பிரீமியம் ஸ்டோரி

ள்ளி செல்லும் குழந்தை, ‘முதுகுவலி’ என்று என்றைக்காவது சொன்னால் போதும், உடனே அந்த வீட்டிலிருக்கும் ‘ஸ்கூல்பேக்’ தாக்குதலுக்குள்ளாகும். ‘தினமும் இப்படிக் கிலோகணக்குல புத்தகங்களை முதுகுல தூக்கிட்டுப்போனா முதுகு என்னத்துக்கு ஆகும்? அதனாலதான் சின்னப்பிள்ளைக்கு முதுகுவலி வருது!’ என்பார்கள் பெற்றோர்.

‘அப்படி அவசரப்பட்டு ஸ்கூல்பேகைக் குற்றம் சொல்லாதீர்கள்’ என்கிறார்கள் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். குழந்தைகளுக்கு ஸ்கூல்பேக் ஆபத்தானது என்று பரவலாக நம்பப்பட்டாலும், இதுவரை அதற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை!

டாக்டர் நியூஸ்!

இதுபற்றி இதற்குமுன் நிகழ்த்தப்பட்டுள்ள 69 ஆராய்ச்சிகளை இந்த நிபுணர்கள் தொகுத்து ஆராய்ந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில், குழந்தைகளுடைய முதுகுவலி, பிற பிரச்னைகளுக்கு முதுகுப்பையைக் காரணமாகச் சொல்ல இயலாது என்கிறார்கள். சொல்லப்போனால், உடற்பயிற்சி வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் கொஞ்சம் எடையைச் சுமந்துகொண்டு நடப்பது முதுகெலும்புக்கு நல்லதுதானாம்; குழந்தைகள் அப்படி எடையைத் தூக்கிப் பழகுவது அவர்களை ஆரோக்கியமாக வைக்குமாம்.

இந்த விஷயத்தில் யார் சொல்வது சரி என்று நிச்சயமாகத் தெரியவேண்டுமானால், ஒரே வழிதான் இருக்கிறது... வெவ்வேறு எடையுள்ள புத்தகப்பைகளைத் தினமும் தூக்கிச்செல்லும் குழந்தைகளைப் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கவனிக்கவேண்டும்; அவர்களுக்கு முதுகுவலியோ மற்ற பிரச்னைகளோ வருகின்றனவா என்று சான்றுகளுடன் நிரூபிக்கவேண்டும்; அப்படியோர் ஆய்வு நிகழாதவரை, ஸ்கூல்பேக் நிரபராதிதான்!

டாக்டர் நியூஸ்!

புகைபிடிக்கும் பழக்கத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியும்; Second-Hand Smoking என்றால், புகைபிடிக்கும் ஒருவர் வெளிவிடும் புகையை இன்னொருவர் சுவாசிப்பது; இதனாலும் பல எதிர்மறை விளைவுகள் உண்டு என்று ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

இப்போது, Third-Hand Smoking என்றொரு புதிய விஷயத்தைக் கண்டறிந்திருக்கிறது ட்ரெக்ஸெல் பல்கலைக்கழகம். மற்ற இரண்டு வகைகளையும்விட இது மிக ஆபத்தானது; ஏனெனில், இந்தப் பிரச்னை எங்கேயும் முளைக்கக்கூடும், யாரையும் பாதிக்கக்கூடும். அதாவது, First-Hand Smoking என்பது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம்: ஒருவர் புகைபிடிக்கிறார், அதனால் அவரே பாதிக்கப்படுகிறார்; Second-Hand Smoking என்பதில் அவருக்கு அருகே உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டிலும் வராதவர்கள், அதாவது, புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுடன் வசிக்காதவர்கள்கூட இந்த Third-Hand Smoking பிரச்னைக்கு ஆளாகலாம் என்கிறார்கள்.

ஏனெனில், ஒருவர் புகைபிடிக்கும்போது வெளிவிடும் துகள்கள் காற்றில் பரவிச் சென்று எங்கே வேண்டுமானாலும் படிந்துகொள்ளலாம்; அதன்பிறகு அவற்றை அகற்றுவது எளிதில்லை; எந்த வீட்டுக்குள்ளும் அலுவலகத்துக்குள்ளும் Third-Hand Smoking பாதிப்பு வரலாம் என்று எச்சரிக்கும் இந்த ஆய்வறிக்கை புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளை இன்னும் தீவிரமாக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

டாக்டர் நியூஸ்!

டல்நலனுடன், மனநலனையும் அமெரிக்கர்கள் கவனிக்கவேண்டும் என்கிறது இன்னொரு கணக்கெடுப்பு. ப்ளூக்ராஸ், ப்ளூஷீல்ட் என்கிற காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுடைய தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் 4.4% பேர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் இந்த விகிதம் கணிசமாக அதிகரித்திருக்கிறதாம்.

இளைஞர்களுக்கு மனச்சோர்வு வர என்ன காரணம்?

‘குழந்தைகள், இளைஞர்கள் மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாவதாக உணர்கிறார்கள்’ என்கிறார் டெக்ஸாஸ் சிறுவர் மருத்துவமனையின் உளவியல் பிரிவுத் தலைவர் டாக்டர் லாரெல் வில்லியம்ஸ். சமூக ஊடகங்களும் இதைத் தூண்டுகின்றன. இப்படி இளவயதில் ஏற்படும் மனச்சோர்வைக் கண்டறிந்து சிகிச்சை தராவிட்டால், அது நெடுநாள்களுக்குத் தொடரக்கூடும். இந்த விஷயத்தில் பெற்றோர்தான் அதிகக் கவனத்துடன் இருக்கவேண்டும், தங்கள் பிள்ளைகளிடம் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் கவனித்து அவர்களுடன் பேசவேண்டும், தேவைப்பட்டால் நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்; இதில் தயக்கமோ அவமான உணர்வோ ஆகாது, உரிய நேரத்தில் சிகிச்சை தந்தால் மனச்சோர்வைச் சமாளிப்பது சாத்தியம்தான்.

டாக்டர் நியூஸ்!

மெரிக்காவிலிருக்கும் விளையாட்டு மருத்துவக் கல்லூரி ஆண்டுதோறும் ‘Fitness Index’ என்ற பெயரில் அந்நாட்டின் முக்கிய நகரங்களை ஆரோக்கிய அடிப்படையில் வகைப்படுத்தி வருகிறது. அந்தப் பட்டியலில் இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்திருக்கும் நகரம், அர்லிங்டன். அடுத்தடுத்த இடங்களில் மினியாபோலிஸ், வாஷிங்டன்.டி.சி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதே பட்டியலின் கீழிடத்தில் உள்ள (அதாவது, ஆரோக்கியம் குறைவான) நகரங்கள்: ஒக்லஹாமா, இண்டியானாபோலிஸ், லூயிஸ்வில்லெ, டெட்ராய்ட், டொலெடோ. உணவுப்பழக்கங்களில் மாற்றங்கள், உடற்பயிற்சி போன்றவற்றின்மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்’ என்று ஆலோசனை சொல்லும் இந்தக் கல்லூரி, ‘அமெரிக்கர்களில் 22%பேர்தான் சுறுசுறுப்பாக இயங்கும் வாழ்க்கைமுறையைப் பின்பற்றுகிறார்கள்’ என எச்சரிக்கிறது. இதனால் உடல்பருமன் அளவு 40%ஐத் தொட்டுவிட்டது, அதனுடன் தொடர்புடைய மருத்துவப் பிரச்னைகள், செலவுகள் அதிகரித்துவருகின்றன. இதெல்லாம் அமெரிக்காவுக்குதான் என்று சும்மா இருந்துவிட இயலாது. அநேகமாக இந்தப் பிரச்னைகள் அனைத்தும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும், நாமும் விழித்துக்கொள்ளவேண்டும்!

ருவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா, இல்லையா என்று எப்படிக் கண்டறிவது?

டாக்டர் நியூஸ்!


இதற்கு எத்தனையோ பரிசோதனைகள் இருக்கின்றன. ஆனால், அடிப்படையாக ஒருவருடைய ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான வழிகள் என்று சில பரிசோதனைகளைத் தேர்ந்தெடுத்துப் பட்டியலிட்டிருக்கிறது உலக சுகாதார அமைப்பு. ரத்தத்தில் சிவப்பு, வெள்ளையணுக்களை அளவிடுவது, சர்க்கரையின் அளவைக் கண்டறிவது, கர்ப்பமாக இருப்பதைப் பரிசோதித்தல், மலேரியா, HIV, ஹெபாடிடிஸ் B போன்ற நோய்களைக் கண்டறிவது உள்ளிட்ட பல முக்கியமான பரிசோதனைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. முழுப் பட்டியலை இங்கே வாசிக்கலாம்: http://www.who.int/medical_devices/diagnostics/WHO_EDL_2018.pdf

இந்தப் பரிசோதனைகளெல்லாம் நகரங்களில், வளர்ந்த நாடுகளில் வாழ்கிறவர்களுக்கு ஏற்கெனவே கிடைக்கின்றன. ஆனால், உலகின் எல்லா மூலைகளிலும் எல்லாருக்கும் இந்தப் பரிசோதனைகள் சென்றுசேரும்போதுதான் அவர்களுடைய ஆரோக்கியத்தை நம்மால் உறுதிசெய்ய இயலும்;  அவர்களுடைய உடல்நிலையைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சைகளைப் பரிந்துரைக்க இயலும் என்று வலியுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு.

டாக்டர் நியூஸ்!

ருவருக்கு உடல்நலம் சரியில்லை, அல்லது, ஏதோ விபத்து நிகழ்ந்திருக்கிறது, இந்தச் சூழ்நிலையில், அருகில் இருக்கிறவர்கள் என்ன செய்யவேண்டும்?

108ஐ அழைக்கவேண்டும்; உடனே ஆம்புலன்ஸ் வந்து அவரைக் காப்பாற்றும். ஆனால், 108ஐ அழைத்தால் மட்டும் போதுமா? பாதிக்கப்பட்ட நபருடைய பிரச்னையைப் பற்றித் தெளிவாக விளக்கவேண்டும், அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து வருகிறவர்கள் சரியான தயாரிப்புகளுடன், மருந்துகளுடன் வர இயலும்; பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற இயலும். இதற்காக, இங்கிலாந்தில் ஒரு மென்பொருள் தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்: யார் ஆம்புலன்ஸை அழைக்கிறார்களோ அவர்களுடைய செல்போனுக்கு ஓர் இணைய இணைப்பு வரும், அதை க்ளிக் செய்தால், அந்த செல்போனிலிருந்து வீடியோ படங்களை மருத்துவமனைக்கு நேரடியாக ஒளிபரப்பலாம். மருத்துவர்கள் அங்கிருந்தபடி நிலைமையைப் பார்த்துப் புரிந்துகொண்டு உரிய ஏற்பாடுகளுடன் ஆம்புலன்ஸை அனுப்பி வைப்பார்கள்; இதன்மூலம், பாதிக்கப் பட்டவருடைய உயிரைக் காப்பாற்றும் சாத்தியங்கள் பலமடங்கு அதிகரிக்கும்.

- என். ராஜேஷ்வர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு