Published:Updated:

ஓ பாசிட்டிவ் பிடிக்கும், கார்பன் டை ஆக்ஸைடு மோப்பம் பிடிக்கும்... ஏடிஸ் கொசுக்களின் குணங்கள்! #Wolbachia #Dengue

ஓ பாசிட்டிவ் பிடிக்கும், கார்பன் டை ஆக்ஸைடு மோப்பம் பிடிக்கும்... ஏடிஸ் கொசுக்களின் குணங்கள்! #Wolbachia #Dengue
ஓ பாசிட்டிவ் பிடிக்கும், கார்பன் டை ஆக்ஸைடு மோப்பம் பிடிக்கும்... ஏடிஸ் கொசுக்களின் குணங்கள்! #Wolbachia #Dengue

லகிலேயே கொடிய உயிரினங்கள் எவை என்று கேட்டால் சிங்கம், புலி, சிறுத்தை, முதலை, பாம்பு என்று வரிசைப்படுத்துவோம். அந்த வரிசையில் வௌவால்களையும்கூட சுலபமாகச் சேர்த்துவிடுவோம். ஆனால், இவையெல்லாம் சேர்ந்து பலி கொண்ட மனித உயிர்களைக் காட்டிலும், அதிகளவு மனித உயிர்களைப் பலி வாங்கியிருப்பது, எப்போதும் நம்முடனேயே வாழும் சின்னஞ்சிறு கொசுக்கள்தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஏழே ஏழு மில்லிமீட்டர் அளவு மட்டுமே உள்ள, கொசு என்ற இந்த மிகச்சிறிய உயிரினம், மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யா, ஜிகா, யெல்லோ ஃபீவர் (Yellow Fever), மூளைக் காய்ச்சல், யானைக்கால் நோய் போன்ற பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதுடன், ஆண்டுதோறும் ஏழு லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளுக்கும் காரணமாக விளங்குகின்றன. அதிலும் பெரும்பாலும் இவை அதிகமாகப் பாதிப்பது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே!

தற்போது ஊரெங்கும் பரவிவரும் டெங்கு காய்ச்சல், `டெங்கு' (Dengue) என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இந்தக் காய்ச்சலுக்குக் காரணமான, `ஏடிஸ் எஜிப்தி' (Aedes aegypti) என்ற கொசு உண்மையில் கொசுக்களிலேயே சிறிய வகை கொசு ஆகும். மழைக்காலம் வந்தவுடன், முன்னறிவிப்பின்றி வரும் டெங்கு காய்ச்சலால் ஒவ்வொரு வருடமும், உலகளவில் ஐந்து கோடி பேர் பாதிப்படைகின்றனர். இந்தியாவில், கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் டெங்குவை கவனிப்பதைத் தாமதிப்பதால் ஏற்படும் இழப்புகளும் பாதிப்புகளும் பலமடங்கு பெருகியுள்ளது. 

சென்ற ஆண்டில் (2017) மட்டும் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது கடந்த 10 வருடங்களில் 300 சதவிகிதம் அதிகம் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்சல், பொதுவாக DEN 1, DEN 2, DEN 3, DEN 4 ஆகிய நான்கு வகையான டெங்கு வைரஸ்களால் ஏற்படும் என்றாலும், இதில் ரத்தக்கசிவை உண்டாக்கி தீவிர டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்தும் DEN 2, DEN 4 ஆகிய இரண்டும் நம் நாட்டில் அதிகம் காணப்படுகிறது என்கிறார்கள் நமது மருத்துவ ஆய்வாளர்கள்.

டெங்கு காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளான கடுமையான காய்ச்சல், நடுக்கம், தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, உடல் அரிப்பு, உடல் வலி, கடுமையான மூட்டு வலி, வாந்தி, வயிற்றுவலி ஆகியவை டெங்கு கொசு கடித்த நான்கு முதல் ஏழு நாள்களுக்குள் எல்லோருக்கும் ஏற்படும் என்றாலும், பெரும்பாலானோருக்கு வந்த முதல் வாரத்திலேயே இது முற்றிலும் மறைந்துவிடுகிறது. ஆனால், இவர்களில் 100 பேரில் ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு மட்டும் Dengue Hemorrhagic Disease என்ற தீவிர டெங்கு காய்ச்சலும் Dengue Shock Syndrome என்ற அபாயகரமான நிலையும் ஏற்படக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில், இவர்களுக்குத்தான் உடலில் நீர்த்தன்மை மிகவும் குறைந்து, தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, உள் உறுப்புகளில் ரத்தக்கசிவை ஏற்படுத்துவதால் அவர்களுக்கு, தீவிர மருத்துவ உதவித் தேவைப்படும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த தீவிர வகை டெங்கு காய்ச்சல், பெரும்பாலும் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், ஆஸ்துமா நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பாதிப்புள்ளவர்கள் போன்றவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது. அதிகக் காய்ச்சலுடன் மூச்சுத்திணறல், தொடர்ச்சியாக ஏற்படும் வாந்தி மற்றும் வயிற்றுவலி, சிறுநீர்க் கழியாமை, உடலெங்கும் சிவப்பு புள்ளிகள், மூக்கு மற்றும் ஈறுகளில் ரத்தக்கசிவு, கருமையான நிறத்தில் மலம் கழிப்பது ஆகியவை டெங்குவின் அபாய அறிகுறிகளாகும். இத்தகைய நிலையில் உடனடி மருத்துவ உதவித் தேவைப்படும். தீவிர டெங்கு காய்ச்சலை தாமதப்படுத்தினால், அது பெரும் இழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

டெங்கு காய்ச்சலில், ஆரம்ப நேரத்தில் இருக்கும் மற்றுமொரு பெரிய பிரச்னை என்னவென்றால், இது சாதாரணக் காய்ச்சல்தானே என்று நோயாளிகள், மருந்துக் கடைகளில் சுலபமாகக் கிடைக்கும் ஓ.டி.சி மருந்துகளான அனாசின், ஆஸ்பிரின், ப்ரூஃபென் போன்றவற்றைத் தாங்களே வாங்கி உட்கொள்வதுதான். இந்த மருந்துகள் அனைத்தும், தட்டணுக்களின் செயல்பாட்டை மாற்றுவதால் உடலில் ரத்தக்கசிவை அதிகரித்து, பெரும் பாதிப்புகளையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். அத்துடன் சிலநேரங்களில், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தலாம் என்பதால், டெங்கு காய்ச்சல் அதிகமாகக் காணப்படும் நேரங்களிலாவது, காய்ச்சலின்போது உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

டெங்கு காய்ச்சலுக்கென்று தனியாக மருத்துவச் சிகிச்சை இல்லை என்றாலும், காய்ச்சலால் ஏற்படும் நீர்வறட்சியால் உடலில் நீர்த்தன்மை குறையாமலிருக்க, அதிக அளவில் தண்ணீர், இளநீர் ஓ.ஆர்.எஸ், சூப் ஆகியவை நன்றாக உதவும். ஆனால் பெப்ஸி, ஸ்ப்ரைட் போன்ற கார்பனேட்டட் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். அதிக ஓய்வு, அதிக திரவ உணவு, தேவைப்படும்போது மட்டும் பாரசிட்டமால் மாத்திரைகள் ஆகிய மூன்றும் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். ஒரு சிறிய கடி, டெங்கு என்ற மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இந்தச் சூழலில், இதை வருமுன் காப்பது மிகவும் அவசியமாகும்.

டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் தடுப்பூசிகள் தற்போது நம் நாட்டில் இல்லை. ஆனால், டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள மெக்சிகோ, பிரேசில், கோஸ்டாரிகா உட்பட 11 நாடுகளில், Sanofi-யின் 'Dengvaxia' தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும், இன்னும் இவை ஆரம்ப நிலையில் மட்டுமே உள்ளன. நம் நாட்டில் தடுப்பூசி இல்லாததால், நோயைக் கட்டுக்குள் வைக்க நோய் பரப்பும் கொசுக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க அழைக்கிறது இந்திய நோய்க் கட்டுப்பாடு வாரியம். அதற்குமுன் நாம் ஏடிஸ் கொசுக்களின் குணாதியசங்களைக் தெரிந்துகொண்டால், அவை அதை முற்றிலுமாக ஒழிக்க உதவும்.

ஏடிஸ் கொசுக்கள் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், மழைக்காலங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவை மற்ற கொசுக்களைப்போல சாக்கடைகளில் வாழாமல், சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வாழக்கூடியவை. இருண்ட இடங்களில் தேங்கிக் கிடக்கும் நீரின் மேற்பரப்பில் முட்டையிடுபவை. பெண்கொசுக்கள் மட்டுமே கடிக்கக் கூடியவை. அதிலும் பகலில் மட்டுமே அதிகம் காணப்படுபவை. அதனால்தான், 'டெங்குவை அழிக்க வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்குவதைத் தவிர்ப்பதோடு, சுத்தமான நீர் நிறைந்த பூந்தொட்டிகள், சிறு பாத்திரங்கள், தகர டப்பாக்கள், மழை நீர் தேங்கும் பயன்படுத்தப்படாத டயர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினால் இந்தக் கொசுக்களின் இனப்பெருக்கத்தை மட்டுப்படுத்த முடியும்' என்கிறது அரசு சுகாதார நிறுவனங்கள். 

கொசுக்களை ஒழிக்கும் புகை அடிக்கும் பணிகளையும், `கம்பூசியா' (Gambusia) என்ற கொசுக்களை உண்ணும் மீன்களை நீர்நிலைகளில் வளர்க்கும் பணிகளையும் உள்ளாட்சிகள் தீவிரப்படுத்துகின்றன. வீட்டின் வெளியே குப்பைகளைச் சுத்தப்படுத்தினால் மட்டும் போதாது. வீட்டுக்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் இப்போது பார்ப்போம். Fearless, Restless Day Biters என அழைக்கப்படும் இந்த ஏடிஸ் கொசுக்கள் வீட்டுக்குள் இருண்ட இடங்களில் காணப்படுகின்றன. இவை பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் மனிதர்களின் கழுத்து, கை அல்லது கணுக்கால் போன்ற வெளியே தெரியும் இடங்களில் கடிக்கின்றன.

நாம் சுவாசிக்கும்போது வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு, நமது வியர்வையிலிருந்து வெளியேறும் லாக்டிக் அமிலம், யூரிக் அமிலம், அமோனியா, கொழுப்பு அமிலங்கள் ஆகிய அனைத்தும் சேர்ந்த வாசனை, இந்தக் கொசுக்களை இன்னும் அதிகம் ஈர்க்குமாம். மேலும் உடல் வெப்பம் சற்று அதிகம் உள்ளவர்களையும் உடல்பருமன் உள்ளவர்களையும், `ஓ' பாசிட்டிவ் ரத்த வகையினரையும் ஏடிஸ் கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஏடிஸ் கொசுக்கள், மற்ற கொசுக்களைப்போல வயிறு நிறையும்வரை, ஒருவரை மட்டும் கடிப்பதில்லை. ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை இவை கடிப்பதால், குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆக, வீட்டை நன்றாக வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருப்பதுடன், இரண்டுமுறை குளிப்பது, வியர்வை நாற்றம் இல்லாமல் இருப்பது, முழுக்கை ஆடைகளை அணிவது, தளர்வான வெளிர்நிற ஆடைகளை அணிவது ஆகியவை கொசுக்கடியிலிருந்து தவிர்க்க உதவும். மேலும் `பெர்மித்ரின்' (Permethrin) என்ற மருந்து பயன்படுத்திய கொசு வலைகள், கொசுவர்த்திச் சுருள் மற்றும் `மஸ்கிடோ மேட்' (Mosquito mat), ஓடோமாஸ் போன்ற கொசு விரட்டி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். ஆனால், இவை அனைத்திலும் ஒவ்வாமை என்ற அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால், கொசுக்களை விரட்டும் தன்மை கொண்ட வேப்ப எண்ணெய், கிராம்புத் தைலம், சிட்ரனெல்லா நிறைந்த லெமன் கிராஸ் எண்ணெய், யூகலிப்டஸ் தைலம் ஆகிய இயற்கை தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

வீட்டின் வெளியே, வீட்டுக்குள்ளே எனக் கொசுக்களை விரட்டியடிக்கும் வழிமுறைகள் அனைத்தையும் உலகெங்கும் மேற்கொண்டபோதும், ஏன் நம்மால் டெங்குவை அழிக்க முடியவில்லை என்று கேட்டால், 'அதற்குக் கொசுக்களை முழுமையாக அழிக்க வேண்டும்' என்கிறது அறிவியல் உலகம். உண்மையில் இந்த ஏடிஸ் கொசுக்களை முழுவதும் அழிக்க முடியாத நிலையில், அவற்றை வலுவிழக்கச் செய்யும் ஆராய்ச்சிகள் உலகமெங்கும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொதுவாக, டெங்கு கிருமிகளை உட்கொண்ட இந்த ஏடிஸ் கொசுக்கள், அதன் வாழ்நாள் முழுவதும் டெங்கு வைரஸ்களை தன் உடலில் வைத்திருப்பதுடன் முட்டையிடும்போது, `டிரான்ஸ் ஓவரியன் டிரான்ஸ்பர்' (Trans ovarian Transfer) என்ற மரபணு பரிமாற்றம் வாயிலாகத் தனது சந்ததியினருக்கும் இந்த வைரஸ்களைக் கடத்துகிறது. இதே 'Trans ovarian Transfer' என்ற மரபணு மாற்ற முறை மூலம், டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியுமா என மேற்கொள்ளப்பட்ட ஆய்வுதான், `முள்ளை முள்ளால் எடுப்போம்.' 

அதற்கான தீர்வாக வந்துள்ளது, `வோல்பாச்சியா' (Wolbachia).

டெங்குவை நமக்களிக்கும் கொசுக்களுக்கு, `வோல்பாச்சியா' கிருமிகளை நாம் அளித்தால், டெங்குவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்கிறது அறிவியல். மனிதர்களுக்கும், மற்ற மிருகங்களுக்கும் எந்தவிதத்திலும் தீங்கு விளைவிக்காத பாக்டீரியாவான வோல்பாச்சியா,  ஏடிஸ் கொசுக்களுக்கு மட்டும் எதிரியாக அமைந்துள்ளதையும், முக்கியமாக, வோல்பாச்சியா பாக்டீரியா தாக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்களில், டெங்கு வைரஸ்கள் பரவுவதில்லை என்பதையும் கவனித்த ஆஸ்திரேலிய ஆராய்ச்சி நிறுவனம், அவற்றுக்கு வோல்பாச்சியா  நோயை ஏற்படுத்தும் வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.

வோல்பாச்சியா பாக்டீரியா தாக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்களின் முட்டைகளிலும், இதே பாக்டீரியாக்கள் பரிமாற்றப்படுவதால் டெங்கு வைரஸ்கள் அடுத்த சந்ததிக்குப் பரவுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இதை உறுதி செய்துள்ள உலக சுகாதார அமைப்பு, உலகெங்கும் இந்த முறையைப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் டெங்கு மட்டுமன்றி ஜிகா, சிக்குன்குன்யா நோய்களைக் கட்டுப்படுத்தலாம் என்பது கூடுதல் தகவல். இந்தியாவைப் பொறுத்தமட்டில் விசாகப்பட்டினம் மற்றும் மகாராஷ்டிராவில், வோல்பாச்சியா தாக்கிய ஏடிஸ் கொசுக்களை, நூறு, ஆயிரம் என்ற எண்ணிக்கைகளில் படிப்படியாக வெளியிட்டு வருகிறது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ICMR.

`நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்...' என்பது டெங்குவுக்கு நன்கு பொருந்துகிறதல்லவா?