Published:Updated:

கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன் சிகிச்சை!

உடல் பருமனுக்குப் புதிய தீர்வு

பிரீமியம் ஸ்டோரி
கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன் சிகிச்சை!

டல் பருமனைக் குறைப்பதற்காக, உணவுக் கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு பலர் வெற்றி பெறுவார்கள். ஆனால், உணவுக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினாலோ அல்லது உடற்பயிற்சியை நிறுத்தினாலோ, உடல் எடை மளமளவென அதிகரித்துவிடும். அதனால் செய்வது அறியாமல் திகைத்துவிடுவார்கள். உடல் பருமன் என்பது அழகு சம்பந்தப்பட்ட விவகாரம் போன்று தெரிந்தாலும், உண்மையில் இதய நோய், நீரிழிவு, மன அழுத்தம், மூட்டு வலி போன்ற பல பிரச்னைகளுக்கு அதுவே மூல காரணம். அதிக உடல் எடைப் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பாதுகாப்பான, நம்பகமான கொழுப்பைக் கரைக்கும் தொழில்நுட்பம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

##~##

 சென்னை தி.நகரில் உள்ள லைஃப் அலைவ் மருத்துவமனையின் டாக்டர் சுனிதா ரவி, எண்டோகிரைனாலஜி (நாளமில்லா சுரப்பிகள்) சீனியர் கன்சல்டன்ட் டாக்டர் தீபக் ஆகியோர் நம்மிடம் பேசினார்கள். 'நம் உடல் என்பது ஒரு மிகப் பெரிய தொழிற்சாலை. உணவு உட்கொள்ளவும், உணவை ஜீரணிக்கவும், ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு, வளர் சிதை மாற்றம் போன்ற அனைத்துச் செயல்களுக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து கலோரிகளாகக் கிடைக்கிறது. தேவைப்படும் கலோரி அளவானது, ஒருவருக்கொருவர் மாறுபடும். இதனை, பாசல் மெட்டபாலிக் ரேட் (பி.எம்.ஆர்.) மூலம் கண்டறிய முடியும். பொதுவாக ஒருவரது உடல் செயல்படுவதற்கு, 2,000 கலோரி ஆற்றல்தான் தேவைப்படும் என்றாலும், சாதாரணமாக 4,000 முதல் 5,000 கலோரி உணவை எடுத்துக்கொள்கிறோம். மீதம் உள்ள கலோரிகள், நம் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன் சிகிச்சை!

உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மேற்கொள்ளும் பட்சத்தில், தானாகவே கிடைக்கக்கூடிய ஆற்றலை மட்டுமே பயன்படுத்தும் வகையில் உடல் தன்னை மாற்றிக்கொள்ளும். ஆக்டிவ் மோடில் இருந்து ஸ்டாண்ட் பை மோடுக்கு மாறுவது போல உடல் மாறுவதால்தான், சிலர் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் உடல் இளைப்பது இல்லை. ஆனால், இவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை நிறுத்திவிட்டால், மீண்டும் அதிகப்படியான ஆற்றல் உடலுக்குக் கிடைத்துவிடும். ஆனால், உடல் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவது இல்லை. அதாவது ஸ்டாண்ட் பை மோடில் இருந்து ஆக்டிவ் மோடுக்கு உடனடியாக மாறிவிடாது.

ஸ்டாண்ட் பை மோடில் பயன்படுத்தப்பட்ட அதே 1,000 கலோரியை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, மீதத்தை சேமிக்கத் தொடங்கிவிடும். உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இதில் இவ்வளவு விஷயம் உள்ளது என்பது தெரியாது. இதனால் கடைசியில் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தோல்வி அடைகின்றனர்.

கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன் சிகிச்சை!

உடல் எடையைக் குறைக்க பல வழிமுறைகள் இருந்தாலும், மிகவும் பாதுகாப்பான, பக்க விளைவுகள் அற்ற ஒரு தொழில்நுட்பத்தை இந்தியாவில் முதன்முறையாக நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம்.

பொதுவாக, கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு ஹெச்.சி.ஜி. என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். கிடைக்கும் ஆற்றலை மட்டும் பயன்படுத்தாமல், உடம்பில் ஏற்கெனவே சேமித்துவைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பை எரித்து, அந்தப் பெண்ணுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் வேண்டிய ஆற்றலை பெறச் செய்வது அதன் பணிகளில் ஒன்று. அதாவது, உடம்பில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது என்பதை அடையாளம் காட்டி, வளர்சிதை மாற்றத்தை சரியான அளவு நடக்க இந்த ஹார்மோன் உதவுகிறது. இதே நுட்பத்தை உடல் பருமன் உள்ளவர்களுக்குப் பயன்படுத்துகிறோம்.

500 கலோரி மட்டும் கிடைக்கும் வகையில் உடல் பருமன் உள்ளவருக்கு உணவுப் பழக்கம் வடிவமைக்கப்படும். அதை அவர் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து 40 நாட்கள் ஹெச்.சி.ஜி. ஹார்மோன் அளிக்கப்படும். மாத்திரை, சருமத்தில் பூசக்கூடிய கிரீம், ஊசி போன்ற பல வடிவங்களில் இந்த ஹார்மோன் கிடைக்கிறது. இந்த ஹார்மோன் உடலில் செலுத்தப்பட்டதும், கிடைக்கும் கலோரியை மட்டும் பயன்படுத்துவதைத் தவிர்த்து, ஏற்கெனவே சேமித்துவைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பைக் கரைக்கும்படி தூண்டும். இதனால் கொழுப்பு கரைக்கப்பட்டு கலோரி பற்றாக்குறை சமன் செய்யப்படும். உடலின் வளர்சிதை மாற்றமும் எந்தப் பாதிப்பும் இன்றி நடைபெறும். சிகிச்சை முடிவில் 8 முதல் 10 கிலோ வரை உடல் எடை குறையும். அதன் பிறகு, நாங்கள் வடிவமைத்துக் கொடுத்தபடி உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணிகளுக்கு ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 60 ஆயிரம் யூனிட் வரை ஹெச்.சி.ஜி. ஹார்மோன் சுரக்கும். ஆனால், உடல்பருமன் உள்ளவர்களுக்கு  125 முதல் 250 யூனிட் மட்டுமே அளிக்கப்படும். இது முழுப் பாதுகாப்பானது. உடல் பருமனால் வரும் பக்க விளைவுகள் எதுவும் இல்லை.

இந்த சிகிச்சையை எல்லோரும் பெற முடியாது. கடுமையான நீரிழிவு, தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை அளிப்பது இல்லை. ஜெரோனா(zerona) லேசர் சிகிச்சை மூலமாக இவர்களுக்கு உடல் எடை குறைக்க முடியும்! மற்ற சிகிச்சை முறைகளைக் காட்டிலும் இதற்கு ஆகும் செலவும் மிகக் குறைவே. மேலும் உடல் பருமனால் ஏற்படும் பல நோய்களுக்கு, இந்த சிகிச்சை முற்றுப்புள்ளி வைக்கும்'' என்றனர்.

எத்தனை எளிய சிகிச்சை!

-பா.பிரவீன்குமார்

படம்: ஜி.பிரசாந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு