Published:Updated:

அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்!

அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்!

ஸ்ரீகலா பிரசாத், யூரோ கைனகாலஜிஸ்ட்ஹெல்த்

அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்!

ஸ்ரீகலா பிரசாத், யூரோ கைனகாலஜிஸ்ட்ஹெல்த்

Published:Updated:
அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்!

சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவது மற்றும் புற்றுநோய் கட்டிகள் உருவாவது குறித்த விழிப்பு உணர்வு பெண்களுக்கு ஓரளவு ஏற்பட்டிருக்கிறது. இவற்றைப்போலவே ‘டெர்மாய்டு’ (Dermoid Cyst) எனப்படும் கட்டியும் பெண்களின் சினைப்பைகளைத் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? இதோ யூரோ கைனகாலஜிஸ்ட் ஸ்ரீகலா பிரசாத், ‘டெர்மாய்டு’ குறித்துத் தரும் முழுமையான விளக்கங்கள் இங்கே...

‘‘வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் நிலைக்கு முந்தைய காலகட்டம் வரை இருக்கிற பெண்களின் சினைப்பையில் உருவாகும் ஒருவகைக் கட்டிதான் டெர்மாய்டு.  முடி, பல், தைராய்டு சுரப்பி போன்ற அமைப்புகள் (Structures) இந்தக் கட்டிக்குள் காணப்படும். பெரும்பாலும் ஒரு சினைப்பையில்தான் இந்தக் கட்டி வரும். அரிதாக இரண்டு சினைப்பைகளிலும் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ‘டெர்மாய்டு’ கட்டி, கேன்சர் கட்டியாக  மாறுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.  ஆனால்,  இந்தக் கட்டி முறுக்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. அப்படி முறுக்கிக்கொண்டால், அந்த இடத்தில் ரத்த ஓட்டம் நின்றுவிடும். அதனால் அந்தக் கட்டி அழுகிப்போய் உயிருக்கே ஆபத்தாகலாம். அதனால் டெர்மாய்டு கட்டியை அலட்சியப்படுத்தக் கூடாது.

அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்!

அறிகுறிகளும் பரிசோதனைகளும்

டெர்மாய்டு கட்டி இருப்பவர்களுக்கு அடிவயிற்றில் தாங்கமுடியாத வலி உண்டாகும். வலி அதிகமாகும்போது கட்டி முறுக்கிக் கொள்ளாமல் தவிர்க்க அவசரமாக அறுவை சிகிச்சை செய்து கட்டியை எடுக்கவேண்டிய சூழ்நிலைகூட வரலாம். ஆனால்  சிலர், இந்தக் கட்டி இருந்தாலும் வலி எதுவும் இல்லாமல் மிகவும் நார்மலாக இருப்பார்கள். வருடாந்தர ஹெல்த் செக்-அப் அல்லது வேறு சில காரணங்களுக்காக அல்ட்ராசவுண்டு பரிசோதனை செய்யும்போதுதான் அவர்களுக்கு இந்த ‘டெர்மாய்டு’ கட்டி இருப்பதே தெரியவரும். சாஃப்ட்வேர் நிறுவனங்களில் அலுவலகம் சார்பாக நடக்கும் ஹெல்த் செக்கப்பிற்கு வரும் பெண்களுக்கு நாங்கள் அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்வதுண்டு. அப்படிச் செய்யும்போது தான் டெர்மாய்டு கட்டியிருப்பதே சில பெண்களுக்குத் தெரிய வந்தது.

டெர்மாய்டு கட்டி இதனால்தான் வருகிறது என்று எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அதேபோல கட்டி வராமல்  தடுக்கவும் முடியாது. எனவே, வழக்கத்துக்கு மாறாக அடிவயிற்றில் தாங்க முடியாத வலி இருந்தால் அலட்சியம் செய்யாமல் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அப்போதுதான் உடனடியாக அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடியும். இன்றும் வயிற்றுவலி போன்ற காரணங்களுக்காகப் பெண்கள் மருந்துக்கடைகளில் தாங்களாகவே மருந்து வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இந்தப் போக்கு உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒன்று என்பதை உணரவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்!

மாத்திரை, மருந்துகளால் டெர்மாய்டு கட்டியைக் கரைத்துவிட முடியாது. இதற்கு அறுவைசிகிச்சைதான் ஒரே தீர்வு. சினைப்பை முழுவதையும் மூடிக்கொண்டு ‘டெர்மாய்டு’ கட்டி உருவாகலாம் அல்லது சினைப்பையில் ஒரு பகுதியில் மட்டும் கட்டி வரலாம். பெரும்பாலும் கட்டியையும் சினைப்பையையும் தனியாகப் பிரிக்க முடியாத அளவுக்குத்தான் இந்தக் கட்டி உருவாகியிருக்கும். எனவே, அந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவரின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு கட்டியோடு சேர்த்து சினைப்பையும் அகற்றப்படும். அரிதான சில சூழல்களில், சினைப்பையில் கட்டி இருந்தாலும் அந்த சினைப்பையில் இருந்து நல்ல நிலையில் இருக்கக்கூடிய சிறிய அளவிலான  சினைப்பைத் திசுவை (Ovarian Tissue) தனியாகப் பிரிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்போது அதை மட்டும் விட்டுவிட்டு மீதமிருக்கும் சினைப்பையிலிருந்து உருவாகிய கட்டியை எடுத்துவிடுவோம். மிச்சமிருக்கும் இந்தச் சிறிய அளவிலான சினைப்பைத் திசு எப்போதும்போலச் செயல்படும். இதன் காரணமாக ஹார்மோன்கள் சீராகச் செயல்பட்டு மாதவிடாய் சுழற்சியும் எந்தவிதத் தடையும் இல்லாமல் நிகழும். திருமணமான பெண்களுக்கு மட்டும்தான் ‘டெர்மாய்டு’ கட்டி வரும் என்றில்லை. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்குக்கூட இந்தக் கட்டி வரலாம்.  திருமணமாகாத இளம்பெண்கள், குழந்தை இல்லாத பெண்கள் இந்த  டெர்மாய்டு சிகிச்சைக்காக வரும்போது அவர்களது எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சினைப்பைத் திசுக்களை முடிந்தவரைப் பாதுகாக்க முயல்வோம்.

அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்!

இப்போதெல்லாம் வருடாந்திர உடல் பரிசோதனை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படிச் செய்துகொள்ளும் போது, பெண்கள் தங்களின் கருப்பை மற்றும் சினைப்பை எப்படி இருக்கின்றன என்பதை  அல்ட்ராசவுண்டு பரிசோதனை  மூலம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.அதுமட்டுமல்ல அடிவயிற்று வலி ஏற்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். உடனே மருத்துவரைச் சந்தியுங்கள். ஏனென்றால் அடிவயிற்றில் தான் கருப்பை, சினைப்பை, கருக்குழாய்கள் போன்ற உறுப்புகள் இருக்கின்றன. அதேபோல  ஒரு சினைப்பையில் ‘டெர்மாய்டு’ கட்டி வந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறீர்களா? அடுத்த சினைப்பையிலும் ‘டெர்மாய்டு’ வரும் என்று கூற முடியாது. ஆனாலும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக  ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீதமிருக்கும் சினைப்பை எப்படி இருக்கிறது என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வது  நல்லது.

அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்!

பொதுவாக உடலில் இருந்து எந்த ஒரு கட்டி எடுக்கப்பட்டாலும், அந்தக் கட்டிப் புற்றுநோய்க் கட்டியா என்பதனைக் கண்டறிய பயாப்சி செய்யப்படும். அதுபோலவே  டெர்மாய்டு கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய பிறகு, அது ‘பயாப்சி’க்காக அனுப்பி வைக்கப்படும். பயாப்சியின் முடிவில் அந்தக் கட்டிப் புற்றுநோய்க் கட்டி  இல்லையென்று உறுதி செய்யப்பட்டால் அதன்பிறகு வழக்கமான அறுவைசிகிசைக்குப் பிறகு பின்பற்றவேண்டிய விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குவது, முக்கி மலம் கழிப்பது போன்றவற்றைச் சிறிதுகாலத்துக்குச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் ‘ஹெர்னியா’ வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகிவிடும்.ஒருவேளை அரிதிலும் அரிதாக சினைப்பையிலிருந்து எடுக்கப்பட்ட டெர்மாய்டு கட்டி புற்றுநோய்க்கட்டி என்று பயாப்சி முடிவுகள் தெரிவித்தால் அதன்பிறகு புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மொத்தத்தில் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டியது  மிகவும் முக்கியம்” என்கிறார் மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத்.

- சு.கவிதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism