காலம் யாருக்காகவும் நிற்பதில்லை. மனிதன் பிறந்து பல பருவங்களைக் கடந்து முதிர்ச்சி அடைகிறான். ஆனால், சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பருவத்தைக் கடக்க மனம் வருவதில்லை. சிலருக்குக் குழந்தைப் பருவம்; சிலருக்கு இளமைப் பருவம். ஜெரஸ்கோபோபியாவால் (Gerascophobia) பாதிப்புக்கப்பட்டவர்கள் இளமையை இழக்க விரும்புவதில்லை. அல்லது, இளமையை இழக்க விரும்பாதவர்களுக்கு ஜெரஸ்கோபோபியா இருக்கலாம். இது சமீபகாலமாக அதிகம் வளர்ந்து வரும் பயமாகப் பார்க்கப்படுகிறது.

காரணம்: இளமைப் பருவத்தில் இவர்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருந்திருப்பதுதான் முக்கியமான காரணம். சமீபகாலமாக முதியவர்கள் மீது அடுத்தத் தலைமுறையினர் சரியான அக்கறை எடுத்துக் கொள்ளாததால் அவர்களின் வாழ்க்கை சிக்கல்களுக்கு உள்ளாகிறது. அதைப் பார்த்து தனக்கும் வயதானால் இந்த நிலை வருமோ என பயம் கொள்கிறார்கள். கவலை, ஹார்மோன் குறைபாடு, அட்ரீனல் சுரப்பில் குறைபாடு உள்ளவர்கள், தனியாக வாழ்பவர்கள், திடீரென வேலையிழந்தவர்கள், மனச்சோர்வுக்கு உள்ளானவர்கள், கடந்தகால எதிர்மறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இந்த போபியாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிகுறிகள்: தீவிரமான பதற்றம், மயக்கம், நடுக்கம், மரண பயம், விரைவான சுவாசம், சிந்திக்க அல்லது செயல்பட இயலாத நிலை, கட்டுப்பாட்டை இழந்தது போன்ற உணர்வு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்றவை.
சிகிச்சை: வயதானவர் பற்றிய படங்கள், காணொளிகளைப் பார்க்கவும் பிறகு முதுமையை ஏற்றுக் கொள்ளும் மன நிலையை உண்டாக்கவும் சிகிச்சைகள் அளிக்கப்படும். சிகிச்சையாளர்கள் நோயாளிக்கு நல்ல எண்ணங்களை ஊக்கப்படுத்துவார்கள்.
உணர்ச்சி நுட்பம்: ஊசிகள், மருந்துகள் இல்லாத மருத்துவமுறை மூலம் எதிர்மறையான உணர்ச்சிகளை நீக்கலாம். ஹிப்னோ தெரபி மற்றும் சைக்கோ தெரபி ஆகியவை பயத்தை எதிர்கொள்ளச் சிறந்த நுட்பங்கள் ஆகும்.
- இ.நிவேதா