Published:Updated:

குடும்பப் பிரச்னை கொலையில் முடிவது ஏன்? - உளவியல் பார்வை

குடும்பப் பிரச்னை கொலையில் முடிவது ஏன்? - உளவியல் பார்வை
குடும்பப் பிரச்னை கொலையில் முடிவது ஏன்? - உளவியல் பார்வை

பெண்கள் ஈவு இரக்கமற்றவர்களாக மாற அவர்களால் கட்டுப்படுத்தமுடியாத மன அழுத்தமும், கோபமும் காரணங்களாக முன் நிற்கின்றன.

பெற்ற தாயே தன் குழந்தைகளுக்குப் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. கடந்த சில நாள்களுக்கு முன் சென்னைக் குன்றத்தூரில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தை யாராலும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அனைத்துத் தளங்களிலும் விவாதப் பொருளாக மாற, அது ஓய்வதற்கு முன் கணவன் மீதான சந்தேகத்தால் தன் இரண்டரை வயதுக் குழந்தையை தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்திருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண். 

`தந்தையைக் கொன்ற மகன்', `அண்ணன் அடித்துக் கொலை: தம்பி தப்பி ஓட்டம்',  `நண்பனை காரில் கடத்திக் கொலை...' இதுபோன்ற செய்திகள் அன்றாடம் தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் வந்து வண்ணம் இருக்கின்றன. உறவினர்களால், நெருங்கிய ஒருவரால் ஒருவர் கொலை செய்யப்படும்போது அது சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பெற்ற தாயே தன் பிள்ளைகளைக் கொலை செய்யும்போது அது மிகப்பெரும் விவாதப் பொருளாக மாறிவிடுகிறது. 

தாய்  - சேய் உறவு மிகவும் புனிதமானதாக நம் சமூகத்தில் கட்டமைத்து வைத்திருப்பதுதான் அதற்குக் காரணம். பொதுவாக, தாய்மாரும் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறார்கள். தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தன் குழந்தைகளுக்காகத் தியாகம் செய்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சில சூழல்களில் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடக்கும்போது அது சமூகத்தில் மிகப்பெரும் பிரளயத்தை உண்டாக்கிவிடுகிறது. 

கணவனால் கைவிடப்பட்டு பெற்ற பிள்ளைகளுடன் தனித்துவிடப்பட்ட பெண்கள் ஏராளம். எவ்வளவு துன்பம் வந்தாலும் தன் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று போராடி அவர்களைக் கரை சேர்த்திருக்கிறார்கள் பல பெண்கள். நிலைமை இப்படியிருக்க தாங்கள் பெற்ற பிள்ளைகளையே சில பெண்கள் கொலை செய்யக் காரணம் என்ன?

``குழந்தைகளைக் கொலை செய்யுமளவு சில பெண்கள் ஈவு இரக்கமற்றவர்களாக மாற அவர்களால் கட்டுப்படுத்தமுடியாத மன அழுத்தமும், கோபமும் காரணங்களாக முன் நிற்கின்றன. இதுபோன்ற செயல்களில் எல்லாப் பெண்களும் ஈடுபடுவதில்லை. 'பெர்சனாலிட்டி டிஸார்டர்' போன்ற மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்கள்தாம் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு செயலைச் செய்தால் அதன் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எந்தவொரு கவலையும் இருக்காது. தாங்கள் தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியே அவர்களிடம் காணப்படாது. இதற்கு 'ஆன்டி -சோஷியல் பெர்சனாலிட்டி' என்று பெயர். 

பெண்களைப் பொறுத்தமட்டில் பொதுவாக `பார்டர்லைன் டிஸார்டர்' பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். இத்தகைய பாதிப்புள்ளவர்கள் அதிகமாகக் கோபப்படுவார்கள், கோபத்தில் தங்களையோ அல்லது மற்றவர்களையோ துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். சாதாரணமாக ஏற்படும் கோபத்தின்போது எந்தவொரு பெண்ணும் குழந்தைகளைக் கொலை செய்யுமளவுக்குச் செல்லமாட்டார்கள். இது போன்ற பாதிப்புகள் இருந்தால் மட்டுமே அதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, குடும்பத்தில் உள்ளவர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் அப் -நார்மலாக  நடந்துகொண்டாலோ ஆக்ரோஷமாக நடந்துகொண்டாலோ ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறிந்து மனநல மருத்துவர்களிடம் அவர்களை அழைத்துச் செல்வது நல்லது '` என்கிறார் மனநல ஆலோசகர் சித்ரா.

`கணவன் மீது கோபம் என்றால் அவரிடம்தானே காட்ட வேண்டும். குழந்தைகளின்மீது ஏன் கோபம் திரும்புகிறது?' என்று மனநல ஆலோசகர் ஜெயமேரியிடம் கேட்டோம். அதற்கான காரணங்கள் பற்றி விரிவாகப் பேசினார்.

``கணவன் மூலமாகப் பெற்ற குழந்தைகள் என்பதால், கணவனைப் பழி வாங்குவதாக நினைத்துக்கொண்டு குழந்தைகளைக் கொல்கிறார்கள். கணவன் மீதான கோபத்தில் அந்தப் பிள்ளைகள் தான் பெற்ற பிள்ளைகள்தாம் என்பதைக்கூட மறந்துவிடுகிறார்கள். கணவனிடமிருந்து அன்பு, அரவணைப்பு, காதல் மட்டுமல்லாமல் மிகமுக்கியமாகத் தாம்பத்தியத்தில் முழுமைபெறாமல் போகும்போது கணவனின் மீது தீராத கோபம் கொள்கிறார்கள். அன்பு, அரவணைப்பும் வேறு ஒருவரிடம் கிடைக்கும்போது அவர்களுக்குப் பின்னால் செல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் தடையாக வந்தால் அவர்களைக் கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இவையனைத்தும் கோபத்தில், ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுதான். பொறுமையாகச் சிந்தித்து செயல்படும்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்" என்கிறார் ஜெயமேரி.

``குழந்தை பிறப்புக்குப் பிறகு தம்பதியரிடம் ஏற்படும் இடைவெளிதான் இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணமாகும். உதாரணமாக காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளில், திருமணத்துக்கு முன் பெண்கள் சொல்வதை எல்லாம் ஆண்கள் கேட்பார்கள்.

திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்ததும் அது தலைகீழாக மாறிவிடும். வேலை, குடும்பம் என மற்ற விஷயங்களில் தன் முழுக் கவனத்தையும் செலுத்தி மனைவியைக் கண்டுகொள்ள மாட்டார்கள். வீட்டில் பார்த்து வைக்கும் திருமணங்களில்கூட ஆரம்பத்தில் மனைவியின்மீது செலுத்தும் கவனம் நாளடைவில் இருக்காது. அப்போது பெண்கள் மிகவும் தனிமையை உணர்வார்கள். அந்த நேரங்களில் தெரிந்தவர்கள், நண்பர்கள் என யாராவது கொஞ்சம் அன்பாகப் பேசினால்கூட அவர்களுக்கு அடிமையாகிவிடுவார்கள். இதுபோன்ற சம்பவங்களால்தாம் அவர்கள் மாற்றுப்பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வீட்டைவிட்டு வெளியேறவும் முடிவு செய்கிறார்கள். குழந்தைகள் அதற்குத் தடையாக இருந்தால் அவர்களைக் கொலை செய்துவிட முடிவெடுக்கிறார்கள்.

இதுபோன்ற சூழல் ஏற்படாமலிருக்கக் கணவன் - மனைவி இருவரும் தினமும் குறைந்தது 10 நிமிடமாவது மனம் விட்டுப் பேசவேண்டும். தங்களுக்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால் அதை பேசிப் புரிய வைக்கவேண்டும். ஆண்களும், மனைவியின் தேவையை உணர்ந்து அதைப் பூர்த்தி செய்ய முன்வர வேண்டும். ஒருவேளை கணவனுடன் வாழ விருப்பமில்லை என்றால் முறையாக விவாகரத்து பெற்று வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும். 

அதேபோல, நம் சமூகத்தில் குழந்தை வளர்ப்பு என்பது பெண்களுக்கு மட்டுமேயான கடமையாகப் பார்க்கப்படுகிறது. அது, பெண்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கி, மனம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிலநேரங்களில் தவறான முடிவுகள் எடுக்கவும் வாய்ப்பாகிவிடுகிறது. குழந்தை வளர்ப்பில் ஆணும் பெண்ணும் இணைந்து செயல்பட்டால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்" என்கிறார் குழந்தைகள் உளவியல் மருத்துவர் பூங்கொடி.

அடுத்த கட்டுரைக்கு