மாறிவரும் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக யாருக்கு எந்த நோய், எப்போது வரும் என்று சொல்லமுடியவில்லை. இது ஒருபுறமிருக்க, தனித்திருக்கும் சூழலில் திடீரென ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம், வலிப்பு போன்றவை உயிரிழப்பு வரை கொண்டுபோய் விடுகின்றன. இவைதவிர ரத்தக்கசிவு, தீப்புண், எலும்பு முறிவு, மின்சாரத் தாக்குதல் போன்றவற்றாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அவசரகால நிகழ்வுகளின்போது நாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்வது எப்படி? உடனடியாக என்ன செய்ய வேண்டும்? விளக்குகிறார் அவசரகால சிகிச்சை மருத்துவர் தவபழனி அழகப்பன்.

மாரடைப்பு (Heart Attack)
இது, முன்பெல்லாம் வயதானவர்களையே பாதித்தது. இன்று 30 வயதுக்காரர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயாளிகள், புகைப்பழக்கம் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம்.
அறிகுறிகள்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* மார்பில் அழுத்துவதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
* மார்பில் ஏற்படும் வலி தோள்பட்டை, முதுகு, தாடை மற்றும் இடது கைக்குப் பரவும்.
* நெஞ்சுப்பகுதி இறுக்கமாக இருக்கும்.
* திடீரென்று படபடப்பு, தடுமாற்றம் அதிகமாகி அளவுக்கு அதிகமாக வியர்க்கும்.
* மார்பில் அசாதாரணமான உணர்வு ஏற்படும்.
முதலுதவி:
நெஞ்சு வலி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்ட உடனே எந்த வேலையைச் செய்துகொண்டிருந்தாலும் விட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும். ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையைத் தண்ணீரில் கரைத்துச் சாப்பிடலாம். மாரடைப்புக்கான அறிகுறி தோன்றி, சில மணி நேரம் மட்டுமே உடல் தாக்குப்பிடிக்கும் என்பதால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். மார்பில் ஏற்படும் வலியை வாய்வுக்கோளாறால் ஏற்படும் வலி என்று தவறாக நினைத்து அலட்சியப்படுத்துவது நிலைமையை மோசமாக்கிவிடும். மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறி தோன்றியதும் உடனடியாக மருத்துவமனை சென்றால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

பக்கவாதம் (Stroke)
ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுதல் (Ischemic Stroke), ரத்தக்குழாய் வெடித்து ரத்தக்கசிவு ஏற்படுதல் (Hemorrhagic Stroke) போன்ற காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது. பெரும்பாலும் 80 சதவிகிதத்துக்கும் மேல் ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பே பக்கவாதம் ஏற்படக் காரணமாகிறது. பக்கவாதத்துக்கு முன் ஏற்படும் அறிகுறிகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அறிகுறிகளைத் தெரிந்துகொண்டால் உடனடியாக மருத்துவமனை சென்று அதிக பாதிப்பு ஏற்படாமல் காத்துக்கொள்ளலாம்.
அறிகுறிகள்:
* உடலில் ஒரு பாகம் செயலிழந்து (கை, கால், முகம்) போவது.
* கைகால்கள் மரத்துப் போவது,
* திடீரென்று பேச்சுக் குழறுதல்.
* கைகால்களை நீட்டவோ மடக்கவோ முடியாமல் போவது.
* முகம் ஒரு பக்கமாக கோணிக்கொள்வது.

முதலுதவி:
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். பக்கவாதத்துக்கான அறிகுறிகள் தென்பட்ட நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் சேர்த்துவிட்டால் மருந்துகளின் மூலமே குணப்படுத்திவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். காலம் தாழ்த்தினால் வாழ்நாள் முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுச் சிரமப்பட வேண்டிய சூழல் ஏற்படும்.

வலிப்பு (Epilepsy)
வலிப்பு ஏற்பட்டால் அதிகபட்சம் 5 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். வலிப்பு ஏற்படும்போது அடிபடாமல் பார்த்துக்கொண்டால் போதும், தானாகவே சரியாகிவிடும். வலிப்பு ஏற்படும்போது நாக்கு உள்ளிழுக்கப்பட்டு, உமிழ்நீரானது மூச்சுக்குழலை அடைத்துக்கொள்ளும். அதனால் உயிரிழப்புகூட ஏற்படலாம். அதைத் தவிர்க்க, வலிப்பு வந்தவரை இடதுபுறமாகப் படுக்க வைக்க வேண்டும். வலிப்பு ஏற்படும்போது கைகளில் இரும்புப் பொருள்களைக் கொடுக்கக் கூடாது. ஐந்து முதல் பத்து நிமிடங்களைக் கடந்தும் வலிப்பு தொடர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

மின் தாக்குதல் (Electric Shock)
மின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற முயலும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காப்பாற்ற முயல்பவரும் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புண்டு. மின் கடத்தாப் பொருள்களைக் கொண்டு மின்சாரம் தாக்கியவரை விடுவிக்க வேண்டும். மின்சாரத்தால் தாக்கப்பட்டவர் மயங்கிவிட்டால் உடனடியாக அவருக்கு மீளுயிர்ப்பு சுவாசம் (CPR - CardioPulmonary Resuscitation) கொடுக்க வேண்டும். மீளுயிர்ப்பு சுவாசம் கொடுத்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முழுப்பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ரத்தக் கசிவு (Bleeding)
எதிர்பாராமல் அடிபடுவதால் உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் முதலில் பதற்றப்படுவதைத் தவிர்க்க வேண்டும். சுத்தமான துணியை நீரில் நனைத்து பத்து நிமிடங்கள் அழுத்திப் பிடித்துக் கொண்டால் ரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். ரத்தம் வெளியேறுவது நின்றதும் மருத்துவமனைக்கு நிதானமாகச் செல்லலாம். பதற்றத்தைக் குறைத்தாலே பாதி பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

எலும்பு முறிவு (Fracture)
கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டால் சட்டை பட்டனில் ஒன்றிரண்டைக் கழட்டிவிட்டுக் கையை உள்ளே நுழைத்துக்கொண்டு பாதுகாப்பாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கை அல்லாமல் வேறு இடங்களில் அடிபட்டால் உடலை அசைக்காமல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலிலும் தாமாகக் கட்டு போட முயற்சி செய்யக்கூடாது. எலும்பு முறிவால் ஏற்படும் வலியைத் தாங்கிக்கொள்ள மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.

தீப்புண் (Fire Burn)
வெந்நீர் ஊற்றியோ அல்லது சூடான பொருள்கள் உடலில் பட்டோ தீப்புண் ஏற்பட்டுவிட்டால் உடனே குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அது, தீப்புண்ணால் ஏற்பட்ட வலியையும் எரிச்சலையும் குறைக்கும். சுத்தமான துணி அல்லது க்ளிங் பிலிம் (Cling Film) பயன்படுத்தித் தீப்புண்ணை மூடி, காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமனையை அடைந்து கட்டுபோட்டுக்கொள்ள வேண்டும்.

தொண்டையில் உணவு அடைத்துக் கொள்ளுதல் (Choking)
உணவுத் துகள்கள் தொண்டையில் அடைத்துக் கொண்டால் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவார்கள். அப்போது அவர்களை நிற்கவைத்து அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டு விலா எலும்புகளுக்குக் கீழே மேல் வயிற்றை இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்து, வேகமாகக் கைகளை மேல் நோக்கித் தள்ள வேண்டும். இந்த முறைக்குப் பெயர் ‘ஹெய்மிலிக் மேனுவெர்’ (Heimlich Maneuver). வயிற்றை இறுக்கமாக அழுத்தி மேல் நோக்கித் தள்ளும்போது தொண்டையில் அடைத்துக் கொண்டிருக்கும் உணவுத் துகள்கள் வாய் வழியே வெளியே வந்துவிடும். இப்படிச் செய்தும் அவர்கள் தொடர்ந்து சிரமப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
அவசர காலங்களில் இதுபோன்ற முதலுதவி சிகிச்சைகளை வீட்டில் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். இதனால் உயிரிழப்பு ஏற்படாமலும் பாதிப்புகள் பெரிதாகாமலும் பார்த்துக் கொள்ளலாம்.
- சி.வெற்றிவேல்