Published:Updated:

“புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 “புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி
“புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி

தன்னம்பிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

பிறவிக் குறைபாடு, எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து, தொற்றுநோய் எனப் பல வழிகளில் உடல்ரீதியான பிரச்னைகள் வரலாம். எப்படியிருப்பினும் சரிசெய்துவிடலாம் என மருத்துவமனையைத் தேடிச் செல்லும் நம்பிக்கைதான் நம்மை இயங்கவைக்கும். அத்தகைய நம்பிக்கையோடு மருத்துவமனைக்குச் சென்றும், மருத்துவர்களின் கவனக்குறைவாலும் நேர்மையற்றப் போக்காலும் பாதிக்கப்பட்டு, மனஉறுதியால் மட்டுமே தன்னைத்தானே மீட்டு எடுத்திருக்கிறார் அன்னலட்சுமி.

14 வயதில் முதுகுத்தண்டுவடப் பகுதியில் வலி ஏற்பட, பரிசோதனைக்கு உட்படுத்தி, கட்டி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

 “புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி

``தினமும் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்ததும் கால்வலி அதிகமாயிருக்கும்.  கால்ல ஏதோ பிரச்னைனு நினைச்சுதான் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அம்மாவும் அப்பாவும் ரொம்பவும் பயந்து போயிருந்தாங்க. நிறைய டெஸ்ட் எடுத்துப் பார்த்துட்டு, `முதுகுத்தண்டுவடப் பகுதியில கட்டி இருக்கு, உடனடியா அறுவைசிகிச்சை செய்யணும்’னு சொன்னாங்க. அரசு மருத்துவமனையா இருந்தாலும், அப்போதைக்கு அதுக்காக ஆன செலவுகள் எங்கக் குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய தொகைதான். ஆபரேஷன் முடிஞ்சதுனால நடக்க முடியாம இருக்குன்னு நினைச்சேன். ஆனா, காயம் ஆறின பிறகும்கூட நடக்க முடியலை. தவறான அறுவைசிகிச்சை செய்துட்டு, அது தெரியவந்த பிறகும்கூட அங்கே இருந்த டாக்டர்ஸ் அமைதியாவே இருந்திருக்காங்க.’’ குரல் அடங்கி மீண்டும் தொடர்ந்தார் அன்னலட்சுமி.

 “புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி


``அறுவைசிகிச்சைக் காயங்கள் ஆறினாலும், நடக்க முடியாம இருக்கேன்னு ஹாஸ்பிட்டல் டாகுமென்ஸோடு அங்கே போனோம். `பார்க்கறோம்’னு அந்த ஆவணங்களை எல்லாம் வாங்கிட்டு அனுப்பிட்டாங்க. அதுக்கு அப்புறம், அந்த மருத்துவர்கள் எங்களோடு பேசலை. அந்த ஆவணங்களையும் எங்கக்கிட்டக் கொடுக்கலை. நானும் அம்மா அப்பாவும் கலங்கி நின்னப்பவே காபி ஆர்டர் பண்ணிக் குடிச்சாங்க. புறக்கணிப்பும் அநீதியும்தாங்க பெரிய வலிகள். அதுதான் இப்பவும் வலிக்குது. சக்கர நாற்காலியே நிரந்தரமாகிடுச்சு. ஆவணங்களை மறைச்சுட்டதால, சட்டப்படி என்னால எதுவும் பண்ண முடியலை. சட்டப்படி எதையும் செய்யவும் எங்களுக்குப் பொருளாதார வசதிகள் இல்லை” என்கிறார்.

தனக்கு வரும் தடைகள் அனைத்தும் தனக்கு மட்டுமே ஏற்பட்டதாகக் கருதுவது மாயை என்கிறார் அவர். ``பத்து நாள்களுக்கு முன்னாடிவரை நடக்க முடிஞ்சுது. இப்போ எல்லாம் முடங்கி, சக்கர நாற்காலியிலேயே முழு நேரமும் வசிக்கணும்னு ஒரு நிலைமை வந்தா எப்படியிருக்கும்? பத்தாம் வகுப்புத் தேர்வுகளை எல்லாம் பிரைவேட்டா எழுதி பாஸ் பண்ணினேன். எல்லாருக்கும் கஷ்டம் கொடுக்கிறேன்னு தெரிஞ்சுது. வாழ்க்கையை முடிச்சுக்கலாம்னு, தற்கொலைக்கு முயன்றேன். அதிலிருந்தும் காப்பாத்தினாங்க. உலகத்துல யார்மேலயும் வெறுப்பைக் காட்டாம இருக்க முடியலை. நானே என்ன சமாதானப்படுத்திக்க ஆரம்பிச்சேன். ஹையர் செகண்டரி அப்புறம் டிப்ளோமா. வீட்டிலிருந்து சின்னச் சின்ன ஆன்லைன் வேலைகள் செய்து என்னுடைய தினசரி தேவைகளைப் பார்த்துக்கிறேன். `மாற்றுத்திறனாளிகள் வாழவேண்டும்’ என்று அரசோ சமூகமோ நினைத்தால், அவர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் வசதிகளையும் அவர்கள் அமைச்சுத்தரணும்’’ என்கிறார் அன்னலட்சுமி.

