Published:Updated:

இளம் அப்பாக்களைப் பாதிக்கும் 'போஸ்ட்நேட்டல் டிப்ரஷன்' - அலர்ட்!

பொதுவாகப் பிரசவத்துக்குப் பின்னால் ஏற்படும் மன அழுத்தத்தை 'போஸ்ட்நேட்டல் டிப்ரஷன்' (Post natal depression) என்கிறார்கள். பிரசவம் பெண்ணுக்குத்தானே, ஆண்களுக்கு ஏன் மன அழுத்தம்?

இளம் அப்பாக்களைப் பாதிக்கும் 'போஸ்ட்நேட்டல் டிப்ரஷன்' - அலர்ட்!
இளம் அப்பாக்களைப் பாதிக்கும் 'போஸ்ட்நேட்டல் டிப்ரஷன்' - அலர்ட்!

 ``திருமணம் முடிந்ததும் ஒரு குழந்தை கருவாக உருவாகப் பல நாள்கள் காத்திருந்தேன். மனைவி கர்ப்பமானதும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டேன். குழந்தையின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தேன். ஆனால், பிரசவம் முடிந்ததும், துணியில் சுற்றி நர்சுகள் என் கையில் கொடுத்தபோது, குழந்தையைப் பெற்றுக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. அவள் மிகவும் குட்டியாக இருந்தாள். அவளைத் தொட நான் விரும்பவில்லை. இருந்தாலும் என் கைகளில் தந்துவிட்டார்கள்.''

 "என் மனைவியின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தைக்கும் அவளுக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கும். ஆனா, நான் இப்போதான் என் குழந்தையைச் சந்திக்கிறேன். நான் ஒரு நல்ல அப்பாவாக இல்லையோன்னு தோணுது. நான் ஏதாவது செய்தால், அது குட்டிக் குழந்தையை நோகச் செய்துவிடுவோன்னு பயமா இருக்கு.''

 - இவை இரண்டும் புதிதாக அப்பாவாகப் புரொமோஷன் வாங்கியிருக்கும் இரு ஆண்களின் மனக்குமுறல். இவர்கள் இரண்டு பேர் மட்டுமல்ல... பெரும்பாலான ஆண்கள், மனைவி குழந்தை பெறும் காலத்தில் இப்படியான மனநிலையில்தான் இருக்கிறார்கள்.  

மனைவி கருவுற்றது தெரிந்ததும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் கணவன்மார்களிடம் குழந்தை பிறந்தவுடன் ஏன் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன..? 

 "மனஅழுத்தத்தின் விளைவுதான் இது" என்கின்றனர் மருத்துவர்கள். 

பொதுவாக, பிரசவத்துக்குப் பின்னால் ஏற்படும் மன அழுத்தத்தை 'போஸ்ட்நேட்டல் டிப்ரஷன்' (Post natal depression) என்கிறார்கள். பிரசவம் பெண்ணுக்குத்தானே, ஆண்களுக்கு ஏன் மன அழுத்தம்? பிரசவத்துக்குப் பின்னர், சில பெண்களுக்கு குழந்தையைக் கவனிப்பது தொடங்கி, கணவருக்குத் தேவையானதைச் செய்வது, வீட்டு வேலைகள், உடல்நலன் எனப் பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால், இதில் எதிலுமே அதிக பங்களிப்பை அளிக்காத ஆண்களுக்கும் வேறு பல காரணங்களால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. ஆனால், இது அதிகம் கவனிக்கப்படுவதில்லை. 

 ஸ்வீடன் நாட்டில் குழந்தை பிறந்தவுடன் 447 அப்பாக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 28 சதவிகிதம் பேருக்கு அதாவது 125-க்கும் அதிகமானவர்களுக்கு மனஅழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 4 சதவிகிதம் பேருக்கு அதிக மனஅழுத்தம் காணப்பட்டது. அதில் ஒரு சிலர், இந்த மனஅழுத்தம் தாங்காமல் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டிருக்கின்றனர்.

குழந்தைப் பிறந்தவுடன் இனி குடும்பத்துக்காக அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம், இரவு தூக்கத்தை தொந்தரவு செய்யும் குழந்தை, பிரசவத்துக்குப் பிறகு, தாம்பத்யத்தில் ஈடுபாடு காட்டாத மனைவி என்று இதற்கு பல காரணங்கள். சில அப்பாக்களுக்கு, 'தன்னால் குழந்தைக்குப் பாலூட்ட முடியவில்லையே', 'பல மணி நேர பிரசவ வலியைத் தாங்கிய பின்னரும் மனைவி இன்னும் ரத்தபோக்கால் அவதிப்படுகிறாள்... ஆனால், நான் மட்டும் சந்தோஷமாக இருக்கிறேனே' என்பது போன்ற குற்ற உணர்ச்சிகளாலும் மனஅழுத்தம் ஏற்படுகிறதாம்.

"கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படுவது போன்று ஆண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. ஆனால், சமூக மற்றும் குடும்பப் பொறுப்புகளின் அழுத்தம், ஆண்களை உணர்வுரீதியாகப் பாதிக்கிறது. அதுவே மனஅழுத்தத்துக்கு காரணம். முதன்முறையாக அப்பாவாகும் ஆண்களில் 10-ல் ஒருவருக்கு மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் இளம் வயதிலேயே அப்பாவாகும் ஆண்களுக்கு, முதல் குழந்தையின் பிறப்பின்போது மனஅழுத்தத்துக்கான அறிகுறிகள் தோன்றக்கூடும். பிரசவத்துக்குப் பிறகு மனைவிக்கு இந்தப் பிரச்னை இருந்தால், கணவர்களுக்கும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

குழந்தைப் பிறந்தபின்பு மனஅழுத்தத்துக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே உளவியல் நிபுணரை அணுக வேண்டும்.  சிகிச்சைகள், ஆலோசனைகளின் மூலம் எளிதில் இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம். அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்வு கண்டுவிட்டால், குழந்தையே உங்கள் உலகமாக மாறிவிடும்" என்கிறார் உளவியல் நிபுணர் ஆர்.வசந்த். 

கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் இளம் அப்பாக்கள் கண்டிப்பாக மன நல மருத்துவரை அணுக வேண்டும். 

எதிர்காலத்தைப் பற்றிய பயம், குழப்பம், குடும்ப வாழ்க்கை, வேலை, சமூகம் என எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பது, விரக்தி, எரிச்சல்படுவது, மனைவியுடன் சண்டை போடுவது, தாக்குவது, மது, புகைப்பழக்கம், தூங்குவதில் பிரச்னை, செரிமானப் பிரச்னை, எடை கூடுதல் அல்லது குறைதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தலைவலி, பல்வலி, சோர்வு.