Published:Updated:

ரெட் அலர்ட் முன்னெச்சரிக்கை... குடும்பத் தலைவிகள் கவனத்துக்கு சில விஷயங்கள்!

ரெட் அலர்ட் முன்னெச்சரிக்கை... குடும்பத் தலைவிகள் கவனத்துக்கு சில விஷயங்கள்!
ரெட் அலர்ட் முன்னெச்சரிக்கை... குடும்பத் தலைவிகள் கவனத்துக்கு சில விஷயங்கள்!

ந்த வருடத்துக்கான மழைக்காலம் தொடங்கிவிட்டது. கவிதைகள், சுடச்சுடத் தேநீர் என மழையைக் கொண்டாடலாம் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே, வரும் ஞாயிறு (7-ம் தேதி) முதல் கன மழை பெய்யும் எனச் சொல்லி, `ரெட் அலர்ட்' கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். 2015 டிசம்பரில் பெய்த கன மழையால் பட்ட பாடுகள் நினைவுக்கு வந்து பயம் காட்டுகிறது. மழைக்கு முன்பே பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் குடும்பத் தலைவிகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றிச் சொல்கிறார்கள், பொதுநல மருத்துவர் ஜோஸ் மற்றும் இயற்கை மருத்துவர் தீபா.

டாக்டர் ஜோஸ்

* உங்கள் குழந்தைகளுக்கு மருத்துவர் பரிந்துரைத்த காய்ச்சல் மருந்து, இருமல் மருந்து இருந்தால், புதிதாக வாங்கி, ஃபிரிட்ஜில் வைக்காமல் வெளியிலேயே வையுங்கள். இனி, பவர் கட் அதிகம் இருக்கும். எனவே, மருந்துகளை அறை வெப்பநிலையில் வைத்துத் தருவதுதான் பாதுகாப்பு.

   * உங்கள் பிள்ளைகளுக்குக் குறிப்பிட்ட ஆரோக்கியப் பிரச்னை ஏதேனும் இருந்தால், அதற்கான மருந்துகள் போதுமான அளவுக்குக் கைவசம் இருக்கிறதா எனப் பாருங்கள். 

   * கைக்குழந்தை வைத்திருக்கும் அம்மாக்கள், குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். திடீரெனக் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், மழை நேரத்தில் மருத்துவரைச் சந்திக்க முடியாமல் போகலாம்.

  * கைக்குழந்தை இருக்கும் வீடுகளில் காய்ச்சலை அளவிடும் தெர்மாமீட்டர் அவசியம் இருக்க வேண்டும். ஓர் அவசரம் என்றால், டெம்பரேச்சரை செக் செய்துவிட்டு மருத்துவமனைக்குச் செல்லலாம். 

  * குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருமே காய்ச்சி ஆறவைத்த தண்ணீரையே குடியுங்கள். எந்த நோய்த்தொற்றும் வராது.

* நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் இருப்பவர்களும் மாத்திரை மருந்துகளை கூடுதலாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

* பால், விரைவில் அழுகிப்போகாத காய்கறிகள், தானியங்கள், பிரெட், பிஸ்கெட்ஸ் ஆகியவற்றை ஒரு வாரத்துக்கு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

* 2015-க்குப் பிறகு மழையின் மீது பலருக்கும் பயம் இருக்கிறது. முதலில், அந்த பயத்தை மனதிலிருந்து நீக்குங்கள். 

இயற்கை மருத்துவர் யோ.தீபா

* வீட்டைச் சுற்றிக் காணப்படும் தேங்காய் சிரட்டை, உடைந்த பொருள்கள் போன்றவற்றை உடனடியாக அப்புறப்படுத்துங்கள். இதனால், கொசுக்களால் வரும் வியாதிகளில் பாதியைத் தடுத்துவிடலாம். 

* ஒரு கப் மிதமான சுடுநீருடன், வீட்டிலே அரைத்த ஒரு சிட்டிகை மஞ்சள்தூளைக் கலந்து குடிப்பதை இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

* குழந்தைகளுக்குத் திடீரென வயிற்றுப்போக்கு வந்துவிட்டால், ஆறவைத்த சுடுநீரை நிறையக் கொடுங்கள். இது, உடனடியாக வயிற்றில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றும். அதன்பிறகு, எலுமிச்சைச்சாறுடன் கல் உப்பு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொடுக்கவும். உடலில் ஏற்பட்ட நீரிழப்பு சரியாவதுடன், எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

* காய்ச்சிய சீரகத் தண்ணீர் குடிப்பது எப்போதும் நல்லது. 

* ஆரம்பகட்ட நீரிழிவு நோயாளியா, கைவசம் மாத்திரை இல்லையென்றால், ஒரு டீஸ்பூன் முளைக்கட்டிய வெந்தயத்தைச் சாப்பிட்டுச் சமாளிக்கலாம். இதன் குளிர்ச்சி உங்களை ஒன்றும் செய்யாது.  

* குழந்தைகள் தும்மல் போட ஆரம்பித்தால், கைப்பிடி துளசியிலை, இரண்டு கற்பூரவல்லி இலைகளைப் போட்டு காய்ச்சி, ஒரு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து கொடுக்கலாம். இது, மலேரியாவையும் குழந்தைகளிடம் நெருங்க விடாது. 

* சட்னி செய்யும்போது, புதினா, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அரையுங்கள். 

மழைக்காலத்தை முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, ஆரோக்கியத்துடன் கொண்டாடுங்கள் குடும்பத் தலைவிகளே...