Published:Updated:

மண் வாசம்!

மண் வாசம்!

மண் வாசம்!

மண் வாசம்!

Published:Updated:
மண் வாசம்!
மண் வாசம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
மிழச்சி... பேரழகுப் பெண்.  தலை சாய்க்கும் மடியாகவும் தலை கோதும் விரலாகவும் மண்ணையே பாவிக்கிறார் தமிழச்சி. கண்களால் பேசும், இதயத்தால் எழுதும் கவிதைப் பேராசிரியரின் மண் வாசனை இங்கே...

'மல்லாங்கிணற்றில் கிடைக்காத மருத்துவம் இல்லை’ என்று என் ஊர்க்காரர்கள் பெருமையாகச் சொல்லும்போது, எனக்கு சிறு வயதில் வியப்பாக இருக்கும்.

'நம்ம ஊர்ல ஒரு சின்ன ஆரம்ப சுகாதார நிலையம்  தவிர வேறென்ன இருக்கு? இவங்க இப்படிப் பெருமைப்பட்டுக்கொள்ள?’ என அப்போதெல்லாம் திகைத்திருக்கிறேன். வளர்ந்து, ஓடி, ஆடுகையில் படுகின்ற சிறு காயங்கள், காய்ச்சல், சளி, இருமல் என்று எந்தத் தொந்தரவு என்றாலும் 'மல்லாங்கிணறு மருத்துவம்’ எப்படிக் கைகொடுக்கிறது என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொள்ள அதன்பின்தான் எத்தனை சந்தர்ப்பங்கள்!

இந்த ஏப்ரல், மே மாதக் கோடையில் ஊரில் பல நாட்கள் இருந்தேன். கைபேசி, புத்தகங்கள், தொலைக்காட்சி, வெளியூர் நண்பர்கள்  என இவை எதுவும் இன்றி காலை, மாலை நடைப்பயிற்சி, ஊர்ப்பெண்களுடன் அரட்டை, நல்ல சத்தான சாப்பாடு என அற்புதமாக தினங்கள் கழிந்துகொண்டு இருந்தன. திடீரென வலது கணுக்காலில் சற்று வீக்கம். ஏற்கெனவே ஏற்பட்ட காயம் ஒன்றால் அந்த இடம் அவ்வப்போது தொந்தரவு தருவது உண்டு. வீக்கம் வற்றுவதற்கு ஐஸ் பேக் (Ice Pack) ஒத்தடம் வைத்துப்பார்த்தும் கொஞ்சமும் குறைந்தபாடில்லை.

காலைத் தடவிக்கொண்டு கண்மாய்ப் பாலத்தில் உட்கார்ந்திருக்கையில் வல்லாரநெல்லி அம்மா வந்தாள். அவளுக்கு ஏன் அந்தப் பெயர் என்று கேட்கணும் என நினைத்துக்கொண்டு இருந்தபோதே, என் முகச் சுணக்கத்தையும் கால் வீக்கத்தையும் அருகில் வந்தவள் கவனித்துவிட்டாள். ''நடக்க ஆரம்பிச்சா வீங்குதா?'' என்றவள், என் வலது கணுக்காலை அழுத்தி வீக்கத்தை நோட்டமிட்டாள்.

''ஒரு நல்ல கைவைத்தியம் சொல்லட்டா?'' என்றவளைக் கொஞ்சம் சந்தேகத்தோடு பார்த்தேன். ''பெரிய படிப்பு படிச்ச டாக்டருங்க வைத்தியத்த மட்டும்தான் நம்புவியாக்கும்?'' என்று முகவாய் நொடித்தபடி எழுந்தவளைக் கை பிடித்து உட்காரவைத்தேன். நீட்டி முழக்கிப் பின்வரும் வைத்தியத்தைச் சொல்லத் தொடங்கினாள்.

''கண்மாய், வரப்பு ஓரமா நிக்கும் மஞ்சணத்தி மர இலைகளை நல்லா ஆய்ஞ்சு எடுத்துக்கோ. கொஞ்சம் சின்ன வெங்காயத்தை உரிச்சுவெச்சுக்கோ. ரெண்டையும், சாதம் வடிச்ச பழைய கஞ்சி யில் போட்டு நல்லா வேகவெச்சுக்கோ. வெந்ததும், இளஞ்சூடா, அப்பிடியே மெல்லிசா ஒரு துணியில கட்டி, வீக்கமா இருக்கிற இடத்தில் ஒத்தடம் கொடு. அப்பிடியே அப்பப்போ தொடர்ந்து கொடுத்து வந்தா, ஒரே வாரத்தில் வீக்கம் படிப்படியாக் குறைஞ்சிரும். வலியும் ஓடிப் போயிரும்ப்பா!''

மஞ்சணத்தி மரத்தின் இலைக்கு இவ்வளவு மகத்துவமா என நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தேன். அம்மாவிடம் சொன்னதும் உடனடியாக மஞ்சணத்தி இலைகள் சின்ன வெங்காயம் ரெடி. எந்த வீக்கத்தையும் இந்த மஞ்சணத்தி மாற்றிவிடும் என்று நம்பிக்கை ஊட்டிக்கொண்டே ஒத்தடம் வைக்கப்பட்டது. கொஞ்சம் 'ஸ்... ஆ...’ என்றெல்லாம் அலம்பாமல் இருந்தால் போதும். நம்ப மாட்டீர்கள் - மனதும், உடம்பும் ஒருசேர இணையும் மாயம் நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இயற்கை எனும் மருத்துவர் என் ஊரில் எவ்வளவு கருணையோடு இந்த மஞ்சணத்தி மரங்களைக் கொடுத்திருக்கிறார் என்று இதமான ஒத்தடத்தின் வலி நிவாரணத்தில் நிம்மதியாகத் தூங்கிப் போனேன்.

தொடர்ந்து 10 நாட்கள் தினமும் மஞ்சணத்தி ஒத்தடம் கொடுத்ததில் கால் வீக்கம் வற்றிவிட்டது. நம்மைச் சுற்றி இருக்கும் கொடைகளை நாம் கவனிக்கத் தவறி இருக்கலாம். நம் கிராமத்துப் பாட்டனும் பூட்டியும் அவற்றைத்தான் தங்கள் பொக்கிஷங்களாகப் பாதுகாத்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கண் முன்னே இருப்பவை இயற்கையின் பொக்கிஷங்கள் என நமக்குப் புரியாமல் போய்விட்டது.

நம் காலில் மிதிபடும் ஏதோ ஒரு செடி எத்தகைய மருத்துவக் குணங்களைக் கொண்டது என்பது நமக்குத் தெரியாது. இயற்கையின் மீதான பிரியமும் பேரன்பும் பொங்கும்போதுதான் அந்த மகத்துவம் நமக்கு அகப்படும் நண்பர்களே! 

மண் வாசம்!

தமிழச்சி அழகின் தனி அடையாளம் அவருடைய கூந்தல். எப்படி இவ்வளவு நீளக் கூந்தல் சாத்தியம் என்றால், 'கண் வைக்காதீங்க’ எனச் சிரிக்கிறார். சிறப்பின் காரணமும் சொல்கிறார்.

''இன்னைக்கு வரைக்கும் என் தலைமுடிக்கு நான் ஷாம்பு பயன்படுத்தியதே கிடையாது. செம்பருத்தியையும் சீயக்காயையும் தாண்டிய மகத்துவப் பொருள் தலைமுடிக்கு வேறு எதுவுமே இல்லை. சில நாட்களில் தயிரும் முட்டையோட வெள்ளைக் கருவும் சேர்த்து தலைக்கு தேய்ச்சுக் குளிப்பேன். பிறகு ஈரம் உலர்த்தி தலைக்கு சாம்பிராணி போடுவேன். சாம்பிராணிப் புகை... நல்ல கிருமிநாசினி!

இயற்கையோட வரத்தைப் புறக்கணிச்சிட்டு, ஹேர் மசாஜ், விட்டமின் ஆயில்னு தேடுறது தேவையற்ற வேலை. பாரம்பரியமா நாம பின்பற்றும் விஷயங்கள்தான் நமக்கு எப்பவுமே கை கொடுக்கும்!''

- மல்லாங்கிணறு மணக்கும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism