Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 11வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

கிருமிகள், அவற்றின் வளர்ச்சிகள், தொற்றுநோய் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்குப் பின்புலமாக இருந்த மருத்துவ மேதைகள் குறித்தெல்லாம் பார்த்தோம். இனி, தொற்றுநோய்களின் உலகத்திற்குள் நுழைவோம். தொற்றுநோய்களில், உலகை மிரட்டும் கொடூர நோய் என்றால் அது காசநோய்தான். ‘மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்’ (Mycobacterium Tuberculosis) என்ற நுண்கிருமியால் வரக்கூடிய இந்த நோயை டி.பி (TB) என்று அழைக்கிறோம்.

தொற்று நோய்களின் உலகம்!

காசநோய் மிகப்பழைமையான நோய். 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மிகளின் தலை மற்றும் முதுகுத்தண்டு வடத்தில் காசநோய் கிருமிகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆக, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித குலத்துக்குச் சவாலாக இருந்து வருகிறது. 1700- 1900-க்கு இடைப்பட்ட 200 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 கோடி பேர் காசநோயால் இறந்திருக்கிறார்கள்.  உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, இந்தியாவில், 2016-ல் மட்டும் 28 லட்சம் பேர் காசநோயால் இறந்திருக்கிறார்கள். உலகத்தில், அதிக காசநோயாளிகளைக் கொண்ட நாடு இந்தியாதான்.  இங்கு, ஓர் ஆண்டுக்கு 63 லட்சம் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள். அதிக அளவில் மக்களின் உயிர் பறிக்கும் காரணங்களில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது காசநோய். உயிரைப் பறிக்கும் தொற்றுநோய்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் காசநோய்தான்.

1980-களில் காசநோயின் தாக்கம் திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. காரணம், ஹெச்ஐவி நோய் அதிவேகத்தில் பரவத் தொடங்கியது அப்போதுதான். ஹெச்.ஐ.வியும் காசநோயும் உடன்பிறந்த சகோதரர்கள் மாதிரி. யாருக்கு ஹெச்.ஐ.வி இருக்கிறதோ, அவருக்குக் காசநோய் வர வாய்ப்பு அதிகம். இப்போது ஹெச்.ஐ.வி ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது. அதனால் காசநோயும் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

தொற்று நோய்களின் உலகம்!

ஆனால், காசநோய் கிருமிகள், மருந்துகளை மீறி வளரும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன. இந்த நிலைக்குப்  பெயர்,  ‘மல்டி டிரக் ரெசிஸ்டென்ட் டி.பி’. (Multi-Drug-Resistant Tuberculosis).  சுருக்கமாக எம்டிஆர்-டி.பி. (MDR-TB).  ரிஃபாம்பிசின் (Rifampicin), ஐ.என்.ஹெச் (I.N.H. Tablet) போன்ற  பிரதான மருந்துகளுக்குக் கட்டுப்படாத  காசநோய்க்குப் பெயர்தான் எம்டிஆர்-டி.பி. தமிழில் இதை, ‘பன்மடங்கு எதிர்ப்புக் காசநோய்’ என்று சொல்வோம். இன்று உலகை அச்சுறுத்தும் பெரிய சுகாதாரப் பிரச்னை, இதுதான். எம்டிஆர்-டி.பி.யைக் கண்டுபிடிக்க வழியிருக்கிறது. ஆனால், எல்லா இடங்களிலும் அதற்கான வாய்ப்பில்லை. பாதிக்கப்பட்டவரிடம் இருந்து கிருமியை எடுத்து, வளர்த்துதான் கண்டுபிடிக்க முடியும். சில

தொற்று நோய்களின் உலகம்!

இடங்களில்தான் சோதனை மையங்கள் இருக்கின்றன. அதனால், நோயாளி, நோயைக் கண்டுபிடித்துச் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பாகவே நிறைய பேருக்கு காசநோயைப் பரப்பி விடுகிறார்.

காசநோய் மருத்துவத்தில் மிக முக்கியமான தருணம் என்பது மார்ச், 24-1882. அன்றைய தினம் தான் ராபர்ட் ஹெர்மான் காக், (Robert Hermann Koch)   காசநோயைப் பற்றி ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டார். காசநோயை உருவாக்கும் கிருமியைக் கண்டுபிடித்து, அதை ஓர் எலிக்குச் செலுத்தி, அந்த எலி காசநோயால் பாதிக்கப் பட்டதை மெய்ப்பித்துக் காட்டினார். இதை ‘காக் பாஸ்டுலேட்ஸ்’ (Koch’s Postulates) என்று மருத்துவத் துறையில் சொல்வார்கள். அதற்கு முன்புவரை, காசநோய் எதனால் பரவுகிறது என்றே யாருக்கும் தெரியாது. மருத்துவத் துறையில் நிகழ்ந்த மிக முக்கியமான கண்டுபிடிப்பு இது. இதற்காகவே 1905-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தொற்று நோய்களின் உலகம்!

இரண்டு வாரங்களுக்கு மேல் சளியுடன் கூடிய இருமல், மாலை நேரத்தில் காய்ச்சல் வருவது, பசியின்மை, சளியுடன் ரத்தம் கலந்து வருவது, உடல் எடை குறைவது போன்றவை காசநோயின் அறிகுறிகள். ’காசநோய் என்றால், அது நுரையீரலில் தான் வரும்’ என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள். ஆனால், முடி, நகம்... இந்த இரண்டு உறுப்புகளைத் தவிர எங்கு வேண்டுமானாலும் காசநோய் வரும்.

அதுபற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

- களைவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு