Published:Updated:

லெப்டோஸ்பைரோசிஸ், ஹெப்படைடிஸ் ஈ... மனித குலத்துக்கு எமனாகின்றனவா எலிகள்?

உயிரிழப்புகளை ஏற்படுத்தும் எலிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள மிக மிக எளிய வழிமுறைகளைக் கையாண்டால் போதும்.

லெப்டோஸ்பைரோசிஸ், ஹெப்படைடிஸ் ஈ... மனித குலத்துக்கு எமனாகின்றனவா எலிகள்?
லெப்டோஸ்பைரோசிஸ், ஹெப்படைடிஸ் ஈ... மனித குலத்துக்கு எமனாகின்றனவா எலிகள்?

லகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் இயற்கைக்கு நன்மை செய்பவைதாம். மரங்களின் விதைகள் பல்வேறு இடங்களில் பரவுவதற்கு எலிகளின் பங்கு மிகவும் அவசியம். உலகின் உணவுச்சங்கிலி நிச்சயம் எலிகளின்றி முழுமை பெறாது. ஆனால், சமீபகாலங்களாக எலிகள் மனித குலத்துக்கு எதிரியாக மாறிக்கொண்டிருக்கின்றன. 

எலிக்காய்ச்சல்

எலிக்காய்ச்சல் ( Leptospirosis) என்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் நோய். ஒருவகை பாக்டீரியாவின் மூலம்தான் இது பரவுகிறது. எலிக்காய்ச்சலைப் பரப்பும் பாக்டீரியாவானது, பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும். எலியின் சிறுநீர், மலத்தில் இந்த பாக்டீரியா வெளியேறும். தரையில், தண்ணீரில் ஏன் உங்கள் வீட்டுக் குடத்தில் என எந்த இடத்தில் எலி சிறுநீரைக் கழித்தாலும் அந்த இடத்தில் பாக்டீரியா பரவும். எலியின் கழிவுகள் கலந்த தண்ணீர் அல்லது உணவை நாம் உட்கொள்ளும்போது எலிக்காய்ச்சல் ஏற்படும். 

எலியின் கழிவுகளை நாம் மிதித்துவிட்டால், நம் உடலில் உள்ள காயங்கள், சிராய்ப்புகள், உலர்ந்த பகுதிகள், வாய், மூக்கு, அந்தரங்கப் பகுதிகள் வழியாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்றுவிடும். 

 இந்தியாவைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இதன் பாதிப்பு அதிகம். அண்மையில் வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்த கேரள மாநிலத்தில் ஒரே மாதத்தில் 559 பேருக்கு எலிக்காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு, 229 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டது. அதில் 54 பேர் உயிரிழந்தனர்.

 ``மழைக்காலத்தில் அதிகமாகப் பரவிய இந்த நோய், தற்போது அனைத்துக் கால நிலைகளிலும் பரவுகிறது. இதற்கென்று தடுப்பூசிகள் கிடையாது. எலிக்காய்ச்சலுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால், மஞ்சள்காமாலை ஏற்படும். உள்உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மூக்கு வாய் போன்ற இடங்களில் ரத்தம் வெளியேறும். இறுதியில் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் 

 எலிக்காய்ச்சல் பாக்டீரியா உடலுக்குள் சென்ற இரண்டாவது வாரத்தில்தான் நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சிலருக்கு ஒரு மாதமானாலும் அறிகுறிகள் தோன்றாது. சாதாரண காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மஞ்சள்காமாலை, வாந்தி, வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு போன்ற சாதாரண அறிகுறிகளே தோன்றும் என்பதால், மூன்று நாள்களுக்குமேல் காய்ச்சல் தொடர்ந்தாலே எலிக்காய்ச்சலைக் கண்டறியும் பரிசோதனை அவசியம்" என்றார் பொது மருத்துவத் துறை நிபுணர் சி.அர்ஷத் அகீல்.

 ஹாங்காங்கில் எலியின் கழிவு கலந்த உணவைச் சாப்பிட்ட நபருக்கு `ஹெப்படைடிஸ் ஈ' வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அந்த நபரின் கல்லீரலை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் புதிய செய்தி மருத்துவர்களைப் புருவம் உயர்த்த வைத்துள்ளது. 

ஹெப்படைடிஸ் ஈ

 அசுத்தமான தண்ணீரின் மூலம் பரவும் வைரஸ் நோய்தான் ஹெப்படைடிஸ் ஈ. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2015-ம் ஆண்டு உலகம் முழுவதும் 33 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு 2 - 6 வாரங்களுக்குள் இந்த நோய் தானாகவே கட்டுப்பட்டுவிடும். காரணம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திதான். ஆனால், நோய்எதிர்ப்புச்சக்தி குறைவான வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் போன்றவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்புள்ளது. இந்த நோய் தீவிரமடையும்போது கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

 சாதாரண காய்ச்சல், எடை குறைதல், சோர்வு, வாந்தி, வயிற்றுவலி, மூட்டு வலி, தோலில் அரிப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரலில் வீக்கம் போன்றவையே இதன் அறிகுறிகள்.

 இது தொடர்பாக நம்மிடம் பேசிய சென்னை மருத்துவக் கல்லூரியின் கல்லீரல் துறைத் தலைவர் டாக்டர் நாராயணசாமி, ``உலகிலேயே முதன்முறையாக எலியின் கழிவின் மூலம் `ஹெப்படைடிஸ் ஈ' பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சில நாடுகளில் பன்றியிடம் இந்த வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது, பாதிக்கப்பட்ட பன்றியை முறையாகச் சமைத்து உண்ணாததால், அதிலிருந்த ஹெப்படைடிஸ் ஈ வைரஸ் மனிதர்களுக்குப் பரவிய சம்பவங்களும் உண்டு.

பொதுவாக, அசுத்தமான தண்ணீர் பயன்பாட்டின் மூலம் பரவும் இந்த நோய், கர்ப்பிணிகளைத்தான் அதிகம் பாதிக்கும். ஹெப்படைடிஸ் ஈ பாதித்த கர்ப்பிணிகளில் 20 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர். பிற உயிரிழப்புகள் 1 - 2 சதவிகிதம் அளவில்தான் இருக்கின்றன. `ஹெப்படைடிஸ் ஈ' பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கவில்லை" என்ற அதிர்ச்சித் தகவலோடு முடித்தார் டாக்டர் நாராயணசாமி.

 எளிய தற்காப்பு 

 உயிரிழப்புகளை ஏற்படுத்தும் எலிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள மிக மிக எளிய வழிமுறைகளைக் கையாண்டால் போதும். கொதிக்க வைத்த தண்ணீரையே எப்போதும் குடிக்க வேண்டும். சாலையோரக் கடைகள், சுகாதாரம் பேணாத கடைகளில் சாப்பிடுவதைத் தவிருங்கள். செருப்பு அணிந்து மட்டுமே வெளியே செல்லுங்கள். வெளியில் சென்று வந்த உடன் முதல் வேலையாக கை,கால்களைக் கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கட்டாயம் கைகளைக் கழுவ வேண்டும்.