Published:Updated:

முதுமையிலும் உடல்நலத்தோடு இருக்க இதையெல்லாம் தவிர்க்கணும்!

முதியோர் கீழே விழுந்தால் அது நிறைய விளைவுகளை ஏற்படுத்தும். தலையில் சிராய்ப்பு, காயம், அடி பலமாக இருந்தால் ரத்தம் பீறிட்டு, உயிரிழப்பு ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

முதுமையிலும் உடல்நலத்தோடு இருக்க இதையெல்லாம் தவிர்க்கணும்!
முதுமையிலும் உடல்நலத்தோடு இருக்க இதையெல்லாம் தவிர்க்கணும்!

``கீழே விழுதல் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு. குழந்தைகள் கீழே விழுந்தால், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, யாராவது இருந்தால் அழும். இல்லையென்றால், தானாகவே எழுந்து நிற்கும். பிறகு, சிரித்தபடி விளையாடச் சென்றுவிடும். இது இயற்கை. ஆனால், முதியோர் கீழே விழுந்தால் அது நிறைய விளைவுகளை ஏற்படுத்தும். தலையில் சிராய்ப்பு, காயம், அடி பலமாக இருந்தால் ரத்தம் பீறிட்டு, உயிரிழப்பு ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது'' என்று எச்சரிக்கிறார் முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்.

`முதியோர் நிலை தடுமாறி விழக் காரணம் என்ன... அவற்றிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?’ அவரே விளக்குகிறார்.

``முதியோரில் சிலர் ஒருமுறை கீழே விழுந்து, நல்லமுறையில் எழுந்து நடமாடினாலும், மறுபடியும் எங்கே கீழே விழுந்துவிடுமோ என்று பயந்து, படுக்கையில் விழுந்துவிடவும் வாய்ப்பு உண்டு. இதனால், அவர்களுக்கு மனச்சோர்வு, மனப்பதற்றம் ஏற்படலாம். அந்தளவுக்கு, முதியோர் கீழே விழுவது என்பது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம். 

முதியோர் ஏன் கீழே விழுகிறார்கள்?

மனித மூளையில் உடலை சமநிலைப்படுத்துவதற்கென ஓர் அமைப்பு இருக்கிறது. கண், காது, கழுத்து எலும்பு, மூட்டுகள், நரம்புகள், தசைகள் போன்றவை ஒருங்கிணைந்து செயல்படும். இவையாவும்  சிறுமூளைக்குச் சென்று, நிலை தடுமாறாமல் இருக்க உதவி செய்யும். முதுமை அடைய அடைய உடலை சமநிலைப்படுத்தும் நிலையானது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். இதுதான், முதியோர் கீழே விழுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. 

உடல் சார்ந்த நோய்கள், சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாறுதல்கள் போன்றவைதான் முதியோர் கீழே விழக் காரணிகளாக உள்ளன. பார்வைக் குறைபாடு, காது கேளாமை, கழுத்து எலும்பு மற்றும் மூட்டுகள் தேய்மானம், தொடு உணர்ச்சி குறைதல், மறதி, பக்கவாதம் போன்றவற்றால் நிலைதடுமாறலாம். 

பொதுவாக, முதியோர் ஆறு மருந்துகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. `பாலிபார்மஸி' (Polypharmacy) என்று இதைக் குறிப்பிடுவோம். அதிகப்படியான மருந்துகளை உட்கொள்வதாலும் நிலை தடுமாற வாய்ப்புகள் அதிகம் உண்டு. உயர் ரத்தஅழுத்தம், திடீரென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துபோவது, அதிகமாக மது அருந்துவது போன்றவையும் முதுமையில் கீழே விழுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடும்.

முதியோர் சிலர், வீட்டில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக, குறைவான வெளிச்சம் உள்ள விளக்குகளைப் பயன்படுத்துவார்கள். கழிவறையில் சில இடங்களில் வழவழப்பாகவும் மேடு பள்ளமாகவும் இருக்கும்; கைப்பிடிகள் இருக்காது. அதனால் அந்த இடங்களில் நடந்து செல்லும்போது கீழே விழ நேரிடலாம். அதேபோல, படுக்கை அறையிலும் தேவையற்ற பொருள்களை நிரப்பி வைத்திருப்பார்கள். அவற்றில் மோதியும் கீழே விழவும் வாய்ப்புகள் உண்டு. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது, செல்போனில் பேசிக்கொண்டே கீழே பார்க்காமல் நடப்பது, வீட்டிலிருக்கும்போது செல்போன் சத்தம் கேட்டதும் உடனே எழுந்து எடுக்க முயல்வது போன்ற பல காரணங்களாலும் முதியோர் கீழே விழுகிறார்கள்.

கீழே விழுவதைத் தடுப்பது எப்படி?

50 வயதைக் கடக்கும்போது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அப்போது, ஏதேனும் உடலில் பிரச்னைகள் இருப்பது தெரியவந்தால், தேவையான சிகிச்சை பெற வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிர்க்கலாம். சிலர் ஒவ்வொரு பிரச்னைக்கும் இரண்டு மாத்திரைகள் வீதம் அதிக அளவில் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதுண்டு. அதை மருத்துவரின் ஆலோசனைப்படி கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்ப்பது நல்லது. 

முதியோர் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போது மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலில் படுக்கையிலிருந்து எழுந்து சிறிது நேரம் உட்கார வேண்டும். பிறகு, எழுந்து சிறிதுநேரம் நிற்க வேண்டும். அதன்பிறகே நடக்க முயல வேண்டும். உட்கார்வது, நிற்பது, அதன்பிறகு நடப்பது என இவை மூன்றையும் தவறாமல் பின்பற்றுவது கீழே விழுவதிலிருந்து உங்களைக் காக்கும்.

முதியோர் பல நேரங்களில் தங்களது காலணிகளை மாற்ற மாட்டார்கள். இதனால், காலணி தேய்ந்து போயிருக்கும். இதனால் நடக்கும்போது வழுக்கி விழக் காரணமாகிவிடும். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை காலணிகளை மாற்ற வேண்டும். அது ரொம்பவும் முக்கியமானது. முதியோர் லேசாகத் தள்ளாடும்போதே அவர்களுக்குக் கைத்தடி, வாக்கிங் பிரேம் போன்றவற்றை வாங்கித் தருவது அவசியம்.

வீட்டில் கண் கூசாத அளவுக்குத் தெளிவான வெளிச்சம் உள்ள பல்புகளைப் பயன்படுத்த வேண்டும். முதியோர் உறங்கும் அறையில், `நைட் லேம்ப்'பை எப்போதும் ஒளிர விடுவது நல்லது. குறிப்பாக, கழிவறை அல்லது குளியலறைக்குள் முதியோர் செல்லும்போது உள்பக்கமாக தாழ்ப்பாள் போடக் கூடாது. அங்கே செல்லும்போது, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும். இல்லையென்றால் உள்ளே ஆள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கும்விதமாக வெளியே ஒரு துண்டைப் போட்டுக் கடைப்பிடிக்கலாம்.

வீட்டில் முதியோர் பயன்படுத்தும் பொருள்களை அவர்கள் எளிதாக எடுக்கும்படியான உயரத்தில் வைப்பது அவசியம். செல்போன், சாவிக்கொத்து போன்றவற்றைப் படுக்கைக்கு அருகிலேயே வைக்க வேண்டும். அவர்களது அறையில் தேவையற்ற பொருள்களைப் போட்டு வைக்கக் கூடாது. முதியோர் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். இப்படிச் செய்வதால், அவர்கள் நிலைதடுமாறுவதிலிருந்து தப்பிக்கலாம். நடைப்பயிற்சி மேற்கொண்டும் தள்ளாடும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு `பேலன்ஸ் டிரெய்னிங் எக்ஸர்சைஸ்’ (Balance training exercise) தரலாம். மேற்கண்டவற்றைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வந்தாலே, நிலை தடுமாறி கீழே விழாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்’’ என்கிறார் வி.எஸ்.நடராஜன்.