Election bannerElection banner
Published:Updated:

"முழங்காலுக்குக் கீழ் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் டெங்கு கொசு கடிக்காது" வாட்ஸ்ஆப் தகவல் உண்மையா?

"முழங்காலுக்குக் கீழ் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் டெங்கு கொசு கடிக்காது" வாட்ஸ்ஆப் தகவல் உண்மையா?
"முழங்காலுக்குக் கீழ் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் டெங்கு கொசு கடிக்காது" வாட்ஸ்ஆப் தகவல் உண்மையா?

டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசு முழங்காலுக்கு மேலே பறக்காது என்பது உண்மையா?

மிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதைக் காட்டிலும், அவை தொடர்பான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. 'ஆளாளுக்கு இதைப் பூசுங்கள், அதைச் சாப்பிடுங்கள்' என்று வாட்ஸ் அப்பில் செய்தி பரப்புகிறார்கள். கடந்த சில நாள்களாக, திருப்பதியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையின் பெயரில், மருத்துவர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் கைப்பட பரிந்துரைச் சீட்டு எழுதிக் கொடுத்தது போன்ற ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் அந்த பரிந்துரைச் சீட்டில், 'டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அதனால் நீங்கள் வெளியே செல்லும்போது இரண்டு கால்களிலும் முழங்காலுக்குக் கீழே தேங்காய் எண்ணெய் தேய்த்துச் செல்லுங்கள். தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த கிருமிநாசினி (ஆன்டிசெப்டிக்). மேலும் டெங்கு கொசுக்களால் முழங்கால் உயரத்துக்கு மேல் பறக்க முடியாது' என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த மருத்துவரின் பெயரில் வெளியான அந்த புகைப்படம் உண்மையா பொய்யா என்று

ஆராய்வதைக் காட்டிலும், அதில் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு விஷயங்களின் உண்மைத்தன்மையை ஆராய்வதே சரி என்று தோன்றியது.

'தேங்காய் எண்ணெய் தேய்த்தால் கொசு கடிக்காதா' என்ற கேள்வியை தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர் சங்கத் தலைவர் பிச்சையாகுமாரின் முன் வைத்தோம். அவர் விரிவாகப் பேசினார். 

"தேங்காய் எண்ணெய் கொசுக்களை விரட்டும் என்று சித்த மருத்துவத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் அது கொசுக்களை விரட்டும் தன்மை படைத்ததாக அறிவியல்பூர்வமாக இதுவரை எந்த ஆய்வுகளிலும்  நிரூபிக்கப்படவில்லை. நாம் சுவாசிக்கும்போது வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு கொசுக்களை ஈர்க்கும் தன்மை படைத்தது. அதனுடன் நமது உடலில் இருந்து வெளியேறும் லாக்டிக் அமிலம், ஆப்தனால், யூரிக் அமிலம், ஃபேட்டி ஆசிட், வியர்வை ஆகியவை ஒன்றுசேரும்போது உருவாகும் ஒருவிதவாசனை கொசுக்களை அதிகம் ஈர்க்கும். அப்போது இந்த வாசனைப் பரவாமல் தடுத்துவிட்டால் கொசுக்கடியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். அதற்காக வாசனையை மறைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு டியோடரன்ட் பயன்படுத்தினால், கொசுக்கடி அதிகமாகுமே தவிர குறையாது.
மனிதர்களில் 'ஏ பாஸிட்டிவ்', 'ஏ நெகட்டிவ்' ரத்தப்பிரிவுகளை உடையவர்களைக் கொசுக்கள் அதிகம் அண்டாது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் 'ஏ பிரிவினர்' சற்று நிம்மதியடையலாம்.

கிராம்பு தைலம், 'சிட்ரோனெல்லா'  என்ற வாசனைப்புல் தைலம், லெமன்கிராஸ் எண்ணெய் ஆகியவற்றுக்குக் கொசுக்களை விரட்டும் தன்மை உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்களின் வாசனைக் காற்றில் பரவும்படி அறைகளில் திறந்து வைத்தால், மனிதர்களிடம் இருந்து வரும் வாசனையை அது மறைத்துவிடும். இதனால் கொசுக்கள் மனிதர்களை அண்டாது. இவற்றில் ஏதாவது ஒரு எண்ணெய்யை சரிபாதி அளவு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கை,கால்களில் தேய்த்தாலும் கொசுக்கள் கடிக்காது. கற்பூராதி என்ற தைலத்தை சிறிது எடுத்து கை,கால்களில் தேய்த்தாலும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.

மாம்பூவை உலர்த்தி அந்தப் பொடியை தீ கங்குகளில் போட்டு புகையிட்டாலும், விடமூங்கில் என்ற தாவரத்தின் இலையை உலர்த்திப் புகையிட்டாலும் வீட்டில் கொசுக்கள் வராமல் தடுக்கலாம்" என்கிறார் அவர்.

கொசுக்கடியில் தப்பிக்க வழிகள் தெரிந்துவிட்டது. ஆனால் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு எவ்வளவு உயரத்தில் பறக்கும் என்ற கேள்வி எல்லோருக்கும் பொதுவான ஒரு கேள்வியாக இருக்கிறது. இதுபற்றி பொது சுகாதாரத்துறை முன்னாள் தலைமை பூச்சியியல்

 வல்லுநர் அப்துல்காதரிடம் கேட்டோம்.

``டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் முழங்கால் உயரம் வரைதான் பறக்கும் என்ற தகவல் முழுக்க முழுக்கத் தவறானது. கொசுக்கள் அதிக உயரத்தில் பறக்கக்கூடியவை. உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களைக்கூட அவை விட்டுவைப்பதில்லை. அப்படியிருக்கும்போது முழங்கால் உயரம்தான் பறக்கும் என்று பரப்பப்படும் தகவல்கள் தவறானவை. 

 டெங்கு, சிக்குன்குன்யா, ஜிகா வைரஸ் போன்ற காய்ச்சல்களைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்கள்,  காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 3 முதல் 5 மணி வரை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். மலேரியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்பும் அனோபிலஸ், கியூலெக்ஸ் கொசுக்கள் இருள் சூழ்ந்த நேரத்தில், மாலை 6 மணிக்கு மேல், காலையில் விடிவதற்கு முன் அதிக சுறுசுறுப்பாக இயங்கி ரத்தத்தைக் குடிக்கும். அதற்காகக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் அலாரம் வைத்துக்கொண்டு வந்து அந்தக் கொசுக்கள் கடிக்கும் என்பதில்லை. மற்ற நேரங்களிலும் அவை கடிக்கலாம். ஆனால் இந்த நேரங்களில்தான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.

உணவுக்காக மட்டுமன்றி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யவும் கொசுக்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தில் அதிக அளவில் புரதம் உள்ளது. முட்டையிடுவதற்குப் புரதம் மிகவும் அவசியமான ஒன்று. பொதுவாகக் கொசுக்களுக்கு மனிதர்களைவிட விலங்குகளின் ரத்தம்தான் அதிகம் பிடிக்கும். விலங்குகளின் உடலில் இருந்து வெளியாகும் வாசனையே அதற்குக் காரணம். விலங்குகள் இல்லாத இடத்தில்தான் அவை மனிதர்களைத் தேடிக் கடிக்கின்றன. 

மனிதர்களில் `ஓ' குரூப் ரத்தப்பிரிவினரைக் கொசுக்களுக்கு அதிகம் பிடிக்கும். வெளிப்புறத்தில் கூட்டமாக பத்து நண்பர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தால் அவர்களில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். அவர்களிடம் `நீங்கள் `ஓ' பாசிட்டிவ்வா' என்று கேட்டுப் பாருங்கள். நிச்சயம் 'ஆமாம்' என்பார்கள். `ஓ' பாசிட்டிவ் ரத்தப்பிரிவினரை கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்கிறார் அவர்.

 ஆக, சமூகவலைத்தளங்களில் உலவி வரும் புகைப்படச் செய்தியின் இரண்டு முக்கிய அம்சங்கள் பற்றியும் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மறுத்துள்ளனர். எனவே, வதந்திகளை நம்பாமல், ஆதாரப்பூர்வமான தகவல்களை, செய்திகளை மட்டுமே பின்பற்றுவது நல்லது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு