Published:Updated:

ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!

ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!

எந்த மருந்துக்கும் கட்டுப்படாத விபரீத பிரச்னை

ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!

எந்த மருந்துக்கும் கட்டுப்படாத விபரீத பிரச்னை

Published:Updated:
ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!
ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!

சாமான்ய மக்களின் சர்வரோக நிவாரணி, ஆன்டிபயாடிக் மருந்துகள். ஜுரம், தலைவலி, வயிற்றுவலி என எந்தப் பிரச்னை வந்தாலும் மருத்துவமனைக்குப் போகாமல் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி  உட்கொள்பவர்கள் நிறைய பேர். அவர்களுக்கான எச்சரிக்கை மணிதான், இந்தக் கட்டுரை.

போன வருடம் சளி, காய்ச்சலுக்கு நீங்கள் எடுத்துக்கொண்ட அதே ஆன்டிபயாடிக், அடுத்த முறை பலன் தந்திருக்காது. ‘‘அது சரியா கேட்கலை... வேற கொடுங்க’’ என்று கேட்ட உங்களுக்கு, முன்னதைவிடவும் ஸ்ட்ராங்கான வேறோர் ஆன்டிபயாடிக்கைக் கொடுத்திருப்பார் கடைக்காரர். அடுத்தமுறை சளி, காய்ச்சல் வந்தபோது, அந்த மருந்தும் ‘பெப்பே’ காட்டியிருக்கும். இனிமேல் இப்படித்தான். எத்தனை ஸ்ட்ராங்கான கிருமிக்கொல்லிக்கும் நம் உடலில் உள்ள கிருமிகள் பயப்படாது. காரணம்?

ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ்!


ஒவ்வோர் ஆண்டும் ஏழரை லட்சம் பேர், ‘AMR infections’ எனப்படுகிற ‘ஆன்டி மைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ்’ (Anti Microbial-Resistance) என்ற பிரச்னையால் உயிரிழப்பதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. 2050-க்குள் இந்த எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியைத் தாண்டக்கூடும்.

‘இந்தியாவில் விற்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில், 64 சதவிகிதம் அங்கீகரிக்கப்படாதவை’ என்பது அதிர்ச்சியான புள்ளிவிவரம். எந்த ஆன்டிபயாடிக் மருந்துக்கும் குணமாகாத தொற்றுநோய்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிற நோயாளிகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். மருத்துவர்களை மாற்றுவதோ, மருந்துகளை மாற்றுவதோ இதற்குத் தீர்வாகப் போவதில்லை.

‘ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ்’ பற்றி விழிப்பு உணர்வுப் பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் தொற்றுநோய் சிறப்பு மருத்துவரும், சென்னை டிக்ளரேஷனின் (ஆன்டி பயாடிக்ஸ்) ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் அப்துல் ஹபூரிடம் பேசினோம். இந்த அதிபயங்கரம் பற்றி விரிவாகப் பேசினார் அவர்.

ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருந்துக்குக் கட்டுப்படாத பாக்டீரியா!

‘‘ஆன்டிபயாடிக்ஸ் என்பவை க்ரூப் ஆஃப் மெடிசின்ஸ். இந்த வகை மருந்துகளை எடுத்துக்கொண்டால் பாக்டீரியா கிருமிகள் இறந்துபோகும். ஆனால், அது பூஞ்சைத் தொற்றையோ, வைரஸ் தொற்றையோ, பூச்சிகளால் ஏற்படும் தொற்றையோ சரிசெய்யாது.

‘ஆன்டிமைக்ரோபியல்’ என்பதும் க்ரூப் ஆஃப் மெடிசின்ஸ்தான். ஆனால், மேற்சொன்ன எல்லா தொற்றுகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை இவை. ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் என்பது,  ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ஸ், வைரஸ் ரெசிஸ்டென்ஸ், டி.பி மெடிசின் ரெசிஸ்டென்ஸ், ஃபங்கல் மெடிசின் ரெசிஸ்டென்ஸ், பூச்சித்தொற்று மருந்து ரெசிஸ்டென்ஸ், மலேரியா மருந்து ரெசிஸ்டென்ஸ் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. அதாவது, மேலே குறிப்பிட்ட எந்தத் தொற்றையும் எந்த மருந்துகளாலும் குணப்படுத்த முடியாத நிலைதான், ‘ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ்’.

ஒருவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. அதற்காக ஆன்டிபயாடிக் மருந்து சாப்பிடுகிறார். ஆனாலும், அந்த பாக்டீரியா கிருமிகள் இறந்து போகாமல் வளர்ந்தாலோ, எதிர்ப்பு சக்தியைப் பெற்றாலோ, அதைத்தான் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ஸ் என்கிறோம்.

ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!

பெனிசிலின் முதல் கோலிஸ்டின் வரை!

1940-களில் உலகம் முழுக்கப் பயன்பாட்டில் இருந்த பிரபலமான ஆன்டிபயாடிக், பெனிசிலின். சில வருடங்களிலேயே பாக்டீரியாக்கள் அதற்கு எதிராகப் போராடி கூடுதல் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிட்டன. யாராவது நம்மைத்தாக்க முனைந்தால், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள கேடயம் ஏந்துவோம் இல்லையா? அப்படித்தான் கிருமிகளும். தம்மைக்கொல்ல வரும் மருந்துகளுக்கு எதிராக வலிமையான கேடயத்தைத் தூக்குகின்றன.

பாக்டீரியாக்களின் உடல்களிலும் மரபணுக்கள் இருக்கும். அவற்றில் மியூட்டேஷன் எனப்படுகிற பிறழ்வு நிகழும். அதன் காரணமாக, ஆன்டிபயாடிக்ஸ் வேலை செய்யாமல் போகும். அதைத்தான் ரெசிஸ்டென்ஸ் என்கிறோம். சாதாரண வீரியமுள்ளவை தொடங்கி, ரொம்பவே ஸ்ட்ராங்கானவை வரை ஆன்டிபயாடிக்ஸில் ஏராளமான குழுக்கள் உள்ளன. இப்போது, அதிக வீரியமுள்ள ஆன்டிபயாடிக் கொடுத்தாலும், சிலருக்குத் தொற்றும் பாக்டீரியாக்கள் சாவதில்லை. மிக மோசமான ரத்தத் தொற்று, சிறுநீர்த் தொற்று போன்றவற்றுக்குத்தான் கார்பாபெனம் மாதிரி வீரியமான ஆன்டிபயாடிக் பரிந்துரைக்கப்படும். இப்போது, அதுவே வேலை செய்வதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

இதுபோன்ற இறுதிக்கட்டத்தில், வேறு வழியின்றி பரிந்துரைக்கப்படுவதுதான் ‘கோலிஸ்டின்’ (colistin). இது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாடிக் அல்ல. 1960-களிலேயே பயன்பாட்டில் இருந்ததுதான். ஆனால், சிறுநீரகங்களைப் பாதிக்கும் அளவுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அதன் நச்சுத்தன்மை கருதியும், வேறு புதிய ஆன்டிபயாடிக் மருந்துகள் வந்துவிட்டதாலும், 70-களின் இறுதியில் கோலிஸ்டினை நிறுத்திவிட்டார்கள். அப்போதுதான் கார்பாபெனம் வந்தது. 2010-க்குப் பிறகு கார்பாபெனம் ரெசிஸ்டென்ஸ் அதிகரிக்கத் தொடங்கி, இன்று அது மிகவும் சகஜம் என்கிற நிலைக்கு வந்திருக்கிறது. கார்பாபெனமே வேலை செய்யவில்லை என்கிற நிலையில், ஏற்கெனவே பயன்பாடு நிறுத்தப்பட்ட கோலிஸ்டின்தான் ஒரே தீர்வாக மாறியது.

ஒதுங்கிக்கொண்ட மருந்து கம்பெனிகள்!

இன்று கோலிஸ்டின் ரெசிஸ்டென்ஸும் ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் கைகொடுக்க அடுத்து வேறெந்த ஆன்டிபயாடிக்கும் இல்லை. ஒருவரின் ரத்தத்தில் கோலிஸ்டினுக்கு கட்டுப்படாத பாக்டீரியா கலந்தால், அந்த நோயாளி உயிரிழப்பதற்கான அபாயம் 90 சதவிகிதம் உள்ளது. சமீபகாலங்களில் புதிதாக ஆன்டிபயாடிக் எதுவும் தயாரிக்கப்பட வில்லை. மருந்து கம்பெனிகளுக்குப் பெரிய லாபம் கிடைப்பதில்லை என்பதே காரணம். புதிய ஆன்டிபயாடிக்கை உருவாக்கும் ஆராய்ச்சிக்கு 10 வருடங்கள் ஆகும். சுமார் 1,500 கோடி ரூபாய் செலவாகும். அத்தனை வருடங்கள் உழைத்து, அவ்வளவு செலவிட்டுக் கண்டுபிடிக்கப்படுகிற ஆன்டி பயாடிக், அறிமுகப்படுத்தப்பட்ட சில வருடங்களிலேயே தன் ஆற்றலை இழக்கிறது.

ஆனால், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான மருந்துகளை ஒருமுறை கண்டுபிடித்தால் ஆயுள் முழுக்கப் பயன்படுத்த முடிகிறது. அவை ரெசிஸ்டென்ஸை ஏற்படுத்துவதில்லை. எனவே, லாபம் தராத ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பையும் தயாரிப்பையும் மருந்து கம்பெனிகள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன. 1980-க்குப் பிறகு, புதிய ஆன்டிபயாடிக் எதுவும் வரவில்லை. அதன் பிறகு வந்தவை எல்லாம், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ஆன்டிபயாடிக்கில் சின்னச் சின்ன மாறுதல்கள் செய்யப்பட்டு விற்கப்படுபவையே.

ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் என்பது இந்தியாவுக்கு மட்டுமே உள்ள பிரச்னையல்ல. உலகளவில் மக்கள் சந்திக்கிற பிரச்னையாக இருக்கிறது. இதற்கு அடிப்படையான காரணம், முறையற்று ஆன்டிபயாடிக் மருந்துகளை உபயோகிப்பதுதான்.

சாதாரண சளி, காய்ச்சலுக்குப் பொது மருத்துவரைப் பார்க்க ஒருவர் செல்கிறார். அதற்குக் காரணம் வைரஸ் தொற்றா, பாக்டீரியா தொற்றா என்பது மருத்துவருக்கே தெரியாது. அதற்கான பரிசோதனை வசதிகள் நம்மிடம் இல்லை. யூகத்தின் அடிப்படையில் ஆன்டிபயாடிக்கை டாக்டர் பரிந்துரைப்பார். அப்படி அவர் கொடுக்கும் ஆன்டிபயாடிக்கை 2 நாள்களுக்கு எடுத்துக்கொண்ட பிறகும் குணமாகவில்லை என்றால், அந்த நோயாளி வேறு மருத்துவரைப் பார்க்கப் போவார். அவர் வேறு ஆன்டிபயாடிக்கை எழுதிக்கொடுப்பார்.

அதேபோல சாதாரணத் தொற்றுக்குக்கூட ஸ்ட்ராங்கான ஆன்டிபயாடிக்கைப் பரிந்துரைக்கிற மருத்துவர்களும் உள்ளனர். ஆன்டிபயாடிக் பரிந்துரைக்கும்போது, சரியான அளவைப் (டோஸ்) பரிந்துரைக்க வேண்டும். ஆனால், பல மருத்துவர்களும் 500 மி.கி பரிந்துரைக்க வேண்டிய இடத்தில் 250 மி.கி அளவையே பரிந்துரைக்கிறார்கள். ஆன்டிபயாடிக்கை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளும்போது, அதன் ரெசிஸ்டென்ஸ் அதிகரிக்கும்.

கோழி வளர்ப்பிலும் கோலிஸ்டின்!

அமெரிக்காவில் 100 டன் ஆன்டிபயாடிக் உற்பத்தி செய்யப்பட்டால், அதில் 70 டன் விலங்குகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது. அது, அந்த விலங்களுக்கு ஏற்படுகிற தொற்றைக் குணப்படுத்துவதற்காக அல்ல. அவற்றின் அதீத வளர்ச்சிக்காக. இந்தியாவிலும் இது அதிகமாகவே நடக்கிறது. இப்படி உபயோகிக்கப்படுகிற ஆன்டிபயாடிக் எது தெரியுமா? கோலிஸ்டின். இதை மலிவான தரத்தில் வாங்கி, பவுடராக்கி, கோழிகளுக்கான இரையுடன் கலந்து கொடுக்கிறார்கள். 1,000 கிலோ இரையில் 10 கிராம் அளவே கோலிஸ்டின் கலக்கப்படுகிறது. இதனால், சிக்கனில் கோலிஸ்டின் ரெசிஸ்டென்ட் பாக்டீரியா அதிகம் இருக்கிறது.

இத்தகைய கோலிஸ்டின் பயன்பாடு பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்தும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிக்கனிலும் கோலிஸ்டின் ரெசிஸ்டென்ஸ் பாக்டீரியா உள்ளது. இப்படிப்பட்ட சிக்கனை சாப்பிடுகிற நபர்களுக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறு வந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படும்போது, எந்த ஆன்டிபயாடிக் கொடுத்தாலும் அவர்களுக்கு நோய் தீராது. கோழிக் கழிவுகள் விவசாயத்தில் உரமாகப் பயன்படுத்தப்படுவதால், காய்கறிகளிலும் இதே சிக்கல் உண்டு. இப்படி நம்மைச் சுற்றி இந்தப் பிரச்னை பூதாகரமாக வளர்ந்துவருகிறது.

என்னதான் தீர்வு?

• விலங்குகளுக்கு கோலிஸ்டின் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. சீனாவில்கூட இது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாம் அதை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து விலங்குகளுக்குப் பயன்படுத்துகிறோம். ‘சமைக்கும்போது பாக்டீரியா இறந்துவிடுமே... அப்புறமென்ன பிரச்னை’ எனக் கேட்கலாம். சமைப்பதற்கு முன்பு அதைத் தொடுவதன் மூலமும், சமையலறையில் வைத்திருக்கும்போதும் பாக்டீரியா பரவிவிடும்.

•   புதிய ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. உலகளவில் பல நாடுகளின் தலைவர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சி இது.

•   தொற்றுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதும் முக்கியம். நாம் குடிக்கிற தண்ணீர், சாப்பிடும் உணவு, வெளியேற்றுகிற கழிவு என எல்லாவற்றிலும் பாக்டீரியா உள்ளது. எந்த மருந்துக்கும் கட்டுப்படாத பாக்டீரியாக்கள் இந்தவழியில் நம் உடலில் நுழைவதைத் தடுத்தாக வேண்டும். சுகாதாரமான வாழ்க்கைமுறைதான் இதை உத்தரவாதம் செய்யும்.

•   வீரியமான ஆன்டிபயாடிக்குகளை மருந்துக்கடைகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் விற்பதற்கு சட்டரீதியாகத் தடை இருந்தாலும், அது நடைமுறைப்படுத்தப்  படவில்லை. சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.

- ஆர்.வைதேகி

என்ன செய்ய வேண்டும்?

• மெடிக்கல் ஷாப்பில் நீங்களாகவே ஆன்டிபயாடிக் வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். உடல்நலம் சரியில்லையெனில் மருத்துவரைப் பாருங்கள். அவர் ஆன்டிபயாடிக் பரிந்துரைத்தால், ‘அது அவசியம்தானா’ எனக் கேளுங்கள். அதைத் தவிர்க்க முடியுமா எனக் கேளுங்கள்.

ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!

• மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் பரிந்துரைக்காதபோது, நோயாளிகளே அவற்றைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துகிற நிலையும் இருக்கிறது. இதைத் தவிர்க்க வேண்டும். சாதாரணக் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் அவசியமில்லை.

• மருத்துவர் பரிந்துரைக்கும் நாள்களுக்கு, அவர் குறிப்பிடுகிற அளவுகளில் ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரெட் லைன் அலெர்ட்!

ருந்து அட்டைகளில் சிவப்புநிறக் கோடு இருந்தால், அது ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் விற்கப்படக்கூடாது என அர்த்தம். ‘ரெட்லைன் கேம்பெய்ன்’ என்கிற பெயரில் இதற்கான விழிப்பு உணர்வை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இது ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் உண்டு. ஆனாலும், பல மருந்துக் கடைகள் அதைப் பின்பற்றுவதில்லை. ‘எந்த ஆன்டிபயாடிக்கையுமே ப்ரிஸ்கிரிப்ஷன் இன்றி விற்கக்கூடாது’ என 2011-ம் ஆண்டில் கடுமையான விதி கொண்டுவரப் பட்டது. ஆனால், மருத்துவரை அணுகமுடியாத கிராம மக்கள் பலரும் தொற்று அதிகமாகி உயிரிழந்ததால், அந்த விதி சற்று தளர்த்தப்பட்டது. அதன்படி, 24 ஆன்டிபயாடிக், 11 வகையான காசநோய் மருந்துகள் மற்றும் சில மயக்க மருந்துகளுக்கு மட்டும் சிவப்புக் கோடு வலியுறுத்தப்பட்டது.

ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!

2013-ல் வந்த இந்த விதியின்படி, வீரியமுள்ள ஆன்டிபயாடிக்குகள் ரெட் லைன் எச்சரிக்கையுடன் வருகின்றன. மக்களும் மருத்துவர்களும் இதைக் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

‘‘வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டவை இங்கே கிடைக்கின்றன!’’

‘‘இ
ந்தியாவில் 60 சதவிகித ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவையில்லாமல் பரிந்துரைக்கப்படுவதாகச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். அதிக அளவில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட 60-க்கும் மேலான கூட்டுக்கலவை ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்தியாவில் தடையின்றிக் கிடைக்கின்றன’’ என்று புள்ளிவிவரங்களுடன் ஆரம்பிக்கிற மருத்துவர் புகழேந்தி, இத்தனைக்குமான பின்னணியைத் தனது வழக்கமான சமூகக் கோபத்துடன் முன்வைக்கிறார்.

ஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்!

‘‘என் உறவுக்காரப் பெண் அமெரிக்காவில் இருக்கிறார். கடுமையான தொண்டைவலி, இருமல், காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றார். ‘த்ரோட் ஸ்வாப்’ என்கிற சோதனையைச் செய்தார்கள். அன்று மாலையே அதற்கான ரிசல்ட் வருகிறது. அது பாக்டீரியா தொற்றில்லை எனக் கண்டறியப்படுகிறது. ‘வெறும் காய்ச்சல் மாத்திரையும் நிறைய தண்ணீரும் ஓய்வும் போதும்’ எனச் சொல்லி அவரை அனுப்பிவிட்டார்கள். அங்கே சட்டங்களை மீற முடியாது. கொடுக்கப்படுகிற ஒவ்வொரு மாத்திரையும் ஏன், எதற்கு எனக் கேள்விக்கு உள்ளாக்கப்படும். தவறாகப் பரிந்துரைக்கப்பட்டால், அந்த மருத்துவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டாண்டர்டு மெடிக்கல் ட்ரீட்மென்ட் என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டமாகப் பின்பற்றப்படுகிறது. நம் நாட்டில் அவை வெறும் வழிகாட்டுதல்களாக மட்டுமே இருக்கின்றன.

அமெரிக்காவில் மருந்துக்கடையில் நேராக நோயாளி போய் ஆன்டிபயாடிக் வாங்க முடியாது. இங்கே எல்லாமே வியாபாரம்தான். மருந்துத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அரசையும் அதிகார பீடங்களையும் தங்கள் பண பலத்தாலும் செல்வாக்காலும் வளைக்கிற அளவுக்கு சக்திவாய்ந்தவையாக இருக்கின்றன. அவர்களுக்கு லாபம் ஒன்றே லட்சியம். இந்தியாவில் அதிகம் விற்கும் சர்க்கரை நோய் மருந்துகளில், ஐந்தில் நான்கை 2011-ல் மத்திய சுகாதாரத் துறை தடை செய்தது. ஆனால், நீதிமன்றங்கள் அந்தத் தடையை நீக்கிவிட்டன. இந்த நிலையில், தரமான மருந்துகளை எங்கே எதிர்பார்ப்பது? மக்கள் நலனா, வணிக நலனா என்கிற போட்டியில் எப்போதும் வணிகநலன்தான் ஜெயிக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில்கூட, மருந்து கம்பெனிகளிடமிருந்துதான் மிகப்பெரிய அளவிலான நிதியுதவி வருகிறது. அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், இந்தியாவின் நிலையை யோசித்துக்கொள்ளுங்கள்.

ஆன்டிபயாடிக்கை எப்போது பயன்படுத்த வேண்டும், எப்போது பயன்படுத்தக்கூடாது என்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவற்றைக் கண்காணிப்பது இங்கே தோல்வியடைந்துவிட்டது. மருத்துவர்கள் பலரும் ‘நோயாளியின் நோயைக் குணப்படுத்த வேண்டும், அதுவும் அவரால் தாங்கிக்கொள்ள முடிகிற செலவில் தரமான மருத்துவம் தர வேண்டும்’ என யோசிப்பதில்லை. மாறாக, கறவை மாடாகப் பார்க்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும்’’ என்கிறார் அவர்.

110 கோடி ரூபாய் பரிசு!

டல்நல பாதிப்பை வைத்து அது பாக்டீரியா தொற்றா, வைரஸ் தொற்றா என்பதைக் கண்டுபிடிக்கிற வசதிகள் நம்மிடம் இல்லை. இருக்கும் சில சோதனைகளும் அத்தனை துல்லியமானவை அல்ல. இப்படி ஒரு சோதனையைக் கண்டுபிடிப்பவருக்கு ‘லாஞ்ஜிட்யூட் பிரைஸ்’ என ஒரு விருதையே பிரிட்டன் அறிவித்துள்ளது. பரிசுத் தொகை 110 கோடி ரூபாய். அதாவது, டெஸ்ட் செய்த 30 நிமிடங்களில் ரிப்போர்ட் கிடைக்க வேண்டும். அந்த ரிப்போர்ட் பாக்டீரியாவா, வைரஸா எனச் சொல்வதுடன், எந்த வகை பாக்டீரியா, அதற்கு எந்த ஆன்டிபயாடிக் வேலைசெய்யும் என்றும் சொல்ல வேண்டும்.

உமிழ்நீர், ரத்தம் அல்லது சிறுநீர் மாதிரிகளை வைத்துச் செய்யப்படுகிற இந்தச் சோதனைக்கான கருவி கையடக்கமாக இருக்க வேண்டும். சோதனைக்கான செலவு எல்லோருக்கும் ஏற்றவகையில் இருக்க வேண்டும். பேட்டரியில் வேலை செய்ய வேண்டும். சாதாரண மருத்துவர்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதாக அந்தக் கருவி கண்டறியப்பட வேண்டும். இப்படியொரு சோதனைமுறை வந்தால், ஆன்டிபயாடிக் தவறாகப் பயன்படுத்துவதைப் பெரியளவில் தடுக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்புக்கு ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட பிறகும் இன்னும் அப்படி எந்தக் கருவியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism