Published:Updated:

நலம் வாழ எந்நாளும் மிளகு

அஞ்சறைப் பெட்டி டாக்டர் வி.விக்ரம்குமார்

பிரீமியம் ஸ்டோரி
நலம் வாழ எந்நாளும் மிளகு

றுமணப்பொருள்களுக்குப் பூரண மான மருத்துவக்குணம் உண்டு. குறிப்பாக மிளகு, இந்தியாவின் பொருளாதாரத்தோடு, மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய விளைபொருளாக இருந்திருக்கிறது. `மசாலாப் பொருள்களின் ராஜா’ (King of Spices) என்று மிளகைக் குறிப்பிடுகிறது நம் வரலாறு.

`மிளகு’ பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உணவுப்பொருளாக இருந்திருக்கிறது.  தங்கத்தைச்சேர்த்து வைத்திருப்பவரை விட, நெடியும் மணமும் நிறைந்த காய்ந்த மிளகு வைத்திருப்பவரே பணக்காரராகக் கருதப்பட்டார் என்றால் மிளகின் மகத்துவம் புரியும். பண்டமாற்று முறையில் விலையுயர்ந்த பொருளாக இருந்தது மிளகு.

மிளகுக்குக் கறி, கலினை, மலையாளி, வள்ளிசம், திரங்கல், மிரியல் எனப் பல்வேறு பெயர்கள் உண்டு. `கறி’ என்றால் மிளகு என்று பொருள். ஆனால், பிற்காலத்தில் `கறி’ என்பது `அசைவம்’ என்பதைக் குறிப் பிடும் சொல்லாகிவிட்டது. காய்களைச் சமைக்கும்போது, மிளகையும் சேர்த்துச் சமைப்பதுதான் நமது மரபாக இருந்திருக்கிறது.  மிளகின் தாக்கம் இல்லாத உணவுகளே நம் உணவுப்பட்டியலில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நீக்கமற நிறைந்திருந்தது. ஆனால், இன்று நாம் மிளகுப் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துவிட்டோம்.  

நலம் வாழ எந்நாளும் மிளகு

மிகுந்த காரத்தன்மை உள்ள மிளகு, வாதம் தொடர்பான நோய்களை விரட்டக்கூடியது என்று அகத்தியர் தம் பாடலில் குறிப்பிடுகிறார்.  அகத்தியர் மற்றும் தேரையரின் நூல்களில் மிளகின் நோய்போக்கும் தன்மைகள் பற்றி ஏராளமான செய்திகள் இருக்கின்றன. காய்ச்சல், இருமல், விஷக்கடி, மூட்டுவலி, சுவையுணர்வின்மை போன்ற பிரச்னைகளுக்கு மிளகில் தீர்வு இருக்கிறது. புற்றுநோய், பக்கவாதத்தின் தீவிரத்தைக் குறைப்பதற்கும்  மிளகு பயன்படுத்தப்படுகிறது.

கேரளாவில்தான் பெருமளவில் மிளகு விளைந்தது, இப்போதும் விளைகிறது. இன்றைக்கும் கேரளாவில் விளையும் மிளகுக்குத்தான் உலகச் சந்தையில் மதிப்பு அதிகம். மருத்துவக்குணம் நிறைந்த  ‘பெப்பரின்’ (Piperine) என்ற வேதிப்பொருள் கேரள மிளகில் அதிகமாக இருப்பதே அதற்குக் காரணம். நாவின் சுவை மொட்டுகளைத் தூண்டி, சுரப்பிகளைச் சுரக்கச்செய்து, செரிமானத்தை முறைப்படுத்தக்கூடியது இந்த பெப்பரின்.

சீன மருத்துவத்தில் மிளகைக்கொண்டு ஏராளமான மருந்துகள் தயாரிக்கப்படு கின்றன. பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை மிளகுக்கு உண்டு என்று அறிந்த ரோமானியர்கள் உணவுப்பொருள்கள் கெடாமல் பாதுகாக்க மிளகைப் பயன்படுத்தியுள்ளனர்.

பொதுவாக, மருந்துகளின் செயல்பாடு களை மிளகு அதிகப்படுத்துவதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன. மருந்து சாப்பிட்ட தும் கல்லீரலில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தில் மிளகு முக்கியப் பங்காற்றுகிறது. அத்துடன் மருந்துகளின் செயல்பாடுகளுக்குத் துணை நிற்பதாக ஒரு கனடிய ஆய்வு இதழ் (Canadian Journal of Physiology and Pharmacology)  தெரிவிக்கிறது. நுரையீரல், பெருங்குடல் மற்றும் மார்பகப் பகுதிகளில் வரக்கூடிய புற்றுநோயின் தீவிரத்தை மிளகு குறைக்கிறது என்றும் ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

உணவாக... மருந்தாக...

உணவில் காரத்தைக்கூட்ட மிளகு பயன்படுத்தப்படுகிறது. காரத்துடன் உணவின் உயிர்ப்பையும் கூட்டி உடல் நலனை மேம்படுத்துகிறது. சளி, இருமல் ஏற்படும்போது நான்கு மிளகைப் பொடித்து, சுத்தமான தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நோய்கள் தீரும். பாலில் மிளகுத்தூள், மஞ்சள்தூள் கலந்து குடித்தால் கப நோய்கள் குணமாகும். சிறு குழந்தைகளுக்கு மிளகு சேர்ந்த உணவுகளைத் தொடர்ந்து கொடுத்துவந்தால் `ஆன்டிபயாட்டிக்’ எதுவும் தேவையில்லை. குளிர்காலத்தை நோயில்லாமல் கடக்க மிளகு ரசம் உதவும். ஆஸ்துமா நோயாளிகள் மிளகுடன் வெற்றிலை சேர்த்து மென்று சாப்பிட்டால் சுவாசம் சீராகும்.

பூச்சிக்கடி, உடலில் உள்ள நச்சுகளை அகற்ற இரண்டு மிளகும் ஒரு வெற்றிலையும் கொஞ்சம் அறுகம்புல்லும் போதும். இவற்றைக் கஷாயமாக்கிக் குடித்தால் தோலில் ஏற்படும் தடிப்பு, அரிப்புகள் காணாமல் போகும். மிளகு, நச்சு நீக்கக்கூடியது என்பதை அறிவியல் உலகம் சமீபத்தில்தான் கண்டுபிடித்தது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘பத்து மிளகு இருந்தால், பகைவன் கொடுக்கும் நஞ்சு உணவுக்குக்கூட அஞ்ச வேண்டியதில்லை’ என்ற வழக்குமொழி தமிழில் இருந்திருக்கிறது.

மிளகு, பசி மந்தத்தைப் போக்கும்; பழங்களிலும் சூப்பிலும் மிளகுத்தூளைத் தூவிச் சாப்பிட்டால் சுவையோடு சேர்த்து, உடல்நலத்தையும் கொடுக்கும். குளிர்ச்சித் தன்மையுடைய காய்களைச் சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிளகு சேர்த்தால் சளி, இருமல் ஏற்படாது. மிளகைப் பொடித்துப் பற்பொடியாகவும் பயன்படுத்தலாம்.

மிளகுப் புகை

மிளகை எரித்து அதன் புகையைச் சுவாசித்தால் அது சளிப்படலத்தை அகற்றும். `காது நோய்ப் போக்கும்’ எனக் குணவாகடம் என்னும் சித்த மருத்துவ நூலில் சொல்லியதை மெய்ப்பிக்கும்விதமாக, செவித்திறனுக்கு முக்கியப் பங்காற்றும் காக்ளியர் செல்களை (Cochlear cells) மிளகு பாதுகாப்பதாக இன்றைய ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.

சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்து தயாரிக்கப் படும் திரிகடுகு சூரணம் மட்டுமல்லாமல் மிளகு தைலம், பஞ்ச தீபாக்கினி சூரணம், மிளகு பாவனம், மிளகு கற்பம் என பல மருந்துகளில் முக்கியப் பொருளாக மிளகு சேர்க்கப்படுகிறது. உள்மருந்தாக மட்டுமன்றி, பிடிப்பு வீக்கம், கால் கைகளில் ஏற்படும் வலிகளுக்குப் பற்றுப் போடவும் மிளகு பயன்படுகிறது.

எல்லாவற்றிலும் கலப்படம் செய்வதைப் போல மிளகிலும் சிலர் கலப்படம் செய்கிறார்கள். பப்பாளி விதைகள் கலக்கப்படுகின்றன. இரண்டும் ஒரேமாதிரி இருப்பதால் மிக எளிதாகக் கலப்படம் செய்துவிடுகிறார்கள். மிளகில் உள்ள காரம், பப்பாளி விதைகளில் கொஞ்சம்கூட இருக்காது. ஆகவே, நாம் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். உணவுகளில் போடப்படும் மிளகுகளை எடுத்து வீசியெறிவதை நிறுத்திவிட்டு, காரத்தை ரசித்துச் சாப்பிடப் பழகுவோம். அடுத்த தலைமுறையையும் பழக்குவோம். அறுசுவைகளில் சொல்லப்பட்ட மருத்துவக் குணமிக்க காரத்துக்கு எடுத்துக்காட்டாக,  நம் சித்தர்கள் முதல் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டஸ் வரை பெருமையாகப் பேசியது நம்மூர் மிளகைத்தான். இனி சமையலில் மிளகை அதிகம் பயன்படுத்து வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு