Published:Updated:

``முன்னாடி சிக்கனை சமைக்காம சாப்பிடுவேன்... இப்போ ஃப்யூர் வெஜ்!" - `ஹீரோ' மகேந்திரன் #FitnessTips

அண்மையில், நடிகர் அருண் விஜய் உடன் எடுத்துக்கொண்ட செல்பி, சோஷியல் மீடியாவில் பலரின் கவனத்தை ஈர்த்தது

``முன்னாடி சிக்கனை சமைக்காம சாப்பிடுவேன்... இப்போ ஃப்யூர் வெஜ்!" -  `ஹீரோ' மகேந்திரன் #FitnessTips
``முன்னாடி சிக்கனை சமைக்காம சாப்பிடுவேன்... இப்போ ஃப்யூர் வெஜ்!" - `ஹீரோ' மகேந்திரன் #FitnessTips

 `நாட்டாமை’, `படையப்பா’ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். பிறகு. `விழா’ படத்தில்  நடித்து, ஹீரோவாக உயர்ந்தார். தற்போது சுந்தர்ராஜன் இயக்கத்தில் `ரங்கராட்டினம்’ ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இதைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் செந்தில்குமார் இயக்கியுள்ள `நம்மூருக்கு என்னதான் ஆச்சு’ படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது ஃபிட்னெஸிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில், நடிகர் அருண் விஜய் உடன் எடுத்துக்கொண்ட செல்பி, சோஷியல் மீடியாவில் பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்போது, கோலிவுட் நாயகர்களிடையே ஃபிட்னெஸ் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. மகேந்திரனும் தப்பவில்லை. அவருடைய ஃபிட்னெஸ் குறித்து கேட்டோம்.   

``சின்ன வயசுல நிறைய படங்களில் நடிச்சு, நிறைய சந்தோஷங்களை அனுபவிச்சேன். ஆனா, இன்னைக்கு அதே அளவுக்கு ஸ்ட்ரெஸையும் அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன். `சின்ன வயசிலேயே நல்லா நடிக்கிறான்’னு பேரு வாங்கிட்டேன். ஆனா, இப்போ ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சபிறகு ஒரு ஹிட் கொடுக்கணும்ங்கிற எதிர்பார்ப்பு உருவாகிடுச்சு. அதுக்காக கடுமையா உழைக்கவும் திட்டமிடவும் வேண்டியிருக்கு. இண்டஸ்ட்டிரியில பெரிய போட்டி இருக்கு. இதுக்கு மத்தியில என்னை நிலைநிறுத்திக்கணும். `விழா’ படத்துல ஹீரோவா நடிச்சபிறகு நிறைய படங்கள் எனக்கு அமையும்ணு எதிர்பார்த்தேன். சில படங்கள் கிடைச்சது. ஆனா, எல்லாம் தோல்வியில முடிஞ்சது. அதனாலயே எனக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகியிடுச்சு. இதனால ரொம்ப வெயிட் போட்டுட்டேன். 

என்னுடைய ஃப்ரெண்ட் ஒருத்தன் லோக்கல் ஜிம்மில் ட்ரெய்னரா இருக்கான். ஒருநாள் என்னைப் பார்த்துட்டு, ``என்ன மச்சான் இவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருக்க.. ஃபிட்னெஸ்ல கவனம் செலுத்துடா.. எல்லாம் சரியாயிடும்’’னு சொன்னான். அதுக்குப் பிறகுதான் ஃபிட்னெஸ்ல கவனம் திரும்புச்சு!

சின்ன வயசுல ஜிம்னாஸ்டிக், ஸ்கேட்டிங், ஸ்விம்மிங், பரதநாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன். அதுல ஜிம்னாஸ்டிக் நல்லாப் பண்ணுவேன். அதில் மறுபடியும் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ஏன்னா, பாலிவுட்டுல இருக்கிற சில ஹீரோக்கள் ஜிம்னாஸ்டிக்ஸையும் ஃபிட்னெஸ்ஸையும் சேர்த்து கத்துக்கிறாங்க. அதைப் படத்துலேயும் அப்ளை பண்றாங்க. அந்தவகையில எனக்கு ரோல்மாடலா நான் டைகர் ஷெராப்பை (Tiger shroff) சொல்லுவேன்!

அவரை மாதிரியே உடம்பை ஃபிட்டா வெச்சிக்கணும்ங்கிற ஆசை வந்துச்சு. ஜிம்முக்குப் போக ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல ஜிம்முக்குப் போகாம என்னால இருக்கவே முடியாதுங்கிற நிலைமைக்கு ஆயிட்டேன். வெளியூருக்கு ஷுட்டிங் போனாலும் என்னுடைய கார்ல ஃபிட்னெஸுக்கான `தெரா ட்யூப்’ (Thera tube) `தெராபேண்ட்’ (Theraband), `தம்பிள்ஸ்’  (Thumbles) வெச்சிருப்பேன். ஷுட்டிங் இடைவேளையில் ஒரு ஓரமா போய் நின்னுகிட்டு எக்ஸர்சைஸ் பண்ணிக்கிட்டு இருப்பேன். அதேமாதிரி ஜிம் இருக்கிற ஊர்ல, ரொம்ப நாள் ஷுட்டிங் இருந்துச்சுன்னா அந்த ஜிம்முல உறுப்பினராயிடுவேன். அந்தளவுக்கு இப்போ நான் ஃபிட்னெஸுக்கு அடிமையாயிட்டேன். 

அடிப்படையில நான் ஒரு கிரிக்கெட், பாட்மின்டன் பைத்தியம். எங்கே கிரவுண்டைப் பார்த்தாலும், அங்கே ஓடிப்போயி விளையாடுவேன். இன்னைக்கு எனக்கு ஸ்ட்ரெஸ்ல இருந்து மிகப் பெரிய ரிலீப் கொடுக்கிற இடமா ஜிம்முதான் இருக்கு. ஒவ்வொருமுறையும் கூடுதலா வெயிட்டைத் தூக்கும்போது எனக்குள்ளே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதை உணர்ந்திருக்கேன். நம்முடைய வாழ்க்கையில சில எதிர்பாராத தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதிலிருந்து மீண்டு வரணும்னா நிச்சயமாக மனஉறுதி தேவை. அந்த மனஉறுதியை ஃபிட்னெஸ் நமக்குக் கொடுக்கும். 

ஃபிட்னெஸ்ஸைப் பொருத்தவரைக்கும் ஹெல்த் அண்ட் ஸ்ட்ரென்த்துக்குதான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறேன். தோள்களை பெரிய அளவுல வைச்சிக்கிட்டு பாடிபில்டரா தெரியணும்ங்கிற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. நீண்ட காலத்துக்கு ஆரோக்கியமா வாழணும். அதுக்கு என்ன எக்ஸர்சைஸ் தேவையோ அதை மட்டும் செய்றேன். அதனால `ஃபுல் பாடி டிரெய்னிங்’  எடுத்துக்கிறேன். இதை செஞ்சா நமக்கு 40, 45 வயசு ஆனாலும் உடம்பு ஃபிட்டாகவே இருக்கும். ஒரு நடிகனுக்கு இது ரொம்ப முக்கியம். அதனால, அந்தப் பயிற்சியில அதிகம் கவனம் செலுத்தறேன்!

காலையில சென்னை ஒய்.எம்.சி.ல அத்லெடிக் டிரெய்னிங்கை ரியாஸ் மாஸ்டருக்கிட்ட எடுத்துக்கிறேன். இதுல ரன்னிங் மாதிரி எல்லா எக்ஸர்சைஸும் மூவ்மென்ட்ஸ்லயே இருக்கும். இதை முடிச்சுட்டு பாண்டியன் மாஸ்டர்கிட்ட சிலம்பம் கத்துக்கிறேன். இதற்குப் பிறகு 11 மணிக்கு ஜிம்முக்கு வருவேன். இங்கே `கார்டியோ  எக்ஸர்சைஸ்’ (Cardio exercise), `பாடி வெயிட் எக்ஸர்சைஸ்’ (Bodywight exercise)  செய்வேன். ஈவ்னிங்கில `ஆஃப்ஸ் எக்ஸர்சைஸ்’ பண்ணினதுக்கு அப்புறமா இரவு 8.30 மணிக்கு பேட்மின்டன் விளையாடப் போயிடுவேன். ஷுட்டிங் இல்லைன்னா இதுதான் என்னுடைய ரெகுலர், வொர்க்அவுட்டா இருக்கும்!

பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் சமைக்காத சிக்கன்மேல உப்பும், மிளகாய்ப்பொடியும் தூவி சாப்பிடுவேன். இப்போ நான் முழுக்க முழுக்க சைவம் சாப்பிடுற ஆளா மாறிட்டேன். ரொம்ப வருஷத்துக்கு ஆரோக்கியமா வாழறதுக்கு சைவம் ரொம்ப ஹெல்ப் பண்ணும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, பச்சைக் காய்கறிகளை தினமும் சாப்பிடுறேன். அதேபோல, ஒருநாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். தண்ணீர் குடிக்க முடியலைன்னா அதுக்குப் பதிலா சர்க்கரை, ஐஸ் போடாத ஜூஸைக் குடிப்பேன். அரைவேக்காடா சமைத்த புரோக்கோலி, பீன்ஸ், கேரட், வெண்டைக்காய் ரொம்பப் பிடிக்கும். வெளியூருக்குப் போனா ரெண்டு இட்லி, கொஞ்சம் சப்பாத்தி சாப்பிடுவேன். வெளிநாட்டுக்குப் போனாலும் அங்கேயும் வெஜ்தான். 

எனக்கு அம்மா இல்லை. சின்ன வயசிலிருந்தே எனக்கு எல்லாமே அப்பாதான். அவர் எதைச் சமைச்சாலும் நல்லாயிருக்கும். குறிப்பா, வெஜ் பிரியாணியும் சாம்பாரும் பிரமாதமா இருக்கும். நான் டயட்டுல இருக்கிற நாள்கள்லதான் அதையெல்லாம் சமைச்சு, என்னை சோதிப்பாரு. ஆனாலும், கொஞ்சம் டயட்டுக்கு பைபை சொல்லிட்டுச் சாப்பிட்டுடுவேன்” என்கிறார் மாஸ்டர் மகேந்திரன். 

Courtesy : SCALE fitness