Published:Updated:

புதிய பகுதி! - தொற்றுநோய்களின் உலகம்!

புதிய பகுதி! - தொற்றுநோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய பகுதி! - தொற்றுநோய்களின் உலகம்!

வைரஸ்... பாக்டீரியா... மனிதர்கள்வி.ராமசுப்பிரமணியன் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்ஹெல்த்

ருத்துவ உலகம், நோய்களை இரண்டாகப் பிரிக்கிறது. தொற்று நோய்கள், தொற்றா நோய்கள். இதயநோய், சர்க்கரை நோய், புற்றுநோய், ஆஸ்துமா போன்று ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தொற்றாத நோய்கள், தொற்றா நோய்கள். இந்நோய்கள் வரக் காரணம், நம் வாழ்க்கை முறையில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள். பாரம்பர்யமான, பதற்றமற்ற, அன்பும், அரவணைப்பும், உடற்பயிற்சிகளும் சூழ்ந்த வாழ்க்கைமுறை இன்று வேறுவிதமாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் பதற்றம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை யாரையும் விட்டுவைப்பதில்லை. அவசரம், வாழ்க்கையைக் கவ்விக்கொண்டுவிட்டது. அலுவலகம் செல்பவர்கள் மட்டுமின்றி, வீட்டில் இருப்போரையும் பதற்றமும் பரபரப்பும் சூழ்ந்தே இருக்கின்றன. இந்தப் பதற்றமும் பரபரப்பும் உடல் இயக்கத்தைப் பாதிக்கின்றன. மெட்டபாலிசம் மாறுகிறது. அதனால் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்களெல்லாம் வருகின்றன.  

புதிய பகுதி! - தொற்றுநோய்களின் உலகம்!

அந்தக் காலத்தில் நமது உணவென்பது, உடல் ஆரோக்கியத்தை மையப்படுத்தியதாக இருந்தது. ‘உணவே மருந்து’ என்று அதனால்தான் சொன்னார்கள். உடலையும் மனதையும் பக்குவப்படுத்தும் ஆற்றல் உணவுக்கு உண்டு. ‘சத்தான உணவு, அதற்குச் சமமான உழைப்பு’ என்ற சூட்சுமம்தான் நம் முன்னோரை நீண்ட ஆயுளோடு வாழ வைத்தது.

ஆனால், இன்று உணவுப்பண்பாடு வெகுவாக மாறிவிட்டது. தட்பவெப்பத்துக்குப் பொருந்தாத பல உணவுகள் நம் கைக்கெட்டும் தூரத்துக்கு வந்துவிட்டன. அவற்றின் சுவை, இளம் தலைமுறையை ஈர்க்கிறது. உடலை மையப்படுத்தியதாக இல்லாமல் நாவை மையப்படுத்தியதாக உணவுகள் மாறி விட்டன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடுவதுமில்லை. அதனால் உணவே இன்று பல்வேறு நோய்களைப் பற்ற வைக்கிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புதிய பகுதி! - தொற்றுநோய்களின் உலகம்!மனிதர்களின் கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறை பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. புகை பிடித்தல் இன்று மனித குலத்தைப் பெரும் பாதிப்பில் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதேபோல் மதுவும். பத்தில் ஏழு பேர் இந்தப் பழக்கத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். இவை ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் சவாலாக உருப்பெற்று நிற்கின்றன.

உடற்பயிற்சிகள் பெரும்பாலும் குறைந்துவிட்டன. அக்காலத்தில் மனிதர்களின் உழைப்பே பெரும் உடற்பயிற்சியாக இருக்கும். நிறைய நடப்பார்கள். வியர்வை சிந்த வேலை செய்வார்கள். இன்று நடப்பதே அரிதாகி விட்டது. முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு வாகனம் இருக்கும். இன்று ஆளுக்கொரு வாகனம். அருகில் இருக்கிற கடைக்குச் செல்லக்கூட பைக். ஒரு நாளைக்கு அரைமணி நேரம், ஒரு வாரத்துக்கு  ஐந்து நாள்கள் நடந்தால் ஆரோக்கியம் பெருகும், ஆயுள் அதிகமாகும். ஆனால், நடக்க நேரமும் இல்லை, மனமும் இல்லை.  

புதிய பகுதி! - தொற்றுநோய்களின் உலகம்!

தூக்கம் எல்லா உயிரினங்களுக்கும் அவசியமானது. உணவு எப்படியோ, அப்படி. ஆனால், பலர் போதிய அளவுக்குத் தூங்குவதேயில்லை. மொபைலும் தொலைக்காட்சியும் பலரின் உறக்கங்களைத் திருடிவிட்டன. ஆங்கிலத்தில், ‘ஸ்லீப் டெப்ட்’ (Sleep debt) என்பார்கள். தமிழ்ப்படுத்தினால் ‘தூக்கக் கடன்’ என்று வரும். இந்தத் தூக்கக் கடன்தான் பல நோய்களுக்கு அடிப்படை.

உணவும் வாழ்க்கைமுறையும் மாறி, பதற்றமும் அவசரமும் சூழ்ந்த ஒரு நவீன உலகத்துக்குள் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலானோர், இதை, ‘தொற்றா நோய்களின் யுகம்’ என்கிறார்கள். ஒருவிதத்தில் இது உண்மையாக இருக்கலாம். ஆனால், தொற்று நோய்களை இன்னும் நாம் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி விடவில்லை. அவை நம்முன் மிகப்பெரும் சவாலாக முன்னெழுந்து நிற்கின்றன. அவற்றோடு இந்த நொடி வரை மருத்துவ உலகம் போராடிக்கொண்டிருக்கிறது.

புதிய பகுதி! - தொற்றுநோய்களின் உலகம்!ஒருகாலத்தில், அம்மை, காலரா, மலேரியா, பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் மனித குலத்துக்கே சவாலாக இருந்தன. இன்று அவற்றை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி விட்டோம். ஆனால், புதிது புதிதாகத் தொற்றுநோய்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அண்மையில் வந்த டெங்கு உள்பட.

சத்தற்ற, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துகொண்டே வருகிறது. மக்கள்தொகைப் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. குப்பைகளை, கழிவுகளைக் கையாள்வதில் பெரும் சிக்கல் உருவாகியிருக்கிறது. இது எல்லாமே தொற்றுநோய்களுக்குச் சாதகமான சூழலாகின்றன. உலக அளவிலான புள்ளிவிபரப்படி, மனிதர்களுக்கு ஏற்படும் மரணங்களுக்கான முதல் காரணம் தொற்று நோய்கள்தான். அதிலும், நுரையீரல் தொற்று, வயிற்றுப்போக்கு... இந்த இரண்டு தொற்று நோய்களாலும்தான் உலகத்தில் அதிக மனிதர்கள் இறக்கிறார்கள்.

தொற்றுநோய்களுக்குக் காரணமான தொற்றுகளை பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள், ரிக்கெட்ஸியா (Rickettsia), கிளாமிடியா (Chlamydia) என்று வகைப்படுத்தலாம். உதாரணத்துக்குக் காசநோய், ஒரு பாக்டீரியாத் தொற்றுநோய். ஸ்வைன் ஃப்ளூ ஒரு வைரஸ் தொற்று. படை, சேற்றுப்புண் போன்றவை பூஞ்சைத் தொற்றால் ஏற்படக்கூடியவை. எலிக்காய்ச்சல் (Leptospirosis) ரிக்கெட்ஸியாவால் ஏற்படும் நோய். ஒருவித நிமோனியா, சில பால்வினை நோய்கள் எல்லாம் கிளாமிடியாவால் வருபவை.

வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகளில் தொற்றுநோய்களின் தாக்கம் அதிகம். காரணம், மக்கள் நெருக்கம். இங்கிலாந்தில் ஒரு மருத்துவர் ஓ.பியில் அமர்ந்து 100 நோயாளிகளைப் பார்த்தால் ஐந்து நோயாளிகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இந்தியாவில் அப்படிப் பார்த்தால் 60 நோயாளிகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆக, தொற்றுநோய், மிகப்பெரிய பிரச்னை. அவற்றைப் பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. நிறைய விழிப்பு உணர்வு அவசியமாக இருக்கிறது. அடுத்தடுத்து நிறைய பேசுவோம். உங்களுக்குச் சந்தேகங்கள் இருந்தாலும் கேளுங்கள். விடை தேடுவோம்.

- களைவோம்...