பிரீமியம் ஸ்டோரி

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையில் சென்னை நகரமே மூழ்கியது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஜனவரியில்தான் சகஜநிலை திரும்பியது. அதுவரை எத்தனை அவஸ்தைகள், எத்தனைவிதமான இழப்புகள். அவற்றில் உடற்பயிற்சியையும் ஒன்றாகச் சேர்க்கலாம். ஒரு மாதகால இடைவெளியில் ஏராளமானோர் உடற்பயிற்சி செய்வதைக் கைவிட்டிருந்தனர். இதோ 2018-ம் ஆண்டும் கடந்து போகிறது. இன்னமும்கூட ‘சீக்கிரம் ஆரம்பிக்கணும்’ என்பதைப் பலர் வாடிக்கையான பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  ஏன்?

இயற்கைப் பேரிடரால் இத்தனை நீண்ட இடைவெளி எடுப்பது ஒருவகை என்றால், உடலில் காயங்கள் ஏற்படுவதால், அதிக வேலைப்பளு மற்றும் அதனால் ஏற்படும் சோர்வால், இரவு வேலையால், திருமணம் மாதிரியான நிகழ்ச்சிகளால், தொடர்ச்சியான பயணங்களால், உடல்நலக்கோளாறுகளால் எனப் பலவிதங்களில் இடைவெளிகள் ஏற்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் மேலாகத் தொடர்ச்சியாக ஒரே செயலை தினமும் செய்வதால் ஏற்படும் சலிப்பும் ஒரு காரணம்.  இடைவெளிகளைக் கடந்து மீண்டு வந்து பழையபடி பயிற்சியைத் தொடர்வது அத்தனை எளிதான காரியமல்ல. பல நேரங்களில் இந்தச் சிறிய இடைவெளி நம் உடற்பயிற்சிப் பயணத்தில் கடைசி நிறுத்தமாக மாறிவிடக்கூடும். காரணம் இடைவெளிக்கு முந்தைய உற்சாக மனநிலையும் உடல்நிலையும் மீண்டும் திரும்பும்போது இருக்காது. வலிகளைவிட ஓய்வைத்தான் உடலும் மனமும் எப்போதும் தேர்ந்தெடுக்கும். அதுதான் எளிது. அப்படியானால் இதை எப்படி எதிர்கொள்வது?

ஜீரோ ஹவர்! - 10

காயங்கள்

காயம் ஏற்படும் சூழலில் வலுக்கட்டாயமாக மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதென்பது முட்டாள்தனம். அந்தநேரத்தில் இடைவெளி என்பது அவசியமாக இருந்தாலும் சோம்பேறித்தனத்தை வளர்த்துக்கொள்ளாமல் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உசேன் போல்ட்டுக்கு ஒருமுறை காயம்பட்டு ஆறுமாத காலம் ஓடமுடியாமல் போனது. ஆனால், அந்த மனிதர் அதைப்பற்றிக் கவலைப்படாமல் நீச்சலில் களமிறங்கிவிட்டார். ஆறுமாதம் கழித்து உசேன் போல்ட் மீண்டும் ஓட்டப்பந்தயத்துக்குத் திரும்பியதையடுத்து நீச்சல்வீரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

வேலைக்காரர்களுக்கு

ஜீரோ ஹவர்! - 10வேலைப்பளு என்பது எல்லோருக்கும் உள்ளதுதான்; ஆனால் அதில் தினமும் அரைமணிநேரம்கூட நமக்காக ஒதுக்க முடியவில்லை என்றால் உடல்நலனில் நமக்கு அக்கறை இல்லை என்றே அர்த்தம். வேலைப்பளு அதிகமிருந்தாலும் அரைமணிநேர கட்டாய உடற்பயிற்சியைக் கைவிடக்கூடாது என்று சபமெடுத்துக் கொள்ளுங்கள். இரவு வேலை என்றால் பகலிலோ, மாலை நேரத்திலோ பயிற்சியைத் தொடருங்கள். உலகம் அழிந்துவிட்டது என பங்கருக்குள் பதுங்கிக் கிடந்தாலும் அங்கேயும் 50 புஷ் அப்ஸ் எடுக்கலாம், மனமிருந்தால்..!

ஊர்சுற்றிகளுக்கு

பயணங்களின்போது உடற்பயிற்சிகள் தடைப்பட்டால், அதைக் கையாள வெளிநாட்டினர் இண்டோர் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஹோட்டல் அறையில் இருந்தபடிச் செய்யக்கூடிய எளிய வகை உடற்பயிற்சிகளைச் செய்வார்கள். ஹோட்டலில் ஜிம் இருக்கிறதா? என்று பார்த்தே தங்குவார்கள். இல்லாதபட்சத்தில் `பார்க்’ இருக்கும் இடத்தை கூகுள் மேப்பில் தேடிப்பார்த்து அங்கே வாக்கிங் போவார்கள்.

‘சலிப்பான்களுக்கு’

ஜீரோ ஹவர்! - 10ஒரே நீச்சல்குளத்தில்... ஒரே யோகா மேட்டில்... ஒரே பார்க்கில்... எனத் தொடர்ந்து ஒரே இடத்தில், ஒரே சூழலில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்த்து சில மாற்றங்களைச் செய்வதன்மூலம் சலிப்பைத் தவிர்க்கலாம். தினமும் 5 கிலோமீட்டர் தூரம்தான் நடக்க முடிகிறது என்றால் இன்னும் 45 நாள்களில் அதை 10 கிலோ மீட்டராக ஆக்குவேன் என உறுதிபூணுங்கள். தினமும் அந்த முன்னேற்றத்தைக் கவனியுங்கள்; நண்பர்களுடன் போட்டி போடுங்கள். பத்து நிமிடத்தில் யார் 30 சூரிய நமஸ்காரம் செய்வார்? என்று போட்டி வையுங்கள். எதையும் சுவாரஸ்யமாகச் செய்தால் சலிப்பே அண்டாது.

நோயாளிகளுக்கு


பிள்ளைப்பேறு, உடல்நலக் குறைபாடு எனக் கட்டாய இடைவெளி எடுக்க நேர்ந்தால் மீண்டும் பழைய எனர்ஜியுடன் செயல்பட முடியாமல் போகலாம். உடலும் பழைய நிலைபோல இருக்காதுதான். ஆனால் அதை என்னால் திரும்பப்பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினால் எந்த இடைவெளியிலிருந்தும் மீண்டு வரலாம். அதற்கான முதல்படி நாளை காலை ஐந்து மணிக்கு கிரவுண்டில் இருப்பேன் என்ற வைராக்கியம் மட்டுமே!

நேரம் ஒதுக்குவோம்...

- வினோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு