Published:Updated:

மலேரியா, மஞ்சள்காமாலை, எலிக்காய்ச்சல்... மழைக்கால நோய்களிலிருந்து தப்பிப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மலேரியா, மஞ்சள்காமாலை, எலிக்காய்ச்சல்... மழைக்கால நோய்களிலிருந்து தப்பிப்பது எப்படி?
மலேரியா, மஞ்சள்காமாலை, எலிக்காய்ச்சல்... மழைக்கால நோய்களிலிருந்து தப்பிப்பது எப்படி?

அச்சுறுத்தும் மழைக்கால நோய்கள்... தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்!

ருவநிலை மாற்றத்திற்கேற்ப நோய்கள் பரவுவது இயல்புதான். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் இந்த நோய்களிலிருந்து தப்பித்துவிடலாம். இது மழைக்காலம். காய்ச்சல், சளித்தொந்தரவு, இருமல் எனப் பல பிரச்னைகள் வதைக்கத் தொடங்கும்.

மழைக்காலங்களில் என்னென்ன நோய்கள் தாக்கும்... அவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி என விவரிக்கிறார் பொது நல மருத்துவர் தேவராஜ்.

மலேரியா

`அனோபிலஸ்' (Anopheles) என்ற ஒரு வகை கொசு மனிதர்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா பரவ வாய்ப்புண்டு. தேங்கி நிற்கும் நீர்

நிலைகளான கிணறுகள், ஏரி, குளம், நெல் வயல்களில் வளரும் இந்த வகைக் கொசுக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடிக்கக்கூடியவை. மலேரியாவில், பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (Plasmodium vivax) , பிளாஸ்மோடியம் ஓவேல் (Plasmodium ovale), பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae), பிளாஸ்மோடியம் பால்சிபாரம் (Plasmodium falciparum) என நான்கு வகைகள் உள்ளன. இதில், பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் பாதிப்பினால் ஏற்படும் காய்ச்சலே பரவலாகக் காணப்படுகிறது. பிளாஸ்மோடியம் பால்சி பாரம் வகை மலேரியாக் காய்ச்சல் மிகவும் ஆபத்தானது. மூளை பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உண்டு.

காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகளோடு வரும் வழக்கமான காய்ச்சலைப்போலவே மலேரியாவும்  தொடங்கும். கூடவே உடல் வலி, முதுகு வலி, வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். குளிர் நடுங்க வைக்கும். காய்ச்சல் விட்டுவிட்டு வரும். மலேரியாவுக்கென இதுவரை தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை. மலேரியாவுக்குக் குளோரோகுயின் (Chloroquine), பிரைமாகுயின் (primaquine) போன்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன. மருத்துவர் பரிந்துரைத்த காலம் வரை தவறாமல் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலம் மலேரியா காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம்.

டெங்கு 

`ஏடிஸ் எகிப்ஜி  (Aedes Aegypti) எனும் ஒருவகைக் கொசுவின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் காய்ச்சல் இது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, வயிற்றுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, உடல்சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். சிலருக்குத் தோலில் அரிப்பு அல்லது சிவப்புப் புள்ளிகள் தோன்றும். இந்தக் காய்ச்சலின் தீவிர நிலையில், உடலின் உட்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தத் தட்டணுக்கள் குறைந்துவிடும்.

இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் 4 வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு பாதிக்கப்பட்டு குணமானதும், மீண்டும் அதே வைரஸால் பாதிப்பு ஏற்படாது. அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகிவிடும். அதேநேரத்தில், வேறொரு வகை வைரஸால் டெங்கு வரலாம். பொதுவாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களில் 98 சதவிகிதம் பேருக்கு தானாகவே சரியாகி விடும். இந்தக் காய்ச்சலுக்குத் தடுப்பூசிகளோ மருந்துகளோ இதுவரை கண்டறியப்படவில்லை. அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன்,  நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

பன்றிக் காய்ச்சல்

`ஹெச்1என்1 இன்ஃபுளுயென்சா’ எனும் வைரஸ் கிருமியால் பன்றிக் காய்ச்சல் ஏற்படும். மற்றப் பருவ காலங்களைவிட மழை மற்றும் குளிர் காலங்களில் இந்தக் கிருமி அதிக வீரியத்துடன் தாக்கும். நோய் பாதித்தவரின் தும்மல், இருமல் போன்றவற்றால் பரவும்.

பன்றிக் காய்ச்சல் ஒருவருக்கு வந்தால் உடல் நடுக்கத்துடன் காய்ச்சல் இருக்கும். தீவிரம் அதிகமானால் மூளையில் பாதிப்பு உண்டாகி  உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். நெஞ்சுவலி, மயக்கம் போன்றவையும் ஏற்படலாம்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற வேண்டும். பன்றிக் காய்ச்சலைத் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி முத்தடுப்பு தடுப்பூசி (Trivalent inactivated vaccine - TIV) உள்ளது. இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஓராண்டு வரை பலன் தரும். இந்த ஊசியை மழைக்காலத்தின் தொடக்கத்திலேயே போட்டுக்கொள்வது நல்லது.

டைபாய்டு  

`சால்மோனெல்லா டைபி’ (Salmonella typhi ) எனும் பாக்டீரியாவால் டைபாய்டு காய்ச்சல் வருகிறது. அசுத்தமான குடிநீர், சுகாதாரமற்ற உணவுகள் மூலம் இந்த வகை பாக்டீரியா பரவுகிறது. முதலில் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலியை ஏற்படுத்தும். அதன்பிறகு படிப்படியாகக் காய்ச்சல் அதிகரிக்கும். இரவில் காய்ச்சல் உச்சம் பெறும். பசி எடுக்காது. உடல் சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதைக் கவனிக்கத் தவறினால் குடலில் ரத்தக்கசிவு, பித்தப்பை அழற்சி போன்ற கடுமையான விளைவுகள் உண்டாகும்.

சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துவது, காய்கறிகளைக் கழுவிப் பயன்படுத்துவதன் மூலம்  டைபாய்டு வராமல் தடுக்கலாம். `டைபாய்டு' தடுப்பூசியும் போட்டுக்கொள்ளலாம். ஒருமுறை இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் மூன்று ஆண்டுகளுக்கு டைபாய்டு காய்ச்சல் வராது.

மஞ்சள்காமாலை

அசுத்தமான குடிநீர், சுகாதாரமற்ற உணவு போன்றவற்றின் மூலம் `ஹெபடைட்டிஸ்’ வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு மஞ்சள்காமாலை வரும். அதுமட்டுமல்லாமல், மதுப்பழக்கம், மருந்துகளின் பக்க விளைவு, எலிக்காய்ச்சல், ஃபேட்டி லிவர், கல்லீரல் புற்றுநோய் போன்ற காரணங்களால் கல்லீரல் பாதிக்கப்படும்போதும் இந்நோய் ஏற்படலாம்.

பசியின்மை, காய்ச்சல், கடும்குளிர், வாந்தி, வயிற்று வலி வரும். கண், தோல், நகம், சிறுநீர் ஆகியவை மஞ்சள் நிறத்துக்கு மாறும்.

மஞ்சள் காமாலை நான்கைந்து நாள்கள் முதல் ஓரிரு வாரம் வரை உடலில் இருந்துவிட்டுப் பின்னர் போய்விடும். நோய் பாதித்தவர்கள் எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். சுத்தமான குடிநீரைப் பருக வேண்டும். மருத்துவர் சொல்லும் அறிவுரைகளைக் கடைப்பிடித்தால் விரைவில் குணமாகிவிடும்.

மஞ்சள் காமாலையில் `ஏ, பி, சி, டி' என நான்கு வகைகள் உள்ளன. இதில், ஏ, பி பிரிவு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இவற்றுக்குத் தடுப்பூசிகள் உண்டு. சி, டி பிரிவுகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.  

எலிக்காய்ச்சல்

மழைக் காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது, எலி, பெருச்சாளி போன்றவற்றின் சிறுநீர்க் கழிவுகளும் அதில் கலக்கும். எலிகளின் அந்தக் கழிவுகளில் `லெப்டோஸ்பைரா' கிருமிகள் இருந்தால் `எலிக்காய்ச்சல்’ என்ற `லெப்டோபைரோசிஸ்' (Leptospirosis) நோய் வரும். பாதங்களில் புண், சேற்றுப்புண், பித்தவெடிப்பு உள்ளவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காலில் செருப்பு அணியாமல் நடக்கும்போது இந்த நோய் உண்டாக அதிக வாய்ப்பு உண்டு.

சளி, கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, தசை வலி, உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த நோயின் முதல்கட்ட அறிகுறிகளாகும். `சிவந்த கண்கள்’ இந்த நோயை இனம் காட்டும் முக்கிய அறிகுறி. இத்தகைய நேரத்தில் மருத்துவனை  சென்று தகுந்த சிகிச்சை பெற்றுவிட்டால் நோயை உடனே கட்டுப்படுத்திவிடலாம். தவறும்பட்சத்தில்,நோய் தீவிரமாகும். இதயம் மற்றும் மூளையைப் பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உண்டு.

வயிற்றுப்போக்கு 

அசுத்தமான குடிநீர், சுகாதாரமற்ற உணவுகளின் மூலம் ரோட்டா வைரஸ்கள் பரவுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. நோயாளியின் உடலில் நீரிழப்பைச் சரி செய்வதே இதற்கு தரப்படும் சிகிச்சையின் நோக்கம். எனவே, பாதிக்கப்பட்டவருக்கு அடிக்கடி சுத்தமான நீராகாரம் கொடுக்க வேண்டும்.

மழைக்கால நோய்களின் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுவான வழிமுறைகள்:

* பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

* வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* வெளியே செல்லும்போது தவறாமல் காலணிகளைப் பயன்படுத்த வேண்டும்.

* பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* இருமல், தும்மலின்போது கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும்.

* பாதுகாக்கப்படாத இறைச்சி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.

* காய்கறி, பழங்களை நன்றாகக் கழுவி பயன்படுத்த வேண்டும்.

* கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

* பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.

* நகங்களை வெட்டி, அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* சுகாதாரமற்ற சூழலில் விற்கப்படும் உணவுப்பொருள்களை வாங்கிச் சாப்பிடக் கூடாது.

* சாப்பிடும் முன்பும், மலம் கழித்த பின்பும் கைகளைச் சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.

ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கமுடியாத சூழலில் செல்ல நேரிட்டால் காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ள வேண்டும். ஜூஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குடிநீர் மற்றும் உணவு வகைகளை மிதமான சூட்டில் சாப்பிட வேண்டும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு