Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17
பிரீமியம் ஸ்டோரி
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17

போப்பு, மருத்துவ எழுத்தாளர்குடும்பம்

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17

போப்பு, மருத்துவ எழுத்தாளர்குடும்பம்

Published:Updated:
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17
பிரீமியம் ஸ்டோரி
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17

ர் உணவில் அடர்நிறம் இருக்குமானால் அதன் சுவையும் அடர்த்தியாக இருக்கும். சுவை அடர்த்தியாகக் காணப்பட்டால் அதில்  நுண்சத்துகள் நிறைந்திருக்கும். இத்தகைய நுண்சத்துகள் நிறைந்த இயற்கையான விளைபொருள்களான காபி, கோகோ போன்ற கொட்டை வகைகளில் இருந்தும் பழவகைகளில் இருந்தும் மனிதர்களின் சுவை ஈர்ப்பை அடையாளம் கண்டுகொண்டனர் செயற்கை உணவுத் தயாரிப்பாளர்கள்.

இயற்கை விளைபொருள்கள் ஆண்டுக்கு ஓரிரு பருவங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியவை. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மக்கள் அந்தந்தப் பருவங்களில் கிடைக்கும் உணவுகளை மட்டுமே உண்டு வந்தனர். அவற்றை ஆண்டு முழுவதும் உண்ணவேண்டும் என்ற பேராசையும் கனவும் அவர்களுக்குத் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. தற்கால நுகர்வு வேட்கைதான் ஒரு பொருள் விளையாத காலத்திலும் அவற்றை உண்ண வேண்டும் என்ற விருப்பத்தை அவனுள் ஆழமாக ஊன்றியிருக்கிறது. முதலில் உணவுப்பண்டத்தை அது கிடைக்கும் காலத்தில் சேமித்துப் பதப்படுத்தி வைக்கத் தொடங்கினர். ஆனால், இயற்கையான முறையில் பதப்படுத்த அதற்குரிய காலமும் மனித உழைப்பும் செலவாகும். எனவே சந்தைப் போட்டியில் நிலைத்து நிற்க முடியாது என்பதை உணர்ந்து விரைவாகவும் பெரிய அளவிலும் பதப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். அதற்காக ரசாயனத்தின் உதவியை நாடினர். பின்னர் அதனுடன் கவர்ச்சிக்காகக் கொஞ்சம் நிறமியையும் செயற்கைச் சுவையூட்டியையும் சேர்த்தனர். அப்படிச் சேர்க்கப்படும் மிகக்குறைந்த அளவிலான ரசாயனத்தை எளிதாக வெளியேற்றிவிடும் தகவமைப்பை உடல் இயல்பாகவே பெற்றுள்ளது.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17

இயற்கையான உணவிலும்கூட நமது உடல் முழுமையாக ஏற்றுக் கொள்ளாத ரசாயனக்கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை சிறுநீர், மலம், மூச்சுக்காற்று, ஏப்பம், அபானவாய்வு பிரிதல் போன்ற வழிகளில்  உடனுக்குடன்  உடல் வெளியேற்றிவிடும். அதுபோலவே மிகக்குறைவான அளவில் உடலில் சேரும் செயற்கையான ரசாயனக்கூறுகளையும் உடல் வெளியேற்றிவிடும். ஆனால் தற்கால வாழ்க்கைமுறையில் காலையில் அரைத் தூக்கத்தில் பற்பசையைப் பிதுக்குகிறோம். அதில் தொடங்கி இரவு தூங்கப்போவதற்குமுன் வாயைச் சுத்தப்படுத்துவதாகக் கூறிக் கொப்பளிக்கும் `மவுத்வாஷ்’ வரை ரசாயனக் கலப்பற்ற பொருள்களை நம்மால் இனம் பிரிக்கமுடியாது.

நாம் பயன்படுத்தும் பற்பசையில்,  நரம்புகளில் போதை ஊக்கியாகச் செயல்படும் நிக்கோடினில் துவங்கிப் பற்களின் எனாமலை அரிக்கும் ஃபுளோரைடு வரை 67 வகையான ரசாயனக் கூறுகள் உள்ளன.  அவற்றை  விளம்பர டாக்டர்கள் ஆளுக்கு ஒன்றாகப் பரிந்துரைக்கிறார்கள். நாள்தோறும் இரண்டு பட்டாணி அளவு மட்டுமே பற்பசைகளைப் பயன்படுத்தினாலும் அவை ஒரு மனிதனின் ஆயுளில் 20 கேலன்கள் அளவு  நம் உடலில் சேர்ந்துவிடுகிறது என்கிறது ஓர் ஆய்வு. நமது உடலில் அதிக ஈர்ப்புத்திறன் நிறைந்த பற்களின்மூலம் அவை ரத்தநாளங்கள் முதல் எலும்புவரை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மக்கள் நலனில் அக்கறை கொண்ட டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

காலகாலமாகப் பற்பசைகளைக் கொண்டு பல் துலக்கும் பழக்கத்திலிருந்து நம்மால் அவ்வளவு எளிதில் விடுபட முடியாதுதான். குறைந்தபட்சம் ரசாயனக் கலப்புள்ள பற்பசைகளைத் தவிர்த்து பிராண்டட் பற்பொடிகளைப் பயன்படுத்தலாம். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் காரத்தன்மை நிறைந்த பற்பொடிகள் பற்களைப் பாதுகாக்கக்கூடியவை. அத்துடன் அவை செரிமானத்திறனை மேம்படுத்தக்கூடியவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17

அரிசி உமியை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சாதாரணப் பற்பொடிகூட அவ்வளவு ஆபத்தானதல்ல. அதேநேரத்தில், உடலில் ரசாயனம் சேர்வதைத் தவிர்க்கவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒருவேளை உணவு முழுவதையும் பழங்களாக மாற்றிக்கொள்வதே சிறந்தது. பெரும்பாலான பழங்களை மாலைநேரத்தில் உண்பதே சிறந்தது என்று பரிந்துரைக்கிறது பாரம்பர்ய உணவு நூலான, ‘பதார்த்த குணவர்த்தினி’. தற்கால வாழ்க்கைமுறையில் அதற்கான சாத்தியங்கள் குறைவுதான் என்றாலும் அந்தி சாய்ந்ததும் செரிமானமாகக் கடினமான சமைத்த உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதற்குப் பதிலாக செரிமானத்துக்கு எளிதான பழங்களைச் சாப்பிடுவதே நல்லது.

பழங்களில் சிறந்தது எது? இந்தக் கேள்விக்கு கூகுளில் தொடங்கி வாட்ஸ்ஆப் வரை ஆயிரமாயிரம் பதில்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அந்தந்தப் பருவத்தில் நாம் வாழும் நிலப்பரப்பில் விளைந்த பழங்களே சிறந்தவை என்பதே உண்மை. இதில் நீங்கள் சத்து விவரங்களையோ, உடல் நலக்குறிப்புகளையோ தேட வேண்டியதில்லை. நமது புறச்சூழலில் விளையும் அனைத்துமே நமது உடலுக்கு ஏற்றவை. அதிலும் குறிப்பாக நாம் நிலத்தைப் பண்படுத்தி விளைவிக்க அவசியமில்லாமல், தானாகவே விளையும் பழவகைகள் நம் மூதாதையரின் மரபணுக்களுடன் தொடர்ந்து வந்து நம்மில் உறையக்கூடியவை. அந்த வகையில் இந்தப் பருவத்தில் விளையும் மாம்பழம் எல்லாவற்றையும்விடப் பழைமையானது.

தென்கிழக்கு ஆசிய நாடான பர்மாவும், தாய்லாந்தும்தான் மாம்பழத்தின் பிறப்பிடம் என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும் இந்நாட்டுப் பழங்களின் சுவை தென்னிந்தியச் சுவைக்கு மேலானதல்ல. இமயமலை அடிவாரத்து மாம்பழங்கள் குறித்த குறிப்புகளும் கல்வெட்டுகளும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்கின்றன. தென்னிந்திய மாம்பழ வரலாறு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மூத்தது. இன்றளவும் ஆந்திரா, கர்நாடகா, தமிழக மாம்பழங்களை விஞ்சிய சுவை வேறெந்த நாட்டுப் பழங்களுக்கும் இல்லை. தமிழகத்திலும் குறிப்பாக இளம்பனி குளிர்ச்சூழல் நிலவும் பழைய சேலம் மாவட்டத்தின் வட பகுதிகளில்தான் அதிகமாகவும் சுவையானதுமான மாம்பழங்கள் விளைகின்றன. கிட்டத்தட்ட இதேபோன்ற சீதோஷ்ண நிலை உள்ள ராஜபாளையம் பகுதியில் விளையும் மாம்பழங்களும் வெகு சிறப்பானவையே.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17

`வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்றொரு பழமொழி உண்டு.  மாங்காய்ப் புளிப்பைக் காணும் நொடியிலேயே வாயில் எச்சில் ஊறிப் புளிக்கத் தொடங்கிவிடும். அத்தனை சுவை மிகுந்த மாவடு, மாங்காய், பழம் என அனைத்துமே உடலுக்கு ஆற்றல் தருபவை. மாம்பூவை இரவில் சுமார் 8 மணி நேரம் நீரில் ஊறவைத்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப்புண், குடல் புண் போன்றவை சட்டென்று தணியும்.  உப்பில் ஊறிய மாவடுவின் துவர்ப்பும் அதன் உப்புத்தன்மையும் வித்தியாசமான சுவை தருவதுடன் நல்ல பசியுணர்வைத் தூண்டும். `மாதா ஊட்டாத சோற்றை மாவடு ஊட்டும்’ என்பார்கள். அதாவது,  ‘பசியில்லாமல் மந்தமான சூழலில் தாய்  தன் குழந்தைக்கு ஊட்டமுடியாத சோற்றைக்கூட, பசியுணர்வைத் தூண்டி மாவடு ஊட்டும்’ என்பது பொருள். மென்மையான தோலைக் கொண்ட மாம்பழத்தின் தோலை நீக்காமல் அப்படியே உண்பதே சிறப்பு. தோலில் உள்ள துவர்ப்புச் சுவையும் இளங்கசப்புச் சுவையும் பழத்தில் நிறைந்துள்ள இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையை எளிதில் செரிக்கச் செய்யும். மலச்சிக்கல் இருந்தாலும் உடனடியாக விலகும்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17எத்தனை சிறப்பான மருத்துவக் குணங்கள் கொண்டிருந்தாலும் மாம்பழத்தை ஆசைக்காக உண்பதைவிடப் பசிக்காக உண்பதன்மூலம் அதன் பலனைப் பெறமுடியும். பசியில்லாதபோது சாப்பிடும் மாம்பழம் நேரெதிரான விளைவையே தரும். குறிப்பாகச் சிறுவர்களை மாம்பழம் அதிகமாகக் கவரும்; அதற்காக அளவுக்கு மீறி சாப்பிட்டால் சாதாரண வயிற்றுவலியில் தொடங்கி ரத்தப்போக்குடன் கூடிய மலக்கழிச்சல்வரை பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

மாம்பழத்தைப் பழுக்கவைக்க மேற்கொள்ளப்பட்ட ரசாயனமுறைகள் பரவலான விழிப்பு உணர்வால் மெதுவாக வழக்கொழிந்து வருகின்றன. ரசாயனம் மூலம் பழுக்கவைத்த மாம்பழங்கள் உடல் அரிப்பு முதல் பல்வேறுவிதமான உடல் தொல்லைகளை ஏற்படுத்தும். மாம்பழ விற்பனை எளிய வணிகர்களின் கையில் இருப்பதுடன் ஒரே இடத்தில் தொடர்ந்து அவற்றை வாங்குவதால் வணிகர்கள் வாடிக்கையாளர்களுக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள்.

எத்தனை ரசாயனக் கலப்பு இருந்தாலும், இளம் வெந்நீரில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கலந்து அதில் பத்து நிமிடம்  மாம்பழத்தை ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு சாதாரண நீரில் இரண்டு முறை அலசினால் மாம்பழத்தில் உள்ள ரசாயனம் பெருமளவு நீங்கிவிடும்.

மாம்பழத்தின் மேலும் பல சிறப்புகளையும், அதன் விதவிதமான செய்முறைகளையும் தொடர்ந்து பார்ப்போம்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism