Election bannerElection banner
Published:Updated:

``காதல் படம் தந்த அந்த மன அழுத்தம்..."- கண்கலங்கும் விஜய் மில்டன்! #LetsRelieveStress

``காதல் படம் தந்த அந்த மன அழுத்தம்..."- கண்கலங்கும் விஜய் மில்டன்! #LetsRelieveStress
``காதல் படம் தந்த அந்த மன அழுத்தம்..."- கண்கலங்கும் விஜய் மில்டன்! #LetsRelieveStress

`பாதையைத் தேடாதே... உருவாக்கு’... இதுதான் என் மன அழுத்தம் போக்கும் வாசகம்!"

``என்னுடைய வாழ்க்கையில் மனஅழுத்தம் தந்த நாள்கள்னா அது `காதல்’ படத்தை ஷூட் பண்ணியபோதுதான். ஏன்னா, அந்தப் படத்தைக் குறைஞ்ச பட்ஜெட்ல லைட்ஸே இல்லாம எடுக்கணும்ங்கிற சவால் என் முன்னாடி இருந்துச்சு...’’ என்றவாறு ஆரம்பிக்கிறார் இயக்குநர்  எஸ்.டி. விஜய் மில்டன். தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்னும் அடையாளத்தைப் பெற்றவர். `கோலிசோடா’, `கடுகு’, `கோலிசோடா 2’ என வரிசையாகப் படங்களை இயக்கியும் தயாரித்தும், வெற்றி கண்டவர். அவருக்கு மனஅழுத்தம் தந்த தருணங்களையும் அதை எதிர்கொண்டு வெற்றி பெற்றது பற்றியும் இங்கே பகிர்ந்து கொள்கிறார். 

``இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய `சாமுராய்’ படம் சரியாப் போகல. அதனால `காதல்’ படத்தோட கதையை ரெடி பண்ணினார். அந்தக் கதையை எடுத்துக்கிட்டு ரெண்டுபேரும் தயாரிப்பாளர்கள் சிலரைப் போய்ப் பார்த்தோம். ஆனா, படத்தைத் தயாரிக்கிறதுக்கு யாரும் முன்வரல. சில பெரிய கம்பெனிகள் கதையை ஓ.கே பண்ணினாலும், `டேக் ஆஃப்' ஆகாமப் படம் தள்ளிப்போய்க்கிட்டே இருந்துச்சு. அப்போதான் டைரக்டர் ஷங்கர் சார், `கோடம்பாக்கத்துல ரொம்ப நாளாச் சுத்திக்கிட்டு இருக்கியே... என்ன கதை வெச்சிருக்க. என்ன பட்ஜெட்?’னு பாலாஜிக்கிட்ட கேட்டார். சட்டுனு `ஒரு கோடி ரூபா இருந்தா படத்தை முடிச்சுடலாம்...’ னு ஒரு ஃபுளோவுல சொல்லியிருக்காரு. மறுநாள் காலைல ஷங்கர் சார்கிட்ட இருந்து அழைப்பு. `ஒரு கோடி இருந்தா படத்தை முடிச்சுடுவேன்னு சொன்னேல்ல... உண்மையிலேயே படத்தை எடுத்துடுவியா... பணம் தர்றேன்”னு சொல்லிருக்காரு. பாலாஜி எனக்கு போன் பண்ணி, `சொன்ன பட்ஜெட்டுல படத்தை எடுத்துட முடியுமா?’னு கேட்டார். 

அதுவரை `படத்தைச் சிறப்பா எடுக்கணும்... குறைஞ்ச நாள்ல எடுக்கணும்... அது எல்லோரும் பாராட்டும்படியா இருக்கணும்'னுதான் பேசிக்கிட்டு இருந்தோம். ஆனா, படத்தைக் குறைஞ்ச பட்ஜெட்ல எடுக்கணும்னு ஒருநாளும் பேசினதில்ல. `குறைஞ்ச தொகையில ஒரு படத்தை எடுக்க முடியுமா?’ங்கிற கேள்வியை அப்போதான் நான் எதிர்கொள்றேன். உடனே நான், `ஏன் முடியாது பாலாஜி... தைரியமா இருங்க. எடுத்துடலாம்...’னு சொல்லி, வேலையில இறங்கிட்டேன். அப்படி, அந்தப் படத்துக்கான `லொகேஷன்’, `பிரிப்ரேஷன்’, `வொர்க்கிங் ஸ்டைல்’னு இறங்கும்போதுதான் லைட்ஸே இல்லாம படமாக்குறதுன்னு முடிவு பண்ணினேன். யூனிட், ஃபெட்போர்டு, லைட்ஸ்மேன்னு க்ரூவே இல்லாம நாங்க மட்டுமே ஷுட்டிங் போனோம். பணப்பற்றாக்குறை படத்துல தெரியக் கூடாதுங்கிறதுல கவனமா இருந்தோம். அதனால சில டெஸ்ட் எல்லாம் எடுத்துப்பார்த்துட்டு, ஷூட்டிங் தொடங்குனோம். 

தி-நகர்ல உள்ள `பால் சுகந்தி மேன்ஷன்’லதான் படத்தோட `செகண்ட் ஆஃப்' முழுக்க ஷூட் பண்ணினோம். அதுக்கு முன்னாடி வரைக்கும் தமிழ் சினிமாவுல ஒரு மேன்ஷன்ல கதை நடக்குதுன்னா, அந்த போர்ஷனை மட்டும் செட் போட்டு ஷூட் பண்ணுவாங்க. நகர்த்தி வைக்கிற வசதி இருக்கும். ஆனா, பத்துக்குப் பத்தடி உள்ள மேன்ஷன்ல கேமிராவை வெச்சு ஷூட் பண்ண வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டுச்சு. அது ரொம்ப சவாலான விஷயம். கேமிராவே நான்கரை அடி இடத்தை அடைச்சுக்கும். இதுல ஆர்ட்டிஸ்ட்டை எங்க உக்கார வச்சி ஷூட் பண்றது? ரொம்ப சவாலான, மனஅழுத்தம் தரக்கூடிய காரியமா அது இருந்துச்சு.  பாலாஜி, `வேணும்னா... இந்த போர்ஷனை மட்டும் ஷங்கர்சார்கிட்ட சொல்லி, செட் போட்டுக்கலாம்’னு சொன்னார். ஆனா, இந்த அறையிலதான் எடுக்கணும்னு நான் உறுதியா இருந்து, காட்சிகளை எடுத்தேன். 

அப்போ பாலாஜி ஒரு விஷயம் சொன்னார். `எப்போ நமக்கு மனஅழுத்தம், பற்றாக்குறை, பிரச்னை வருதோ அப்போதான் நாம புது வழிகளைக் கண்டுபிடிப்போம். இதுவரைக்கும் சரித்திரத்துல அதுதான் நடந்திருக்கு’. அவர் சொன்னதுதான் `காதல்’ படத்துலயும் நடந்துச்சு. எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொண்டு, படத்தை முடிச்சு, ஷங்கர் சார்கிட்ட போட்டுக் காட்டினோம். படத்தைப் பார்த்துட்டு, `தேவையான எல்லாத்தையும் கொடுத்திருந்தாகூட இப்படிப் பண்ணியிருக்க மாட்டீங்க... படத்தை நல்லா எடுத்திருக்கீங்க’ என்று பாராட்டினார். பட்ஜெட்டுக்குள்ள படத்தை எடுத்தே ஆகணும்கிற அழுத்தம் மட்டும் எங்களுக்கு இல்லைன்னா... அவ்வளவு சிறப்பா `காதல்’ படம் உருவாகியிருக்காது. அதுக்குப் பிறகு, எப்போ ஷூட்டிங்ல கலந்துக்கிட்டாலும் பாலாஜியோட வார்த்தைகளைத்தான் மனசில நினைச்சுக்குவேன். மனஅழுத்தம் வந்த சுவடே தெரியாம அது மறைஞ்சுபோயிரும்!

பொதுவா நாம ஷூட்டிங் கிளம்பிப்போனா, அங்கே நாம நினைச்ச மாதிரி எதுவும் இருக்காது. ஆர்ட்டிஸ்ட்டோட ஹேர்ஸ்டைல், பொட்டு, செட் பிராப்பர்டீஸ்னு எல்லாம் மாறியிருக்கும். அந்த மாதிரி நேரத்துல யாரா இருந்தாலும் அவங்களுக்கு மனஅழுத்தம் வந்திடும். அதுக்குப் பதிலா வேற ஒண்ணைப் பயன்படுத்திக்கலாம்னா, அது கதைக்கு காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டதா ஆயிடும். அதனால, பலரும் ஷூட்டிங்கைத்தான் கேன்சல் பண்ணுவாங்க. ஆனா, நான் அதுக்கு எதிரா யோசிப்பேன். நாம எதிர்பார்த்தது இல்லையா... அப்போ, அதுக்கு என்ன செய்யணும். அந்த போர்ஃஷனை மட்டும் இன்னொருநாள் எடுக்க முடியுமா... அது இருக்கிற மாதிரி இல்யூஷனை கிரியேட் பண்ண முடியுமான்னு பார்ப்பேன். இப்படியெல்லாம் யோசிச்சு, மாற்றுவழிகளைக் கண்டுபிடிப்பேன். அப்படிச் செய்யும்போது, என்னால ரொம்ப ஈஸியா மன அழுத்தத்துல இருந்து வெளியே வந்துட முடியும்!

ஆனா, தயாரிப்பாளரா இந்த உத்தியைப் பயன்படுத்த முடியாது (சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்). ஷூட்டிங் ஆரம்பிக்கிற நேரத்துல பணம் தர்றேன்னு சொன்னவங்க, தராமப் போயிடுவாங்க. அதுக்காக ஷூட்டிங்கை நிறுத்திட முடியாது. ஸ்பாட்டுக்குப் போய், ஷூட் பண்ண ஆரம்பிச்சுடுவோம். இடையில ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை தெரிஞ்ச ஒவ்வொருத்தருக்கா போன் பண்ணி பணத்தை ரெடி பண்ணப் பாப்போம். 'இன்னைக்கு யார் யாருக்கெல்லாம் பணம் கொடுக்காம தள்ளி வைக்கலாம். எதுக்கெல்லாம் கொடுத்தே ஆகணும்'னு திட்டமிடுவோம். இதுக்கு இடையில நினைச்ச மாதிரி அன்னைக்கு எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்தே ஆகணும்னு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த மாதிரி நேரத்துல அதிகப்படியான மனஅழுத்தத்துல சிக்கிடுவேன். 

`நேர்மையான கதை இருக்கு. சினிமாவுக்கு வந்து 25 வருஷமாயிடுச்சு. ஆனாலும், ஒரு படத்தை எடுக்கிற பொருளாதாரச் சுதந்திரம் நமக்கு இல்லைன்னா... எதுக்கு தமிழ் சினிமாவுல இருக்கணும்'ங்கிற கோபம் வரும். அந்தமாதிரி நேரத்துல கடுமையான மனஅழுத்தம் உண்டாகும். அப்போ என்ன செஞ்சா மனஅழுத்தத்தில இருந்து வெளியே வர முடியும்'னு யோசிப்பேன். இந்த மாதிரி நேரத்துல சிலர் பாட்டு கேட்பாங்க... மனசுக்குப் பிடிச்ச இடத்துக்குப் போவாங்க... புத்தகம் படிப்பாங்க.. இல்லைன்னா சாமி மேல பாரத்தைப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. ஆனா, நான் பிரச்னையை நேருக்கு நேரா எதிர்கொண்டு மனஅழுத்தத்தில இருந்து விடுபட்ருவேன்.

 `கோலிசோடா’ படத்தை எடுக்கும்போது என்கிட்ட அஞ்சரை லட்சம் ரூபாய்தான் இருந்துச்சு. அந்தப் படத்தை எப்பிடி எடுத்தேன். எப்படி ரிலீஸ் பண்ணினேன்னு இப்ப நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு. `பாதையைத் தேடாதே... உருவாக்கு’ ங்கிற கொள்கைதான் எனக்குப் பிடிக்கும். நான் எடுத்த, வேலை செஞ்ச எல்லாப்படத்துலயும் அதைத்தான் செஞ்சேன். அப்படித்தான் மனஅழுத்தத்தை விரட்டி அடிச்சிருக்கேன்’’ என்கிறார் இயக்குநர் எஸ்.டி.விஜய் மில்டன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு