Published:Updated:

அதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை!
அதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை!

ஹெல்த்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கிறது ‘ஆர்கானிக் உணவு’ என்கிற வார்த்தை. அமேசானில் ஆர்டர் செய்வது தொடங்கி, அக்கம்பக்கத்து ஊர்களில் தேடுவது வரை அபாரமாக நடக்கிறது ஆர்கானிக் தேடல். பலரும் இவற்றை நாடிச் செல்வதற்குக் காரணம், சர்க்கரைநோய், இதயநோய், புற்றுநோய் என வாழ்வியல் நோய்கள் அதிகரித்து வருவதுதான். மக்களின் இந்த ஈர்ப்பு ஆர்கானிக் சந்தையைப் பெரிதாக வளரச் செய்திருக்கிறது. வீதிக்கு வீதி ஆர்கானிக் பொருள்களை விற்கும் கடைகளும், தெருவுக்குத் தெரு ஆர்கானிக் உணவகங்களும் முளைத்துக் கிளைவிட ஆரம்பித்திருக்கின்றன. `ஆர்கானிக்’ என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுபவையெல்லாம் உண்மையிலேயே ஆர்கானிக்தானா? ஆர்கானிக் பொருள்களை அடையாளம் காண்பது எப்படி? எல்லாக் கேள்விகளுக்கும் விடை தேடுவோம்.

அதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை!


‘‘எல்லாத் துறைகளிலும் நடக்கும் தவறுகளைப்போல இயற்கை விவசாயத்திலும் தவறுகள் நடக்கின்றன. மக்களின் ஆர்வத்தைத் தங்கள் லாபத்துக்கான முதலீடாகப் பயன்படுத்துவோரும் இருக்கிறார்கள். இயற்கை விவசாயம் செய்வதாக இரண்டு ஏக்கர் நிலத்துக்குச் சான்றிதழ் பெற்றுவிட்டு 20 ஏக்கரில் ரசாயன முறை விவசாயம் செய்து `இயற்கை வேளாண் பொருள்’ என்ற பெயரில் விற்பனை செய்பவர்களும் இருக்கிறார்கள். `இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்’ என்பதற்கு இப்போதிருக்கும் ஒரே ஆதாரம், சான்றிதழ்கள்தான். ஆனால், சான்றிதழ் கொடுப்பது மட்டுமே தீர்வைத் தந்துவிடாது.

`ஆர்கானிக்’ சான்றிதழ் பெற்றிருப்பதால் மட்டுமே ஒன்றை, செயற்கை ரசாயனங்கள் இடாமல் விளைந்த பொருள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. அதேபோல, ஒரு பொருளைப் பார்த்ததுமே `இது ஆர்கானிக்தான்’ என்றும் சொல்லிவிட முடியாது. இயற்கை விளைபொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அவற்றின் தன்மையை உணர்ந்து மட்டுமே வேறுபாட்டைக் கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக, மஞ்சள்தூளைப் பயன்படுத்துகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இயற்கை விவசாயத்தில் விளைந்த மஞ்சள்தூளைப் பயன்படுத்துவதற்கும் ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் போட்டு விளைவிக்கப்பட்டதைப் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் தெரியும். காலப்போக்கில் அதைக் கண்டுபிடித்துவிட முடியும். மணம், ருசி, கெட்டுப்போகாத தன்மைகள் மூலம் அதை அறிந்துகொள்ளலாம்.

அதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை!

மாம்பழம் சாப்பிடும்போது அதன் தோலையும் சேர்த்துச் சாப்பிட்டால்தான் முழுமையான சத்துகள் கிடைக்கும். ஆனால், மாமரங்களுக்கு உரம் வைக்கிறார்கள். பூக்கும் காலத்தில் பூக்கள் கொட்டாமலிருக்க ரசாயனங்களைத் தெளிக்கிறார்கள். காய்களை கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைக்கிறார்கள். இப்படித் ‘தயாரிக்கப்படும்’ பழத்தைத் தோலுடன் சாப்பிட்டால், பிரச்னைகள்தானே ஏற்படும்?

அதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை!


மரத்தில் காய்க்கும் மாங்காய்கள் அனைத்தும் ஒரேநேரத்தில் பழமாகிவிடாது. அதனால் மொத்தமாக மாங்காய்களைப் பறித்து, அவற்றை ரசாயன முறையில் பழுக்கவைக்கிறார்கள். தர்பூசணி, வாழைப்பழம் எனப் பலவற்றையும் இப்படிப் பழுக்கவைப்பது, பெரும்பாலான வியாபாரிகளின் வழக்கமாகவே மாறிவிட்டது. நாம் வாங்கும் பொருள் ரசாயனக் கலப்பில்லாததா, இயற்கை முறையில் பழுத்ததா? என்பதையெல்லாம் யோசித்துப் பார்த்துதான் வாங்க வேண்டும். பழமாக இருக்க வேண்டும் என்று தேடிப்பிடித்து வாங்கக் கூடாது. காயாக வாங்கலாம். அவை, நம் கண்முன் பழுக்கும்போது உண்மைத்தன்மை தெரியவரும். `இயற்கை விளைபொருள்’ என்ற பெயரில் விற்கப்படும் பொருள்கள் ஒளிவு மறைவில்லாமல், வெளிப்படையாக விற்கப்பட வேண்டும். அவை எங்கே உற்பத்தியாகின்றன, யாரிடமிருந்து பெறப்பட்டன என்பது சொல்லப்பட வேண்டும். மக்களுக்கும் அது குறித்த விழிப்புஉணர்வு வர வேண்டும்’’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து.

 ‘‘பழைய சோறு பல்வேறு நோய்களைப் போக்கக்கூடியது. ஆனால், இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அரிசியில் நீராகாரமும் பழைய சோறும் பெற முடியாது. கெட்டுப்போய்விடும். அந்த அளவுக்கு அதில் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் நிறைந்திருக்கின்றன. இயற்கை முறையில் விளையும் நம் பாரம்பர்ய அரிசிகளில் கிடைக்கும் பழைய சோறும் நீராகாரமும் சாப்பிடச் சுவையாக இருக்கும்; எளிதில் கெட்டும் போகாது. பாரம்பர்ய அரிசிகளைப் பயன்படுத்தினால், சர்க்கரை நோய் போன்ற வாழ்க்கைமுறை நோய்கள்கூட நெருங்காது.

`ஆர்கானிக்’ கடைகளுக்குச் செல்லும்போது, `இந்தப் பொருள் எங்கே உற்பத்தியானது?’ என்று கேட்க வேண்டும். விளைவித்த விவசாயிகளின் முகவரி, தொலைபேசி எண்களைக் கேட்டு வாங்கி அவர்களோடு பேசிப் பார்க்க வேண்டும்.

அதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை!ஒரு லிட்டர் நல்லெண்ணெய் எடுக்க, மூன்று கிலோ எள் தேவைப்படும். இன்று ஒரு கிலோ எள்ளின் விலை சுமார் 100 ரூபாய். ஆக 300 ரூபாய்க்கு எள் வாங்கி, அதை ஆட்டி, எண்ணெய் பிழிந்து எடுத்தால், அதற்கும் மேலாகத்தான் விலை வைக்கவேண்டியிருக்கும். எல்லா எண்ணெய்களிலும் கலப்படம் இருக்கிறது. விளம்பரங்களைப் பார்த்து எதையும் வாங்காதீர்கள். அவை நல்ல உணவாக இருக்காது; அவற்றில் ஆரோக்கியமும் இருக்காது’’. உணவு குறித்தப் புரிந்துணர்வின் அவசியத்தை வலியுறுத்துகிறார் அனந்து.

``ஆர்கானிக் பொருள்தானா?’ என்பதைக் கண்டறியப் பரிசோதனைக் கூடங்கள் இருக்கின்றன. ஆனால், மிகவும் குறைவாகவே இருக்கின்றன. பரிசோதிக்க நிறையக் கட்டணமும் வசூலிக்கிறார்கள். அரசின் சார்பில் மாவட்டம்தோறும் பரிசோதனைக் கூடங்கள் அமைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் உண்மையான ஆர்கானிக் பொருள்களை அடையாளம் கண்டு வாங்க முடியும்; வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் பயம் வரும். இன்று காற்று, நிலம், நீர் என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இவற்றை மீட்டெடுக்க வேண்டுமானால் இயற்கை விவசாயம் முழுமையாகச் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் எல்லாநிலைகளிலும் மாசு குறையும். ஆங்காங்கே சில இயற்கை அங்காடிகள் மட்டும் இருந்தால் போதாது. அரசாங்கம் முழு முயற்சியெடுத்து இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைப்பது, இயற்கை விளை பொருள்களைச் சந்தைப்படுத்துவது, இடுபொருள் உதவி தருவது என எல்லா நிலைகளிலும் அரசு உதவ முன்வர வேண்டும். உழவர் சந்தை போன்ற திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்’’ என்று வேண்டுகோளும் வைக்கிறார் அனந்து.

`ஆர்கானிக் விளைபொருள்களை அடையாளம் காண்பது எப்படி?’ என்கிற கேள்விக்கு விளக்கமளிக்கிறார் முன்னோடி இயற்கை விவசாயியான அரச்சலூர் செல்வம்.

அதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை!

‘‘இயற்கை விவசாயத்தில் விளைந்தது என்றோ, பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரத்தில் வளர்ந்தது என்றோ பார்த்த மாத்திரத்தில் ஒன்றைக் கண்டுபிடித்துவிட முடியாது. அந்த அளவுக்குத் தொழில்நுட்பமும் வளரவில்லை. ரசாயன உரத்தில் வளர்ந்த காய்கறிகள், கீரைகள் சீக்கிரம் கெட்டுவிடும். இயற்கை உரத்தில் வளர்ந்தது என்பதை நேரடியாக விளைநிலத்துக்குச் சென்று பார்த்துத்தான் கண்டுபிடிக்க முடியும். ஒரு விளைபொருள், `ஆர்கானிக்’ என்பதைக் கடைக்காரர்களாலும் கண்டுபிடிக்க முடியாது. எனவே நுகர்வோராகிய நாம்தான் அவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

கூடியவரை நாம் வசிக்குமிடத்தின் அருகிலுள்ள பகுதிகளில் விளையும் விளைபொருள்களை

அதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை!

வாங்குதுதான் நல்லது. கடைக்காரர்கள் எந்த விவசாயியிடம் இருந்து வாங்கப்பட்டது என்பதை வெளிப்படையாகச் சொன்னால்தான் அதில் உண்மைத்தன்மை இருக்கும். ஆர்கானிக் விளைபொருளைக் கண்டறியப் பரிசோதனைகள் இருந்தாலும், அவற்றின் மூலம் அதைத் தெரிந்துகொள்ள நாளாகும். அதற்குள் நாம் வாங்கிய பொருள்களும் வீணாகிவிடும். மொத்தத்தில் விவசாயத்தில் வெளிப்படைத்தன்மை பெருகவேண்டும். பெருவாரியானவர்கள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும்போது மட்டுமே இது சாத்தியப்படும்’’ என்கிறார் செல்வம்.

‘`ஆர்கானிக்’கை அறிந்துகொள்ள இயற்கை விவசாயம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்’’ என்கிறார் இயற்கை ஆர்வலரும் மூலிகை ஆராய்ச்சியாளருமான ஆறுமுகம்.

``மானாவாரி நிலங்களில் விளையும் கேழ்வரகு, நிலக்கடலை, உளுந்து, எள் மற்றும் சிறுதானியங்கள் சத்து நிறைந்தவை. மானாவாரி நிலங்களில் பயிரிடுவோர் பெரும்பாலும் `ஆர்கானிக்‘ சான்றிதழ் பெறுவதில்லை என்பதால், விளைபொருள்களை அவர்களால் வெளிச்சந்தைகளில் விற்பதில் சிரமம் ஏற்படுகிறது. என்.ஜி.ஓ-க்கள் மற்றும் அரசு உதவியுடன் தன்னிச்சையாக இயற்கை உரம், அசோஸ்பைரில்லம், சூடாமோனஸ் போன்ற உயிர் உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவை தவிர கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் தேவைகளுக்காக இடுபொருள்களை விவசாயிகளுக்குக் கொடுத்து விவசாயம் செய்வதும் நடக்கிறது. என்.ஜி.ஓ-க்கள், கார்ப்பரேட் கம்பெனிகளின் உதவியுடன் விவசாயம் செய்பவர்கள் `ஆர்கானிக்‘ விவசாயம் செய்வதற்கான சான்றிதழ்களை எளிதாகப் பெற்றுவிடுவார்கள். `ஆர்கானிக்‘ சான்றிதழ்களைப் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதால் பல சிறு விவசாயிகள் சான்றிதழ் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குவதில்லை.

இப்போதெல்லாம் மலைப்பிரதேசங்களைத் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் பசுமைப்புரட்சி சார்ந்த ரசாயன விவசாயம்தான் நடக்கிறது. இந்த நிலங்களிலெல்லாம் முதலில் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு இயற்கை விவசாயம் செய்து மண்ணை வளப்படுத்த வேண்டும். முறையாக இடுபொருள்களைப் பயன்படுத்த வேண்டும். சில இடங்களில் இயற்கைவழி விவசாயம் நடந்துவருகிறது. இயற்கை விவசாயத்துக்கு மாறும்போது, அதற்கெனப் பிரத்யேகமாகச் சில முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். அதற்கெனத் தனியாக நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். அதனால், விளைபொருள்களின் விலையை உயர்த்தி விற்றால்தான் கட்டுப்படியாகும்.

அதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை!முழுமையான இயற்கை விவசாயம் என்றால் அதற்கு ஆடு, மாடுகள் வளர்க்க வேண்டும். விவசாய நிலங்களில் பழைய உயிர்ச்சூழல் உருவாக வேண்டும். சொந்த மாடுகளிலிருந்து பெறப்பட்ட மாட்டுச் சாணத்தையே இயற்கை விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும். விதைகளை அவர்களாகவே சேமித்து, பயன்படுத்தும்படியாக இருக்க வேண்டும். இவற்றோடு, இயற்கை விவசாயம் செய்வதற்கான வரவு செலவுகள் ஒழுங்காக இருக்கின்றனவா என்பதைக் கண்காணித்த பிறகே `ஆர்கானிக்‘ சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

மண்புழு உரம், உயிர் உரங்களைப் பயன்படுத்திப் பழையநிலைக்கு மாறினால்தான் முழுமையான இயற்கை விளைபொருள்கள் கிடைக்கும். நாங்கள் சோதனை முறையில் இயற்கை மற்றும் ரசாயன விவசாயம் செய்ததில் ஆர்கானிக் எனப்படும் இயற்கை விவசாயத்தில் 10 சதவிகிதம் அதிக விளைச்சல் கிடைத்தது’’ என்கிறார் ஆறுமுகம்.

‘‘காயோ, கனியோ இயற்கை முறையில் விளைந்தால்தான் அதன் மருத்துவக் குணம் நமக்குக் கிடைக்கும். ரசாயனம் தெளிக்கப்பட்டதாக இருந்தால், எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். அதாவது, நோயைக் குணப்படுத்துவதற்குப் பதில் புதிதாக வேறொரு பிரச்னையை ஏற்படுத்திவிடும். நோய்க்கு என்னதான் மருந்து சாப்பிட்டாலும் நாம் உண்ணும் உணவு சரியில்லையென்றால் மருந்து சாப்பிட்டு எந்தப் பயனும் இல்லை. அதேபோல ஆர்கானிக் என்ற பெயரில் விற்கப்படும் பொருள்களை கண்ணை மூடிக்கொண்டு வாங்கிச் சாப்பிடுவதால் எந்தப் பயனும் இல்லை’’ என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

- எம்.மரியபெல்சின்

ஆர்கானிக் அடையாளங்கள்

இயற்கைமுறையில் விளைந்த காய்கறிகள் இயல்பான அளவில் இருக்கும். பூச்சித் தாக்குதல் அல்லது பூச்சி அரிப்புடன் காணப்படும்; சில காய்களில் புழுக்கள் காணப்படும்; காய்கள் பார்ப்பதற்குப் பளபளப்பாக ஓரே அளவில் இருக்காது. வளைந்தும் நெளிந்தும் கோணலாகவும் இருக்கும்; லேசான சுருக்கங்களுடன் காணப்பட்டாலும், கெட்டுப்போகாமலிருக்கும்; ஆர்கானிக் கத்திரிக்காய் என்றால், அதிலிருந்து ஒருவித வாசனை வீசும். சமையலில் சீக்கிரம் வெந்துவிடும். ஃப்ரிட்ஜில் வைக்காமல் காற்றுப் படும்படி வைத்திருந்தால் கெட்டுப் போகாது. ஆனால், பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட கத்திரிக்காய் பளபளப்பாக இருக்கும்; அளவில் பெரிதாக இருக்கும். அவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டியது அவசியம். இயற்கை முறையில் விளைந்த கீரைகளில் ஆங்காங்கே பூச்சி அரித்திருக்கும். ரசாயனம் பயன்படுத்தப்பட்ட கீரைகள் எந்தச் சேதாரமும் இல்லாமல் காணப்படும்.

வெண்டைக்காயின் சிறப்பே அதை உடைத்தால் அதிலிருந்து வெளியாகும் ஒருவிதக் கொழகொழப்புத்தன்மையும் அதன் மேல் காணப்படும் மெல்லிய முடிகளும்தான். ஆனால், இன்றைக்கு ரசாயன உரம் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் வெண்டைக்காயில் அவற்றைப் பார்க்கவே முடிவதில்லை.

மாம்பழங்களில் வண்டுகள் இருந்தால் இயற்கையில் விளைந்தவை என்று கண்டுகொள்ளலாம். இந்தப் பழங்களின் ருசியே தனி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு