Published:Updated:

ஆல், வேல், பலா, நாயுருவி, வேம்பு, விளா... பற்களைக் காக்கும் இயற்கை பிரஷ்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆல், வேல், பலா, நாயுருவி, வேம்பு, விளா... பற்களைக் காக்கும் இயற்கை பிரஷ்கள்!
ஆல், வேல், பலா, நாயுருவி, வேம்பு, விளா... பற்களைக் காக்கும் இயற்கை பிரஷ்கள்!

பொதுவாக துவர்ப்புச் சுவை உள்ள பொருள்கள், ஈறுகளைப் பலப்படுத்தி, ஈறுகளில் உள்ள புண் மற்றும் வீக்கத்தைக் குணமாக்கி பற்களை உறுதிப்படுத்தும். துவர்ப்புச் சுவைக்குக் காயங்களை ஆற்றும் தன்மையும் இறுகலடையச் செய்யும் குணமும் உண்டு.

யதுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட டூத்-பிரஷ்களும் பல வண்ணங்களின் கூட்டணியில்  உருவான பற்பசைகளும் ஒவ்வொரு வீட்டின் குளியலறைகளிலும் அணிவகுக்கின்றன. குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால், அவர்களது பயன்பாட்டுக்கு பத்து வகையான பற்பசைகள் காத்துக்கிடக்கின்றன. `உங்க டூத் பேஸ்ட்டுல உப்பு இருக்கா?', `எங்கள் கம்பெனி பற்பசையைப் பயன்படுத்தினால், கிருமிகளிடமிருந்து 12 மணிநேரப் பாதுகாப்பு கிடைக்கும்…’ என்பதுபோன்ற விளம்பரங்கள் நம்மைக் கவர முயல்கின்றன. 

டூத்-பிரஷ், பற்பசைகள் பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரியும். ஆனால், நம் முன்னோர் காலங்காலமாகப் பயன்படுத்திய இயற்கையான பல் துலக்கும் கருவிகள் பற்றி நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்.  ஆல், வேல், பலா, நாயுருவி, வேம்பு, விளா, நொச்சி, மருது, தேக்கு, நாவல், புங்கை போன்ற மரங்கள் மற்றும் செடிகளின் தண்டுப் பகுதியைத்தான் பிரஷ்-ஆகப் பயன்படுத்தினர். மருத்துவ நூல்களிலும் இந்த மூலிகை பல்குச்சிகளுக்கு உள்ள மருத்துவக் குணங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 

வேம்பு: வேப்பங்குச்சிகளை உடைத்து, அதன் நுனியை பிரஷ் போல திரித்து, வாய்ப் பகுதியில் வைத்ததுமே, எச்சில் சுரப்பு அதிகரிக்கும். கிருமிநாசினி செய்கையுடைய எச்சில், உடனடியாக தனது பணியைத் தொடங்கிவிடும். தொடர்ந்து வேப்பங்குச்சி உதவியுடன் பற்களை மேலும் கீழும், இடதும் வலமும் மென்மையாகச் சுத்தப்படுத்தலாம். ஆக, பற்களின் ஆரோக்கியத்துக்கு இயற்கை தரும் கியாரன்டி இது. கசப்புச் சுவை கொண்ட வேம்பு, கிருமிகளை உடனடியாக மடியச் செய்யும். 

ஆலும் வேலும்: `ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்ற பழமொழியின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அறிவியல் அற்புதமானது. கருவேல மரத்தின் குச்சிகளைப் பொடித்துப் பற்பொடியாகப் பயன்படுத்தலாம். நாட்டுக் கருவேலங்குச்சிகளை நேரடியாகவே பிரஷ் மாதிரி பயன்படுத்தலாம். இதனால் ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய் நாற்றம் நீங்கும். நாட்டுக் கருவேல மர இலையின் கொழுந்தால் பல் தேய்த்தால், பற்கள் `கல் போல பலமடையும்’ என்கிறது சித்த மருத்துவம். `பல்லுக் கடுத்த பல நோயகற்றியதைக் கல்லுக்கு நேராகக் கட்டுமே...' என்றொரு சித்த மருத்துவப் பாடல்கூட உண்டு.

ஆலம் விழுதுகளும் பல்துலக்க ஏற்றவை. ஆல மரத்தின் பாலைக் கொண்டு வாய் கொப்பளித்தால், `அசைகின்ற பல்லும் இறுகும்’ என்று கூறுமளவுக்கு, பற்களின் நலன் சார்ந்தது. ஆல மரத்தின் பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தாலும் இதன் குச்சிகளால் பல் துலக்கினாலும் பற்கள் நீண்டகாலம் நிலைபெறும். இதேபோல், `நாயுருவி வேர் கொண்டு பல் துலக்க, முகம் வசீகரமாகும்’ என்கிறது ஒரு பாடல் குறிப்பு. 

வாய்க்கொப்பளிக்க குடிநீர்: சுக்கு, மருதம்பட்டை, வெள்வேல மரப்பட்டை, மருக்காரைப் பழம், எருக்கன் வேர், ஆவாரம் பூக்கள், பிரப்பன் கிழங்கு போன்றவற்றைச் சம அளவு எடுத்து, ஒன்றிரண்டாக இடித்து, தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும். சூடு ஆறிய அந்த நீரைக் கொண்டு வாய்க்கொப்பளிக்கலாம். சில வாரங்கள் தொடர்ந்து செய்தால் `முதியவர் பற்களும் இளைஞர் பற்கள் போல உறுதிபெறும்’ என்கிறது தேரையர் பாடல் ஒன்று.

பற்பொடிகள்: திரிபலா சூரணம், நெல்லிக்கட்டை, ஓமம், இந்துப்பு, காசுக்கட்டி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு, உலர்ந்த புதினா இலைகள் போன்றவற்றைப் பற்பொடியாகவும் பயன்படுத்தலாம். வேப்பங்கொழுந்து, கருவேலமரக் கொழுந்து மற்றும் ஆவாரம் பூக்களை பல் துலக்கப் பயன்படுத்தலாம்.  

அறிவியல் ஒப்புமை: அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது, மேற்சொன்ன பெரும்பாலான இயற்கைப் பொருள்கள் துவர்ப்புச் சுவையுடையன. சில கசப்புச் சுவை உடையன. பொதுவாக துவர்ப்புச் சுவை உள்ள பொருள்கள், ஈறுகளைப் பலப்படுத்தி, ஈறுகளில் உள்ள புண் மற்றும் வீக்கத்தைக் குணமாக்கி பற்களை உறுதிப்படுத்தும். துவர்ப்புச் சுவைக்குக் காயங்களை ஆற்றும் தன்மையும் இறுகலடையச் செய்யும் குணமும் உண்டு. கசப்புச் சுவைக்கு கிருமிநாசினி செய்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, வேம்புக்குக் கிருமிநாசினி செய்கை உண்டு என்பது உலகறிந்த செய்தி.

`இவற்றையெல்லாம் தேடி எங்கே அலைவது’ என அங்கலாய்க்க வேண்டாம். இப்போது பல இடங்களில் மிகவும் குறைந்த விலைக்கு சிறுவியாபாரிகளிடம் பற்குச்சிகள் கிடைக்கின்றன. அவர்களை ஊக்கப்படுத்தினால் பற்களின் ஆரோக்கியமும் ஊக்கமடையும். வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே பற்பொடிகளை தயாரித்தும் வைத்துக்கொள்ளலாம். உடனடியாக செயற்கையான பிரஷ்களை தூக்கி வீசிவிட்டு, இயற்கைப் பொருள்களுக்கு மாற முடியாவிட்டாலும், வாரத்தில் சில நாள்கள் மட்டுமாவது இயற்கையான பல்துலக்கும் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம். 

செயற்கை பிரஷ்களைப் போல, நீண்ட நாள்கள் ஒரே குச்சியை நாம் பயன்படுத்தப்போவது கிடையாது. (செயற்கை பிரஷ்களை ஒவ்வொரு நாள் பல்துலக்கும் முன்பும் வெந்நீரில் சுத்தப்படுத்துவது அவசியம்). ஒருமுறை பல்துலக்கியதும் தூக்கி வீசும் `யூஸ் அண்ட் த்ரோ’ முறையில் பற்குச்சிகளைப் பயன்படுத்துவதால், கிருமிகள் தாக்க வாய்ப்பில்லை. குச்சிகளின் உதவியுடன் தினமும் நாக்கைச் சுத்தப்படுத்த வேண்டும். பல்துலக்கும்போது, சில நிமிடங்களாவது மனதை ஒருநிலைப்படுத்தி பற்களை கவனிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போதுகூட சிலர் பல்துலக்குவதைப் பார்க்க முடிகிறது. செயற்கை பிரஷ்களை பல பிரஷ்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்குமாறு அடுக்கிவைக்கக் கூடாது. மேலும் கழிவறைக்கு அருகே பிரஷ்கள் இருந்தால் அவற்றில் கிருமிகள் குடியேற வாய்ப்புகள் அதிகம். எனவே, அவற்றைக் கையாள்வதில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.

தினமும் பற்களைக் கண்ணாடியில் பார்த்து, அதில் ஏதேனும் சொத்தை இருக்கிறதா, ஈறுகள் பலமுடன் இருக்கின்றனவா, பல் அரிப்பு இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அரிப்பு, சொத்தை போன்றவை அதிகளவில் இருந்தால் மருத்துவர் உதவி தேவை. எந்தவிதமான தொந்தரவுகளும் ஏற்படாமல், பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இயற்கைப் பொருள்களை நாடுவோம். இயற்கை… நம் வரவுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு