
தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்
ஒன்பது மற்றும் பத்தாம் மாதங்களில் குழந்தைகளின் வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கும். அதனால் இரண்டையும் ஒரே இதழிலேயே சொல்லிவிடுகிறேன்.

* குழந்தையின் வளர்ச்சியில் உயரமும் எடையும் கண்ணுக்குப் புலப்படுகிற மாதங்கள் இவை. இதோடு, தலையின் சுற்றளவின் வளர்ச்சியும் சரியாக இருக்க வேண்டும். உயரம், எடை, தலையின் சுற்றளவு என மூன்று வளர்ச்சிகளும் சரிசமமாக இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். தடுப்பூசிபோட, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, இதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
* எல்லா பெற்றோர்களும் செய்கிற பொதுவான தவறு, குழந்தையின் எடையை மட்டும் பார்ப்பது. ஒன்பதாம் மாதத்தில் குழந்தைகள் நன்றாகச் சம்மணம் போட்டு உட்கார ஆரம்பித்த பிறகுதான் குழந்தையின் உயரம் சரியாகத் தெரியும். அப்போது சிலர், ‘என் குழந்தை குள்ளமாக இருக்கிறானே/ளே’ என்று கவலைப்பட ஆரம்பிப்பார்கள். ஒன்பது அல்லது பத்தாம் மாதங்களில் குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம் இருக்கிறார்களா என்று தெரிந்துகொள்வது கடினம். பாப்பாவின் கணுக்கால், இடுப்பு, முதுகு, தலை ஆகிய நான்கு பகுதிகளும் ஒரே நேர்கோட்டில் இருந்தால்தான் உயரம் சரியாகத் தெரியும். ஆனால், குட்டீஸ் நேராக நிற்க மாட்டார்களே! கால்களை வளைத்துக் கொண்டுதான் நிற்பார்கள். அல்லது `ஜிங்கு ஜிங்கு’ என்று துள்ளித் துள்ளிக் குதிப்பார்கள். அதனால், நிற்கவைத்து உயரத்தைப் பார்த்தால் நிறையத் தவறுகள் வரும். இதற்கு பதில் பாப்பாவைப் படுக்கவைத்து நீளத்தைச் சரிபார்க்கலாம். இதை மருத்துவர் பார்த்துக்கொள்வார். ஆனால், அதைச் செய்யச் சொல்லிக் கேட்கவேண்டியது உங்கள் கடமை.
* `எட்டாம் மாதத்தில் என் குழந்தை ஓர் எட்டுகூட எடுத்து வைக்கவில்லை’ என்று வருத்தப்படுகிற அம்மாக்களுக்குப் புன்னகை பூக்கவைக்கிற மாதங்கள் இந்த ஒன்பதும் பத்தும். விரைவில் நடக்கப் போவதற்கான அறிகுறிகளாகக் குழந்தைகள் முட்டிபோட்டு நகர ஆரம்பிப்பார்கள் அல்லது நாற்காலி, சுவர், கதவு, திண்ணை என்று எதையாவது பிடித்துக்கொண்டு ஒவ்வோர் எட்டாக எடுத்துவைக்க முயல்வார்கள் அல்லது உட்கார்ந்தபடியே நகர்ந்துபோவார்கள்.

* `மா’, ‘பா’, ‘தா’ என்று ஓர் எழுத்து வார்த்தைகளைப் பேசி வந்த செல்லங்கள், `ம்மம்மா’, `த்தத்தா’ என்று ஒரே ஒலியுடைய இரு வார்த்தைகளை இணைத்துப் பேச ஆரம்பிப்பார்கள். இதை ஆங்கிலத்தில் `Cooing’ அல்லது `Babbling’ என்று சொல்வோம். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு, தன்னால் பேச முடியும்; தனக்கு வேண்டும் என்பதைக் கேட்டு வாங்க முடியும் என்கிற உணர்வு வரும்.
* உருவங்கள் பளிச்சென்று தெரிய ஆரம்பிக்கும். ஹால் தரையில் கிடக்கிற பட்டாணியைப் படுக்கையறையில் இருந்து (கிட்டத்தட்ட 10 அடி தூரம்) கூர்மையாகப் பார்த்து எடுப்பார்கள்.
* குழந்தைகளுக்கு உணவில் அதிகமாக ஆர்வம் வருகிற இந்த மாதங்களில், நான் சென்ற இதழ்களில் சொல்லியிருந்த விதவிதமான உணவுகளைக் குழந்தைகளுக்கு ஊட்டிப் பழக்குங்கள். பிற்காலத்தில் ‘என் குழந்தை சரியாகவே சாப்பிட மாட்டேன்கிறான்/ள்’ என்று நீங்கள் புலம்பவேண்டிய அவசியமே வராது.
* பக்கவாட்டில் இருக்கிற கூர்மையான பற்கள் வளர ஆரம்பிக்கிற மாதம். குழந்தைகள் தத்துபித்தென்று நடந்து கீழே விழுந்துவிட்டால், இந்தப் பற்கள் குத்தி, வாயில் காயம் ஏற்படலாம் கவனம். ஃபிங்கர் பிரஷ் வைத்து, பல்விளக்க ஆரம்பிக்க வேண்டிய காலகட்டமும் இதுதான்.

* பொருள்கள் சிலவற்றுக்கு அவர்களே அதன் செயல்பாடுகளைவைத்துப் பெயர் சூட்டுவார்கள். உதாரணமாக, நாயைப் பார்த்தால், `பவ் பவ்’ என்று அதற்குப் பெயர்வைப்பார்கள். அவர்கள் பார்க்க ஒரு பொருளை மறைத்து வைத்தீர்களென்றால், வைத்த இடத்தில் இருந்து அழகாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். கொஞ்சம் கவனிக்காமல்விட்டால், சிறுநீர் கழித்துவிட்டு அதிலும் தப்பளம் கொட்டும் சேட்டைகள் நடக்கும்.
* வடிவங்களின் வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். பந்தைத் தூக்கி எறிவார்கள்.
* 10-ம் மாதத்தில் பகல் தூக்கம் குறைந்து, இரவுத் தூக்கம் அதிகமாகி, அம்மாவை இரவுகளில் கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கவிடுவார்கள். தூக்கம் ஒழுங்குக்கு வருவதால், `நச்சு... நச்சு...’ என்று அழுவது குறையும்.
* ‘மாமாவுக்கு டாட்டா சொல்லு’ என்றால், சின்னக் கையை ஆட்டி டாட்டா சொல்வார்கள். ‘கை தட்டு’ என்றால் செய்வார்கள். ‘நாய் எங்கே இருக்கு?’ என்றால் வீட்டுக்கு வெளியே பார்ப்பார்கள்.
* உங்கள் பேச்சில் உங்கள் செல்லங்களையும் இணைத்துக் கொள்ளும் மாதங்கள் இவை. உதாரணமாக, ‘மம்மு சாப்பிட்டியா?’ என்றால், ‘ம்’ என்று பதில் சொல்வார்கள். இப்படிப்பட்டச் சொல்லாடல்களை பெற்றோர்கள் குழந்தைகளிடம் நிறைய செய்ய வேண்டும். இல்லையென்றால், குழந்தையின் பேச்சு தாமதப்படலாம்.

* பிள்ளைகள் வீடெங்கும் தவழ அல்லது நகரத் தொடங்குவார்கள் என்பதால், அழுக்கான இடங்களில் கையைவைத்து, அந்தக் கையை வாயில்வைத்து வயிற்றுப்போக்கை வரவழைத்துக்கொள்வது அதிகமாகும். அதனால், வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
* ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகர ஆரம்பித்துவிட்டதால், கீழே விழுந்து தலையில் அடிபடுவது, வாயில் விரலை வைத்துக் கொள்வதால் காய்ச்சல் வருவது, மூக்கிலும் காதிலும் எதையாவது எடுத்துப் போட்டுக்கொள்வது என்று நிறைய சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்கள் குழந்தைகள். அண்மைக்காலமாக அம்மாக்களின் ஹேர் ஸ்ட்ரெய்ட்னரால் சூடுபட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு வருகிற பிள்ளைகள் அதிகரித்திருக்கிறார்கள்.
* சில அம்மாக்கள் குழந்தை நகர ஆரம்பித்ததுமே டாய்லெட் ட்ரெய்னிங் தர ஆரம்பிக்கிறார்கள். அது தவறு. உட்கார்ந்து டாய்லெட் போகிற அளவுக்கு இந்த மாதங்களில் குழந்தைகளுக்கு மூளை வளர்ந்திருக்காது. ஒன்றரை வயதில் இருந்து இரண்டு வயதுக்குள் குழந்தைகள், சிறுநீர் போக வேண்டும் என்று தாங்களாகவே கேட்பார்கள். அப்போதுதான் டாய்லெட் ட்ரெய்னிங் தர வேண்டும். டாய்லெட் ட்ரெய்னிங்கை சீக்கிரமாகச் செய்யவைப்பது திறமையல்ல... அதிகாரம்.
* நடக்க ஆரம்பிக்கிற குழந்தைகளை சிலர் ஒரு கையைப் பிடித்துத் தூக்குவது, இரண்டு கைகளின் நுனிப் பகுதிகளைப் பிடித்து மேலே தூக்குவது என்று செய்வார்கள். இப்படிச் செய்யவே கூடாது. மூட்டுகள் அதன் இடத்தில் இருந்து நகர்ந்துவிடும் கவனம்.
* விளையாட்டுப் புத்தி அதிகமாகி இருக்கும் என்பதால், கூட்டமான இடங்களுக்கு அதிகம் அழைத்துச் செல்லாதீர்கள். காரில் செல்லும்போது சீட் பெல்ட் போட மறக்காதீர்கள்.
(வளர்த்தெடுப்போம்...)
- ஆ.சாந்திகணேஷ்