ஓர் ஆச்சர்யம் சொல்கிறேன்... நமது தேகத்திலும், குடற்பகுதிகளிலும் வாழும் நுண்கிருமிகளின் எண்ணிக்கை, நமது உடலில் இருக்கும் செல்களை விட பத்து மடங்கு அதிகம். நமது வாய் முதல் ஆசனவாய் வரையிலான செரிமான தொடர்பில் ஏராளமான நுண்கிருமிகள் நிறைந்துகிடக்கின்றன.
நுண்கிருமிகள் அனைத்துமே உடலுக்குத் தீங்கு செய்வதில்லை. சில நுண்கிருமிகள் உடலுக்கு நன்மையும் செய்யும். அப்படிப்பட்ட நலம் பயக்கும் பாக்டீரியாக்களை, ’ப்ரோபையாடிக் பாக்டீரியா’ எனவும், அவற்றைச் சுமக்கும் உணவு வகைகளை ’ப்ரோபையாடிக் உணவுகள்’ என்றும் அழைக்கிறது மருத்துவ உலகம். இவ்வகையில் பாக்டீரியா மட்டுமன்றி சில ஈஸ்ட் வகைகளும் அடங்கும்.
ப்ரோபையாடிக்ஸ் (Probiotics) அடங்கிய உணவுகள், குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் இவ்வகையான பாக்டீரியாக்கள் முக்கிய காரணியாக இருக்கின்றன. பாலில் உள்ள சர்க்கரையை செரிக்க முடியாத ’லாக்டோஸ் இண்டாலரன்ஸ்’ நிலையைச் சரிசெய்யவும் ப்ரோபையாடிக்ஸ் உதவும்.
நமக்கு நல்லது செய்யும் நுண்கிருமிகள், நரம்பு மண்டலத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. அதிலும் உச்சமாக இவற்றின் அளவு குடலில் குறையும்போது, மூளையின் செயல்திறன் தற்காலிகமாகக் குறைவதாகவும், மனச்சோர்வு, பதற்றம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
அதிகளவு நுண்ணுயிர்க்கொல்லி (ஆண்டிபயாடிக்) மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, குடலில் சஞ்சரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வெகுவாக அழிந்துவிடும். அதற்கான தீர்வாக நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுடன் ப்ரோபையாடிக் உணவுகள் அல்லது மருந்துகளைக் கொடுக்கும் முறை சமீபகாலமாக பின்பற்றப்படுகிறது. மருத்துவர் பரிந்துரையில்லாமலும், அளவுக்கு அதிகமாகவும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது உண்டாகும் பல பக்கவிளைவுகளுள் இதுவும் ஒன்று. குறிப்பாகக் குழந்தைகளுக்கு மருத்துவரின் மேற்பார்வையின்றி தேவையில்லாமல் வழங்கப்படும் நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகள், அவர்களின் உடல் நலத்தை வெகுவாகப் பாதிக்கும்.
நமக்குப் பரிச்சயமான ப்ரோபையாடிக்ஸ் என்னென்ன?
மோர்
ப்ரோபையாடிக்ஸ் நிறைந்தது மோர்!... வயிற்றுப் போக்கு ஏற்படும்போது, மோரைப் பருகச் சொல்வது நமது மருத்துவ மரபு. வயிற்றுப் போக்கின்போது, இழந்த நீர்த்துவத்தை மீட்டுக்கொடுப்பதற்கு மட்டுமன்றி குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நிலைமையைச் சீர்செய்யவும் மோர் உதவும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு செரிமானக் கருவிகளை செறிவூட்டுவதற்கும் மோர் பயன்படும். வற்றல், கச்சல் வகையறாக்களை மோரில் ஊறவைத்துப் பயன்படுத்தும் போதும் அவற்றின் ப்ரோபையாடிக் தன்மை பன்மடங்கு அதிகரிக்கும். வற்றல் வகைகளை எண்ணெய்யில் அதிகமாகப் பொறித்துப் பயன்படுத்தாமல், நேரடியாக உணவுகளுக்குத் துணையாக பயன்படுத்த பலன்கள் கூடும்.
மோர் அல்லது தயிரின் பின்னணியில் தயாரிக்கப்படும் ‘தயிர்ச்சுண்டி சூரணம்,’ ’சுண்டவற்றல் சூரணம்’ போன்ற சித்த மருந்துகள், குடற்பகுதியில் நலம் பயக்கும் நுண்கிருமிகளை அதிகரிப்பவை. மருத்துவரின் ஆலோசனையோடு இவ்வகையான மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, குடற்பகுதிக்கு வலுவைக் கொடுக்க முடியும்.
புளித்த மாவில் காலை உணவாக இட்லியை உண்பது... அவ்வப்போது மோர்க்குழம்பை ருசிப்பது… நமது மதிய உணவின் கடையில் கட்டாயமாக மோர் இடம்பெறுவது… மோரும் தயிரும் கலந்த நமது பாரம்பர்ய பான வகைகள்… என ப்ரோபையாடிக் பாக்டீரியாக்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நம்மிடையே நிறைய இருக்கின்றன. செயற்கை பதப்படுத்திகள் சேர்க்காமல் பாரம்பர்ய முறைப்படி தயாரிக்கப்படும் ஊறுகாய், பாலாடைக் கட்டிகள், நீராகாரம் போன்றவற்றில் ப்ரோபையாடிக் பாக்டீரியாக்கள் அதிகம். பல்வேறு ஊட்டங்களைச் சுமந்துகொண்டிருக்கும் நீராகாரம், நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் கொண்டிருக்கின்றன.
ப்ரிபையாடிக்ஸ் (Pre-biotics)
ப்ரோபையாடிக் பாக்டீரியாக்களுக்கு உணவாக அமையும் பொருள்கள் ’பிரிபையாடிக்ஸ்’ என அழைக்கப்படுகின்றன. தண்ணீர்விட்டான் கிழங்கு, வாழைப்பழம், தேன், பருப்பு வகைகள் போன்றவற்றை ப்ரிபையாடிக்ஸாக வகைப்படுத்தலாம். தண்ணீர் விட்டான் கிழங்கு கொண்டு தயாரிக்கப்படும் நெய், லேகியம் போன்ற சித்த மருந்துகள் உடலுக்கு ஊட்டத்தைக் கொடுப்பதோடு, நோய் எதிர்ப்புத் தன்மையையும் அதிகரிக்கும். வாழைப்பழமும் பருப்பு வகைகளும் நெடுங்காலமாக நமது உணவு முறைக்குள் அங்கம் வகிப்பவை. நாம் அடிக்கடி பயன்படுத்தும் வாழையும், பருப்பு சேர்ந்த சமையலும், நமது குடலில் வசிக்கும் நல்ல பாக்டீரியாக்களுக்கு ஊட்டத்தைக் கொடுத்துக்கொண்டே இருப்பவை. சாலட் வகைகளில் வாழைப்பழத்தைச் சற்று கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
தேன்
சில சித்த மருந்துகளைத் தேனோடு சேர்த்துக் கொடுக்கும் அனுபான முறையின் பின்னணியில் ப்ரிபையாடிக் தத்துவத்தையும் பொருத்திப் பார்க்கலாம். பாரம்பர்யமாக நமது அனைத்து சுபநிகழ்வுகளிலும் தேன் கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுவதையும் கூர்ந்து நோக்கலாம். கலப்படமில்லா தேன் தான் ப்ரிபையாடிக்காக செயல்படும். வணிகரீதியாக தயாரிக்கப்படும் கலப்படத் தேனில் இவ்வகையான பலன் நிச்சயம் கிடைக்காது. ப்ரிபையாடிக் தத்துவத்தையே சிதைக்கும் விதமாக கலப்படத் தேன் ரகங்கள் செயல்படுகின்றன.
சிந்தடிக் ப்ரோபையாடிக்ஸை முறையில்லாமல் எடுத்துக்கொள்ளும்போது வாயுப்பெருக்கும், வயிற்று உப்பிசம் போன்ற குறிகுணங்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மருத்துவர் பரிந்துரையோடு தேவையான அளவு எடுத்துக்கொள்வதில் தவறில்லை. மருந்துகளாக எடுத்துக்கொள்வதைவிட, உணவுகளின் மூலமும் பான வகைகளின் மூலமும் ப்ரோபையாடிக்ஸ்களைப் பெறுவதே சிறந்த முறை. லாக்டோ பேசிலஸ், பைஃபிடோ பாக்டீரியா, சாக்காரோமைசஸ் (ஈஸ்ட்) போன்றவை ப்ரோபையாடிக்ஸ் வகைகள்.
நமக்கு அருகிலேயே உயிர்ப்பு நிறைந்த மண்ணில் கிடைத்த காய் வகைகள், முறைப்படி சிலுப்பிய நீர்மோர் எனப் பல வழிகளில் நமது செரிமான சூழலுக்குள் நலம் காக்கும் பாக்டீரியாக்கள் அவ்வப்போது நுழைந்துகொண்டே இருந்தன. ஆனால், இன்றோ ரசாயன உரங்களால் மலடாக்கப்பட்ட நிலத்தில் விளையும் காய்களும், அவசரமாக உருவாக்கப்படும் மோரிலும் நுண்கிருமிகளின் பலன் முழுமையாகக் கிடைக்குமா என்பது சந்தேகமே!