தினமும் கிடைக்கும் கூலிவேலைகளைச் செய்து, அன்னலட்சுமிக்கு உறுதுணையாக இருக்கும் அவரின் பெற்றோர், அதை ஆமோதிக்கிறார்கள். ``எனக்கு அப்புறமும் என் மக, மரியாதையா நடத்தப்படணும்” என்கிறார் அன்னலட்சுமியின் தந்தை.

 “புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி

வீட்டுக்குள்ளேயே பெரும் தனிமையை உணர்ந்த அன்னலட்சுமி, பள்ளிக்காலத்தில் காட்டிய விளையாட்டு ஆர்வத்தில் கவனத்தைத் திருப்பியிருக்கிறார். மாரத்தான்களில் பங்கேற்று வெல்வது, குண்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்பதைப் பொழுதுபோக்காகத் தொடங்கிய அன்னலட்சுமிக்கு, அவையே இப்போது அடையாளங்களாகியுள்ளன. மாநில அளவிலான குண்டு எறிதல் (F 54), ஜேவலின் த்ரோ போட்டிகளில் இருமுறைப் பதக்கங்களைத் தட்டியுள்ளார். தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தைத் தூண்ட, பல இடங்களில் விழிப்புஉணர்வு மையங்களில் கலந்துகொள்வதுடன், பங்கெடுக்கும் மாரத்தான் ஓட்டங்களிலும் அந்த விழிப்புஉணர்வையே பதாகைகளாக ஏந்துகிறார்.

இந்தியாவில் மருத்துவர்கள் செய்யும் மருத்துவத் தவறுகள் காரணமாக மட்டும் ஆண்டுக்கு 52 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவக் கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 100 பேரில் 6 பேருக்குத் தவறான மருந்துகள் மூலமாகவோ அல்லது மருந்துகளின் செயல்பாட்டில் உள்ள மாற்றங்கள் காரணமாகவோ மருத்துவத் தவறுகள் நேர்கின்றன. வளரும் நாடுகளில் அதிக மருத்துவத் தவறுகள் நிகழும் நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு முன்னணி வரிசையில் இடம் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் `மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காததே’ என்கிறது ஹார்வர்டு ஆய்வு.

அன்னலட்சுமியிடம் ``உங்கள் இயக்கத்தை முடக்கியிருக்கிறது மருத்துவத் தவறு. இத்தகைய தவறுகளை நோக்கிய உங்களின் பார்வைதான் என்ன?’’ என்று கேட்டபோது, ``இனி தவறுகள் நடக்காமல் தடுப்பது. நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்க வைப்பது. தனக்கு மருத்துவத் தவறு நடந்திருக்கிறது என்று தெரியாமலேயே, அதன் விளைவுகளைச் சுமந்து வாழும் மனிதர்கள்தான் இங்கு அதிகம். தவிர, என்னைப்போல அதைத் தெரிந்து கொண்டவர்களுக்கும் இழுத்தடிக்காமல் நியாயம் பெற்றுத்தரும் அமைப்பு எதுவும் உருவானதாகத் தெரியவில்லை” என்கிறார் அன்னலட்சுமி. ``எனக்கு நடந்ததைப் பற்றி இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், ஆதாரங்களை அவர்கள் அழித்து விட்டார்கள். அரசு, மருத்துவத் தவறுகளை முறையிடுவதற்கான அமைப்பை நிறுவட்டும்” என்கிறார் அழுத்தமாக.

- ம.குணவதி

படங்கள்: தே.அசோக்குமார்

 “புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி

ந்தியாவில் மருத்துவர்கள் செய்யும் மருத்துவத் தவறுகள் காரணமாக மட்டும் ஆண்டுக்கு 52 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவக் கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 100 பேரில் 6 பேருக்குத் தவறான மருந்துகள் மூலமாகவோ அல்லது மருந்துகளின் செயல்பாட்டில் உள்ள மாற்றங்கள் காரணமாகவோ மருத்துவத் தவறுகள் நேர்கின்றன. வளரும் நாடுகளில் அதிக மருத்துவத் தவறுகள் நிகழும் நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு முன்னணி வரிசையில் இடம் கிடைத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு