Published:Updated:

``எப்போ வேன் வரும்?" - பள்ளிக் குழந்தைகளைப்போல வாசல் பார்த்து நிற்கும் முதிய குழந்தைகளோடு ஒருநாள்

``எப்போ வேன் வரும்?" - பள்ளிக் குழந்தைகளைப்போல வாசல் பார்த்து நிற்கும் முதிய குழந்தைகளோடு ஒருநாள்
``எப்போ வேன் வரும்?" - பள்ளிக் குழந்தைகளைப்போல வாசல் பார்த்து நிற்கும் முதிய குழந்தைகளோடு ஒருநாள்

குழந்தைகளை எப்படி பள்ளிக்கு காலையில் அழைத்துவந்து, மாலையில் வீட்டுக்கு வழியனுப்பி வைப்பார்களோ அப்படித்தான் இங்குள்ள பெரியவர்களையும் அழைத்து வந்து அனுப்புகிறார்கள்.

நேற்று என் தோழியிடம் மறதி குறித்தும், மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் அவள் ``எல்லாத்தையும் ஞாபகம் வச்சுகிட்டு, மறக்கவும் முடியாம நினைக்கவும் முடியாம தவிக்குற தவிப்பு இருக்கே... பெரிய கொடுமை அதெல்லாம்! அந்த வகையில பார்த்தா, மறதி மிகப்பெரிய வரம். நோயெல்லாம் இல்ல" என மறதிக்காக ஏங்கினாள் அவள். வேகமான உலகத்தில், அதைவிட வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் நம் எல்லோருக்கும், ஏதோவொரு வகையில் மறதி தேவையாக இருக்கிறது. குணப்படுத்திக்கொள்ள விரும்பாத நோயாக மறதி நோய் மட்டுமே இருக்கிறது. 

ஆனால், மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்தால் வாழ்க்கை மீதான நம்பிக்கையே போய்விடுகிறது. அல்சைமர் நோயாளிகளால் எந்தத் தகவலையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. தங்களைப் பற்றி, தங்கள் குடும்பத்தைப் பற்றி, பிள்ளைகளைப் பற்றியே மறந்துவிடுவார்கள். சாப்பிடுவது, குளிப்பது போன்ற அன்றாட வேலைகளைக்கூட மறந்துவிடுவார்கள். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வார்கள். 

அலுவலகம் கிளம்பும்போது டிஃபன் பாக்ஸை மறந்துவிட்டு, வாசல் தாண்டியவுடன் ஞாபகம் வந்து மறுபடியும் வீட்டுக்குள் ஓடுவது, அலுவலகத்துக்கு வண்டியில் வந்ததை மறந்துவிட்டு வீட்டுக்கு பஸ்ஸில் திரும்பிப்போவது, சாவியை வன்டியிலேயே வைத்துவிட்டு மறுநாள் காலையில் வீடு முழுக்க தேடுவது போன்ற சின்னச் சின்ன மறதிகளால் அவதிப்படும் நமக்கு, மறதி நோயாளிகளின் நிலை மிகப்பெரும் மிரட்சியை ஏற்படுத்தும். 

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் பச்சிளம் குழந்தைகளைப் போல மாறிப்போய் விடுவார்கள். எந்தக் கிறுக்கலும் இல்லாத வெள்ளைக் காகிதம் போல, அவர்களது நினைவுச் சேமிப்பு மொத்தமும் காலியாகி ஏதுமறியாதவர்களாக மாறிவிடுவார்கள். சென்னை அண்ணா நகரிலுள்ள மறதி நோயாளிகளுக்கான டே கேர் சென்டருக்குச் சென்று அங்குள்ளவர்களோடு காலை முதல் மாலை வரை வாழ்ந்து பார்த்தேன். 

'முதியோர் இல்லம்' வகையறாக்களை சேர்ந்ததில்லை இந்த இல்லம். குழந்தைகளை எப்படி பள்ளிக்கு காலையில் அழைத்துவந்து, மாலையில் வீட்டுக்கு வழியனுப்பி வைப்பார்களோ அப்படித்தான் இங்குள்ள பெரியவர்களையும் அழைத்து வந்து அனுப்புகிறார்கள். காலை பத்து மணிக்கு வந்துவிட்டு, மதியம் மூன்று மணிக்கு கிளம்பி விடலாம். அலுவலகம் செல்லும் பெற்றோர் பிள்ளைகளை 'டே கேரி'ல் சேர்த்துவிடுவதுபோல, இங்கு பிள்ளைகள் பெற்றோரை அனுப்பி வைக்கிறார்கள். அந்த முதிய குழந்தைகளுக்காக இயங்கும் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் கிரேஸியுடன் சிறிது நேரம் உரையாடினேன். 

