Published:Updated:

கணையத்தை மாற்றினால் நீரிழிவைத் தடுக்கலாம்!

அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்

பிரீமியம் ஸ்டோரி
கணையத்தை மாற்றினால் நீரிழிவைத் தடுக்கலாம்!
##~##

னித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று கணையம். அதுதான் இன்சுலின் மற்றும் உணவு செரித்தலுக்கான நொதிப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. அதில் பாதிப்பு ஏற்பட்டால், ஆயுள் முழுக்க இன்சுலின் போட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். இந்த நிலையில் டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய தீர்வாக, கணைய மாற்று அறுவை சிகிச்சை வந்துள்ளது. 

சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவ மனையின் சிறுநீரகம் மற்றும் டிரான்ஸ்பிளான்ட் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.செழியனிடம் பேசினோம். ''டைப் 2 வகையான நீரிழிவு, 30 முதல் 40 வயதுக்குப் பிறகு வருவது. டைப் 1 என்பது இளம் வயதில் வருவது. இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு சுத்தமாக இருக்காது. இதனால் இவர்கள், தினமும் குறைந்தது மூன்று முறையாவது இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், நீரிழிவு நோய் அடுத்த கட்டமாக சிறுநீரகம் மற்றும்

கணையத்தை மாற்றினால் நீரிழிவைத் தடுக்கலாம்!

கண்களையும் பாதிக்கும். அதைத் தொடர்ந்து சிகிச்சையும் டயாலிசிஸ் செய்யவேண்டியதும் அவசியம். சிகிச்சை எடுத்துக்கொள்வதில் குறைபாடு இருந்தால், மரணம் ஏற்பட்டுவிடும். தினமும் ஊசி, மருந்து, மாத்திரை என்று அவதிப்படும் டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்தரத் தீர்வாக வந்திருப்பதுதான் கணைய மாற்று அறுவை சிகிச்சை.

இதன்படி, மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து கணையத்தைத் தானமாகப் பெறவேண்டும். கணையம் என்பது மிகவும் மென்மையான திசுக்களைக்கொண்ட உறுப்பு என்பதால், தானமாகப் பெறப்பட்ட கணையத்தை மிகவும் பாதுகாப்பாகவைத்து, அதில் உள்ள ரத்த நாளங்களை சீர்செய்ய வேண்டும். அதன் பிறகே, யாருக்குத் தேவைப்படுகிறதோ, அவருக்குப் பொருத்த முடியும்.

இதற்காக, ஏற்கெனவே வயிற்றில் உள்ள கணையத்தை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. கணையம் என்பது வயிற்றுக்கு மேல் பகுதியில் குறுக்குவாக்காக இருக்கும். ஆனால், இந்த

கணையத்தை மாற்றினால் நீரிழிவைத் தடுக்கலாம்!

அறுவைசிகிச்சையில் கணையம் வயிற்றுக்குக் கீழ் பகுதியில் நீள்வாக்காகப் பொருத்தப்படும். இதற்குத் தேவையான ரத்தம் காலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் இருந்து பெறப்படும். அறுவை சிகிச்சை முடிந்து புதிய கணையம் செயல்படத் தொடங்கியதும், இயற்கையான இன்சுலின் அதில் இருந்து சுரக்க ஆரம்பிக்கும். இன்சுலின் தவிரவும் கணையம் சுரக்கும் மற்ற வேதிப் பொருட்களும் நேரடியாகச் சிறுகுடலில் சேர்க்கப்படும். இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால், குறைந்தது நான்கு மணி நேரமாவது ஆகும். இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, நோயாளிக்கு இன்சுலின் ஊசி போடத் தேவை இருக்காது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது கட்டுக்குள் வைத்திருக்கும்.

இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூன்று வகைகளில் செய்யப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்கெனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்தால் மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து உறுப்பு பெறும்போது, சிறுநீரகத்தையும் சேர்த்தே பெற்றுக்கொள்ளலாம். அப்போது கணையம் மற்றும் சிறுநீரகம் ஒரே நேரத்தில் அவருக்குப் பொருத்தப்படும். சிறுநீரகத்தை ஏற்கெனவே வேறு ஒருவரிடம் இருந்து தானம் பெற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு, பின்னர் கணையம் தானமாகக் கிடைக்கும்போதும் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். கணையத்தை மட்டும் பொருத்தும் அறுவை சிகிச்சையையும் செய்துகொள்ளலாம்.

இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துவிட்டால், வாழ்நாள் முழுக்க இன்சுலின் பிரச்னை வராது என்றும் கூற முடியாது. அவரவர் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் காரணமாக மீண்டும் இன்சுலின் சுரப்பதில் பிரச்னை வரலாம். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து ஓர் ஆண்டு வரை 85% பேருக்கு இன்சுலின் மற்றும் டயாலிசிஸ் தேவைப்படாது.  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இன்சுலின் தேவை இல்லை என்ற நிலைக்கு 70 சதவிகித வாய்ப்பு உள்ளது. 10 ஆண்டுகள் வரை இன்சுலின் தேவைப்படாது என்ற நிலைக்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது.  சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததால், தானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு அந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து நடைபெறவில்லை. இப்போது சென்னையில்தான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்பு தானம் பற்றிய விழிப்புஉணர்வு சென்னையில் நன்றாக உள்ளது. இன்னும் கூடுதல் விழிப்பு உணர்வு ஏற்படும்போது, ஏராளமான நபர்கள் பயன்பெற முடியும்'' என்றார்.

மக்களுக்குத் தேவை விழிப்புஉணர்வு தான்!

- பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு