ஹெல்த்
Published:Updated:

இருமல் வந்தால் என்ன செய்யலாம்?

இருமல் வந்தால் என்ன செய்யலாம்?
பிரீமியம் ஸ்டோரி
News
இருமல் வந்தால் என்ன செய்யலாம்?

ஹெல்த்

``அனிதாம்மா... பிள்ளை நைட்லருந்து இருமிக்கிட்டே இருக்கான். இருமல் மருந்து வெச்சிருக்கீங்களா?’’ என்று நம் வீடுகளில் கேட்பவர்கள் அநேகம். `போன மாசம் வாங்கினது மிச்சமிருக்கு’ என்று கொடுப்பவர்களும் உண்டு. சாதாரணமாகவே ஒரு மருந்துக்கடையில், தினமும் டாக்டரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல், `இருமலுக்கு மருந்து கொடுங்க’ என்று கேட்டு வாங்கிப் போகிறவர்கள் பத்து பேராவது இருப்பார்கள். அப்படி வாங்கிச் செல்வது ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளுமா, நல்ல மருந்தாகவே இருந்தாலும் அதைச் சரியான அளவில்தான் எடுத்துக்கொள்கிறார்களா, உண்மையில் இருமலுக்கு இத்தனை மருந்துகள் தேவைதானா... நீள்கின்றன கேள்விகள். 

இருமல் வந்தால் என்ன செய்யலாம்?

``எல்லா இருமல் மருந்துகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒரு கலவை இருக்கிறது. யாருக்கு, என்ன பிரச்னையோ அதற்கான மருந்தைத்தான் குடிக்க வேண்டும். சளி, வறட்டு இருமல், மூச்சிரைப்பு, சளியோடு சேர்ந்த மூச்சிரைப்பு என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு மருந்து உண்டு. அதை மாற்றிக் குடித்தாலோ, அளவுக்கு அதிகமாகக் குடித்தாலோ இதயத் துடிப்பு அதிகமாகலாம். சால்புடமால் (Salbutamol), டெர்புடாலின் (Terbutaline) என இரண்டு மூலக்கூறுகள் சில இருமல் மருந்துகளில் இருக்கும். இதை, ஆஸ்துமா, மூச்சிரைப்புப் பிரச்னை இருப்பவர்களுக்குக் கொடுப்போம். அதை மற்றவர்கள் குடித்தாலும் இதயத்துடிப்பு அதிகமாகும். அளவு மிக முக்கியம். டாக்டர் ஒரு டீஸ்பூன் குடிக்கச் சொன்னால், அதைத் தாண்டக் கூடாது. அளவு அதிகமானால், சளி வெளியேறுவதற்கு பதிலாக உள்ளேயே தங்கிவிடும். இதயப் பிரச்னைகளும் ஏற்படலாம்’’ என்கிறார் சீனியர் கார்டியாலஜிஸ்ட் சுகுமார்.

இருமல் வந்தால் என்ன செய்யலாம்?இருமல் மருந்து குடிப்பவர்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். குடித்த பிறகு நன்கு தூக்கம் வரும். கைகால்கள் வெலவெலப்பதுபோல ஒரு நடுக்கம் ஏற்படும். கொஞ்சமாகக் குடித்திருந்தாலும்கூட லேசாக மயக்கநிலையில் இருப்பதுபோலத் தோன்றும். தன் சிறை அனுபவங்களை நூலாக எழுதியிருக்கும் எழுத்தாளர் ஜோதி நரசிம்மன், சில கைதிகள் போதைக்காக இருமல் மருந்தை, சிறையிலிருக்கும் மருந்தகத்தில் போய் வாங்கிக் குடிப்பதைக் குறிப்பிட்டிருந்தார். மருந்து, போதை தருமா என்ன?

போதை மறுவாழ்வு மைய ஆலோசகரும் மருத்துவருமான அனிதா ராவ் சொல்கிறார்... ``இதை பாட்டில் பாட்டிலாக வாங்கிக் குடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போதை மாதிரியான ஒரு மயக்கநிலைக்கு நம்மைக் கொண்டு போகும். ஒரு தடவை இதற்கு அடிமையாகி விட்டால், விட முடியாது. இருமல் மருந்தில் சேர்க்கப்படுற `கோடின்’ (Codeine) மூலப்பொருள் ஒரு மயக்க மருந்து. 

இருமல் வந்தால் என்ன செய்யலாம்?

சிலர் இதை போதைக்குப் பயன்படுத்தக் காரணம், இதைக் குடித்தால் ஆல்கஹால் மாதிரி வாசனை வராது. இந்தப் பழக்கத்துக்கு ஆளானவர்களின் நடத்தையில் மாற்றம் தெரியும். என்ன காரணம் என்று வீட்டில் இருப்பவர்களல் கண்டுபிடிக்க முடியாது.

இதை மற்ற போதைப் பொருள்களோடு சேர்த்துப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதனால் முக்கியமாக பாதிக்கப்படுவது மூளை. கல்லீரல், சிறுநீரகம் என உடலில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து தப்பித்துவிடலாம். ஆனால், மூளையை அப்படி ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ண முடியாது. இது பலருக்கும் புரிவதில்லை.’’
 
அரசு மருத்துவமனைகளிலும்கூட இருமல் மருந்து கொடுக்கப்படுகிறது. பெரியவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இது அதிகம் புகட்டப்படுகிறது. இதன் அளவு அதிகமானால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?

இருமல் வந்தால் என்ன செய்யலாம்?

``குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஓவர் டோஸானால் படபடப்பு ஏற்படும், இதயத்துடிப்பு அதிகரிக்கும், மயக்கம் உண்டாகும். சில இருமல் மருந்துகளில் பினைல்புரோபனோலாமின்   (Phenylpropanolamine) என்ற ஒரு மூலக்கூறைச் சேர்த்திருப்பார்கள். இது அமெரிக்கா உள்பட பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒன்று. ஆனால், இந்தியாவில் இந்த மூலக்கூறு சேர்க்கப்பட்ட மருந்துகள் இன்னும் விற்பனையாகிக்கொண்டுதான் இருக்கின்றன. இருமல், உடல் வெளிப்படுத்தும் ஒரு டிஃபென்ஸ் மெக்கானிஸம். உடல், தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தூசியையோ, சளியையோ வெளியே தள்ளும் ஒரு செயல். மூக்கில் நீர் ஒழுகி, சளி ஏற்பட்டாலும் இருமல் வரும். சாதாரண இருமலுக்கு வெந்நீர் கொடுத்தாலே போதும். ஹைபர்சென்சிட்டிவ் ஏர்வே டிசீஸ் (Hypersensitive Airway Disease) என்று ஒரு வகை... இந்தப் பிரச்னையில் மூச்சுக்குழல் சுருங்கிப் போயிருக்கும். அதை விரியவைப்பதற்கு குழந்தைகளுக்கு இருமல் மருந்தைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு ‘இந்த அளவில், இந்தந்த மருந்துகள்தான் கொடுக்க வேண்டும்’ என்று வழிகாட்டும், `பச்சிளம் குழந்தைகள் ஒருங்கிணைப்பு பராமரிப்பு கையேடு’- (Integrated Management of Neonatal and Childhood Illnesses (IMNCI)) ஒன்று இருக்கிறது. அதன்படி, பிறந்ததிலிருந்து ஆறு மாதங்கள்வரை குழந்தைக்கு இருமல் மருந்து கொடுக்கவே கூடாது.

ஆறு மாதங்களிலிருந்து இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக்கூட இருமல் ஏற்பட்டால் மூலிகைத் தேநீர், இஞ்சிச் சாறு, துளசி கஷாயம் இவற்றைத்தான் கொடுக்கலாம். மூச்சிரைப்போடு இருமல் வந்து, குழந்தையால் தூங்கவே முடியாமல் இருந்தால் இதமான இருமல் மருந்து கொடுக்கலாம். சீதோஷ்ண நிலை மாறும்போது குழந்தைக்கு மூக்கடைப்பு, ஜலதோஷம் ஏற்பட்டு இருமல் வரலாம். அது இயற்கை... அதற்கு மருந்து நிவாரணம் அல்ல’’ என்கிறார் சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய மருத்துவர் இரா.சோமசேகர்.

இருமல் மருந்து வேண்டாம் சரி... மாற்று மருத்துவத்தில் இதற்குத் தீர்வுகள் இருக்கின்றனவா?  

இருமல் வந்தால் என்ன செய்யலாம்?

``இருமல், இயற்கையான அனிச்சைச் செயல். அதை நிறுத்துவதற்கு மருந்து சாப்பிட்டால், அது பெரியவர்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். அதோடு, நம் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும். கைநடுக்கத்தில் ஆரம்பித்து நரம்புத் தளர்ச்சிவரை ஏற்படக் காரணமாகிவிடும். இருமலுக்குச் சிறந்த மருந்து வெந்நீர்தான். ஆடாதொடை இலை மாதிரி இயற்கையாகக் கிடைக்கும் சில பொருள்களும் இருமலிலிருந்து நிவாரணம் கிடைக்க உதவும். கொஞ்சம் கிராம்பு, அல்லது சுக்கை நீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.

மிளகும் வெற்றிலையும் சேர்த்து கஷாயமாக்கிக் குடிக்கலாம். `திரிகடுகம்’ என்று சொல்லப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் `ஆடு தொடா மணப்பாகு’ சாப்பிடலாம். சிறிது வால் மிளகையும் பனங்கற்கண்டையும் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால்கூட இருமல் ஓடிப் போகும். இதையெல்லாம் தொண்டையில் படும்படிச் சாப்பிட வேண்டும்.

புற்றுநோய், காசநோய்களின் குறிகுணம்தான் இருமல். ஆனால், இருமலால் இந்த நோய்களெல்லாம் வருகிறது  என்று சொல்ல முடியாது. சில ஆண்டுகளாகத்தான் இருமலுக்கு மருந்து கொடுப்பது அதிகமாகியிருக்கிறது. முன்பெல்லாம் அரசு மருத்துவமனையிலேயேகூட `மிக்ஸர்’ என்ற ஒன்றைத்தான் கொடுப்பார்கள். இப்போது மருந்து, மாத்திரை மிகப் பெரிய பிசினஸ். அதனால்தான் விதவிதமான இருமல் மருந்துகள் விற்பனையாகின்றன. கடைகளில் `ஹெர்பல்’ என்ற பெயரில்கூட இருமல் சிரப்புகளை விற்கிறார்கள். சித்தர்கள் மருந்தாகச் சொல்லியிருக்கும் மூலிகைகளை நாமே  மருந்தாகச் செய்து சாப்பிடுவதுதான் ஆரோக்கியம். இருமல் குணமாக ஆடாதொடை கஷாயம், சுண்டைக்காய் வற்றலைப் பொடி செய்து சாப்பிட்டால்கூடப் போதும். இருமல் மருந்துகள் வேண்டவே வேண்டாம்’’ அழுத்தமாகச் சொல்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

மாற்று மருத்துவ முறைகளில் ஆயுர்வேத வைத்தியத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அதில் இருமல் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? 

இருமல் வந்தால் என்ன செய்யலாம்?

``இருமல் வந்தால், தொண்டையில் ஏற்படும் பிரச்னைதான் அதற்குக் காரணம் என்று நாம் நினைக்கிறோம். ஆயுர்வேதமோ, `அபான வாயு’தான் காரணம் என்று சொல்கிறது. இருமலுக்கும் பெருங்குடலுக்கும் தொடர்பு உண்டு. வறண்ட இருமல் இருப்பவர்களுக்கு மலம் சரியாக வெளியேறாது. அபான வாயுவைச் சீர் பண்ணினால்தான் இருமல் தீரும். ஆயுர்வேதம் இருமலை `காசம்’ என்கிறது. அதை `கப காசம்’, `பித்த காசம்’, `வாத காசம்’, `சத காசம்’, `சய காசம்’ என ஐந்து வகையாகப் பிரித்துவைத்திருக்கிறது. கபம் அதிகமானால் அது `கப காசம்’; வாதம் அதிகமானால், `வாத காசம்’; பித்த காசம் என்றால் எரிச்சல் இருக்கும், வாய் கசக்கும், சளி மஞ்சளாக வரும். சிலருக்கு சளியோடு ரத்தம்கூட வரலாம்.

இந்த மூன்று இருமலையும் குணப்படுத்திவிடலாம். உடம்பில் அடிபடுவதால் வருவது `சத காசம்’. அடிபட்டதால் நெஞ்சில் சளி கட்டியிருக்கலாம். இதையும் கொஞ்சம் கஷ்டப்பட்டு குணப்படுத்திவிட முடியும். உடல் இளைத்து, காசநோயால் வரும் இருமல், `சய காசம்.’ இதில் சளி, தண்ணீர் மாதிரி வரும். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நெஞ்சு புறாக்கூடு மாதிரி ஆகிவிடும். சய காசத்தை குணப்படுத்துவதுதான் கொஞ்சம் கஷ்டம்.

இருமல் வந்தால் அடக்கவே கூடாது. அடக்கினால், இன்னும் அது அதிகமாகத்தான் செய்யும். கூடவே இதயநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இருமல் வருவதற்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தெரியும். தொண்டை கம்முதல், எரிச்சல் ஏற்படுதல், பசியின்மை, தொண்டையில் முள்ளைவைத்த மாதிரி குத்துதல் எல்லாம் இருக்கும். அந்த நேரத்தில் வெந்நீரில் வாய் கொப்பளிக்கலாம்; வெந்நீரில் உப்பைப் போட்டு வாய் கொப்பளிக்கலாம். துளசி, இஞ்சிச் சாறு குடிக்கலாம். இதையெல்லாம் செய்தால் இருமல் வராமலேயே தடுத்துவிடலாம்.

சிலருக்கு வெளியூர் தண்ணீர் சேராது. அவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கொஞ்சம் இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடலாம். கறி மஞ்சளையும் அரிசி கழுவிய தண்ணீரையும் கலந்து குடிக்கலாம். ஆயுர்வேதத்தில் ஐந்து வகை காசங்களுக்கும் தனித்தனியாக மருந்துகள் இருக்கின்றன. ஆயுர்வேத மருந்து குறிப்பிட்ட பிரச்னையைத் தீர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

இருமல் ஏற்பட்டால், குளிர்ச்சியான உணவையோ, பானங்களையோ உட்கொள்ளக் கூடாது. பகலில் தூங்கக் கூடாது; ராத்திரியில் தூங்காமல் இருக்கக் கூடாது. ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகள் ஆகாது. எளிதில் மலத்தை இளக்கக்கூடிய உணவுகளை மட்டும்தான் சாப்பிட வேண்டும். இப்போது விற்கப்படும் ஆங்கில இருமல் மருந்துகளில் பெரும்பாலானவை மலச்சிக்கலையும் உடல் வறட்சியையும் ஏற்படுத்தக் கூடியவை. `அகஸ்திய ரசாயனம்’ என்ற ஆயுர்வேத மருந்தை எல்லா இருமலுக்கும் கொடுக்கலாம். ஆனால், உணவு சாப்பிட்டவுடனே ஒரு மணி நேரம் கழித்துதான் சாப்பிடவேண்டும். ஆயுர்வேத மருந்துகளில் பிரதானமானது கடுக்காய். அதுதான் அகஸ்திய ரசாயனத்தில் முக்கியமான மூலப் பொருள். தூங்கப் போவதற்கு முன்பு இதை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டுவிட்டு, ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் போதும். இருமல் குணமாகிவிடும்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

ஆக, எளிய வீட்டு வைத்தியம், பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத பாரம்பர்ய வழிமுறைகளெல்லாம் இருக்க, நம்மில் பலரும் இருமல் மருந்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

- பாலு சத்யா

இருமல் வந்தால் என்ன செய்யலாம்?