``முதல்ல அவங்களை எல்லாம் நெருங்கிப் போய் பாருங்க. அப்போதான் நான் சொல்றதை உங்களால புரிஞ்சுக்க முடியும்" என்றபடியே அவர்கள் இருக்கும் இடத்துக்குள் என்னை அழைத்துச் சென்றார். அந்த அறையில் பதினைந்து மறதி நோயாளிகள் இருந்தனர். எல்லாப் பெரியவர்களும், வெவ்வேறு வேலைகளை செய்துகொண்டிருந்தனர். 

ஜமால் தாத்தா 'எப்ப வேன் வரும்?' என்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். கிரேஸி அவரிடம், `வந்துகிட்டே இருக்குய்யா... மழை பெய்றதால கொஞ்சம் மெதுவா வருது' என்றார். தலையை ஆட்டி ஆமோதித்தபடியே சேரில் சென்று உட்கார்ந்துகொண்டார். 

பார்கவி பாட்டி, தனியாக பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தார். ஒருகாலத்தில் மியூசிக் டீச்சராக இருந்த சாரதா பாட்டி,  'குறையொன்றும் இல்லை' பாட்டு பாடிக்கொண்டிருந்தார். 

80 வயது, ராமசாமி தாத்தா. கலரிங் ரொம்பப் பிடிக்கும். அவரைப் பொறுத்தவரை, இந்த இடம் அவருடைய அலுவலகம். அவர் தினமும் வேலைக்கு வருவதாக நினைத்துக்கொள்வார். அவருக்கென கேபின் அமைக்கப்பட்டுள்ளது. மாதாமாதம், 8000 ரூபாய்க்கான காசோலை அவருக்கு வழங்கப்படுகிறது. கேர்-டேக்கர் ல‌ட்சுமி அக்கா சொல்வதை மட்டும்தான் நம்புவாராம் ராமசாமி தாத்தா. லட்சுமி அக்காவுக்கு, ராமசாமி தாத்தாவைப் போல ஐந்து பெரியவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருக்கிறது! எல்லாவற்றையும், சமாளித்து எல்லோர் மனதிலும் பதிந்திருக்கிறார் அவர்.

ஜமால் தாத்தா, இந்தமுறை அங்கு வேலை பார்க்கும் அண்ணனிடம் 'எப்ப வேன் வரும்?' என்றார். கிரேஸி முதலிலிருந்த அதே

பொறுமையுடன் அவரிடம் போய், 'வண்டி வந்துகிட்டே இருக்கு சார். மழையால் கொஞ்சம் மெதுவா வருது' என்றார். கிரேஸி சொல்லி முடித்து சில நிமிடங்கள் கழித்துதான் எனக்கு புரிந்தது, முதலில் கேட்டதையே அவர் மறந்துவிட்டார். 

'மனுஷ மனம், எதவேணாலும் மறந்துடும். ஆனா, தன் மீது சுமத்தப்படுற வெறுப்புகளை மட்டும் மறக்காது' என்ற எங்கேயோ கேட்டதாய் ஞாபகம். ஆனால் கிரேஸியும், லட்சுமி அக்காவும், வேன் டிரைவர் அண்ணாவும் தங்கள் மீது காட்டப்படும் வெறுப்பையும் கோபத்தையும் நொடியில் மறந்துவிடுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அங்கிருக்கும் எல்லோரும்.

``ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதமா கையாளனும். யாராயிருந்தாலும், முதல் சில நாள்கள்லயே அவங்களுக்கு என்ன பிடிக்கும், யாரை பிடிக்கும், எங்கள்ல யாரை பிடிச்சிருக்கு, யார் பேசினா அவங்க கோபப்படறாங்க, யார்கிட்ட ரொம்ப அன்பா இருக்காங்க என்பதையெல்லாம் தெரிஞ்சுக்குவோம். அதுக்குப்பிறகு, அவங்களுக்குத் தகுந்தமாதிரி எங்களை மாத்திக்க ஆரம்பிச்சுடுவோம். உதாரணமா, ஜமால் தாத்தா இங்க வந்த புதுசுல காலையில வேன்லருந்து இறங்கி சில நிமிஷத்துலயே 'எப்ப வேன் வரும்'னு கேட்பார். இப்போ கொஞ்சம் பரவாயில்ல. இங்க இருக்க ஒரு கேர்-டேக்கர் அண்ணாவை, அவரோட சொந்தக்காரரா நினைச்சுக்கிட்டிருக்கார். அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்குவார். அப்படித்தான் இங்க இருக்க எல்லாருமே..." என்றார் கிரேஸி.

``என்ன மாதிரியான சிகிச்சைகள் இங்கே தரப்படும்" என்று  கிரேஸியிடம் கேட்டேன். 

``இங்கேயிருக்கிற எல்லாருக்கும் எப்பவும் ஏதாச்சும் வேலை கொடுத்துக்கிட்டே இருப்போம். ஏதாவது செஞ்சுகிட்டே இருப்பாங்க. காலையில வந்தவுடனே சாப்பாடு, அப்புறம் யோகா, தியானம், அப்புறம் பிசியோதெரபிஸ்ட் உதவியோட ரொம்ப சாதாரணமான உடற்பயிற்சிகள், ரொம்ப எளிமையான தோட்ட வேலைகள், டீ ப்ரேக், மதிய சாப்பாடு, கேரம் விளையாடுறதுன்னு எல்லாமே டைம் டேபிள்படி நடக்கும். இடையில அவங்களுக்கு ஃப்ரீ டைமும் இருக்கும். அதுல அவங்களுக்கு பிடிச்ச விஷயங்களைச் செய்வாங்க. உதாரணமா, கலரிங் பண்றது, புத்தகம் வாசிப்பது, பாட்டு கேட்பது, பல்லாங்குழி விளையாடுறது, பாட்டுப் பாடுவது, பில்டிங் கேம் விளையாடுறது... பெரும்பாலும் நிறைய வண்ணங்கள் இருக்கிற விஷயங்களைத்தான் விரும்புவாங்க. காலையில பத்து மணியில இருந்து சாயங்காலம் மூணு மணி வரைக்கும் எல்லாமே ஷெட்யூல். யாரையும் எந்த சூழல்லயும் தனியா விடமாட்டோம். 

எல்லார்கிட்டயும் அடிக்கடி 'உங்க பேர் என்ன, உங்க குடும்பத்தினர் பெயர் என்ன, அவங்க என்ன பண்றாங்கனு கேட்போம். சில நேரங்கள்ல அடிக்கக்கூட செய்வாங்க. அடுத்த சில நிமிஷத்துல 'சாப்டியாடா கண்ணு'ன்னு கேட்பாங்க. எல்லாத்தையும் சமாளிக்கனும்.. சமாளிச்சுடுவோம்!" என்றார். 

இவர்கள் எல்லோருக்கும், தங்களுடைய வாழ்வில் நடந்த அத்தனை சம்பவங்களும் நினைவில் இருக்கின்றன. ஒருபாட்டியிடம்,  'உங்கள் வீட்டுக்காரர் பேர் என்ன பாட்டி?' என்றால், யோசிக்கிறார். ஆனால், 'தன் கணவர் என்ன வேலை செய்வார்', 'எந்தெந்த கோயிலுக்கு அழைத்து செல்வார்' என்பதெல்லாம் சட்டெனச் சொல்கிறார். மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில விஷயங்களில் தற்போதைய வாழ்க்கையையும் பழைய வாழ்க்கையையும் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாமல் திணறுவார்கள். 'Problem in Registration, Retention, Recalling' என்று இதை மனநல மருத்துவர்கள் சொல்வார்கள். ஒரு நிகழ்வை மனதில் பதிவுசெய்து கொள்ளுதல் (Registration), அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளுதல் (Retention), சிறிதுநேரம் கழித்து நினைவுக்கூருதல் (Recalling)... இவை மூன்றில் ஒவ்வொன்றிலும், தனித்தனியாக பிரச்னைகள் ஏற்படும். அப்படியான நேரங்களில் கேர்-டேக்கர்ஸ் உடனிருந்து, விவரிக்கின்றனர். இவர்களும் புரிந்துகொள்ள முயல்கின்றனர். கேர் டேக்கர்ஸ், அவர்களைப் பற்றியும் சுற்றியுள்ள பொருள்களின் வண்ணங்கள் குறித்தும் அடிக்கடி கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். பதில்கள் சொன்னவுடன், 'வாவ்...' என்று பாராட்டிக்கொண்டே, கை தட்டுகின்றனர். 

மணி, மூன்று. 

சாரதா பாட்டி மெல்லமாக எழுந்து கையில் தனது ஹேண்ட்-பேக்கை தூக்கியபடி வாசலை நோக்கி நகர்ந்தார். எதை மறந்தாலும், வீட்டுக்கு செல்ல வேண்டுமென்பதை அங்கிருந்த யாரும் மறக்கவில்லை. ஐந்து வயது குழந்தை, பள்ளி வாசலில் நின்றுகொண்டு அப்பாவின் வண்டி ஓசைக்கு காத்திருப்பதுபோல 'மணி மூணாகப்போகுது, வீட்டுக்குப் போகலாம்' என்பதாக கிளம்ப ஆயத்தமாகினார்கள்.... பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் பார்ப்பதற்காக. 

இந்த வளர்ந்த குழந்தைகளுக்கு, வீட்டிலும் இதேயளவு அன்பும், ஆதரவும், அணுசரனையும் கிடைத்தால் மகிழ்ச்சியே!

அடுத்த கட்டுரைக்கு