Published:Updated:

தாழ்வு மனப்பான்மை அகற்றி நம்பிக்கையூட்டும் `கலினரி ஆர்ட் தெரபி'! #CulinaryArtTherapy

தாழ்வு மனப்பான்மை அகற்றி நம்பிக்கையூட்டும் `கலினரி ஆர்ட் தெரபி'! #CulinaryArtTherapy
தாழ்வு மனப்பான்மை அகற்றி நம்பிக்கையூட்டும் `கலினரி ஆர்ட் தெரபி'! #CulinaryArtTherapy

மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கு, `கலினரி ஆர்ட் தெரபி'  நல்ல தீர்வைக் கொடுக்கும் என்கின்றன, சமீபத்திய சில ஆய்வு முடிவுகள்.

ன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களையும்  உளவியல் ரீதியாகப் பாதிப்புக்குள்ளானவர்களையும் சமையல் போன்ற இயல்பான செயல்கள்மூலம் மீட்டெடுத்து  வாழ்க்கையின்மீது  நம்பிக்கையையும் ஆர்வத்தையும் உருவாக்குவதே ஆக்குபேஷனல் தெரபி (Occupational therapy). இது ஒருவித உளவியல் சிகிச்சை.

எந்தவொரு நோய்க்கும், மருந்து மாத்திரைகள் மட்டுமே முழு நிவாரணத்தை அளிக்காது.  நோய் என்பது, உடலில் மட்டும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. மனதையும் சேர்த்தே பாதிக்கிறது. மனப் பிரச்னைகளைச் சரிசெய்யாதவரை உடல் பாதிப்பிலிருந்து முழுமையாக வெளிவரமுடிவதில்லை. எனவே, எந்தவொரு பாதிப்பிலிருந்தும் முழுமையாக மீண்டுவர, உளவியல் தொடர்பான சிகிச்சைகளும் ஆலோசனைகளும் அவசியம்.

உளவியல் தொடர்பான சிகிச்சைகளில் கவுன்சலிங் மற்றும் தெரபி சிகிச்சைகள் முக்கியமானவை. சமீபகாலமாக, மனநல மருத்துவர்களால் தெரபி வகை சிகிச்சைகள் அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. தெரபிகளில் பிஹேவியர், ஆர்ட், ஆக்குபேஷனல், வாய்ஸ் என நிறைய வகை தெரபிகள் உண்டு. இவற்றில் தொழில்முறை பழக்கத்தைக் கற்பிக்கும் `ஆக்குபேஷனல் தெரபி'  பற்றி விரிவாக விளக்குகிறார் மனநல மருத்துவர் அன்புதுரை.

``தெரபியில் நிறைய வகைகள் உண்டு. `ஆக்குபேஷனல் தெரபி' என்பது, செயல்முறை மருத்துவம். நோயாளி அன்றாடம் செய்யும் பணிகளில், அவருக்கு மிகவும் பிடித்த, ஆரோக்கியமான ஏதாவதொரு பணியை, `எப்படி முறையாகச் செய்வது' எனக் கற்றுக்கொடுப்பதுதான் `ஆக்குபேஷனல் தெரபி'. `பிடித்தச் செயலை முறையாகச் செய்வதன்மூலம்  ஒருவரை மனஅழுத்தத்திலிருந்து மீட்கலாம்' என்பதுதான் `ஆக்குபேஷனல் தெரபி'யின் அடிப்படை. ஒவ்வொரு பழக்கத்தையும் விரிவாகச் சொல்லிக்கொடுப்பதற்கெனத் தனித்தனியாக தெரபிஸ்ட்டுகள் இருக்கிறார்கள்.

உளவியல் சிக்கல் இருப்பவர்களுக்கு, `கலினரி ஆர்ட் தெரபி' (Culinary Art Therapy) சிறந்த தீர்வளிக்கும். இது சமையல் கலையை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை. உளவியல் சிக்கல் இருப்பவர்கள், பெரும்பாலான நேரங்களில் பிரச்னைகளையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் மனஅழுத்தம் அதிகரிக்குமே தவிர, குறையாது. பிரச்னையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, வேறொரு பணியின்மீது கவனம் செலுத்த வேண்டும். அதை முழுமையாகச் செய்வதால் கிடைக்கும் மனநிறைவின் மூலம் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். ஆனால், வேறொரு பணியைச் செய்யும்போது, அதை முழுமையாக உணர்ந்து, மனநிறைவோடு செய்ய வேண்டியது அவசியம்.

மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கு, `கலினரி ஆர்ட் தெரபி'  நல்ல தீர்வைக் கொடுக்கும் என்கின்றன, சமீபத்திய சில ஆய்வு முடிவுகள். காரணம், சமையல் சிறந்த பொழுதுபோக்காக (Recreation) இருக்கிறது. எவ்வித கவனச்சிதறலுமின்றி சமைத்து

முடித்துவிட்டால் மனநிறைவு (Relaxation) கிடைக்கும். உணவு சுவையாக வரும்பட்சத்தில் `நம்மால் ஒரு விஷயத்தை முழுமையாகவும் நிறைவாகவும் செய்யமுடிகிறதே' என்ற புதிய நம்பிக்கை (Rejuvenation) கிடைக்கும்.

இதைப் படிக்கும்போது `இதைத்தான் நான் வீட்டிலேயே சுயமாகச் செய்துகொள்வேனே... இதற்கு எதற்காக தெரபி, தெரபிஸ்ட்' எனச் சிலருக்குக் கேள்வி எழலாம். எந்தவொரு செயலையும், முறைப்படி கற்றுக்கொண்டு பின்பற்றவேண்டும். அப்போதுதான் சின்னச் சின்ன நுணுக்கங்களையும் புரிந்துகொண்டு, தெளிவாகச் செய்ய முடியும். ஒரு வேலையை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு செய்யும்போதுதான் நிறைவு கிடைக்கும். மனரீதியான சிக்கல்கள் இருப்பவர்களுக்கு, அந்த நிறைவு முழுமையாக கிடைக்கும்பட்சத்தில், பாதிப்பிலிருந்து மீண்டுவர முடியும் என்பதால்தான் அவர்களுக்கு இந்த தெரபி பரிந்துரைக்கப்படுகிறது" என்கிறார் மருத்துவர் அன்புதுரை.

ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்களின் பணிகள்! 

* பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகளோடு பயணித்து, அவர்களின் அன்றாடப் பணிகளை முறையாகச் செய்வது எப்படி எனப் பயிற்றுவிப்பார்கள். (pediatric occupational therapist)

* நோய் மற்றும் விபத்துப் பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் தங்கி, அவர்களின் அன்றாடப் பணிகளைச் செய்ய உறுதுணையாக இருப்பார்கள்.

* உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏதோவொரு குறைபாடு காரணமாக, அன்றாடப் பணிகளைச் சரியாக செய்யச் சிரமப்படுபவர்கள் (Eating disorder, Anxiety disorders) போன்றோரை அதிலிருந்து மீண்டுவரப் பயிற்சி அளிப்பார்கள்.

* முதுமை காரணமாக அன்றாட வேலைகளை முழுமையாகச் செய்யமுடியாதவர்களுக்கும், முதுமையில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அன்றாடப் பணியில் உறுதுணையாக இருப்பார்கள்.

அடுத்த கட்டுரைக்கு