கற்றாழை ஜூஸ்

தேவை: சோற்றுக் கற்றாழை ஜெல் - அரை கப் (சோற்றுக் கற்றாழையின் வெளித்தோலைச் சீவி எடுத்து உட்புறம் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ளவும்) எலுமிச்சைப் பழம் - ஒன்று சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன் உடைத்த ஐஸ்கட்டிகள் - சிறிதளவு தேன் - ஒரு டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: சோற்றுக் கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை ஐந்து (அ) ஆறு முறை நன்கு அலசவும். எலுமிச்சையைச் சாறு பிழியவும். அதனுடன் உப்பு, சர்க்கரை, கால் கப் சோற்றுக் கற்றாழை ஜெல், உடைத்த ஐஸ்கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அடித்தெடுக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே மீதமுள்ள ஜெல், தேன் சேர்த்துக் கலந்து பருகவும்.

சிறப்பு: இந்த ஜூஸ், உடல் சூட்டைத் தணிக்கும்; மலச்சிக்கலைப் போக்கும்.

பனங்கிழங்கு பிரட்டல்

தேவை: முழுப் பனங்கிழங்கு - 2 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 3 பல் (தட்டவும்) எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை: குக்கரில் பனங்கிழங்குடன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வேகவிட்டு எடுக்கவும். நன்கு வெந்ததும் தோல் நீக்கி உடைத்து நார் எடுக்கவும். பிறகு கிழங்கைப் பிளந்தால் உள்ளே கிழங்கில் தும்பு (குச்சி) இருக்கும். அதை தனியே எடுத்துவிடவும். பிறகு, கிழங்கைச் சிறிய துண்டுகளாக்கவும் (குச்சியின் நுனியில் இருக்கும் மிருதுவான பகுதியைச் சாப்பிடலாம்). வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும் கிழங்குத் துண்டுகள், மிளகுத்தூள், பூண்டு, உப்பு சேர்த்துக் கிளறி எடுக்கவும். தோல் உரித்து முழு கிழங்காகவும் சாப்பிடலாம்.

சிறப்பு: நார்ச்சத்து உள்ளது. நீரிழிவு உள்ளவர்களுக்கும் உடல் மெலிந்தவர்களுக்கும் நல்லது. உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

சின்ன வெங்காயத் தொக்கு

தேவை: தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கப் (இரண்டாக நறுக்கவும்) தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை கடுகு - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.

குறிப்பு: சின்ன வெங்காயத்தை விழுதாக அரைத்தும் சேர்க்கலாம். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதை பிரெட் மீது தடவலாம்; தோசை, சப்பாத்தியுடன் பரிமாறலாம்; சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

நுங்கு கீர்

தேவை: தோல் நீக்கிய இளம் நுங்குத் துண்டுகள் - ஒரு கப் கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை குங்குமப்பூ - சிறிதளவு பாதாம் பிசின் - 2 டேபிள்ஸ்பூன் (நீரில் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை ஊறவைக்கவும்) நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உலர் வெள்ளரி விதை (அ) பூசணி விதை - ஒரு டீஸ்பூன் பொடித்த சர்க்கரை - கால் கப்.

செய்முறை: வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி வெள்ளரி விதைகளைச் சேர்த்து வறுக்கவும். அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். பிறகு, சர்க்கரை சேர்த்துக் கரையவிடவும். அதனுடன் நுங்குத் துண்டுகள், பாதாம் பிசின், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும். இதைச் சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

நீராகாரம்

தேவை: வடித்த சாதம் - 2 கப் சாதம் வடித்த கஞ்சி - ஒரு கப் தோலுரித்த சின்ன வெங்காயம் - அரை கப் மோர் - சிறிதளவு (விருப்பப்பட்டால்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) தண்ணீர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மண் சட்டியில் சாதத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். மறுநாள் காலையில் நீரை வடித்துத் தனியாக வைக்கவும். சாதத்துடன் உப்பு, மோர் சேர்த்துப் பிசையவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், வடிகட்டிய தண்ணீர், சாதம் வடித்த கஞ்சி சேர்த்துக் கலந்து பருகவும். மோர் மிளகாய், பூண்டு ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

சிறப்பு: இது செரிமான சக்தி தரும். நோய் எதிர்ப்புச் சக்தியும் நிறைந்தது.

