Published:Updated:

நீங்கள் ஆரோக்கியமாக உறங்குகிறீர்களா...? -ஒரு சுய பரிசோதனை!

நீங்கள் ஆரோக்கியமாக உறங்குகிறீர்களா...? -ஒரு சுய பரிசோதனை!
நீங்கள் ஆரோக்கியமாக உறங்குகிறீர்களா...? -ஒரு சுய பரிசோதனை!

நீங்கள் ஆரோக்கியமாக உறங்குகிறீர்களா...? -ஒரு சுய பரிசோதனை!

ன்றைய பரபரப்பான வாழ்க்கை, நவீன தொழில்நுட்பச் சாதனங்களால் நிரம்பியுள்ளது. எந்த நேரமும் கையில் மொபைல் போனை ஆராய்ந்துக் கொண்டிருக்கும்  இளைஞர்களே அதற்குச் சாட்சி. பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் பிளஸ் என ஏராளமான சோஷியல் மீடியா ஆப்ஸ்கள்  இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இதில் கணக்கைத்  தொடங்கி, நேரம் காலம் பார்க்காமல் தங்களுடைய எண்ணங்களை, போட்டோக்களை, வீடியோக்களை பதிவேற்றுவதும், அந்தப்  பதிவுகளை ஆராய்வதுமாக பொழுதைக் கழிக்கின்றனர். எத்தனை லைக்ஸ்,  எத்தனை கமெண்ட்ஸ்  என நொடிக்கொரு முறை  சோதித்துப் பார்த்துக் கொள்கின்றனர். இந்தப் பழக்கம் காலையில் தொடங்கி , இரவு படுக்கையில் உறங்கச் செல்வதற்கு முன்பு வரை நீடிக்கிறது. இதனால், அவர்களுக்குப் பலவித பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஆரோக்கியமான உறக்கம் அவர்களுக்கு வாய்ப்பதில்லை.  

``ஆரோக்கியமற்ற உறக்கத்தால்தான் தங்களின்  உடல் எடை கூடியிருக்கிறது என்பதே இளைஞர்கள் பலருக்குத் தெரியாது” என எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன். 

``இன்று, 20 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரித்திருக்கிறது. பலர், தங்கள் உடல் எடை அதிகரிப்பதை உணர்வதுகூட இல்லை.  உடல் எடை அதிகரிப்பதால் ரத்த அழுத்தம், இதயப் படபடப்பு, கல்லீரல் கோளாறு,  சுவாசம் தொடர்பான நோய்கள், மூட்டுவலி, மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிகின்றன. முன்பு, 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரக்கூடிய பாதிப்புகள் எல்லாம் இன்று முன்கூட்டியே வந்துவிடுகின்றன. இதற்கு முக்கியக் காரணம், ஆரோக்கியமான தூக்கம் இல்லாததுதான்! 

பல பேரிடம் `நீங்கள் நன்றாகத் தூங்கி, எழுந்தீர்களா?’ என்று கேட்டால், `நான் நல்லாத் தூங்கினேன்..’ என்றுதான் சொல்வார்கள். உண்மையில், அவர்கள் ஆரோக்கியமாகத் தூங்கியிருக்க மாட்டார்கள். தான் சரியாக உறங்கவில்லை என்பதுகூட  அவர்களுக்கே தெரியாது. சரி... ஆரோக்கியமான உறக்கம் என்றால் என்ன..? எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக 8 மணி நேரம் தூங்கி எழுவதுதான் ஆரோக்கியமான உறக்கம்.  

 ஆரோக்கியமான உறக்கம் இல்லாததால் இவர்கள் உடல் எடை, உடற்சோர்வு, மனச்சோர்வு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். இதைச் சரிசெய்ய, உணவின் அளவைக் குறைப்பது, உடற்பயிற்சி செய்வது, புதிய டயட் முறைகளுக்கு மாறுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவார்கள். ஆனால், தனது உடல் எடை கூடியிருப்பதன் காரணம்  சரியாக உறங்காததுதான் என்பது மனநல மருத்துவரை அணுகும்போதுதான் அவர்களுக்குத் தெரியவரும்.

இன்று பெரும்பாலானோர் நள்ளிரவு வரை யு-டியூப்பில் வீடியோக்களை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சோஷியல் மீடியாக்களில் அதிக நேரம் உலவுகின்றனர். பெட்ரூமில் உட்கார்ந்துகொண்டு லேப்டாப்பில் ஆபிஸ் வேலைகளைச் செய்கின்றனர். இப்படியாகப் பல மணி நேரம் அவர்கள் கேட்ஜெட்களை பயன்படுத்துகின்றனர். இத்தகைய சாதனங்களிலிருந்து அளவுக்கதிகமான நீல நிறக்  கதிர்கள் எனும் `ப்ளு லைட் எமிஷன்’ (Blue light emission)வெளியேறுகின்றன. இவை, அவர்களின் தூக்கத்தைப் பாதிக்கின்றன. பெரும்பாலான இளைஞர்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை. 

சரியாகத் தூங்காததால், உறங்கும்போது நிகழும் `மெட்டபாலிசம்’ (Metabolism) நடக்காமல் போய்விடுகிறது. இதனால், கொழுப்புச் சத்து உடலில் சேர ஆரம்பித்து, உடல் எடை கூடிவிடுகிறது. உடல் எடை கூடுவது மட்டுமின்றி உடல்சோர்வு, மனச்சோர்வும் ஏற்பட்டுவிடுகிறது. இயல்பாகவே, உடலியல் கடிகாரம் ஒன்று, மனித உடலுக்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுதான், பகலில் நாம் விழித்திருக்கவும், இரவில் தூங்கவும் உதவி செய்கிறது. பகலில் சூரிய வெளிச்சத்திலிருந்து புற ஊதாக் கதிர்கள் வெளிப்படும். கண்களில் இருக்கும் விழித்திரை இந்தக் கதிர்களை அடையாளம் கண்டு, இது பகல் என்று எடுத்துக்கொள்ளும். எனவேதான், விழித்துக்கொண்டிருக்கிறோம்.

நமது மூளையில் `பீனியல் கிளாண்ட்’ (Pineal gland) என்ற ஒரு பகுதி இருக்கிறது. இதில் ,`மெலடோனின்’ (Melatonin) என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன்தான் நாம் தூங்குவதற்கு உதவுகிறது. இரவில் கேட்ஜெட்ஸ்களை அதிகமாகப் பயன்படுத்துவதால், அதிலிருந்து வெளியேறக்கூடிய நீலநிறக்  கதிர்கள் 'பீனியல் கிளாண்டை' பாதிப்படையச் செய்கிறது. இதனால், 'மெலடோனின்' ஹார்மோன் சுரப்பது நின்று, தூக்கம் தடைபடுகிறது.

வெளிச்சம் இல்லாதபோதுதான் ஆழ்ந்த தூக்கம் ஏற்படும். அப்படியே வெளிச்சம் இருந்தாலும் அது சிவப்பு, ஆரஞ்சு நிற வெளிச்சமாக இருக்க வேண்டும். ஏனெனில், ஆதிமனிதன் நெருப்பு வெளிச்சத்தில்தான் தூங்கியிருக்கிறான். அதனால், அத்தகைய நிறங்களை மூளை கிரகித்துக்கொண்டு, தூக்கத்துக்கு வழிவிடும்.   

ஆரோக்கியமான தூக்கம் நிகழ வேண்டுமானால், வீட்டிலுள்ள விளக்குகளை அணைத்துவிட்டு உறங்கச் செல்ல வேண்டும். அதேபோல வீட்டில் உள்ள தொழில்நுட்பச்  சாதனங்களையும்  தூங்கப்போகும் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். படுக்கையறையில் லேப்டாப், செல்போன்களை வைத்திருக்கக் கூடாது. இவற்றை ஆஃப் செய்து வைத்திருந்தாலும், அவற்றிலிருந்து நீலநிறக் கதிர்கள் வெளிப்படவே செய்யும். எனவே, அவற்றைப் படுக்கையறைக்கு வெளியில் வைப்பதுதான்  நல்லது.

தூக்கம் என்பது உடலுக்கு அவசியமானதாகும். அது, ஏதோ தேவையற்ற ஒன்று, கால விரயம் என எதிர்மறையாக யோசித்து, உடலையும் மனதையும் கெடுத்துக்கொள்ளக் கூடாது” என்கிறார் சிவபாலன் இளங்கோவன். 

அடுத்த கட்டுரைக்கு