மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விரல் சூப்பும் வானவில்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 5

விரல் சூப்பும் வானவில்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 5
பிரீமியம் ஸ்டோரி
News
விரல் சூப்பும் வானவில்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 5

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

நான்கு மற்றும் ஐந்தாம் மாதங்களில் உங்கள் குட்டிப்பாப்பா என்னென்ன செய்யும்? அம்மாக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? விளக்கமாகச் சொல்கிறேன்.

ஐம்புலன்களும் வேக வேகமாக வளர ஆரம்பிக்கும்!

நான்காவது மாதத்தில், பொடிசுகள் தங்கள் கருமணி கண்களைச் சுழற்றித் தங்களைச் சுற்றி என்னென்ன இருக்கின்றன, எங்கெங்கு இருக்கின்றன என கவனிக்க ஆரம்பிப்பார்கள். கண்களைக் கொட்டிக் கொட்டிப் பார்ப்பார்கள். ஓசைகளைக் கவனிக்க ஆரம்பிப்பார்கள். அம்மாவின் வாசனையை வைத்தே அம்மா செல்கிற பக்கமெல்லாம் கண்களைச் சுழற்றிப் பார்ப்பார்கள். மொத்தத்தில் குட்டீஸுக்கு ஐம்புலன்களும் வேகமாக வளர ஆரம்பிப்பது இந்த நான்காவது மாதத்தில்தான்.

விரல் சூப்பும் வானவில்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 5

பாப்பாவுக்கு இடதுகைப் பழக்கமா?

ஒரு பொருளைக் கைகளால் பிடிக்க வேண்டுமென்றால், குழந்தைகள் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு முயற்சி செய்வார்கள்; ஒரு கையை அதிகம் பயன்படுத்துவது, ஒரு கையைக் குறைவாகப் பயன்படுத்துவது என்று செய்ய மாட்டார்கள். சில பெற்றோர், ‘எங்க பாப்பா இடது கையால்தான் பொருள்களைப் பிடிக்க முயற்சி பண்றா. வளர்ந்தா லெஃப்ட் ஹேண்டரா இருப்பாளா டாக்டர்?’ என்று கேட்பார்கள். நான்கு மாதக் குழந்தைக்கு ஒரு கையை மட்டும் அதிகமாகப் பயன்படுத்துகிற பழக்கம் வரவே வராது; வரவும் கூடாது. அப்படிச் செய்கிறார்கள் என்றால், அவர்களின் மூளையில் பிரச்னை இருக்கலாம்.

தசைகள் திடமாக இருக்கின்றனவா?

நான்காவது மாதத்தில் பாப்பாவுக்குப் பாலூட்டிக் கொண்டே, அதன் பிஞ்சுக் கைகளையும் கால்களையும் பிடித்துவிடுவதைப்போல மென்மையாக அழுத்திப் பாருங்கள். தசைகள் திடமாக இருக்க வேண்டும்.

கட்டிலில் வட்டமடிக்கும் வாண்டுகள்!

குப்புற அடிப்பது, தலையைக் கொஞ்சம்போலத் தூக்கிப் பார்ப்பது என்று நம்மைக் குஷிப்படுத்துகிற வாண்டுகள், நான்கு மற்றும் ஐந்தாவது மாதங்களில்தான் படுக்கையில் வட்டமடிக்கவும் ஆரம்பிப்பார்கள். குழந்தையைக் கட்டிலின் மத்தியில் படுக்க வைத்துவிட்டு அம்மா ரெஸ்ட் ரூம் போய்விட்டு வருவதற்குள், அது வட்டமடித்து கட்டிலின் ஓரத்துக்கு வந்துவிடும். கொஞ்சம் கவனிக்காமல் விட்டாலும் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிடலாம். எனவே கவனம் தேவை!

விரல் சூப்பும் வானவில்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 5

விரல் சூப்பும் பழக்கம்!

குழந்தைகளுக்குப் பசிக்க ஆரம்பித்தாலோ, அல்லது ஒரு பழக்கமாகவோ விரல் சூப்ப ஆரம்பிப்பார்கள். வளர வளர இந்தப் பழக்கத்தைக் குழந்தைகளே நிறுத்தி விடுவார்கள். ஒரு வயதில், பற்கள் முளைக்கும் நேரத்திலும் இது தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

பால் கக்குகிறார்களா?

குழந்தைகள் சில நேரம் தங்கள் தேவைக்கும் அதிகமாகப் பால் குடித்துவிட்டுக் கக்க ஆரம்பிப்பார்கள். இதைத் தவிர்க்க, குழந்தைகளுக்கு இரண்டரை அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை எனப் போதுமான அளவுக்கு மட்டும் பாலூட்டலாம்.

ஒவ்வாமைப் பிரச்னை!