வெந்தயக்களி

தேவை: இட்லி அரிசி - 2 கப் வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன் கருப்பட்டித் தூள், தினை - தலா 50 கிராம் நல்லெண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இட்லி அரிசி, தினை, வெந்தயத்தைத் தனித்தனியாக ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும். வெந்தயத்துடன் தினை, சிறிதளவு உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும். இதனுடன் அரைத்த அரிசி மாவைச் சேர்த்து ஒரு சுற்று அரைத்தெடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் அரைத்த கலவை சேர்த்துச் சூடாக்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, கைவிடாமல் கிளறி நன்கு வெந்த பிறகு இறக்கவும். கருப்பட்டியுடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். களியின் நடுவில் பள்ளம் செய்து கருப்பட்டி கரைசலைவிட்டுப் பரிமாறலாம். விரும்பினால் நல்லெண்ணெய் சிறிதளவு சேர்த்துச் சாப்பிடலாம்.

நெல்லிக்காய் சட்னி

தேவை: முழு நெல்லிக்காய் - 6 (கொட்டை நீக்கி, துண்டுகளாக்கவும்) முழு உளுத்தம்பருப்பு - அரை கப் காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு (அலசி ஆய்ந்தது) கடுகு - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். அதனுடன் நெல்லிக்காய், பெருங்காயத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் அதனுடன் தண்ணீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்துச் சட்னியுடன் கலக்கவும்.

சிறப்பு: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்தும் அரைக்கலாம்.

பீட்ரூட் - வெந்தய ஆப்பம்

தேவை: இட்லி அரிசி - 2 கப் பீட்ரூட் துருவல் - அரை கப் தேங்காய்ப்பால் - ஒரு கப் வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய் - நெய் கலவை - சிறிதளவு முழு உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - சிறிதளவு.

செய்முறை: வெந்தயத்துடன் உளுத்தம்பருப்பு சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியைத் தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய வெந்தயம், உளுத்தம்பருப்பை அரைக்கவும். அதனுடன் அரிசியைச் சேர்த்து அரைக்கவும். இறுதியாக பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து அரைத்து எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லில் சிறிதளவு நெய் தடவி, மாவை ஊற்றி மூடிபோட்டு வேகவிட்டு எடுக்கவும்.

தேங்காய்ப்பாலுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து ஆப்பத்தில் ஊற்றிச் சாப்பிடலாம். விரும்பினால் தேங்காய்ப்பாலுடன் நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம். பூண்டு மிளகாய்ப் பொடி தொட்டும் சாப்பிடலாம்.

சிறப்பு: வெந்தயமும் தேங்காய்ப்பாலும் வயிற்றுப் புண்ணைப் போக்கும்.

ரோஜா குல்கந்து லட்டு

தேவை: பன்னீர் ரோஜாப்பூ இதழ்கள் - ஒரு கப் (அலசி, நிழலில் நான்கு நாள்கள் உலர்த்தவும்) தேன் - தேவையான அளவு கசகசா - ஒரு டீஸ்பூன் டைமண்ட் கற்கண்டு - ஒன்றரை கப் வெள்ளரி விதை, முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: உலர்ந்த ரோஜா இதழ்களுடன் கற்கண்டைச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். இதனுடன் தேன், வெள்ளரி விதை, முந்திரி சேர்த்துக் கலக்கவும். பிறகு இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக்கி, கசகசாவில் புரட்டி எடுத்துப் பரிமாறவும்.

சிறப்பு: ஜீரணச்சக்திக்கும் உடல் குளிர்ச்சிக்கும் நல்லது. பித்த அளவை சீராக்கும். இதயம் வலுப்பெறும். அல்சருக்கு நல்ல மருந்து. மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

சுரைக்காய் மோர்க்குழம்பு

தேவை: தோல், விதை நீக்கி சதுரமாக நறுக்கிய சுரைக்காய் - கால் கப் (வேகவைக்கவும்) கெட்டித்தயிர் - ஒரு கப் (கடையவும்) கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, முழு உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பருப்பு வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடித்தெடுக்கவும். தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், வறுத்த பொடி சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் மோர்க்கலவை, வேகவைத்த சுரைக்காய் சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். சுவையான, உடலுக்குக் குளிர்ச்சி தரும் மோர்க்குழம்பு ரெடி.

மசாலா மோர்

தேவை: கெட்டித் தயிர் - ஒரு கப் கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன் தோல் சீவி துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன் சிறிய பச்சை மிளகாய் - ஒன்று ஓமம், சீரகம் - தலா அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - சிறிதளவு.

செய்முறை: தயிருடன் உப்பு, கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய், ஓமம், சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, தேவையான அளவு நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதனுடன் வெங்காயம் சேர்த்துக் கலந்து பருகவும்.

சிறப்பு: இது உடலுக்குக் குளிர்ச்சி தரும். தாகத்தைத் தணிக்கும்.

டிராகன் ஃப்ரூட் மில்க்ஷேக்

தேவை: டிராகன் பழம் - ஒன்று (தோல் சீவி, சிறிய துண்டுகளாக்கவும்) காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன் ஸ்ட்ராபெர்ரி - 2 (சிறிய துண்டுகளாக்கவும்) சப்ஜா விதை - ஒரு டீஸ்பூன் (தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவிடவும்).

செய்முறை: பாலுடன் டிராகன் பழம், ஸ்ட்ராபெர்ரி, சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தெடுக்கவும். இதைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே சப்ஜா விதை சேர்த்துப் பரிமாறவும். குளிரவைத்தும் பரிமாறலாம்.

சிறப்பு: டிராகன் ஃப்ரூட் எடை குறைப்புக்கு உதவும். புரோட்டீன், வைட்டமின் பி, சி அடங்கியது. இது புற்றுநோய் வருவதைத் தடுக்கும் தன்மை கொண்டது.

தர்ப்பூசணி - வெள்ளரி சாலட்

தேவை: தோல், விதை நீக்கி சதுரமாக நறுக்கிய தர்ப்பூசணித் துண்டுகள் - அரை கப் சதுரமாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் - கால் கப் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தர்ப்பூசணித் துண்டுகளுடன் வெள்ளரித் துண்டுகள் சேர்த்துப் பிசிறவும். மேலே மிளகுத்தூள் தூவி, டூத்பிக் அல்லது ஃபோர்க் வைத்துப் பரிமாறவும்.

சிறப்பு: வேறு குளிர்ச்சியான பழ வகைகளையும் இதில் சேர்க்கலாம்.

வெந்தயக்குழம்பு

தேவை: வெந்தயம், முளைகட்டிய வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன் புளி - சிறிதளவு தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 10 பல் தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை தேங்காய்த் துருவல் - கால் கப் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை ஊறவைத்துக் கரைக்கவும். தேங்காய்த் துருவலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். வெறும் வாணலியில் வெந்தயத்தைச் சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து ஒரு கொதிவிடவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, குழம்பு சுண்டும்போது அரைத்த வெந்தயப் பொடி, முளைகட்டிய வெந்தயம், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும்.

சிறப்பு: இது உடலுக்குக் குளிர்ச்சி தரும். வயிற்றுப் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

முருங்கைக்கீரை சூப்

தேவை: முருங்கை இலை - ஒரு கப் தேங்காய்ப்பால் - 2 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தோலுரித்த சின்ன வெங்காயம் - 6 சீரகத்தூள், மிளகுத்தூள், இஞ்சி சாறு - தலா ஒரு டீஸ்பூன் பூண்டு - 3 பல் (தட்டவும்) உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் முருங்கை இலை, வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், பூண்டு, பாசிப்பருப்பு, சிறிதளவு உப்பு, இஞ்சி சாறு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு அரைத்து வடிகட்டவும். அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே சீரகத்தூள், மிளகுத்தூள் தூவிச் சூடாகப் பருகவும்.

சிறப்பு: இந்த சூப் உடல் சூடு தணிக்கும். பித்த மயக்கம், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளைச் சரியாக்கும்.

இன்ஸ்டன்ட் முலாம்பழக் குழிப்பணியாரம்

தேவை: தோசை மாவு – ஒரு கப் தோல், விதைகள் நீக்கி அரைத்த முலாம்பழக் கூழ் – அரை கப் வெல்லக் கரைசல் – கால் கப் உலர்திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை விருப்பமான நட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன் நெய் – சிறிதளவு.

செய்முறை: தோசை மாவுடன் முலாம்பழக் கூழ், வெல்லக் கரைசல், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், நட்ஸ் வகைகள் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, குழிகளில் நெய் தடவி, பாதி குழியளவு மாவை ஊற்றவும். பணியாரம் வெந்து எழும்பி வரும். பிறகு, திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

சிறப்பு: உடல் வெப்பத்தைப் போக்கும். மூலநோய் சரியாக உதவும்.

பனங்கிழங்குக் கஞ்சி

தேவை: பனங்கிழங்கு மாவு - அரை கப் தேங்காய்ப்பால் - ஒரு கப் காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கருப்பட்டித்தூள் (அ) நாட்டுச் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன் நட்ஸ் துருவல் (பாதாம், முந்திரி) - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பனங்கிழங்கு மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைக்கவும். அடிகனமான வாணலியில் பால்விட்டுச் சூடாக்கி, ஒரு கொதிவந்ததும், அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து கரைத்த மாவை ஊற்றிக் கைவிடாமல் கிளறவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், கருப்பட்டி தூள் (அ) நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும் (பாலில் மாவை நன்கு வேகவிடவும்). அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து, வறுத்த நட்ஸ் தூவி, சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: பனங்கிழங்கைத் துண்டுகளாக்கி உலர்த்தி மாவாக அரைத்தெடுக்கவும்.

பிஞ்சு வெண்டை - சிந்தி மசால் கறி

தேவை: நறுக்கிய பிஞ்சு வெண்டைக்காய் - ஒரு கப் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) ஆம்சூர் பவுடர் (உலர் மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன் பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கவும்) தோலுரித்துப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் வெண்டைக்காய், உப்பு, மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கிளறி 10 நிமிடங்கள் மூடிவைத்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, வேகவிட்டுக் கிளறி எடுக்கவும். இதைச் சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். தக்காளியை அரைத்து வடிகட்டிச் சாறாகவும் சேர்க்கலாம்.

சிறப்பு: இது கிட்னி பாதிப்பு வராமல் தடுக்கும்; பெருங்குடலில் வரும் புற்றுநோயையும் தடுக்கும்.

வாழைத்தண்டுப் பச்சடி

தேவை: நார் நீக்கி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - அரை கப் சின்ன வெங்காயத் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை தயிர் - ஒரு கப் பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) சீரகம் - அரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை விழுது - ஒரு டீஸ்பூன் தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டுடன் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து, தயிருடன் கலக்கவும். அதனுடன் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ஸ்டஃப்டு புடலை

தேவை: பிஞ்சு புடலங்காய் - ஒன்று தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப் சோம்பு - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு (அலசி ஆய்ந்தது) முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புடலங்காயை மூன்று இன்ச் துண்டுகளாக வெட்டி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து, சிறிதளவு உப்பு சேர்த்துக் கொரகொரவென அரைத்தெடுக்கவும். இதை ஆவியில் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கிச் சின்ன வெங்காயம், சோம்பு, தேங்காய்த் துருவல், பச்சைப் பயறு, உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் உதிர்த்த பருப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த மசாலாவைப் புடலைக்குள் வைத்து அழுத்தவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி ஸ்டஃப்பிங் செய்த புடலையை வைத்து எல்லாப் பக்கமும் பொன்னிறமாக ஃப்ரை செய்து எடுக்கவும்.

குறிப்பு: மசாலா ஸ்டஃப்பிங்கைப் புடலைக்குள் நன்கு அழுத்தி வைக்கவும். இல்லாவிட்டால் ஃப்ரை செய்யும்போது உதிர்ந்துவிடும்.

பதநீர் - நுங்கு பானகம்

தேவை: தோல் நீக்கிய இளம் நுங்கு - 10 (துண்டுகளாக்கவும்) பதநீர் - ஒரு கப் பொடித்த கருப்பட்டி - ஒரு டேபிள்ஸ்பூன் வெட்டி வேர் சிரப் (நீர்) - கால் கப் பொடித்த ஐஸ்கட்டிகள் - சிறிதளவு
ஏலக்காய் - 2 (தட்டவும்).

செய்முறை: வெட்டி வேரை அலசி 24 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி எடுத்தால் சிரப் ரெடி. கால் கப் சிரப்புடன் நுங்கு, பதநீர், பொடித்த ஐஸ்கட்டிகள், ஏலக்காய், பொடித்த கருப்பட்டி சேர்த்து நன்கு கலந்து பருகலாம்.

இளம் நுங்கைப் பதநீரில் சேர்த்தும் அருந்தலாம். வெட்டி வேர் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.

சிறப்பு: இதை அருந்தினால் வயிற்றுப்புண், தொண்டைப்புண், உடல் சூடு, மலச்சிக்கல் குணமாகும்.

வெல்லம் - நன்னாரி பானகம்

தேவை: வெல்லக் கரைசல் நீர் - 2 கப் (2 டேபிள்ஸ்பூன் வெல்லத்துருவலை நீரில் நன்கு கரைத்துக்கொள்ளவும்) நன்னாரி சிரப் (கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும்) - ஒரு டேபிள்ஸ்பூன் சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை ஏலக்காய் - ஒன்று (தட்டவும்) எலுமிச்சைப் பழம் பாதியளவு (சாறு பிழியவும்).

செய்முறை: வெல்லக் கரைசலுடன் நன்னாரி சிரப், சுக்குத்தூள், ஏலக்காய், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பருகலாம்.

சிறப்பு: இது உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

முள்ளங்கி சூப்

தேவை: முள்ளங்கி - ஒன்று (தோல் சீவி, சிறிய துண்டுகளாக்கவும்) தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் வெண்ணெய் - சிறிதளவு மிளகுத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் பூண்டு - 2 பல் முளைகட்டிய பச்சைப்பயறு - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: குக்கரில் முள்ளங்கியுடன் இஞ்சி, சீரகம், பூண்டு, பச்சைப்பயறு. உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மத்தால் மசிக்கவும். சூடாக சூப் பவுலில் ஊற்றி வெண்ணெய் சேர்த்துக் கலந்து, மிளகுத்தூள் தூவிப் பருகலாம்.

சிறப்பு: முள்ளங்கி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குக் குளிர்ச்சியை அளிக்கும்.

பாதாம் பிசின் பால்

தேவை: பாதாம் பிசின் - 10 கிராம் (பத்து மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்) காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப் பொடித்த பனங்கற்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன் ரோஜா குல்கந்து - ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ் எசென்ஸ் - ஒரு துளி.

செய்முறை: கொடுக்கப்பட்ட பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்தெடுக்கவும். இதை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்துப் பருகலாம்.

சிறப்பு: இந்தப் பால் உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

மூலிகை டீ

தேவை: காம்பு நீக்கிய ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ இதழ்கள், துளசி இலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன் பொடித்த பனை வெல்லம் (அ) நாட்டுச் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 2 ரோஜாப்பூ இதழ்கள் - 2 டேபிள்ஸ்பூன் சுக்குத்தூள் - அரை டீஸ்பூன் வெற்றிலை - ஒன்று.

செய்முறை: ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ, வெற்றிலை, துளசி, ரோஜாப்பூ இதழ்களை அலசி நான்கு நாள்கள் நிழலில் உலர்த்தவும். அதனுடன் ஏலக்காய், சுக்குத்தூள் சேர்த்து அரைத்தெடுக்கவும். இதுவே மூலிகைப்பொடி. ஒரு கப் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் மூலிகைப் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டவும். அதனுடன் பொடித்த பனை வெல்லம் (அ) நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து மிதமான சூட்டில் பருகவும்.

முளைகட்டிய வெந்தயம் - பச்சைப்பயறு சாட்

தேவை: முளைகட்டிய வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன் முளைகட்டிய பச்சைப்பயறு - 3 டேபிள்ஸ்பூன் சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய தக்காளி - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெள்ளை வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் யோகர்ட் (இனிப்புத் தயிர்) - கால் கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வாய் அகன்ற பாத்திரத்தில் முளைகட்டிய வெந்தயம், பச்சைப்பயறு, தக்காளி, வெங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதன் மீது யோகர்ட் ஊற்றி சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: பயறு வகைகளை ஆவியில் வேகவிட்டு எடுத்தும் சேர்க்கலாம்.

தக்காளி - மணத்தக்காளி ரசம்

தேவை: பழுத்த தக்காளி - 2 (மசிக்கவும்) பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் மணத்தக்காளி வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு - சீரகத்தூள், வெந்தயப் பொடி - தலா ஒரு டீஸ்பூன் பூண்டு - 3 பல் (தட்டவும்) மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை கடுகு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஒன்று எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்புடன் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு மசிக்கவும் (ஒன்றரை கப் பருப்பு நீர் இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், மணத்தக்காளி வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் தக்காளி, பூண்டு, வெந்தயப் பொடி, பாசிப்பருப்பு தண்ணீர், உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு, கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும்.

சிறப்பு: இது வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

கீரை மசியல்

தேவை: முளைக்கீரை - அரை கட்டு (ஆய்ந்து, அலசி நறுக்கவும்) பாசிப்பருப்பு - கால் கப் (அரை மணி நேரம் ஊற வைக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தோலுரித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப் பூண்டு - 2 பல் (தட்டவும்) மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை கடுகு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஒன்று சீரகம் - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை: குக்கரில் கீரை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள்தூள், பாசிப்பருப்பு, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கி மத்தால் மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம் தாளித்து, கீரையுடன் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: இதை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்; பிரெட் அல்லது சப்பாத்தியின் மீது தடவியும் சாப்பிடலாம். அரைக்கீரை, சிறு கீரையிலும் இதைச் செய்யலாம்.

கம்பங்கூழ்

தேவை: கம்பு மாவு - ஒரு கப் மோர் - 2 கப் தோலுரித்துப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அடிகனமான வாணலியில் 2 கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். அதனுடன் உப்பு, நல்லெண்ணெய், கம்பு மாவு சேர்த்துக் கைவிடாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் சீரகம், மோர் சேர்த்துக் கரைக்கவும். மேலே சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.

சிறப்பு: உடல் பலம் பெறும்; குளிர்ச்சி பெறும். குடல்புண், வயிற்றுப்புண்கள், அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

பறங்கிக்காய் பாத்

தேவை: தோல் சீவி சதுரமாக நறுக்கிய பறங்கிக்காய், வடித்த சாதம் - தலா ஒரு கப் தோல் சீவிப் பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - அரை கப் தனியாத்தூள் (மல்லித்தூள்) - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் (அலசி, ஆய்ந்தது) பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப் கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நீளவாக்கில் கீறவும்) வெந்தயம் - அரை டீஸ்பூன் பிரியாணி இலை, கிராம்பு - தலா ஒன்று மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும். அதனுடன் கிராம்பு, பிரியாணி இலை, சின்ன வெங்காயம், இஞ்சி, வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கால் கப் தேங்காய்த் துருவல், பறங்கிக்காய்த் துண்டுகள், உப்பு, தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். பிறகு அதனுடன் மீதமுள்ள தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். பறங்கி மசாலா ரெடி. இதனுடன் சாதம், சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

இயற்கையின் கொடை!

கத்தரி வெயில் வாட்டியெடுக்கும் காலகட்டம் இது. வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது போர்க்களத்திலிருந்து பாசறை திரும்பிய உணர்வு. அப்போதும் வெயிலின் தாக்கம் ஒரேயடியாகத் தணிந்துவிடுவதில்லை. வியர்வைக் கசகசப்பு, நாவறட்சி, உடல் உஷ்ணம் என ஒவ்வொரு நாளும் சிரமம்தான். இப்படி மக்களைத் தவிக்கவைக்கும் இயற்கையே, இந்தச் சூட்டைத் தணிக்கும் வகையில் வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, நுங்கு, எலுமிச்சை, நன்னாரி, சோற்றுக் கற்றாழை, வாழைத்தண்டு உட்பட ஏராளமான வரப்பிரசாதங்களை அள்ளி வழங்கவும் தயங்குவதில்லை. இயற்கையின் கொடைகளான இத்தகைய பொருள்களைக்கொண்டு ஜூஸ், கீர், நீராகாரம், களி, கஞ்சி, கூழ், மில்க்ஷேக், பானகம், பச்சடி என உஷ்ணம் தணிக்கும் 30 வகை உணவுகளைத் தயாரித்து வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுதா செல்வகுமார்.

``இந்த உணவுகள் கோடைக்காலச் சிரமங்களிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, உடலின் பல்வேறு பாகங்களைச் சீராகப் பராமரிக்கவும் உதவும். இவற்றையெல்லாம் செய்து பரிமாறுங்கள்; குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்’’ என்கிறார் சுதா செல்வகுமார்.