Published:Updated:

நேர்பட யோசி!

நேர்பட யோசி!
பிரீமியம் ஸ்டோரி
நேர்பட யோசி!

Health ஸ்பெஷல்!

நேர்பட யோசி!

Health ஸ்பெஷல்!

Published:Updated:
நேர்பட யோசி!
பிரீமியம் ஸ்டோரி
நேர்பட யோசி!

லகளவில் மொத்தம் 30 கோடிப் பேர் மனநலம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு.  இந்தியாவைச் சேர்ந்தவர்கள்  6 கோடிப் பேர். பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாடச்சுமை,; மதிப்பெண்  எடுக்க வேண்டும் என்கிற அழுத்தம்...   பள்ளிப் படிப்பைத் தாண்டி ஸ்பெஷல் வகுப்புகள்   என இடைவெளி இல்லாமல் குழந்தைகளை இயக்கிக்கொண்டேயிருக்கிறோம்.  

நேர்பட யோசி!

“குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்தவிதமான  சூழலிலும் அவர்கள்மீது வன்முறையைக் காட்டக் கூடாது. யாரோடும் ஒப்பிடக் கூடாது. படிப்பு, டியூசன் மட்டுமல்லாமல், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டியது அவசியம். குழந்தைகளின் முகம் சோர்வாகக் காணப்பட்டால் அவர்களை அழைத்துப் பேசி அதற்கான காரணத்தை அறிய வேண்டும்.  நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளைப் பேசவேண்டும். நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தும் கதைகளைச் சொல்ல வேண்டும்...” என்கிறார் குழந்தைகள் உளவியல் நிபுணர் கண்ணன்.

பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும் வேலைக்குச் செல்லவேண்டியிருக்கும். அப்போது இதுவரை சந்தித்த நெருக்கடிகளைவிட, பல்வேறு புதிய நெருக்கடிகளை, புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். தனி ஒரு நபராக இந்த உலகைச் சந்திப்பார்கள். ஆனால், இந்தப் பருவத்தில்தான் பலர் எளிதாக மனமுடைந்துவிடுகிறார்கள். வேலை நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, எதிர்காலம் குறித்த பயம் எனப் பலமுனைத் தாக்குதலில் சிக்கித் தவிக்கிறார்கள். 

இந்தியாவில், 2010-ல் இருந்து 2015 வரை மட்டும் 58,679 ஐ.டி ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். அதில் 8,233 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஐ.டி மட்டுமல்ல, உற்பத்தித் தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், சிறுதொழில் முனைவோர், காவல்துறை ஊழியர்கள், நடிகர் - நடிகைகள் என அனைத்துத் துறையிலும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றி இருப்பவர்களின் தேவையற்ற பேச்சு, பாலியல் சார்ந்த தொல்லைகள் என வேலைக்குச் செல்லும் பெண்கள் இன்னும் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.  திருமணமாகிவிட்டால், குழந்தை பெற்றுக்கொண்டால் எங்கே தன் வேலை பறிபோய்விடுமோ என்ற பயத்திலேயே பல பெண்கள் திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். அதன் காரணமாகப் பல்வேறுவிதமான மன நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். ஒருசிலர் மன அழுத்தத்தின் உச்சத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 

நேர்பட யோசி!

 `` வாழ்க்கையில் சில பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு, சிலவற்றுக்குத் தீர்வு கிடைப்பதில்லை. அதனால், வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களை அப்படியே  ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். நாம் பணத்தையோ, பொருளையோ வேட்டையாடுவதற்காக இந்தப் பூமியில் பிறக்கவில்லை, வாழ்வதற்காகவே பிறந்திருக்கிறோம். மன அழுத்தத்துக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது `டைம் மேனேஜ்மென்ட்.’ எந்த வேலைக்கு முக்கியத்துவம் தருவது என்பதில் தெளிவு இருக்க வேண்டும். எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தால் மன அழுத்தம் தீவிரமாகும்.  எத்தகைய இக்கட்டான சூழல் வந்தாலும் அதைச் சமாளித்து வெளியே வரவேண்டும். மன அழுத்தம் நிலவும் சூழலில் நல்ல புத்தகங்கள் படிப்பது, பாடல்கள் கேட்பது, வீட்டில் உள்ளவர்களுடன் உரையாடுவது போன்ற பழக்கவழக்கங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய வயதில் உள்ள முதியவர்களும்கூட மன அழுத்தத்தால் தவிக்கிறார்கள். வயதானவர்களுக்கு எந்தவிதப் பொறுப்பும் நெருக்கடியும் பயமும் இல்லாத சூழலில் எப்படி மன அழுத்தம் ஏற்படுகிறது?

 `` தனிமை, பிறரைச் சார்ந்திருப்பது, வீட்டிலும் சமூகத்திலும் மரியாதை இல்லாமலிருப்பது, வைட்டமின் பி12 குறைபாடு,  தைராய்டு, பார்க்கின்சன், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரை மருந்துகள் போன்றவை முதியோர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக் காரணமாக இருக்கிறது. பொருளாதாரக் காரணங்களாலும் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். அதுதவிர தமக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், சக வயதுடைய நண்பர்கள்... என யாராவது ஒருவரின் மரணச் செய்தியைக் கேட்டாலும் மன அழுத்தம் உண்டாகும். இதுபோன்ற எந்தக் காரணங்களுமே இல்லாமலும் வயதானவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகலாம். . 

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு அதிகமாகத் தலைவலி, வயிற்றுவலி ஏற்படும். சரியான பசியில்லாமல், தூக்கமில்லாமல், உடல் எடை இழந்து காணப்படுவார்கள் அல்லது எப்போதும் சாப்பிடுவதும் தூங்குவதுமாக இருப்பார்கள். வயதானவர்களிடம் இதுபோன்ற அறிகுறிகள் காணப்பட்டால்  உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றுவிட வேண்டும். தனியாக விடக்கூடாது. வயதானவர்களுக்கு ஏற்படும் மனநலப் பாதிப்புகளை மாத்திரை மருந்துகளால் மட்டுமே சரிசெய்ய முடியும்’’ என்கிறார் முதியோர் நல மருத்துவர் நடராஜன்.

மன அழுத்தம் உண்டாவதற்கு மருத்துவரீதியாக ஆயிரம் காரணங்களும், சிகிச்சைமுறைகளும் சொல்லப்படுகின்றன. இவையெல்லாம் புறக்காரணிகள்தாம். உண்மையிலேயே மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும், அதிலிருந்து உடனடியாக மீளவும் நம் நடவடிக்கைகளை, வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நேர்மறையான அணுகுமுறையை வளர்த்துக்கொண்டால் எந்தக் கஷ்டத்திலும் மன அழுத்தம் என்னும் கொடிய அரக்கனின் கரங்கள் நம்மைத் தீண்டாமல்  பார்த்துக்கொள்ளலாம்.

இரா.செந்தில்குமார்