விரல் சூப்பும் வானவில்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 5


பசும்பாலோ அல்லது பவுடர் பாலோ குடிக்கிற குழந்தைகளுக்குப் பால் ஒவ்வாமை ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, சருமம் சிவந்து போதல் அல்லது தடித்துப் போதல், அரிப்பு, தும்மல், சுவாசக்கோளாறு, ஆசனவாய் சிவந்து போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். ஆனால், தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படாது. சில குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்காகத் தாய்ப்பால் ஏற்றுக்கொள்ளாமல் இப்படி நிகழலாம். இது, குழந்தை பிறந்த முதல் வாரத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் ஏற்றுக் கொள்ளாமல் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், தாய்ப்பாலில் பசும்பால் இருப்பதுதான் காரணம். பாலூட்டுகிற அம்மா பால் குடிப்பதாலும், காபி, டீ, பனீர், பிஸ்கட், பிரெட் என்று பசும்பால் சார்ந்த பொருள்களை அதிகம் எடுத்துக்கொள்வதாலும், அம்மாவின் தாய்ப்பாலில் பசுவின் புரதமும் கலந்து குழந்தைக்குப் போய்ச் சேர்ந்துவிடும். குறிப்பிட்ட குழந்தைக்குப் பசும்பால் ஒவ்வாமை பிரச்னை இருக்கும்பட்சத்தில், அதன் அறிகுறிகள் குழந்தையிடம் தெரிய ஆரம்பித்து விடும். இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சையே குழந்தையின் அம்மா, பால் சம்பந்தப்பட்ட அத்தனை உணவுப் பொருள்களையும் தவிர்ப்பதுதான். பாப்பாவுக்குப் பசும்பால் ஒவ்வாமை ஏற்பட்டுக் குறைந்தது 3 மாதம் முதல் 6 மாதம் கழித்துப் பசும்பால் அல்லது பாக்கெட் பாலைத் தாய் குடித்துவிட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து, இன்னமும் பாப்பாவுக்குப் பசும்பால் ஒவ்வாமை இருக்கிறதா என்று செக் செய்து பார்க்கலாம். ஏற்றுக் கொண்டால் சரி. இல்லையென்றால், பாலைத் தவிர்த்துவிட்டு அரிசி, காய்கறிகள், பழங்கள், கேழ்வரகு, முளைகட்டிய தானியங்கள் என்று சத்தான உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பசும்பால் ஒவ்வாமை ஒரு தடவை வந்தால், அது வாழ்நாள் முழுவதும் தொடருமா என்பதைக் கண்டறிய முடியாது.

‘நிப்பிள்’ வைக்கலாமா?


‘Pacifier’ (சமாதானப்படுத்தக்கூடிய ஒரு பொருள்) என்று சொல்லப்படும் செயற்கை ‘நிப்பிளை’ சிலர் குழந்தையின் வாயில் வைத்துப் பழக்குவார்கள். அம்மாவின் மார்புக்காம்பைப் போலவே இருப்பதால், குழந்தைகளும் இதைச் சப்புவார்கள். பாட்டில் பால் குடிக்கிற குழந்தைகளுக்கு அந்த நிப்பிளுக்கும் இந்த நிப்பிளுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியாது. ஆனால், தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு, நிப்பிளின் வளைந்து கொடுக்காத தன்மைக்கும், அம்மாவின் மார்புக் காம்பின் வளைந்து கொடுக்கிற தன்மைக்கும் வித்தியாசம் தெரியும் என்பதால் குழப்பமடைவார்கள். தவிர, நிப்பிள் பயன்படுத்திய குழந்தைகளுக்குப் பின்னாளில் பல் கோணல், பல் தூக்கல், வரிசையற்ற பற்கள் என்று பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆறாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கும் பாப்பாவுக்கு, முதல் உணவு என்ன? சொல்கிறேன்!

(வளர்த்தெடுப்போம்!)

- ஆ.சாந்தி கணேஷ்

ஐந்தாவது மாத இறுதியில்

* திடீரென்று ஒரு குரல் கொடுப்பார்கள்.

* வலி, உணர்வு நன்றாகத் தெரியும்.

* உட்கார ஆரம்பிப்பார்கள். அப்படிச் செய்யாத பிள்ளைகளை இரு பக்கமும் தலையணை வைத்து உட்கார வைக்கலாம். 

* சில அம்மாக்கள் இந்த மாதத்தில் குழந்தைகளுக்குப் பசும்பாலும் பிஸ்கட்டும் தருவார்கள். பால் தரத் தேவையில்லை. உப்பு, சோடா மாவு, கோதுமை அல்லது மைதா சேர்த்துத் தயாரிக்கப்படுவதால் பிஸ்கட் தரவே கூடாது.

* சில அம்மாக்களுக்கு இந்த மாதத்தில் பால் சுரப்பு குறையலாம். அவர்கள், பால் சுரப்பை அதிகப்படுத்துகிற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், சந்தோஷமும் தண்ணீரும்தான் தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கிற விஷயங்கள்.  மருத்துவக் காரணங்களால் பால் சுரப்பு குறைந்தால் மருத்துவரை அணுகிப் பிரச்னையின் தன்மைக்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

சத்து டானிக்

நான்காவது மற்றும் ஐந்தாவது மாதங்களிலும் மருத்துவரின் அறிவுரைப்படி குழந்தைக்கு இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் டி டிராப்ஸ் தர வேண்டும்.