Published:Updated:

ராட்சசனில் இடம்பெறும் 'ஆன்டி சோஷியல் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்... ஏன், எதற்கு, எப்படி?

பெரும்பாலும் 14-18 வயதில்தான் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. வயது முதிந்தவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

ராட்சசனில் இடம்பெறும் 'ஆன்டி சோஷியல் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்... ஏன், எதற்கு, எப்படி?
ராட்சசனில் இடம்பெறும் 'ஆன்டி சோஷியல் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்... ஏன், எதற்கு, எப்படி?

`` ரு கலைஞனுக்கு கைத்தட்டலும் பாராட்டும் தான் உற்சாகம்., சைக்கோக்களுக்கு அவங்களப் பத்தி மக்கள் பரபரப்பா பேசுறதும் பயப்படுறதும்தான் அவங்கள எப்போதும் உயிர்ப்போட வச்சிருக்கும்.'' - சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் ஒரு காட்சியில் இப்படிப் பேசியிருப்பார். 

பள்ளிக் குழந்தைகளைத் தொடர்ச்சியாகக் கடத்தி கொலை செய்து கொண்டிருப்பான் ஒரு சைக்கோ கொலைகாரன். கொலை செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் தலைமுடியைப் பிய்த்து, முகங்களில் கத்தியால் கீறி மிகவும் கொடூரமாக கொலை செய்திருப்பான். இறந்துபோன அந்தக் குழந்தைகளின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவராக நடித்த நிழல்கள் ரவி கொலைகாரனைப்பற்றி பேசும்போது,``அவனுக்கு வலின்னா என்னன்னு தெரியாது. அவன் ஆன்டி சோஷியல் பெர்சனாலிட்டியால பாதிக்கப்பட்டவன்`` என்று சொல்லியிருப்பார்.

உண்மையிலேயே இதுபோன்ற ஆன்டி சோஷியல் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா, ஏன் அவர்கள் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்? 

 ``உலகம் முழுவதும் பல லட்சம் பேர் இந்த ஆன்டி சோஷியல் பெர்சனாலிட்டியால்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 'சமூக முரண் ஆளுமைகள்' என்று அவர்களை அழைக்கலாம். அடுத்தவர்களது உணர்ச்சி, வலி பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் நடந்து கொள்வார்கள். கிரிமினல்களைவிட ஆபத்தானவர்கள் இவர்கள் `` என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

 `` தங்களின் தேவைகளுக்காக மற்றவர்களைக் கொலை செய்பவர்கள்தான் கிரிமினல்கள். தேவைகள்  பூர்த்தியடைந்துவிட்டால்  விட்டுவிடுவார்கள். ஆனால், ஆன்டி சோஷியல் பெர்சனாலிட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறரைத் துன்புறுத்துவது மட்டுமே முதன்மை நோக்கமாக இருக்கும். ஐந்து ரூபாய்க்காக ஐந்து கொலை செய்யுமளவுக்குக்கூட போவார்கள். பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் செய்யும் செயலும், அதனால் உண்டாகும் விளைவுகள் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது தெரிந்தும், அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு பிறரைப் பற்றி அக்கறையோ, சுய கட்டுப்பாடோ இருக்காது. பிறர் கஷ்டப்படுவதைப் பார்த்து இரக்கமோ, பரிவோ காட்டமாட்டார்கள். 

சிறிய வயதில், சமூகத்துடன் சரியான தொடர்பு வைத்துக் கொள்ள முடியாதவர்கள் அல்லது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் இந்த பாதிப்புக்குள்ளாவார்கள். உடல் ரீதியான பாதிப்புள்ளவர்களுக்கும் இது ஏற்படும்.

இந்த டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவர்களைச் சரிசெய்யவே முடியாது. அவர்கள் விருப்பப்படிதான் செயல்படுவார்கள். அவர்கள் தன் விருப்பத்துக்காக வெறிபிடித்தவர்களைப் போல நடந்து கொள்வார்கள். அப்போது அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது`` என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

பெரும்பாலும் 14-18 வயதில்தான் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. வயது முதிந்தவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.  இந்த டிஸ்ஆர்டர் வந்தபிறகு சரி செய்யமுடியாதே தவிர, வருமுன் காக்கலாம். அதற்கு அவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே பயிற்சி அளிக்கவேண்டியிருக்கும். அது பற்றி விரிவாக விளக்குகிறார் குழந்தைகள் உளவியல் நிபுணர் பூங்கொடி.

 `` பொருளாதார ரீதியாக மிகவும் உயர்ந்த அல்லது மிகவும் தாழ்ந்த நிலை குடும்பங்களில் உள்ள  குழந்தைகளுக்குத்தான் இத்தகைய பாதிப்புகள்  ஏற்படுகின்றன.  குழந்தைகள் வளரும்போது, அவர்களின் மீது அக்கறை காட்ட ஆளில்லாமல்போனால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தினர்தான் என்றில்லை, சமூகத்தில் யாரிடமிருந்தாவது  அவர்களுக்கு அரவணைப்புக் கிடைக்காதபோது இத்தகைய பாதிப்புக்குள்ளாகிறார்கள். 

முதலில் சிறு சிறு தவறுகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். பிறரைத் துன்புறுத்த ஆரம்பிப்பார்கள். அப்போது அவர்களை அடிக்கக்கூடாது . அடித்தால் அவர்களும் அதைத்தான் பிறருக்குச் செய்வார்கள். அவர்களிடம் பொறுமையாக பிறர் படும் துன்பங்களைச் சொல்லவேண்டும். 

பெற்றோர் குழந்தைகளின்மீது அக்கறையோடும், அரவணைப்போடும் இருக்கவேண்டும். நல்லது எது, கெட்டது எது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும். அவர்களை விளையாட அனுமதிக்கவேண்டும். பிறரிடம் அன்பு செலுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் இந்தப் பாதிப்பு ஏற்படாமல் நம் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்`` என்கிறார் அவர்.

குழந்தைகள் பெற்றோருக்கானவர்கள் மட்டுமல்ல, இந்தச் சமூகத்துக்கானவர்கள். பிறக்கும்போது எந்தக் குழந்தையும் சமூக விரோதிகளாகப் பிறப்பதில்லை. அவர்கள் வளரும் சூழல்தான் அவர்களின் குணநலன்களைத் தீர்மானிக்கிறது. இது எதற்குப் பொருந்துமோ இல்லையோ இந்த ஆன்டி - சோஷியல் பெர்சனாலிட்டிகளுக்குக் கச்சிதமாகப் பொருந்தும். நம் குழந்தை மீது மட்டுமல்ல, அனைத்துக் குழந்தைகளின் மீதும், அனைவரும் அன்போடு இருந்தால் இதுபோன்ற ஆன்டி - சோஷியல் பெர்சனாலிட்டிகள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.