Published:Updated:

தொடர் தும்மல் ஏற்பட என்ன காரணம்- தீர்வு என்ன? #Alert #Video

தொடர் தும்மல் ஏற்பட என்ன காரணம்- தீர்வு என்ன? #Alert #Video
தொடர் தும்மல் ஏற்பட என்ன காரணம்- தீர்வு என்ன? #Alert #Video

தொடர்ச்சியாக தும்மல் வருவது எதனால்? அதை எப்படி தடுப்பது?

சிலர், காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக தும்மிக்கொண்டே இருப்பார்கள். சில பேருக்கு தும்மல் தொடங்கினால் அவ்வளவு சீக்கிரம் நிற்காது. 

காற்றைத் தவிர வேறு எந்த ஒரு வெளிப்பொருளும் மூக்கில் நுழைந்தால், மூக்கு அதை ஏற்காது. உடனே ஒரு எதிர்வினையை உருவாக்கும். அந்த எதிர்வினைதான் தும்மல். இது அனிச்சையாக நடக்கும்.  உள்ளே செல்லும் பொருளை வெளியே தள்ள நடக்கும் முயற்சி அது. தூசு, துகள்கள், பாக்டீரியா என்று எது போனாலும் உடனே தும்மல் வெளிப்படும்.  

சில பேர், சளி பிடித்தால், மூக்குப்பொடியைப் போட்டு செயற்கையாகத் தும்முவார்கள். உடனே கொஞ்சம் ரிலாக்ஸான மாதிரித் தெரியும். ஆனால், அப்படி செயற்கையாகத் தும்மலை வரவழைப்பதும், தொடர்ந்து தும்மல் வருவதும் நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். 

இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் சங்கரிடம் பேசினோம். 

`` தூசு மற்றும் ஒவ்வாமை காரணமாகவே தொடர் தும்மல் ஏற்படுகிறது. ஏ.சி-க்கு கீழே அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூச்சுக்குழாயில் ஃபங்கஸ் (Fungus) படர்வதால் தொடர் தும்மல் ஏற்படலாம். வாகனப்புகைகளை சுவாசிப்பது, அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் மூலம் பரவும் தூசுகள், கழிவுகளிலிருந்து வெளிவரும் மாசு போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையும் தும்மலுக்குக் காரணமாக இருக்கும். 

அதேபோல் உடல் உறுப்புகளில் ஏற்படும் ஒவ்வாமைப் பிரச்னைகளும் (Internal Influence) தும்மல் வரக் காரணமாக இருக்கின்றன. இந்தப்

பிரச்னை உள்ளவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இந்த ஒவ்வாமையானது தும்மல் மட்டுமின்றி வேறு சில பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். உதாரணமாக கண் அரிப்பு, சளி, இருமல், மூச்சுக்குழாய் மற்றும் தோலில் அரிப்பு, தோல் தடித்துக் காணப்படுதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இப்படிப்பட்டவர்களுக்கு ஆஸ்துமா, சைனஸ், மூச்சிரைப்பு போன்ற பாதிப்புகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். 

சில குழந்தைகள் தினமும் காலையில் எழுந்தவுடன் தும்மல்போடத் தொடங்கிவிடுவார்கள். குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது தொடர்ந்து தும்மல் போடுவார்கள். இது ஆஸ்துமா பிரச்னைக்கான முக்கிய அறிகுறி என்பதால், கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாக, பரம்பரை வழியில் ஆஸ்துமா பிரச்னை இருந்தால், முன்கூட்டியே பரிசோதித்துக் கொள்ளவும்.

தும்மலின்போது கண் அரிப்பு, கண் வலி, மூச்சிரைப்பு அல்லது தீவிர தலைவலி போன்றவை இருந்தால், அவை சைனஸ் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் மருத்துவரை அணுகி, எக்ஸ்-ரே எடுத்துக்கொள்ளவும். அதைத்தொடர்ந்து, `ஈஸ்னோபீலியா கௌன்ட்' (Eosinophil count) என்ற ரத்தப் பரிசோதனை செய்துபார்க்கவும்.

சளி இருமல் போன்ற பிரச்னைகளுக்கு முதல் நிலையிலேயே (Acute Illness) மருத்துவ ஆலோசனை பெறுவது, பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க உதவும். பலர் வீட்டு மருத்துவத்திலேயே தீர்வு காண முயல்வர். சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் அதிகபட்சம் ஒருவாரம் வரை இருக்கலாம்; மூன்று நாள்களுக்குப் பிறகு பாதிப்பின் தீவிரத்தன்மை குறைய வேண்டும். அப்படியில்லாமல் `க்ரோனிக் இல்னெஸ்' (Chronic Illness) எனப்படும் தொடர் பாதிப்பு இருந்தால், நெஞ்சுச்சளி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள மார்பு பகுதியில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்கவும். 

ஒவ்வாமை காரணமாக ஏற்படும் தொடர் தும்மல், `அலெர்ஜிக் ரைனைட்டிஸ்' (Allergic Rhinitis) பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இந்தப் பிரச்னை இருந்தால் தும்மலுடன் சேர்ந்து இருமல், கண் எரிச்சல், சளி அதிகமாகி மூக்கு ஒழுகுதல், கண்ணில் கருவளையம் தோன்றுதல், உடல் சோர்வு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, அப்படியான அறிகுறிகள் தெரிந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். 

ஒவ்வாமை மற்றும் பாதிப்பின் முதல் நிலையில் இருப்பவர்கள் மட்டுமே வீட்டு மருத்துவத்தைப் பின்பற்றலாம். தொடர் சிக்கல் நீடித்தால், உங்கள் உடலுக்கு எது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்து, அந்தச் சூழலைத் தவிர்க்கவும். முடியாதபட்சத்தில், அந்தச் சூழலில் பாதுகாப்பாகச் செயல்பட வேண்டும். தூசு அலர்ஜி உள்ளவர்களுக்கு, ஒவ்வாமை எளிதில் ஏற்பட்டு தொடர் தும்மலை ஏற்படுத்தும். எனவே, அத்தகைய பிரச்னை உள்ளவர்கள் வீட்டைச் சுத்தமாகவும் தூசு சேராமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்" என்கிறார் சங்கர்.

அடுத்த கட்டுரைக்கு