Published:Updated:

`6 பேருக்கு கன்ஃபர்ம்!’ அதற்குப்பிறகு..?- இந்தியாவின் முதல் ஹெச்ஐவி நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட தருணம்!

`6 பேருக்கு கன்ஃபர்ம்!’ அதற்குப்பிறகு..?- இந்தியாவின் முதல் ஹெச்ஐவி நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட தருணம்!
`6 பேருக்கு கன்ஃபர்ம்!’ அதற்குப்பிறகு..?- இந்தியாவின் முதல் ஹெச்ஐவி நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட தருணம்!

ரத்த மாதிரிகளிலிருந்து, ரத்த நீரைப் பிரித்தெடுத்து என் வீட்டு பிரிட்ஜில் வைத்தே பாதுகாத்து வந்தேன்.

`` 80 பேரின் ரத்த மாதிரிகளை எடுத்துப் பரிசோதித்தேன், 6 பேரின் ரத்தம் மட்டும் வித்தியாசமாக இருந்தது. அந்த நிமிடங்களை இப்போது நினைத்தாலும் எனக்குப் படபடப்பாக இருக்கிறது. `இந்தியாவிலும் ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறது' என்ற உண்மையை என்னால் கிரகித்துக்கொள்ள முடியவில்லை... மிகுந்த மனவேதனையோடுதான் அந்த ஆய்வுமுடிவுகளை வெளியிட்டேன்"  

இந்தியாவில் ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை முதன்முதலில் கண்டறிந்த டாக்டர் நிர்மலா செல்லப்பன் வருத்தம் தொனிக்கப் பேசுகிறார். 

உலகெங்கிலும் எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளும், கண்காணிப்புகளும் தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பலர் அந்தக் கொடுமையான நோயால்  பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆங்காங்கே தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. இந்தியாவில் மும்பை போன்ற பெருநகரங்களில் சில ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டன. ஆனால், எல்லா முடிவுகளுமே `நெகடிவ்'வாக வந்துகொண்டிருந்தன. இந்தியாவுக்குள் ஹெச்.ஐ.வி என்கிற கொடிய வைரஸ் இன்னும் ஊடுருவவில்லை என்றே எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தனர். 

இதெல்லாம் நிகழ்ந்தது 1985-ம் ஆண்டின் இறுதியில். 

அதேஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் பிரிவில் முதுகலை மருத்துவம் படித்த நிர்மலா என்ற மாணவிக்கு, ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு தலைப்பு வேண்டும். தன்னுடைய பேராசிரியர் சுனிதி சாலமனிடம் சென்று யோசனை கேட்கிறார். ``நீ ஏம்மா ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்று பற்றி ஆய்வு செய்யக் கூடாது. இந்தியாவில் இது பரவியிருக்கிறதா என்று பார்க்கலாமே ``என ஆலோசனை வழங்குகிறார் சுனிதி சாலமன்.

``இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்பா... வாய்ப்பே இல்லை, ஆய்வு செய்தாலும் ரிசல்ட் நெகடிவ்வாகத்தான் வரும்'' என்பது நிர்மலாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. இருந்தாலும் ஆய்வு செய்துதான் பார்ப்போம் என்று அவரின் ஆராய்ச்சி தொடங்குகிறது. 
அதன்பிறகு என்ன நடந்தது என்பது பற்றி குறித்து நிர்மலாவே விளக்குகிறார். 

(Photo credit : YRG CARE)

``1985-ம் ஆண்டு இறுதியில் என் ஆய்வைத் தொடங்கினேன். 3 மாத காலம் கடுமையாக உழைத்து, சென்னை விஜிலன்ஸ் ஹோமில்

தங்க வைக்கப்பட்டிருந்த பாலியல் தொழிலாளிகளிடமிருந்து 80 ரத்த மாதிரிகளைச் சேகரித்தேன். நான் உருவாக்கிய ஆய்வகத்தில், ரத்த மாதிரிகளிலிருந்து, ரத்த நீரைப் பிரித்தெடுத்து என் வீட்டு பிரிட்ஜில் வைத்தே பாதுகாத்து வந்தேன். ஹெச்.ஐ.வி -யைக் கண்டுபிடிக்க எலிசா (Elisa), வெஸ்டர்ன் பிளாட் (Western blot) என இரண்டு பரிசோதனைகள் இருக்கின்றன. எலிசா சோதனை செய்யும் வசதி மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் இல்லை. அதனால், வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றேன். 
அங்கே எலிசா சோதனை செய்து பார்த்தபோது ஆறு மாதிரிகள் மஞ்சள் நிறத்தில் மாறியிருந்தன. ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதை அப்போதுதான் கண்டறிந்தோம். உடனே, சென்னைக்கு வந்த அந்த 6 பேரிடம் மீண்டும் ரத்த மாதிரிகளைச் சேகரித்தோம். அந்த மாதிரிகளை வெஸ்டர்ன் பிளாட் சோதனை செய்வதற்காக அமெரிக்கா எடுத்துச் சென்றார் மருத்துவர் சிமியோஸ். இவர் வேலூர் சி.எம்.சி-யில் மருத்துவராக இருந்தார். 

அமெரிக்காவில் செய்யப்பட்ட சோதனையில் இந்தியாவில் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக அந்தச் செய்தியை இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுக்குத் தெரிவித்தோம். மிகவும் வேதனையான தருணங்கள் அவை'' என்கிறார் டாக்டர் நிர்மலா.

இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், பிரதமர் ராஜிவ் காந்திக்கு இந்தச் செய்தியை உடனடியாகத் தெரிவித்தது. இந்தியாவில் ஹெச்.ஐ.வி தொற்று பாதிப்பு இருக்கிறது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை, தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹெச்.வி.ஹண்டேதான் வெளியுலகுக்குத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளிவந்தது 1986 - ம் ஆண்டு தொடக்கத்தில். அந்த நிமிடங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் அவர்.

``அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி உடனடியாக முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டினார். அந்த மாநாட்டில்தான் ஹெச்ஐவி குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. `தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு மட்டுமே பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தமல்ல. இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கலாம். இந்தப் பாதிப்பு இருந்தாலும், கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் கண்டுபிடித்தது தமிழ்நாட்டில்தான். அதற்காகப் பெருமைப்பட வேண்டும். மற்ற மாநிலங்களும் கவனமாக இருக்கவேண்டும்' என்றார். 

சட்ட மேலவையில் நான்தான் அந்தச் செய்தியைத் தெரிவிக்கவேண்டும். மிகுந்த பதற்றத்தோடும், பாதிப்பை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்ற பயத்தோடும் நான் அமர்ந்திருந்தேன். இந்தக் கொடிய வைரஸ் இந்தியாவிலும் இருக்கிறது என்பதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள், எதிர்க்கட்சியினர் என்ன எதிர்வினையாற்றுவார்கள் என்கிற ஆயிரமாயிரம் கேள்விகளோடு அந்த அறிவிப்பைச் செய்தேன். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி தொடர்ந்து கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தார். நான் அவருக்குப் பொறுமையாகப் பதிலளித்தேன். இப்போது நினைத்தாலும் மறக்க முடியாத தருணங்கள் அவை.`` என அதே படபடப்போடு நம்மிடம் பகிர்கிறார்  ஹெச்.வி ஹண்டே.

நம்நாட்டில் அதற்குப் பிறகுதான் ஹெச்.ஐ.வி பாதிப்பைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடுமையான பல சோதனைகளைக் கடந்துதான் இந்த ஆய்வைச் செய்து முடித்திருக்கிறார் நிர்மலா. ஆய்வை முடித்த பிறகு சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார் மருத்துவர் நிர்மலா.  2010 - ம் ஆண்டு இணை இயக்குநராக இருக்கும்போது ஓய்வு பெற்றார். தற்போது தனது சொந்த ஊரான ஈரோட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். 

இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்பு ஓரளவுக்குக் கட்டுக்குள் இருப்பதற்கு மருத்துவர் நிர்மலா, அவருக்கு வழிகாட்டிய அவரின் பேராசிரியர் சுனிதி சாலமன் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய மருத்துவக் குழுவினர்தான் காரணம். அதற்கு ஒரு தமிழராக நாம் பெருமைப்படவும், நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

பின் செல்ல