Published:Updated:

சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

சர்க்கரைநோய் சமீபகாலமாகத்தான் நம்மை வதைத்துக் கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் என்ன?

பூங்காக்கள், மைதானங்கள், சாலைகள், கடற்கரைகளில் விடிந்தும் விடியாமலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தனிநபராக, கணவன் மனைவியாக, நண்பர்கள் கூட்டமாக என ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் டெம்பிள் ரன் விளையாட்டைப்போல, கொடிய மிருகம் துரத்துவதுபோல அரக்கப் பரக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பெருநகரங்களில் இந்தக் காட்சியைக் காணமுடியும். நகரத்து வாசமே இல்லாத ஒரு கிராமவாசி சென்னை போன்ற நகரங்களுக்கு வர நேர்ந்தால், இந்தக் காட்சிகள் நிச்சயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.

அது சரி ஏன் ஓடுகிறார்கள்? எங்கே ஓடுகிறார்கள்?...

ஒரு காலத்தில் பணக்கார வியாதி (Rich man’s disease) என்று சொல்லப்பட்ட சர்க்கரைநோய், இன்றைக்கு எந்தவித பேதமுமின்றி எல்லோர் வீட்டுக்கும் அழையா விருந்தாளியாக நுழைந்ததன் விளைவே இந்த ஓட்டமும் நடையும்!

சர்க்கரைநோய் சமீபகாலமாகத்தான் நம்மை வதைத்துக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு நாடுகளிலும் பல்வேறு சமூகத்தினரிடையே நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது இது. நம் மரபு சார்ந்த விஷயங்களில் நாம் செய்த அலட்சியத்தின் விளைவே இந்த சர்க்கரைநோய். நம் சமூகம் தொற்றாத வாழ்வியல் நோய் கூட்டங்களின் பிடியில் அகப்பட்டுள்ளது.இது நோயா அல்லது வாழ்வில் ஒரு அங்கமா என்று பலருக்கும் தெரியாத அளவுக்கு நம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. 

நோய் பாதிப்பைக் கண்டு வியந்த காலங்கள் போய் `உனக்கு சுகர் இல்லையா...' என்று நம் சொந்தங்களே ஆச்சர்யத்துடன் கேட்குமளவுக்கு தலைமுறையில் மாற்றம் வந்துவிட்டது. உடல் உபாதைகளுக்கு ஏற்ப அவ்வப்போது மருந்துகளை உட்கொண்ட நிலை மாறி மருந்துகள் நம்மை உட்கொள்ளும் அளவுக்கு நம் நிலை மாறியிருக்கிறது. உலகின் அதிக இளைஞர் கூட்டத்தைக் கொண்டுள்ள நம்நாடு, அதிகப்படியான இளைய தலைமுறை சர்க்கரை நோயாளிகளையும் கொண்டுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக 25 முதல் 35 வயது உள்ளவர்கள் இந்நோயின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். 

மகப்பேறு காலத்தில் வரக்கூடிய சர்க்கரை நோயும் (gestational diabetes) பெருகி வருகிறது. அது குழந்தையின் உடல் எடை இயல்பைவிட அதிகரிக்கக் காரணமாகிறது. சிலருக்குக் கர்ப்ப காலத்துக்குப்  பிறகும் சர்க்கரைநோய் தொடர்கிறது. இந்நிலைக்குத் தேவையற்ற மற்றும் நச்சு உணவுகளை உட்கொள்வதே காரணமாகும். இந்நிலை மாற, உணவு சார்ந்த நல்ல பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம். 

சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவைச் சாப்பிடலாமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படும். அரிசி உணவைச் சாப்பிடுவதால் சர்க்கரைநோய் அதிகரிக்கும் என்ற தவறான பரப்புரை காரணமாக நம் எல்லோருக்கும் இந்தக் கேள்வி எழுகிறது. உடலில் ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கப் பாரம்பர்ய உணவுமுறைகளே பெரிதும் உதவும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். 

நம் மரபில் ஒரு லட்சத்து 65ஆயிரம் நெல் வகைகள் இருந்தாக வரலாறு கூறுகிறது. அரிசி நம் உடலுக்கு நம்மையும் அறியாமல் பல்வேறுவகையான நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. அரிசி நம் உடலைக் கெடுக்கவில்லை; அரிசியையும் மண்ணையும் வளர்ச்சி என்ற பெயரில் நாம்தான் பாழாக்கிவிட்டோம். பாரம்பர்ய நெல் வகைளைத் தேடிச்சென்று, புசித்து அவற்றின் பயனை அடைய முயலவேண்டும். நம் உடலுக்குத் தேவையான விஷயங்களைத் தேடிச்சென்றால் மட்டுமே அவற்றை அடைய முடியும். தமிழர் வாழ்வியலுடன் கலந்திருந்த நம் நெல் வகைகளை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நம் மரபு சார்ந்த அனைத்து விஷயங்களையும் நாம் தேடத்தேட அவை மறுஉருவம் பெற்று, நம் அடுத்தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சொத்துப் பட்டயமாக மாறியிருக்கும். 

பாரம்பர்ய நெல் வகைகளை உட்கொள்வதில் மிகப்பெரிய அறிவியல் காரணங்கள் உள்ளன. மேற்சொன்ன பாரம்பர்ய அரிசி வகைகள் குறைந்த கிளைசெமிக் (Low glycemic) வகையைச் சேர்ந்தது என்பதால் உடலில் ரத்த சர்க்கரையின் அளவை மெள்ள மெள்ள சேர்க்கின்றது. இதனை `காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் ' (Complex carbohydrate) என நவீன மருத்துவம் ஒப்புக்கொண்டுள்ளது. அது நாம் உட்கொள்ளும் அளவைப் பொறுத்தது. பெரும்பாலும் நாம் உண்ணும் அரிசிகள் தீட்டப்படாதவையாக (unpolished rice) ஆக இருப்பது உடலுக்கு நன்மை தரும். பாரம்பர்ய நெல் வகைகள் மட்டுமன்றி நம் தமிழர் மரபில் பல்வேறுவகையான சிறுதானிய உணவுகள் இருக்கின்றன. அவை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நம் வாழ்வியலோடு மீண்டும் கலந்துவருகிறது. சிறுதானியங்களை மாவாக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்த்து முழு தானியமாகப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாகத் தினை, சாமை, கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை அளவுடன் உட்கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

ரத்த சர்க்கரையின் அளவைப் பரிசோதனைகளின் மூலம் அறிந்து சிகிச்சை அளிக்கவேண்டும். உணவுக்கு முன்/பின் எடுக்கும் சோதனை மட்டுமன்றி `HbA1C' என்னும் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். பரிசோதனையின் முடிவைப்பொறுத்து மருந்தின் வீரியத்தை (Dosage) கூட்டவோ, குறைக்கவோ செய்ய வேண்டும். இது ரத்த சர்க்கரையின் அளவைச் சீராக வைக்க உதவும். மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து உட்கொள்வதோ, கைவிடுவதோ உடலுக்கு நல்லதல்ல.

சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெறும்போது சில நேரங்களில் ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவரச் சற்று தாமதமாகும். அப்போது இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பர். ஆனால் நம்மில் பலர் இன்சுலின் ஊசி போட சம்மதிப்பதில்லை. வளர்ந்த மேலை நாடுகளில் மருத்துவ அறிஞர்கள், சர்க்கரைக்கு உள் மருந்துகள் கொடுக்காமல், உடலில் நேரடியாக இன்சுலின் போட்டுக்கொள்வதையே பரிந்துரைக்கின்றனர். ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு நோயைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். அதன்பிறகு சித்த மருந்துகளை எடுத்துக் கொள்வதன்மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கலாம். 

சர்க்கரைநோய் பாதித்ததும் உடலின் ரத்த குளூக்கோஸின் அளவு பொதுவாக உயர்ந்தே காணப்படும். ஏனெனில் சக்திக்கு ஏற்ற அளவு உடலால் குளூக்கோஸை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும். சில நேரங்களில் அதீத சர்க்கரையின் அளவால் கண் பார்வையில் கோளாறு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகச் இருந்தால் அதிக பசி, சோர்வு, நாவறட்சி, அதிக தாகம், உள்ளங்கை மற்றும் காலில் எரிச்சல், மிகுந்த தோல் வறட்சி, கண் பார்வைக் குறைவு, இரவு நேரங்களில் அதிகமாக சிறுநீர் கழித்தல், எத்தகைய முயற்சியும் இல்லாமல் உடல் எடை குறைவது, காயங்கள், புண்கள் ஆற நாளாவது, சிறுநீர்ப்பாதையில் எரிச்சல்,நோய்த்தொற்று போன்றவை ஏற்படும். 

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க ஏராளமான சித்த மருந்துகள் உள்ளன. இந்நிலையில், சர்க்கரை நோயாளிகளுக்கு எழக்கூடிய சில சந்தேகங்கள், கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியது அவசியமாகிறது. 

அசைவ உணவுகள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இறைச்சி வகைகளைத் தவிர்த்து மீன் உணவுகளைச் சாப்பிடலாம். எண்ணெய்யில் பொரித்த  மீன்களைத் தவிர்ப்பது நல்லது. மீன் மற்றும் இறைச்சிகளை உண்ணும்போது அரிசியுடன் சேர்த்து உண்பதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை இறைச்சி சாப்பிட நேர்ந்தால் நன்றாக வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. இதை வாரம் ஒருமுறை உண்பது நல்லது. பால் மற்றும் பால் பொருள்களை உண்ணலாமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. கொழுப்பு நீக்கிய பாலைப் பயன்படுத்தலாம். கட்டித் தயிர் பயன்படுத்துவதைத் தவிர்த்து வெண்ணெய் நீக்கிய மோரைப் பயன்படுத்துவது நல்லது. பசு நெய்யைத் தேவைக்கேற்ப அவ்வப்போது குறைந்த அளவில் உண்பது நல்லது.

பழவகைகளை உண்ணலாமா என்றால், நிச்சயமாக உண்ணலாம். ஆனால் நாம் தேர்வு செய்யும் பழங்களைப் பொறுத்து உடலின் ரத்த சர்க்கரையை சரியான அளவில் வைக்க முடியும். எந்த வகைப் பழங்களாக இருந்தாலும் அவற்றைச் சாறு எடுத்து அருந்தாமல், துண்டுகளாக்கிக் கடித்துச் சாப்பிடுவதே நல்லது. விதைகள் உள்ள பழங்களான பப்பாளி, ஆப்பிள், மாதுளை, கொய்யா, நாவல் போன்ற பழங்களைச் சாப்பிடலாம். பழங்களை உண்ணும்போது கவனமாக இருக்கவேண்டும். அவற்றை தகுந்த அளவுடன் உண்ண வேண்டும். அதே நேரத்தில் உணவுடன் சேர்த்து பழங்கள் உண்பதைக் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் பற்றி சமூக வலைதளங்களில் நிறைய தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றில் பல நம்பும்விதத்தில் இருப்பதால் பலர் குழப்பமான மனநிலையில் உள்ளனர். சமூக வலைதளங்களில் பரவும் தவறான பரப்புரை காரணமாக, சிலர் மருந்துகளைத் தவிர்த்துவிட்டு பழங்களை மட்டுமே உட்கொள்கின்றனர். பழங்களை மட்டும் உட்கொள்வதால் தீர்வு கிடைக்காது.

சர்க்கரை நோய்க்குக் காரணமான வெள்ளைச் சர்க்கரை மற்றும் மைதாவை நம் வீட்டுச் சமையலறையில் இருந்து வெளியேற்ற வேண்டும். நம்மை ஆண்ட வெள்ளையனை வெளியேற்றிய நம் வீரத்தமிழ் சமூகத்தால் இந்த வெள்ளை உணவுகளை வெளியேற்றுவது ஒன்றும் பெரிய காரியமில்லை. வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம், பனங்கருப்பட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது. நம் மண்ணுக்கு எப்படி இயற்கை உரம் வலிமையைத் தருகிறதோ அதுபோல, நாட்டுச் சர்க்கரை போன்ற இனிப்புகள் உடலுக்கு வன்மையைத் தரும். சர்க்கரை நோயாளிகள் இத்தகைய பாரம்பர்ய இனிப்புகளைக் கவனத்துடன் தகுந்த அளவு உட்கொள்ள வேண்டும். 

இயற்கையின் இனிப்புகளில் தேன் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.  கவிஞர் வாலி ஒரு கவிதையில், `நாட்குறிப்பில் நூறுதடவை உன்பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு மொய்க்கும் அதுவே நல்ல தேனா ...'என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்குத் தேன் முக்கியமானது. தேனீக்களைக்கூட நம் சமூகம் ஏமாற்ற விட்டுவைக்கவில்லை.தேன் என்ற பெயரில் விற்கப்படும் பெரும்பாலான தேன் அனைத்தும் போலியானதே.தேன் வாங்குவதற்கு முன்பு அதன் தரம் அறிந்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு வகைகளைத் தவிர்த்து கைப்பு,  துவர்ப்புச் சுவைகளை உணவுடன் சேர்த்து உண்பது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க மூலிகைகள் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன. அத்தி, அல்லி, ஆலமரம், ஆவாரை, இஞ்சி, கடுக்காய், கருங்காலி, கல்யாண முருங்கை,கேழ்வரகு, சரக்கொன்றை, கோவை, சீந்தில், தண்ணீர்விட்டான், தொட்டாற்சிணுங்கி, நன்னாரி, நாவல், பீர்க்கு, மருது, மூங்கில், வாதுமை உள்ளிட்ட பல மூலிகைகளை பல்வேறு வடிவங்களில் உட்கொள்ளலாம்.

சூரியநமஸ்காரம், பச்சிமோத்தாசனம், வஜ்ராசனம், கோமுகாசனம், சலபாசனம், நவாசனம், மயூராசனம், தனுராசனம், ஹாலாசனம், சர்வங்காசனம் போன்ற யோகாசனங்களைச் செய்வதும் நல்ல பலன் தரும். இவற்றை நன்றாகக் கற்றுத்தேர்ந்த ஆசான்களிடம் பயிற்சி எடுத்துப் பின்பற்றுவது நல்லது. இந்த ஆசனங்கள் நம்மையும் அறியாமல் உடலுக்கும் மனதுக்கும் ஆற்றலை அதிகரிக்கும். அத்துடன் முதலில் கூறியதுபோல தினமும் தீவிர நடைப்பயிற்சி செய்து உடலைக் காக்க வேண்டியது அவசியம். மருந்துகள் மட்டுமன்றி சுய கட்டுப்பாடுகளுடன் இருந்தால் வாழ்வு செழிக்கும். 

`தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்' -  திருக்குறள் சொல்லும் பொருள் என்னவென்றால், பசித்தீயின் அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால், அவன் உடம்பில் நோய்கள் அளவில்லாமல் வளரும். ஆகவே நம் உடல் உழைப்புக்கு ஏற்ற அளவு உணவு உட்கொள்ள வேண்டும். அத்துடன் தகுந்த அளவில் உணவு உட்கொண்டால் மருந்து என ஒன்றும் தேவையில்லை.

அடுத்த கட்டுரைக்கு