Published:Updated:

ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா...இந்தியாவைப் பாதிக்குமா?

இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகம். குறிப்பாக பெரு நகரங்களில் மிகவும் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் எபோலா பரவினால், பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பது மிகவும் கடினம்.

ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா...இந்தியாவைப் பாதிக்குமா?
ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா...இந்தியாவைப் பாதிக்குமா?

வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டில் உலகத்தையே ஆப்பிரிக்க நாடுகளின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த எபோலா வைரஸ் நோய் தற்போது மீண்டும் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தலைதூக்கியுள்ளது. காங்கோவில் எபோலாவால் பாதிக்கப்பட்ட 329 பேரில் 205 பேர் உயிரிழந்துள்ளனர். எபோலா வைரஸை உயிர்க்கொல்லி நோய் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். காரணம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் 9 பேர் உயிரிழந்துவிடுவர்.

எபோலா வைரஸ் நோய்க்கு முதலில் `எபோலா ரத்தக்கசிவு காய்ச்சல்' (Ebola haemorrhagic fever) என்று பெயரிடப்பட்டிருந்தது. சிம்பன்ஸி, கொரில்லா, பழம்தின்னி வௌவால், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளை இந்த வைரஸ் பாதித்தது. அதன்பின்பு விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியது. தற்போது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. மனிதனின் ரத்தம், எச்சில், வியர்வை, கபம், வாந்தி, சிறுநீர், மலம், விந்து ஆகியவற்றின் மூலம் இது பிறருக்குப் பரவும். 1976-ம் ஆண்டு வடக்கு சூடான் மற்றும் காங்கோ ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காங்கோ நாட்டின் எபோலா ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள கிராமத்தில் இந்த நோய் கண்டறியப்பட்டதால் `எபோலா வைரஸ்' என்ற பெயர் வந்தது.

டெங்கு, சிக்குன்குன்யா போன்று காய்ச்சல், உடல்வலி, தொண்டை வலி, சோர்வு ஆகியவையே எபோலா வைரஸுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள். அதன்பின்னர் வாந்தி, வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டில் பாதிப்பு, உடலின் உள்ளும் புறமும் ரத்தக்கசிவு ஆகியவை ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை அணுக்களும் தட்டணுக்களும் குறையும். ரத்தக்கசிவுதான் உயிரிழப்புக்கு முக்கியக் காரணி.

மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல்களிலிருந்து எபோலாவைப் பிரித்தறிவது கடினம். அதனால் ஆய்வகப் பரிசோதனை மூலமே எபோலாவை உறுதிசெய்யமுடியும். எபோலா வைரஸ் நோய்க்கென்று பிரத்தியேக சிகிச்சை முறைகளும் கிடையாது. உடலில் இழந்த நீர்ச்சத்தை மீட்டெடுத்தல் மற்றும் அறிகுறிகளுக்கான சிகிச்சைகள் மட்டுமே உள்ளன. தடுப்பூசிகளும் முறையான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அவற்றின் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அந்தப் பணிகளில் ஈடுபடுவோரும் தற்காப்புக்கான உடைகள், முகக்கவசங்களை அணிந்து கொண்டுதான் உடலை அகற்றுவார்கள். நோயாளிகளுடன் அதிக தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

1976- ம் ஆண்டு எபோலா கண்டறியப்பட்டாலும், 2014-2016 கால கட்டத்தில்தான் மிகப்பெரும் கொள்ளை நோயாக அது உருவெடுத்தது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் கொத்துக் கொத்தாய் மரணித்தனர். அந்தக் காலத்தில் சியாரா லீயோன் நாட்டில் 12,124 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டனர், 3,956 பேர் உயிரிழந்தனர். லைபீரியா நாட்டில் 10,675 பேர் தாக்கப்பட்டனர், 4,809 பேர் உயிரிழந்தனர். கினியா நாட்டில் 3,811 பேர் பாதிக்கப்பட்டனர், 2,543 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளதாலேயே எபோலாவை விரைவாகக் கட்டுப்படுத்த இயலவில்லை' என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது. எபோலாவின் தீவிரத்தைக் குறைத்து அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. 

எபோலா பாதிப்பு அதிகரித்திருந்த காலகட்டமான 2014-ம் ஆண்டில், ஆப்பிரிக்க நாடான கினியாவில் தங்கிப் பணிபுரிந்து கொண்டிருந்த தேனி மாவட்டம் கொடுவாளைப்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞர் இந்தியாவுக்கு வந்தார். அந்தச் சமயத்தில், `ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்வதையோ, ஆப்பிரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதையோ தவிர்க்க வேண்டும்' என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. 

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 9- ம் தேதி சென்னை விமான நிலையம் வந்திறங்கினார் பார்த்திபன். ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்ததால் அவரைச் சொந்த ஊருக்குச் செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பார்த்திபன். அங்குத் தனி வார்டில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார். பார்த்திபனின் ரத்த மாதிரி, புனேவிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிப் பரிசோதிக்கப்பட்டது. `எபோலா அறிகுறிகள் இல்லை' என்று உறுதி செய்யப்பட்டபிறகே அவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருந்தாலும் 20 நாள்களுக்குச் சொந்த ஊரிலேயே அவர் கண்காணிக்கப்பட்டார்.

எபோலாவை முதன்முதலாகக் கண்டுபிடித்த லண்டன் சுகாதார வெப்ப மண்டல மருந்துகளுக்கான கல்லூரியின் பேராசிரியர் பீட்டர் பயோட், `எபோலாவின் தாக்கம் இந்தியாவில் ஏற்பட்டால் என்னவாகும்' என்று கருத்து தெரிவித்திருந்தார். ``இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகம். குறிப்பாகப் பெரு நகரங்களில் மிகவும் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் எபோலா பரவினால், பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த இடங்களுக்குச் சென்றார்கள், அவர்கள் யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்பதையெல்லாம் கண்டறிந்து, அவர்களுக்கும் நோய் பரவாமல் காப்பாற்றுவது என்பது மிகவும் சிரமமான காரியம். இந்தியாவின் பல்வேறு இடங்களில் காணப்படும் சுகாதாரக் குறைபாடுகள் இந்த நோய்க்கு மேலும் வலு சேர்க்கும்" என்று தெரிவித்திருந்தார். 

மேற்கு ஆப்பிரிக்காவில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது எபோலா மீண்டும் தலைதூக்கியுள்ளதால், இந்தியாவுக்குள் அந்த நோய் நுழைய வாய்ப்புள்ளதா, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டுள்ளனவா என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமியிடம் கேட்டோம்:

``எபோலா பாதிப்பு சிறிய பகுதிக்குள் ஏற்பட்டிருந்தால், அதை அந்த எல்லைக்குள்ளாகவே கட்டுப்படுத்த முயற்சிகள் எடுப்பார்கள். அதிக இடங்களில் பரவியிருந்தால் மட்டுமே, பிற நாடுகளுக்கும் எச்சரிக்கை அனுப்பப்படும். இதுவரை எபோலா வைரஸ் குறித்த எச்சரிக்கை இந்தியாவுக்கு வரவில்லை. ஒருவேளை எச்சரிக்கை வரும்பட்சத்தில், ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குள் வருபவர்கள் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் விமானம் மூலம் வருவது தடை செய்யப்படும். குறிப்பிட்ட சில விமான நிலையங்களில் வந்து இறங்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அந்த விமான நிலையங்களில் ஆப்பிரிக்கப் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். எபோலா நோய் தாக்கம் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க முடியும் என்றாலும், டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்று அதைச் சமாளிப்பது அத்தனை எளிது அல்ல" என்றார் அவர்.

பொதுவாகவே, உடலில் நோய்எதிர்ப்புச் சக்தி இருந்தால் எந்த வைரஸ் பாதிப்பிலிருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும். காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஃப்ரஷ் உணவுகளையே எப்போதும் சாப்பிட வேண்டும். பால் பொருள்கள், கேழ்வரகு, கம்பு, தினை போன்ற சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்களின் ஆலோசனை.