மன அழுத்த நெஞ்சுவலி
மன அழுத்தத்தால் சில பெண்களுக்கு `ஸ்ட்ரெஸ் கார்டியோமயோபதி’ (Stress Cardiomyopathy) என்ற இதயநோய் வரலாம். இதனால் திடீர் நெஞ்சுவலி ஏற்படும். கடுமையாக வியர்க்கும். பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது. மன அழுத்தம் குறைந்தால் வலி நின்றுவிடும். இதற்கு இதயநோய் மருத்துவர் மட்டுமின்றி, உளவியல் மருத்துவரிடமும் சிகிச்சை பெற வேண்டும்.

முன்பெல்லாம் ஆண்களுக்கு மட்டுமே இதயநோய்கள் வரும் என்று நம்பப்பட்டது. இன்றோ சர்வசாதாரணமாக பெண்களுக்கும் இதயநோய்கள் வருகின்றன. சமீப காலங்களில் இதயநோய்களால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகளவில் மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்துகிறது. இதயநோய்களால் ஒவ்வொரு 33 விநாடிக்கும் ஓர் இந்தியர் இறப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள்.
‘இதயநோய்க்குப் பல நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காமல் தவிர்ப்பதே உயிரிழப்பு ஏற்பட முக்கியக் காரணம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இதயநோய்களுக்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியக்கூடியவை. அவற்றைச் சரியாக உணராமல் இருப்பதாலும், அலட்சியப்படுத்துவதாலும்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது.
“அறிகுறிகளை அடையாளம் காண்பதில் ஏற்படும் குழப்பங்கள் தாம் சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளத் தடையாக இருக்கின்றன. அதிலும், இதய நோய்களுக்கான அறிகுறிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடும். அதைச் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே உரிய நேரத்தில் சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்ற முடியும்” என்கிறார் இதயநோய் சிறப்பு மருத்துவர் ராஜேஷ்குமார்.

“நெஞ்சுவலி, மார்பில் அசௌகரியமாக உணர்தல், அதீத அழுத்தம் போன்றவையே மாரடைப்பு மற்றும் இதயநோய்களுக்கான பொதுவான அறிகுறிகள். பெண்களுக்கு வேறு சில அறிகுறிகளும் இருக்கும். இரண்டு கைகள் மற்றும் மார்புப் பகுதியில் மிதமான வலி இருக்கும். தொடர்ச்சியான கழுத்துவலி, தொண்டைவலி, கீழ்த்தாடைவலி, நெஞ்சு எரிச்சல், முதுகுவலி, மேல் வயிற்றில் வலி, அதீத சோர்வு, மூச்சு விடுதலில் சிரமம் இருந்தாலும் மருத்துவரை அணுகி, காரணத்தைக் கண்டறிய வேண்டும். சிலருக்குத் திடீரென மூச்சு வாங்கும்.
அறிகுறிகள் வேறுபடுவது ஏன்?
இதயநோய்களுக்கு, ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பே முக்கியக் காரணம். ஆனால், பெண்களுக்கு முழுமையாக அடைப்பு ஏற்படுவதில்லை. பெண் உடற்கூறு மற்றும் ஹார்மோன் மாற்றங்களே இதற்குக் காரணம். இதனால், பெண்களுக்கு இதய நோய்களுக்கான அறிகுறிகளைக் கண்டடைவதில் குழப்பம் ஏற்படக்கூடும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகவும் சோர்வாக இருப்பார்கள். அந்த நேரத்திலும் இதுபோன்ற வலிகள் ஏற்படலாம். அதனால் அவர்களால் ஆரம்பக் கட்டத்திலேயே இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள் பற்றி அறியமுடிவதில்லை.
யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

* குடும்பத்தில் யாருக்கேனும் இதயநோய் இருந்தால்...
* வயதானவர்கள், மாதவிடாய் நின்ற பெண்கள்...
* பருமன், நீரிழிவாளர்கள், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள்...
இதயநோயைத் தவிர்க்க, தடுக்க...
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள பொருள்களைத் தவிர்க்க வேண்டும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளைச் சாப்பிடுவதும் இதயத்தைப் பாதுகாக்கும். உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் தவிர்த்து எப்போதும் உற்சாகமாக இருந்தால் இதயநோய் அண்டாது.”
- ஜி.லட்சுமணன்