Published:Updated:

"போலி உணவுப் பொருள்களை ஒழிப்பதற்கு இதுதான் ஒரே வழி" - உணவு பாதுகாப்பு அதிகாரியின் யோசனை!

"போலி உணவுப் பொருள்களை ஒழிப்பதற்கு இதுதான் ஒரே வழி" - உணவு பாதுகாப்பு அதிகாரியின் யோசனை!
"போலி உணவுப் பொருள்களை ஒழிப்பதற்கு இதுதான் ஒரே வழி" - உணவு பாதுகாப்பு அதிகாரியின் யோசனை!

"சட்டத்தால் மட்டுமே தவறுகளைத் தடுக்க முடியாது; மக்களிடம் விழிப்புஉணர்வு வேண்டும்" - உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை!

நாகப்பட்டினம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவரின் பதிவு அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது. கடைகளில் விற்கப்படும் போலியான நெய்களைப் பற்றிய பதிவே அது.

நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் உள்ள கடைகளில் 'கரூர் நெய்' என்ற பெயரில் குறைந்த விலையில் நெய் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது. இதைப் பொதுமக்களும் அதிக அளவில் வாங்கி சமையலுக்குப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், இவை உண்பதற்கு ஏற்ற நெய் அல்ல. இதுகுறித்த விழிப்புஉணர்வு இல்லாததால், மக்கள் அதிக அளவில் இதை உணவில் பயன்படுத்துகின்றனர்.

நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் இதுகுறித்து தனது முகநூலில், "சட்டத்தாலும் அவற்றை அமல்படுத்தும் அதிகாரிகளாலும் மட்டுமே அனைத்து குற்றங்களையும் தடுக்க இயலாது. மக்களிடம் விழிப்புஉணர்வு வேண்டும் " என்று குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இது, இப்பகுதி மக்களிடையே அதிகமாகப் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்பழகனிடம் இதுகுறித்துப் பேசினோம். "பாலைக் காய்ச்சி அது உறைந்து தயிரான பிறகு அதிலிருந்து தயாரிக்கப்படுவதே உண்மையான நெய். இதை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  ஆனால், நெய்யே அல்லாத வேதியல் முறைமூலம் தயாரிக்கப்பட்ட பொருளை நெய் போன்ற வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி  'கரூர் நெய்' என்ற பெயரில் நாகூரில் உள்ள பல வணிக வளாகங்களிலும், மளிகைக் கடைகளிலும் விற்பனைசெய்துவருகின்றனர். இந்த கரூர் நெய், பாலில் இருந்து தயாரிக்கப்படுவது அல்ல. இரண்டு வெவ்வேறு வகையான எண்ணெய்களைச் சேர்த்து வாசனைப் பொருள்களைக் கலந்து தயாரிக்கப்பட்ட போலியான நெய் ஆகும். .  கடைகளில் நடத்தப்பட்ட உணவு ஆய்வில், இந்தப் போலி உணவுப்பொருள் குறித்து தெரிய வரவே, இதுபற்றி விற்பனையாளர்களிடம் கேட்டோம். ஆனால் அவர்களோ, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் 2011 விதிகளில் இருந்து தப்பிப்பதற்காக 'இந்த நெய் விளக்குஎரிக்கவே விற்பனை செய்யப்படுகிறது' என்று மனசாட்சியே இல்லாமல் கூறுகின்றனர்" என்றார்.

இந்தப் போலி உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் காரணம் என்ன என்று நாம் கேட்டதற்கு, "இந்த நெய் பாக்கெட்டுகளில் சிறியதாக ஆங்கிலத்தில் 'இது வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டும்' என்று அச்சடிக்கப்பட்டுள்ளதால்,  தயாரிப்பு நிறுவனத்தின்மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதுபோல, செயற்கை உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதியும், காப்புரிமையும் தராமல் இருப்பதே போலி உணவுப் பொருள்களை ஒழிப்பதற்கான ஒரே வழி. ஆனால், அது சாத்தியமா என்று தெரியவில்லை. எனவே, மக்கள் விழிப்புஉணர்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற உணவுப் பொருள்களை வாங்கும் போது அதன் விளக்க குறிப்புரையை நன்றாகப் படித்துப்பார்த்து வாங்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு