Published:Updated:

வெட்டிய காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தலாமா?

வெட்டிய காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தலாமா?
வெட்டிய காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தலாமா?

ணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் நேரத்துக்குச் சமையலை முடிப்பது என்பது பெரிய சவால். விடுமுறை தினங்களில் தெருவே மணக்க மணக்க விதவிதமான சமையல் நடக்கும். ஆனால், வேலைக்குச் செல்லும் நாள்களில் எளிய உணவுகளே பெரும்பாலான வீடுகளில் தயாராகும். 

`காலையில எழும்பிச் சமையல் செய்றதுகூட பிரச்னை இல்ல. வெங்காயம், பூண்டை உறிச்சு, காய்கறியை வெட்டுறதுதான் பெரிய தலைவலி!' என்று புலம்பாத பெண்களே இல்லை. இதனால் நிறைய பெண்கள், முந்தின நாள் இரவே வெங்காயம், காய்கறிகளை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, மறுநாள் காலை அதைப் பயன்படுத்தி சமையல் செய்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சில கார்ப்பரேட் காய்கறி கடைகளில் காய்கறிகளை வெட்டி பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து விற்பனை செய்கின்றனர். காய்கறிகள் முதல் இளநீர் வரை அனைத்தும் வெட்டி, பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளை முந்தின நாளே வெட்டி வைத்துச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதானா என்ற கேள்வியுடன் ஊட்டச்சத்து நிபுணர் வினிதா

கிருஷ்ணனிடம் பேசினோம்:

காய்கறிகளை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டுப் பயன்படுத்தும்போது அதிலுள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்துகள் குறையாது. ஆனால் வைட்டமின் ஏ, இ, சி சத்துகளும், கால்சியம் சத்துகளும் குறைந்து கொண்டேவரும். 

காய்கறிகள் வெட்டியதும்,  நம்மைப் போன்று சுவாசிக்க ஆரம்பிக்கும். அப்போது கார்பன் டை ஆக்ஸைடு அதிலிருந்து வெளியேறும். கார்பன்டை ஆக்ஸைடு வெளியேறும்போது காய்கறிகள் கெட்டுப்போக ஆரம்பிக்கும். கீரைகளை வெட்டி வைத்தால் அதிலுள்ள ஃபோலிக் அமிலச்சத்து பாதியாகக் குறைந்துவிடும். இவ்வாறு ஊட்டச்சத்துக் குறைவான உணவுப் பொருள்களை சமைத்து உண்பதால் உடலுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

சமையலுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் வெங்காயம், தக்காளியையும் வெட்டி பதப்படுத்தக் கூடாது. வெங்காயத்தில் உள்ள தோலை நீக்கிய உடன் கண்ணீரை வரவழைக்கும் அமிலத்தன்மை மற்றும் அதன் மணம் வெளியேறும். மேலும் வெங்காயம் ஆக்சிஜனுக்கு வெளிப்பட்டு, கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றி, கெட்டுப் போகத் தொடங்கும். வெங்காயம், தோல் மெலிதாக உள்ள தக்காளி ஆகியவற்றில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே, இவை இரண்டையும் வெட்டிப் பதப்படுத்தக் கூடாது. மேலும் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை வெட்டி வைக்கும்போது ஃபிரிட்ஜில் உள்ள அனைத்துக் காய்கறிகளிலும் அதன் மணம் பரவும். 

பொதுவாகவே காய்கறிகள், பழங்களைக் கூர்மையான கத்தியை வைத்து வெட்டினால் அவற்றிலிருக்கும் நீர் வெளியேறாது. அதுவே மழுங்கிய கத்தி என்றால், நீர்சத்து அதிகமாக வெளியேறி ஊட்டச்சத்துகளும் குறையும்.

மீன், சிக்கன், மட்டன் என ஒவ்வோர் அசைவ உணவும் ஒவ்வொரு தட்பவெப்பநிலையில் பதப்படுத்தப்பட வேண்டும். தொடைக்கறி, நெஞ்சுப் பகுதி கறி என ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் பதப்படுத்தப்பட வேண்டும். எனவே, வீட்டில் அதைப் பதப்படுத்துவது ஆரோக்கியமானது இல்லை. அசைவ உணவுகளில், வேறு பாக்டீரியாக்களும் வளரும். அவை உடலுக்குக் கேடு விளைவிக்கும். அதனால், பதப்படுத்தி உண்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

இளநீரை வெட்டி அதிலிருக்கும் நீரை வேறு பாத்திரத்தில் அடைத்து வைத்து விற்பனை செய்யும்போது, இளநீரை வெட்டும் கத்தி, அதைக் கையாளும் கைகள் அனைத்திலும் உள்ள தொற்று இளநீரில் பரவும். நோயாளிகள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் என அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுவது இளநீர்தான். அதை அப்படியே பருகாமல், வேறு பாத்திரத்தில் ஊற்றிச் சேகரித்து வைத்துக் கொடுப்பது மிகவும் தவறான செயலாகும்.

ஃபிரஷ்ஷான உணவுப் பொருளுக்கு மாற்று எதுவுமே இல்லை. எனவே, முடியாத நாள்களில் மட்டும் காய்கறிகளை வெட்டிப் பதப்படுத்தி சமைக்கலாம். தினமும் அதே வழியைப் பின்பற்றக் கூடாது.

காய்கறிகளை வெட்டிப் பதப்படுத்தும்போது வெளிச்சமும், காற்றோட்டமும் செல்லாத வகையில், `ஸிப் லாக் கவர்கள்' அல்லது `ஏர் டைட்' டப்பாக்களில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கலாம். வெட்டிய காய்றிகளை அதிகபட்சம் 5 நாள்கள், வெட்டிய பழங்களை 2 நாள்கள் ஃபிரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கலாம். வெட்டி வெறும் மேசையில் வைத்துவிட்டு அடுத்த நாள் உபயோகிக்கக் கூடாது.

கடைகளில் வெட்டி வைத்திருக்கும் காய்கறிகள், பழங்களில் உள்ள லேபிளைப் பார்க்க வேண்டும். காய்கறிகள் என்றால் 5 நாள்கள், பழங்கள் என்றால் 2 நாள்களுக்கு முன்பு வெட்டப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அதில் லேபிள் இல்லையென்றால், அதை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. 

தேங்காய், பாலக், முளைக்கட்டிய பயிர்கள் போன்றவற்றை ஃப்ரீஸரில் சில நாள்கள் வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் பதப்படுத்தப்படும் அனைத்து உணவுப் பொருள்களிலும் ஊட்டச்சத்து குறைந்து கொண்டேதான் இருக்கும்" என்றார்.

அப்போ வேலைக்குப் போகும் எங்களை போன்றவர்களுக்கு என்னதான் தீர்வு என்றால், காலையில் உங்களுடன் சேர்ந்து எழுந்து காய்கறிகளை வெட்டித் தருவதற்கு உங்கள் கணவருக்கும் சேர்த்து கைப்பேசியில் அலாரம் வையுங்கள்!