பிரீமியம் ஸ்டோரி

செரடோனின்... இதை, `மகிழ்ச்சியளிக்கும் ஹார்மோன்’ என்றும் சொல்வார்கள். பதற்றம், அமைதியின்மை, சோர்வு, மனநலக் குறைபாடு, எதிர்மறை எண்ணங்கள், கிளர்ச்சி, வெறி, தூக்கமின்மை, இனிப்புகள்மீது அடங்காத ஆசை, அலட்சியம், அதிக மனஉளைச்சல், சோகம் போன்றவை செரடோனின் ஹார்மோன் குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள். இந்தக் குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் செரடோனின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஐந்து எளிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

சந்தோஷ ஹார்மோன் 1-2-3-4-5

சரியாகச் சாப்பிடுங்கள்

குறைவான புரதமுள்ள பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட்டால் செரடோனின் அளவு அதிகரிக்கும். அதற்காக கார்போஹைட்ரேட்டை முழுவதுமாக ஒதுக்கிவிட வேண்டாம். பிரெட்டும் பாஸ்தாவும் செரடோனின் அதிகரிக்கவும் உதவும். அதிகமாக இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் அவசியம்.

மகிழ்ச்சிக்கு மசாஜ்

நம்மை ரிலாக்ஸ் செய்வதற்குச் சிறந்த வழி மசாஜ். மனிதர்களின் தொடுதலைவிட நம்மை ஆற்றுப்படுத்துவது வேறு எதுவுமில்லை. மசாஜ் செய்துகொள்வது, நல்ல தூக்கத்துக்கு உதவும்; செரடோனின் சுரப்பதையும் அதிகரிக்கும்.

சந்தோஷ ஹார்மோன் 1-2-3-4-5


தூக்கம் தொலைக்காதீர்கள்

செரடோனின் அளவு சமநிலையில் இருப்பதற்குப் போதுமான அளவுத் தூக்கம் அவசியம். தூக்கத்தின்போது மூளை செரடோனினை விடுவிக்கும். தூக்கம் தடைப்படும்போது செரடோனின் சுரப்பும் பாதிக்கப்பட்டு மன அழுத்தம் வரும்.

இயக்கம் அவசியம்

உடற்பயிற்சி, இயற்கையாகவே நல்ல மனநிலையைத் தூண்டக்கூடிய ஒன்று. தினமும் வெறும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே, உடலில் செரடோனின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். அது உங்களை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருக்க உதவும்.

திறந்தவெளி நல்லது

சுத்தமான காற்றை விரும்பாதவர்கள் யார்? திறந்தவெளியில் கிடைக்கும் சுத்தமான காற்றும், இயற்கை வெளிச்சமும் செரடோனின் சுரப்பு அதிகரிக்க உதவும்.

- மு.இளவரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு