Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 15

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 15
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 15

போப்பு, மருத்துவ எழுத்தாளர்குடும்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ளரும் பருவத்தில் எலும்புகள் கட்டமைகின்றன. அவற்றின் கட்டமைவில் மரபணு முதன்மையான பங்கு வகிக்கிறது. அதேநேரத்தில்,  அந்தப் பருவத்தின் உடலியக்கத்துக்கும், உணவுக்கும், வளர் சூழலுக்கும்  முக்கியப் பங்கு இருக்கிறது. எலும்பின் அடிக் கட்டுமானத்தைக் கொண்டே உடல் கட்டுமானமும் அமையும். வளரிளம் பருவத்துக்குரிய ஓட்டத்தையும், விளையாட்டையும் முற்றிலும் மறுப்பதாக இருக்கிறது தற்கால வாழ்க்கை மற்றும் கல்வி முறை.

 இன்றைய வாழ்க்கைமுறை விவசாயம் சாராதது என்பதால் குடும்ப உற்பத்தித் தொடர்பான உடலுழைப்பிற்கும் வாய்ப்பில்லை.  உலகம் முழுதும் பழைய வாழ்க்கை முறையில் விவசாயம், நெசவு, தச்சு என ஏதோ ஒருவகையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உற்பத்தியுடனும், உழைப்புடனும் தொடர்புடையவர்களாக இருந்தனர். குறைந்தபட்சம் வீட்டுச் சமையல், தூய்மைப்படுத்துதல், நீர் இறைத்தல், சமையலுக்கான தயாரிப்பு வேலைகள் அனைத்தும் உடலுழைப்புக் கோருவதாக இருந்தன. குறிப்பாகப் பெண், இன்னொரு வீட்டில் வாழப்போகிறவள் என்பதால் அவளுக்குப் பயிற்சி தேவையென்று திட்டமிட்டே வீட்டு வேலைகளுக்குப் பழக்குவார்கள்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 15

உடலுழைப்பு வேலை என்பது கைகால்களையும் கழுத்து புஜப் பகுதிகளையும் நெகிழ்த்துவதாக இருக்கும். பெண்களின்  இடுப்புப் பகுதியை நெகிழ்த்தி  எலும்புகளை வலுப்படுத்துவதாக இருக்கும். பெண் பூப்பெய்திய காலம் தொடங்கி, முதல் குழந்தை ஈன்றெடுக்கும் காலம் வரை இடுப்பு எலும்பு வலுப்பெறுவதற்கான பயிற்சிகள் தேவை. வளைந்து நெளிந்து கோலம் போடுவதும் இத்தகைய பயிற்சியின் ஓர் அங்கமே.  பொதுவாகவே பெண்களுக்கு இடுப்பெலும்பு ஆண்களைக் காட்டிலும் அகலம் குறைந்தும், நீளம் அதிகமாகவும், மேல்நோக்கி உயர்ந்து பறவையின் இறக்கை போல அமைந்திருக்கும். மேல்நோக்கி வளைந்த அந்தப் பகுதியில்தான் பெண்கள் தண்ணீர்க் குடத்தையும், கைக்குழந்தையையும், சுமந்து செல்லும் இன்ன சில பொருள்களையும் இருத்துவார்கள். அவர்களது தலைச் சுமையின் பாரத்தையும் இந்தப் பகுதி பெற்று வெளிநோக்கித் தள்ளும். உழைப்பு என்பதுப் புற அவயங்களின் நேர்த்திக்கும் அழகுக்கும் மட்டுமல்ல உள்ளுறுப்புகளை வலுப்படுத்தவும் இன்றியமையாதது ஆகும். 

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 15


பிறப்பின்போது இடுப்பெலும்பின் இந்தப் பகுதியில் தான் குழந்தை கால்களை வைத்து உந்தித் தள்ளி வெளியேறுகிறது. இரண்டு நாள்கள் முதல் ஒருவாரம் வரை குழந்தை இடுப்பெலும்பில் சரியான நிலையில் வைப்பதற்கான ஒத்திகை நடத்துகிறது. அதனால் தான் ஒருவார காலமாக இடுப்பு வலி வந்து வந்து போகிறது. குழந்தை ஈற்று என்பது,  தாய் உந்தி முன் தள்ளுவதில் மட்டுமல்ல, இன்னமும் முதல் மூச்சுப் பெறாத குழந்தையும் தன்னை முன்னோக்கி உந்திக் கொண்டு வருகிறது. இந்த இயற்கையான நிகழ்வுக்கு இடுப்பெலும்பு வலுவாக இருப்பதோடு நெகிழ்வாகவும் இருப்பது அவசியம்.

செரிக்கத் தாமதமாகும் உணவுகள் அனைத்தும் வயிற்றில் தங்குவது வயிறு, இடுப்புப் பகுதிகளில் சதைப் பெருக்கத்துக்கும், இறுக்கத்துக்கும் காரணமாக இருக்கும் என்பதை முன்னரே பார்த்துள்ளோம். தற்காலப் பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளான சாதாரணக் குளிர் பானங்கள் தொடங்கி பீட்ஸா, பர்கர் வரை அத்தனையுமே இடுப்புச் சதையைப் பெருக்கக் கூடியதாக இருக்கின்றன. ஆரம்பத்தில் சொன்னதுபோல,  நம்முடைய வாழ்க்கை முறையில் இடுப்புப் பகுதியை நெகிழ்த்தும் உழைப்பிற்கு இடமில்லை.

ஹோம் வொர்க், தொலைக்காட்சி பார்த்தல் என அத்தனையும் ஆடி அடங்கி உணவு உண்ணவே இரவு ஒன்பது மணிக்கு மேலாகி விடுகிறது. ஒருநேரம் தான் வீட்டில் நிதானமாக உண்கிறோம் என்று  பொறுக்க உண்டுவிட்டுப் பின்னிரவில் தூங்கச் செல்லும்போது வயிற்றில் ததும்பத் ததும்ப உணவு நிறைந்திருக்கும். புறச் சூழலில் வெப்பம் குறைந்திருக்கும்போது வயிற்றில் உள்ள உணவைச் செரிப்பதற்கான வெப்பத்தை உடல், தானாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் வயிற்றில் உணவிருக்கும்போது இயல்பானத் தூக்கத்துக்குச் சாத்தியம் இல்லை. அத்துடன் உண்ட உணவும் முழுமையாகச் செரிமானம் ஆவதில்லை.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 15

ஒருநேரம் உண்ட உணவு செரிமானம் ஆகாதபோது ஒவ்வொரு நேரம் உண்ணும் உணவையும் உடல் அரைகுறையாகவே செரித்து வயிறு, சிறுகுடலில் இருந்து கீழ்நோக்கித் தள்ளிவிடும். மற்றொருபுறம் வயிற்றில் நீண்ட நேரம் தேக்கம் அடைந்த உணவு புளித்து, அமிலத் தன்மை மிக்கதாக மாறிவிடும். அரைகுறைச் செரிமானம், வயிற்றில் தேக்கமடைந்த அமிலக் கூறு இரண்டும் சேர்ந்து உணவின் வழியாக உடலுக்குக் கிடைக்க வேண்டிய ஆற்றலைக் கிடைக்காமல் செய்கின்றன. ஆற்றல் இன்மையால் போதுமான ரத்தம் உற்பத்தியாவதில்லை. எனவே தான் மாதாந்திர உதிரப்போக்கின்போது கடுமையான வயிற்றுவலி, இடுப்புவலி, கெண்டைக்கால் வலி போன்றவை ஏற்படுகின்றன. இளம் வயதிலேயே வெள்ளைப்படுதலும் நிகழ்கிறது. உண்மையில் மாதாந்திர உதிரப் போக்கு, சிறுநீர் கழிப்பது போல இயல்பாக நடந்து முடிய வேண்டிய ஒன்று. இன்று பேரவஸ்தை மிகுந்ததாக மாறிவிட்டது.

பொதுவாகப் பெண்கள் பப்பாளிப் பழம் உண்டால் உதிரப் போக்கு மிகுதியாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அது உண்மையே. ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும்போது பப்பாளிப் பழம் விரைவாக உற்பத்தி செய்து உதிரப் போக்கை அதிகரிக்கிறது தான். ஆனால் இத்தகைய உதிரப் போக்கினால் உடலில் உபாதை இராது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுபோலவே மாதுளம் பழமும் பன்னீர் திராட்சையும் உதிரப்போக்கைச் சீராக்கப் பெருமளவு துணை செய்யும். பழங்களைப் பொதுவாகச் சமைத்த உணவுக்குப்பின் உண்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளோம். பழங்களை ஒரு நேர உணவாகவே எடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றின் முழுப் பலன்களும் கிடைக்கும். சில பழங்களைச் சூடு என்றும், சிலவற்றைக் குளிர்ச்சி என்றும் இனம் பிரித்து வைத்திருக்கின்றனர். உண்மையில் உடல் செரிப்பதற்கு ஏற்ற நேரத்தில் உண்கிற உணவு எதுவானாலும் உடலுக்கு இதமான குளிர்வுத் தன்மையையும், செரிக்கக் கடினமான நிலையில் உண்கிற எத்தனை இலகுவான உணவும் உடலுக்கு வெப்பத்தையும் அளிக்கிறது.

ஓர் உணவை நாம் பொதுத் தன்மைக்குள் வைத்து அடக்க முடியாது. ஒருவருக்கு ஒருநேரம் பிடித்த உணவு எப்போதும் பிடிக்கும் என்றும் அல்லது எப்போதும் ஒரே விதமாக நன்மையே செய்யும் என்றும் சொல்வதற்கில்லை. கடந்த இதழில் உளுந்து, வெந்தயக்களி குறித்துப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில உளுந்துப் பயன்பாடு குறித்துப் பார்த்து விடுவோம். நம்முடைய உணவில் வருமான அடுக்கு, நகரம், கிராமம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து வீடுகளிலும் நிரந்தர இடம் பிடித்திருப்பது இட்லி, தோசை. இந்த மாவுகளில் எங்கோ தொலைதூரத்தில் கொஞ்சூண்டு உளுந்து இருக்கிறதுதான். ஆனாலும் தோல் நீக்கித் தீட்டப்பட்ட அந்த வெள்ளை உளுந்தை எத்தனை முறை வெளுக்கக் கழுவிக் கழுவி ஊற்றி இருப்போம்? ஊற வைத்துக் கழுவிக் கழுவி ஊற்றிய பின் அந்த உளுந்தில் எந்தச் சத்தும் இருக்காது.

நம்முடைய பயறு வகைகளில் உளுந்து, கொழுப்புச்சத்தும் பிற நுண் சத்துகளும் நிறைந்தது. ஆனால், இயந்திரத்தில் தீட்டும் தீட்டலில் அதன் மூலக்கூறு அனைத்தும் முற்றாகச் சிதைக்கப்பட்டு விடுகிறது என்ற எளிய உண்மையை நாம் உணர்வதில்லை. உளுந்தைக் கறுப்புத் தோலுடன் பயன்படுத்தும்போது மட்டுமே அதன் முழுப் பலனும் நமக்குக் கிடைக்கும். கறுப்பு உளுந்தை ஊறப்போட்டு அப்படியே ஆட்டி, மாவாக்கி இட்லி, தோசை சமைத்தால் எந்த சர்வதேசச் சட்டம் வந்து நம்மைத்  தடுக்கப் போகிறது?  இட்லி, தோசையின் நிறம் சற்று மட்டாக இருக்கலாம். இளங்கசப்பும், துவர்ப்பும், சுவையில் இழையோடி இருக்கும். தொட்டுக்கொள்ளத் துணைப்பொருள் ஏதுமின்றி அப்படியே சாப்பிடலாம். அதுவொரு தனித்துவமான சுவை. சத்து நீக்கம் செய்யப்பட்ட தும்பைப்பூ வெண்மையில் அவித்தெடுத்த இட்லியோ, பொன்னிறத்திற்குச் சுட்டெடுக்கிற தோசையோ வடிவத்தில் லட்சணமாகவும், கண்ணுக்குக் கவர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் சட்னி – சாம்பார், அதையும் நச்சென்று சேர்த்துப் புரட்டி எடுக்காமல் இரண்டு விள்ளல்கூட வெறுமனே  சாப்பிட முடியாது. அவ்வளவு சப்பையான சுவையுள்ள இட்லி – தோசை நமது உடலுக்கு  என்ன ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் வழங்க முடியும்? ஆனால் அதைத் தான் ஒரு நாளைக்கு ஒருவேளையாகிலும் உண்டு வருகிறோம். தோசையில்லாமல் கடந்த நாள்பொழுது நம்மிடம் யாரோ எதையோ பறித்துக் கொண்டு விட்டதைப் போல ஏமாற்றத்துடன் கழிகிறது. ஃப்ரிட்ஜ் உள்ள வீட்டில் சதா சர்வ காலமும் இட்லி தோசை மாவு பாண்டாக் கரடி போல ஜம்மென்று உறங்கிக் கொண்டிருக்கிறது. இட்லி தோசையிலிருந்து நமக்கும், நம்மிடமிருந்து இட்லி தோசைக்கும் ஒருநாளும் விடுதலையே கிடையாது.   

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 15

தோலுடன் கூடிய முழுக் கறுப்பு உளுந்தோ அல்லது உடைத்த கறுப்பு உளுந்தோ ஊறவைத்துத் தனியாக அடைப் பதத்திற்குக் கொரகொரப்பாக  அரைத்துக் கொள்ள வேண்டியது. உடன் வெங்காயம், இஞ்சித் துருவல், மிளகாய், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டியது. தோசைக்கல்லில் மிதமான சூட்டில் தாராளமாக எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் நடுப்பகுதி மெத்தென்றும், விளிம்பு வட்டம் மொறுமொறுப்பாகவும் இருக்கும். கொத்தமல்லி (அ) புதினா (அ) கறிவேப்பிலை சட்னி தொட்டுக் கொண்டு இரண்டு அடை சாப்பிட்டால் போதும். சாப்பிட்ட பத்துப் பதினைந்து நிமிடத்திற்கு வயிறு நிறைந்த உணர்வு இருக்காது. ஆனால்,  அதற்குப் பின்னர் வயிறு மிதமாகக் கனக்கும். எவ்வித உபாதையையும் ஏற்படுத்தாது. நான்கைந்து மணி நேரத்துக்கு நின்று நிதானமாகச் செரிக்கும்.  மெலிந்த உடல் வாகுடையவர்களுக்கு மிகவும் பொருத்தமான உணவு இது. வாரத்திற்கு மூன்று, நான்கு முறை உண்டு வர உடல் பூசினாற்போல சதை போடும். எலும்பு வலுப்பெறுவதைத் துல்லியமாக உணர முடியும்.

உடைத்த கறுப்பு உளுந்து ஒரு பங்கும், இரண்டு பங்கு புழுங்கல் அரிசியும் எடுத்துக் கழுவி மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவிட வேண்டியது. ஒரு மணிநேரம் கழித்து ஒன்றுக்கு மூன்று பங்கு நீர்வைத்து உலையேற்றிக் கொதித்ததும் அதில் அரிசி - உளுந்தைப் போட வேண்டியது. நீர் வற்றும் தருணத்தில் அனலைக் குறைத்துக் கொள்ள வேண்டியது. ஐந்தாறு பல் பூண்டும், அரை தேக்கரண்டி இஞ்சித் துருவலும் சேர்த்துக் கிண்டி விட வேண்டியது. நீர் முழுவதும் வற்றிய நிலையில் அடுப்பை அணைத்து விட்டு, நெய்யில் மிளகு, சீரகம் தாளிப்புப் போட்டுக் கிண்டி மூடி வைக்க வேண்டியது.

விரும்பினால் மல்லித் தழை, புதினாத் தழை சேர்த்துக் கொள்ளலாம். மூடியை நீக்கும் முன்பே பிரியாணி கம் நோன்புக் கஞ்சி வாசத்திற்கு இடைப்பட்ட வாசம் கமகமவென்று கிளம்பி வந்து வயிற்றுக்குக் கிளர்ச்சியூட்டும். கத்தரிக்காய் கொத்சு அல்லது, மசாலா எண்ணெய்க் கத்தரிக்காய் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் முற்றிலும் வேறுபட்ட சுவையில் வயிறும் மனமும் நிறைவு கொள்ளும். பலவீனமுற்றவர்கள் இந்த உளுந்துச் சோற்றை உண்ணும்போதே உடல் திண்மை அடைவதை உணர முடியும்.

அடுத்த இதழில் சுவையும், சுகமும் தரும் இதேபோன்ற உணவு ஒன்றைப் பார்க்கலாம்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...

படம்: மதன்சுந்தர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு