனைத் திறன், நினைவுகூரும் திறன் அதிகம் என்கிறார்கள். மேலும், அவர்கள் இசை, ஓவியம் போன்ற நுண்கலைகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. எந்தச் சூழலிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவர்களாகவும் கலை, இசை, நடிப்பு எனப் படைப்பாற்றல் துறையில் சிறந்தவர்களாகவும் அவர்கள் விளங்குவார்கள் என்பது தெரியவந்துள்ளது.

டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், கிரிக்கெட் போன்ற தனிநபர் விளையாட்டுகளில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சிறந்து விளங்குகின்றனர். நுட்பமான பணிகளிலும் விளையாட்டுத் துறையிலும்கூட இவர்கள் முன்னிலையில் இருப்பார்கள். 

மாவீரன் அலெக்சாண்டர், ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ, லியோனார்டோ டாவின்ஸி, விஞ்ஞானி  பெஞ்சமின் ஃபிராங்க்ளின், மேடம் மேரி கியூரி, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின்,  நடிகை மர்லின் மன்றோ, டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா போன்ற பலரும் இடதுகைப் பழக்கம் கொண்டவர்களே.

மகாத்மா காந்தி, அமெரிக்க அதிபர்களான ரொனால்டு ரீகன், பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, டேவிஸ் டென்னிஸ் கோப்பையைத் தொடங்கிய டேவிஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, யுவராஜ்சிங், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் என இடதுகைப் பழக்கம் கொண்ட பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது.

 உலகில் பத்தில் ஒருவர், இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள். இடது கைப் பழக்கம் அமைவதால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன என்பது பற்றி அறிந்துகொள்ள மிகவும் சிரமப்பட வேண்டியதில்லை. ஒரே உறுப்பாகத் தோன்றும் நமது மூளை, தனக்குள்ளே இடது வலது என இரு பிரிவுகளாக (hemispheres) இயங்குகிறது. இதில் மூளையின் இடது பகுதி, உடலின் வலது பக்க இயக்கங்களையும், வலது பகுதி, உடலின் இடது பக்க இயக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது. பொதுவாக 90 சதவிகிதம் பேருக்கு, இடது பக்க மூளை, அதிக சக்தி வாய்ந்ததாக (dominant hemisphere) உள்ளதால் இவர்கள் வலதுகைப் பழக்கம் உடையவர்களாகத் திகழ்கின்றனர். மீதமுள்ள 10 சதவிகிதம் பேருக்கு, மூளையின் வலதுபாகம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இது, கருவிலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்கின்றன ஆய்வுகள். 

`தாமஸ் பிரவுன்' (Thomas Browne) என்ற ஆங்கிலேயர் எழுதிய `வல்கர் எரர்ஸ்' (Vulgar Errors) என்ற புத்தகத்தில், மூளைக்கும் இடதுகைப் பழக்கத்துக்கும் உள்ள தொடர்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இடதுகைப் பழக்கம் என்பது பரம்பரையாகக் காணப்படுகிறது. தண்டுவட நரம்புகள் இடதுகைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. கர்ப்ப காலத்தில் அதிக மன அழுத்தத்துடன் காணப்பட்ட தாய்க்கு இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. இடதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்குத் திக்குவாய், ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், கோபம், தூக்கமின்மை ஆகியவை அதிகமாகக் காணப்படுகின்றன. வலதுகைப் பழக்கம் உள்ளவர்களைக் காட்டிலும் இவர்களது ஆயுள்காலம் குறைவாகக் காணப்படும். 

இதுபோன்ற பல்வேறு ஆய்வுகளின் உண்மை நிலை இன்னும் கண்டறியப்படவில்லை. இடதுகைப் பழக்கம் உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி வலதுகைப் பழக்கத்துக்கு ஈடுபடுத்தினால், அவர்களது செயல்திறன் குறைந்துபோகலாம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் வலதுகைப் பழக்கம் உடையவர்கள் பயன்படுத்தக்கூடியவையாகவே தயாரிக்கப்படுகின்றன என்பதால் இடதுகைப் பழக்கத்தினர் இவற்றைப் பயன்படுத்தத் தடுமாறுகின்றனர். சமீப காலமாக இடதுகைப் பழக்கத்தினருக்கான கத்தரிக்கோல், கிடார், கோல்ஃப் மட்டை, வாழ்த்து அட்டைகள் போன்ற பல பொருள்கள் உலகின் பல நாடுகளில், பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி, இடதுகைப் பழக்கமுள்ளவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இடது கைப்பழக்கமுள்ளவர்களைக் கௌரவிக்கவும், அவர்களது செயல்பாடுகளில் தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மேலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இடதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தகுந்த பொருள்களைத் தயாரிக்கவும் இந்த நாளில் வலியுறுத்தப்படுகிறது.

ஆக, இடதுகைப் பழக்கம் என்பது இயற்கையாக, இயல்பாக வரக்கூடியது. அது ஒரு நோயோ குறைபாடோ கிடையாது. இடதுகைப் பழக்கம் கொண்டவர்களை வலதுகைப் பழக்கத்துக்கு மாற்றுவதற்குப் பதிலாக, வலது கைப்பழக்கம் கொண்டவர்கள் இடது கையையும் சேர்த்து பயன்படுத்துவது மூளைக்கும், நமது பல்வேறு வேலைகளுக்கும் நிச்சயம் பலன்தரும் என்பதுதான் நிதர்சனம்.

அடுத்த கட்டுரைக்கு