Published:Updated:

மர்மக் காய்ச்சல் என்றால் என்ன... அதைத் தடுப்பது எப்படி?

மர்மக் காய்ச்சல் என்றால் என்ன... அதைத் தடுப்பது எப்படி?
மர்மக் காய்ச்சல் என்றால் என்ன... அதைத் தடுப்பது எப்படி?

மிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. காய்ச்சலைக் குணப்படுத்தும் சிகிச்சைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் கண்டறியப்படாத மர்மக் காய்ச்சல் வேறு வந்து மக்களைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. 

அதென்ன மர்மக் காய்ச்சல்..? அதைக் கண்டறியமுடியாதது ஏன்..? மர்மக் காய்ச்சல் உயிரிழப்பை ஏற்படுத்துமா? 
பொதுமருத்துவர் எழிலனிடம் கேட்டோம்.

``மர்மக் காய்ச்சல் என்ற வார்த்தையே மருத்துவரீதியாக பீதியூட்டுவதாக இருக்கிறது. அதற்குப் பதிலாக `கண்டறியப்படாத நோய்' என்று சொல்வதே சரியாக இருக்கும். அத்தகைய காய்ச்சலை ஏற்படுத்துவது எந்தவகையான வைரஸ் கிருமி என்று இதுவரை தெரியவில்லை. ஆனால், அதன் வெளிப்பாடுகள் சில காய்ச்சல்களின் அறிகுறிகளைப் போன்றே காணப்படுவதால், அதை `மர்மக் காய்ச்சல்' என்கிறோம். எதனால் வருகிறது, காரணமான கிருமி எது என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால், அதை ஆய்வு செய்ய முறையான வசதிகள் நம்மிடம் கிடையாது. 

டெங்கு காய்ச்சல் கொசுவால் பரவக்கூடியது. கொசு மூலம் பரவும் ஆர்போ வைரஸில் (arbo- arthropod-borne viruses) பல வகைகள் இருக்கின்றன. அதில், மனிதனைத் தாக்கும் 25 சதவிகித வைரஸில் ஐந்து சதவிகித வைரஸ்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் குறைவான சதவிகிதத்தில் உள்ள வைரஸ்களை மட்டுமே நம்மால் கண்டறியமுடியும். 
மர்மக் காய்ச்சலை எப்படிக் கண்டறியலாம், தீர்வு காண்பது எப்படி என்பதைப் பார்க்கலாம். 

`எபிடெமியோலாஜிக்கல் ஸ்டடிஸ்’ (Epidemiological studies) எனப்படும் தொற்றுநோய் குறித்த ஆய்வை அமல்படுத்தவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வகையான கிருமிகள் ஆங்காங்கே கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப பல்வேறு நோய்கள் வந்துபோகின்றன. எனவே, பொறுப்புள்ள மத்திய, மாநில அரசுகள் அந்த வைரஸ் மற்றும் நோய்கள் பற்றி ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும். அத்துடன் எந்தெந்த இடங்களில் எத்தகைய காரணங்களால் நோய்த் தாக்குதல் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அதை, புனேயில் உள்ள `நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி’ துறைக்கு அனுப்பி, ஆய்வு செய்யலாம். இதையடுத்து அதற்கேற்றவாறு சிகிச்சை முறைகளை அமல்படுத்தலாம். 

மருத்துவத்தில் நம்மிடம் இயல்பான கட்டமைப்பு மட்டுமே இருக்கிறது. அதனால்தான், உயிருக்கு ஆபத்து என்னும்போது அதற்கு ஆதரவான சிகிச்சை (Supportive Treatment) மட்டுமே கொடுக்க முடிகிறது. எந்த வகையான வைரஸ் தாக்கினாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, காய்ச்சல் மருந்துகள் மற்றும் சத்து ஊசிகள் செலுத்தி நோயாளியைக் காப்பாற்றுகிறோம். எந்தவகையான வைரஸ் கிருமியாக இருந்தாலும், தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதுதான் சரியானதாக இருக்கும். 

மர்மக் காய்ச்சல் என்பது என்ன.. அது எதனால் பரவுகிறது... அதன் அடித்தளம் என்ன என்பதை முதலில் கண்டறிய வேண்டும். சில காய்ச்சல்கள் இருமல், சளி மூலம் பரவக்கூடியதாக இருக்கும். கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் குடிக்காததால் சிலவகை காய்ச்சல்களும், கொசுவால் பரவும் சில காய்ச்சல்களும் உள்ளன. ஒரு கிராமத்தில் குடிநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யாததால், அங்கு உருவாகும் வைரஸ் கிருமியாலும் பாதிப்பு ஏற்படலாம். இதுபோன்று நிறைய காரணங்கள் இருக்கின்றன. எனவே, அவற்றையெல்லாம் நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 

மர்மக் காய்ச்சலுக்கெனத் தனிப்பட்ட சிகிச்சை முறைகள் எதுவும் இல்லை. அத்தகைய காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமியை அடையாளம்

காண முடியவில்லை. அதைக் கண்காணிக்கும் விஷயங்கள் தெரியாததால். அந்தக் காய்ச்சல் மர்மமாக இருக்கிறது” என்றவரிடம், ``பன்றிக் காய்ச்சலிலும் அதே அறிகுறிகளுடன் வரும் வேறு காய்ச்சல்களும் உள்ளனவா?’' என்று கேட்டோம். 

`ஆம், நிறைய இருக்கின்றன. பன்றிக்காய்ச்சல் என்பது ஒருவகையான இன்ஃபுளூயென்ஸா வைரஸ். அதில் `ஹெச்1என்1' வைரஸ் ஒருவகை. அந்த வைரஸ் கிருமி மீது இருக்கும் லேயரில் சவ்வுப்பகுதியை இணைக்கும் ஒருவகையான புரதம் உண்டு. இந்தப் புரதத்தை வைத்துத்தான் எந்த வகையென்று பிரிக்கிறோம். புதிய வகை வைரஸ் கிருமி வந்தால், அதை எதிர்க்கும் சக்தி மனிதர்களிடம் இருக்காது. அதனால், வேகமாகப் பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழப்பு வரை கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. ஆனால், காலப்போக்கில், அவற்றை எதிர்த்துப் போராடும் சக்தி கிடைத்துவிடும். இன்றைக்கு அறிவியல் வளர்ந்துவிட்டதால், வைரஸ் கிருமிகளைக் கண்டறிந்து உரியச் சிகிச்சையும், தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

காய்ச்சல்களை எப்படித் தடுப்பது என்று யோசிப்பதைவிட மருத்துவச் சிகிச்சைகள், அதுதொடர்பான ஆய்வு, சமூக ஒருங்கிணைப்பு இருந்தால்தான் இந்த வகையான வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளை எதிர்கொண்டு நோய்களிலிருந்து தப்ப முடியும். அதேபோல இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அவசியம். அதேபோல, மருத்துவ அறிவியல் ஆய்வுகளையும் மேம்படுத்த வேண்டும். 

மர்மக் காய்ச்சல்களின்போது சில சாதாரண இருமல், சளி வந்து சரியாகிவிடும். சிலவகை காய்ச்சலின்போது வயிற்றுப்போக்கு வந்து ஒரு வாரம் வரை இருந்துவிட்டுச் சரியாகும். சில வைரஸ் காய்ச்சல்கள் கைகால் வலி, மூட்டுவலியை ஏற்படுத்தி கடைசியில் உயிரிழப்புவரை கொண்டுபோய்விடும். ஆனால், அந்த வைரஸ் கிருமி யாருக்கெல்லாம் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது, தட்டணுக்களைக் குறைக்கிறது, ரத்தக்கசிவை ஏற்படுத்துகிறது என்பதைக் கணிக்கமுடியவில்லை. இப்படிக் கணிக்க முடியாததாக, மர்மமாக அந்த வைரஸ் கிருமி இருப்பதால்தான் அதற்குப் பெயர் மர்மக் காய்ச்சல். அதைக் கண்டுபிடிக்கத்தான் ஆய்வுகள் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்” என்கிறார் எழிலன்.